மனப் பொழிவு

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

மதியழகன் சுப்பையா


(1)
ஈர நிலம், ஈரக் காற்று
புறச்சூழலெங்கும் ஈரமயம்
ஒருமுறை ஒரேயொருமுறை
அழைத்துப் பேசியிருக்கலாம் நீ
வரண்டு பிழந்த மனப்பரப்பில்
துளிர்த்திருக்கும் துளி நீர்
இதோ பார்
எனைக்கண்டு கெக்கலித்தபடி
நிறைந்து வழிகிறது வான்மழை

(2)
கொட்டும் மழைப் பொழுதில்
வருவதாய் சொன்ன உன் வாக்கை
உள்ளங்கையிலேந்திக் காத்திருந்தேன்
தட்டும் ஓசைக் கேட்க கதவு திறந்தால்
எட்டும் திசை நின்று
பல்லிளிக்கிறது பருவமழை

(3)
அடுப்பில் சுட்டெடுத்த
பச்சை மக்காச் சோளம்
சுக்கும் மிளகுமிட்டு காய்த்த
பால் கலக்கா சுடு தேனீர்
கீரையிட்டு பொரித்தெடுத்த
கடலைமாவுத் திண்பண்டம்
குறுந்திரையில் ரம்மியமாய்
சிலிர்பூட்டும் காதல் கதை
சாரல் தெளிக்கும் சாளரம்
பனிக்கும் பளிங்குத் தரை
கனமில்லாத கருஞ்சிகப்பு
கம்பளிக்குள் கிடந்து
வரண்ட கண்கள் சுறுக்கி
கைவளைத்து கால்கள் இறுக்கி
தனித்திருக்கும் என்னுருவம்
எட்டியெட்டிப் பார்த்தபடி
ஏளனமும் செய்தபடி
விரைந்தோடும் வீதியெங்கும்
மஞ்சொழுக பெய்யும் மழை

(4)
துணை கொண்ட நாயொன்றும்
இணை கொண்ட சிட்டொன்றும்
மழைக்கொதுங்கும் நிலை பார்த்த
பனிப் பொரிபோல் உருவ மழை
படி தாண்டா எனைப் பார்த்து
படபடவென பெய்கிறது
பரிகாசம் செய்தபடி
(5)
பார்வையெட்டும் தூரம்வரை
பாய்ந்தொழுகும் படிக மழை
உடலூற நனையும்படி
உளமெங்கும் விருப்பக் கொடி
கைப்பிடித்து கால் நனைக்க
கையொன்று கிட்டவில்லை
குடை பிடித்து போகுமென்
கூட வர யாருமில்லை
கடல் சேரும் பெரும் நீரும்
கடைத் தெருவின் கழிநீரும்
உடல் வழியும் துளிநீரும்
உவர்ப்பான விழிநீரும்
வீணாகிப் போகிறது
விரைந்து நீ வாராயோ

madhiyalagan@gmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா