www.மனிதம்.com

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

அஜ்னபி


சுழலும் பல்சக்கரச் சிக்கலில்
இயங்கும் உலகம் கடிகாரம்
நிழலின் நீளம் குன்றுவதாக
சுருங்கும் மனிதம் சில நேரம்

முடிவிலியான
முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக
நிஷ்டை கலைத்திடும்
நிஷ்டூர இசையாக

குறுக்கிடல்களில் குழம்பி
தேடலில் தொலைகிறது
சகஸ்ராப்தம்…

வய்யக விரிவு வலையில்
சிக்குண்டு சிறகிழந்த
ஜந்துக்கள் நாம்…

அறிவதையும் அவஸ்தையாக்கி
அறிவியல் அழிவுகளில்
அரூபங்கள் ஆயினோம்

மழலையைத் தொலைத்தோம்
பசுமையைக் குலைத்தோம்

பழைமையை சிதைத்தோம்
ரசனையைப் புதைத்தோம்

சாதனங்களில் நுழைந்தோம் – வெறும்
சேதனங்களாய் விளைந்தோம்

பரம்பரைச் சொத்தாய்
பார்த்தீனியம் வித்தாய்
தொற்று நோய் விதைத்தோம் – பின்பு
தோற்றுவாய் கதைத்தோம்

சூழலை சுடுகாடாக்கினோம்
ஊழலை வாய்ப்பாடாக்கினோம்

விற்பனைப் பொருளாய்
விளைந்தது மனிதமும்

கற்பனையாயிற்று
கல்வியின் புனிதமும்

மின்சார விளக்குகளின்
வெளிச்சக் கவர்ச்சியில்
கலாசார வேர்களை
கருகிடச் செய்தோம்…

ஆய்வு குழாயில்
அன்பு பிறப்பிக்க முடியுமா?

புன்னகையை புதுப்பிக்க
பூச்சுக்கள் உதவுமா?

மரபணுச் சோதனையின்
மருத்துவச் சாதனைகள்
மனிதத்தை உயிர்ப்பிக்க
மாற்று வழி தந்ததுண்டா?

ஸின்த்தட்டிக் கனவுகள்
காணும் மனங்களில்
சிந்தனை செழித்து
சித்தாந்தம் ஒளிருமா?

இயற்கைக்கும் எமக்கும்
இடைவெளி வேண்டாம்

இருதயச் சலவையுடன்
இனியொரு விதி செய்வோம்

மனிதம் வளரவும்
ஈரப்பதம் அவசியம்
மனசில்..!

அஜ்னபி
ajnabhii@yahoo.co.in

Series Navigation

அஜ்னபி

அஜ்னபி