நான் முடிவு செய்கிறேன் உன்னை

This entry is part of 28 in the series 20090702_Issue

கே.பாலமுருகன்


நீ எப்படி இருக்க
வேண்டும் என்பதைப் பற்றி
கவலைப்படாதே.
உன்னைச் சிறுக சிறுக
என்னுடையதாக
என் விருப்பத்திற்குரியவையாக
என் சுயம் சார்ந்த
கருவியாக
உன்னைப் பாவித்துக் கொள்கிறேன்.

உனக்காக
எதையும் நீ
வைத்துக் கொள்ளாதே.
நான் தருவதை
வாங்கிக் கொள்ளும்
பக்குவம் உனக்கு வேண்டும்.

தலையை மட்டும்
வேகமாகவும் பலமாகவும்
நேர்த்தியாகவும்
ஆட்டுவதற்குப் பயிற்சி
எடுத்துக் கொள்.
நீ தலையை ஆட்டும்போதெல்லாம்
நான் பரவசம் கொள்வேன்.

உனக்கான சிந்தனைகளை
கருத்துகளை
நான் வரையறுத்து
கொடுக்கிறேன்
நாய் போல
முத்தமிட்டு உறிஞ்சி கொள்.
நக்குவதற்கு மறந்துவிடாதே.

உன் முதுகெலும்பை
நான் பத்திரமாகப்
பார்த்துக் கொள்கிறேன்.
அதை நெளித்து
நிமிர்த்தி உயர்த்தி
நீ யாருக்காக பேச வேண்டும்
என்பதையும்
நான் எழுதிவிட்டேன்.

ஆகவே
உன்னை நான்
முடிவு செய்கிறேன்.
தப்பிக்க நினைக்காதே.
அது உன் ஆளுமையைச்
சிதைத்துவிடும்.
என்னுடனே பம்மிக் கொண்டு
அமர்ந்திரு.

அதோ போகிறான் பார்.
அவன் மட்டுமே
இப்போதைக்கும் நமக்கான
வேட்டை.
எங்களுடன் வேட்டையாடு
விளையாடு.
இல்லையேல் நீ
மனச்சிதைவாகிவிடுவாய்.

நீ
ஏதோ சொல்ல
நினைக்கிறாயே? என்ன அது?
சொல் கேட்போம்.

“அருகில் வா
குசு விடுகிறேன்
முகர்ந்துவிட்டு போ”

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation