வேத வனம் – விருட்சம் 45

This entry is part of 35 in the series 20090806_Issue

எஸ்ஸார்சி


பழிச்சொல்லிலிருந்து காப்போன்
சோமனே
எமது மந்திரக்காவலும் சோமனே
பிரம்மத்தை ப்பழிப்போனை
அழிப்போனும் அச்சோமனே

நல்மனம் நல்குக
உதயசூரியனைக்காணும்
பேறு பெறுக யாமே
அக்கினி நீயே
அழைத்த உடன் வருவோன்
தேவர்கட்குத்தூதன்

அக்கினியில் ஒருவன்
பர்ஜன்யன்
அவன் உணவு தருவோன்
அடுத்தவன் அக்கினி
சந்ததி கொடுப்போன்
வேண்டுவன யாம்
இவை இரண்டுமே ( ரிக் 6/52)

யாம் சூன்ய மனைகளில்
வாழாமலிருப்போம்
அந்நியர் மனைக்கேகி
வதியாமலிருப்போம்
நாங்கள் புதல்வர்களற்றும்
வீரர்களற்றும்
இருத்தலென்பது இல்லை
அனைத்தும் அறிந்த அக்கினி
மனைகளின் நண்பன்
மக்கள்செல்வம்
எம் மனைமிசை அருள்வோன் ( ரிக் 7/1 )

அக்கினி விவேகி
கவிஞன் அவன்
ஒளிதரும் விருந்தினன்
ஒயா முனைப்புடையோன்
சுகம் தருவோன்
வசீகரன் விடியலின் சோதி
நீரின் ஆதி
செடிகொடிகளுள் கருவாய் வாழ்கிறான் ( ரிக் 7/9 )

அக்கினி எம்மைப்
பாவங்களினின்று காப்போன் நீ
தகிக்கும் சுவாலையால்
எதிரியைச்சுடுவோன்
எம் மக்களுக்கேயாகியமகத்துவன்
மாபெரும்
இருப்புக்கோட்டைக்கு காவல்
பாவம் செய்யாது
பகைவரிடம் மாட்டாது
இரவும் பகலும்
எமது காக்கும் கடவுள் ( ரிக் 7/15 )
———————————————–

essarci@yahoo.com

Series Navigation