வேதவனம்- விருட்சம் 48

This entry is part of 47 in the series 20090828_Issue

எஸ்ஸார்சி


சூரியக்குதிரைகள்
வெண்ணிறத்தன
அவை ஏழும் தாமே விரைவன
கதிரவன் தேரது உலா காண
தேவர்கட்கு நன்மை
உறுதிப்படுகிறது

யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக
யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக

ஆண்டு திங்கள்
பகல் இரா
வேள்வியொடு ஆசனம்
கற்பித்த வருண மித்திரர்கள்
அரியமானுமே ஈங்கெம்மை
வலிமைப்படுத்தினார்கள்

மித்திரா வருணர்கள் வாரும்
வந்து சோமம் பருகும்
வேள்வி விழு பொருள் பெறுக நீவிர்
நியதிகள் வலுப் பெறுக ( ரிக் 7/66)

அசுவினி தேவர்களே
உஷையின் வருகையால்
கருப்பி விடைபெற
சிவப்பி ப்பணியேற்கிறாள் ( ரிக் 7/71)

அசுவினிகளே நீங்கள்
கிழக்கு மேற்கு
தெற்கு வடக்கென
திசை எங்கிருந்தும் வருக
ஐவகை ஆரியர்
அனைவர்க்கும்
அருளுவீர் நன்மையும் வளமையும் (7 /72)

வருணனே ஏன்
என்னை முடிக்க வருகிறாய்
யாம் செய்த பாவம்
எம் முன்னோர் செய்த பாவம்
இவைக் களைந்திடுக நீ
கன்றினை கட்டிய தாம்பிலிருந்து நீக்குவதொப்ப
திருடியபசுவுக்கொருவன் தீனி தருவதொப்ப
வசிட்டனைப்பாவங்களிலிருந்து நீக்கிடுக

சுய பலத்தால்
மனத்தால்
விருப்பத்தால்
பாவம் இழைக்கவில்லை யாம்

எம் குணத்தால்
விதியால்
இறைசெல் கதியால்
செய்தவையுண்டு
மது சூது சினம்
அறியாமை இவை
பாவம்செயக்காரணிகள்

பக்குவப்பட்ட மூத்தோனுக்கு
பாவம் செய் யுவனை காத்தல்
கடமை யாகிறது ( ரிக் 7/86)
—————————————————————————-

Series Navigation