வேத வனம் விருட்சம் 13

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

எஸ்ஸார்சி



ஜீவன் முக்தனுக்கு
இழப்பேது
உறங்கினால் என்ன
உழைத்தால் என்ன
நன்மை தீமை
வெற்றி தோல்வி
லாப நஷ்டம்
சாதிப்பு பாதிப்பு
எல்லாமே ஒன்று.

அது
இரண்டல்லாதது
இளைப்பார இடமளிப்பது
ஆன்மாவுக்கு ஆனந்தமாவது
உடலா
உலகா
பெறுவதா விடுவதா
இன்பமா துன்பமா
யானா எனதா
ஏதுமற்று அனுபவமாவது.

உடல்
உணர்வு
மனம்
புத்தி
எல்லாம் கடந்த பிரம்மம்
எப்போதுமுள்ள பிரம்மம்
தெளிந்த அவ்வறிஞன்
திரிகிறான் சந்தோஷமாய்.

இரண்டல்லாதது
அநாதியாய் அழிவில்லாதது
பிரபஞ்சம் பிடித்து நிற்பது
பகுக்க ஒண்ணாதது
பிறப்பும் இறப்பும்
தொலைத்தது
வேற்றுமை உனராதது
அது நீயே ஆகிறாய் சீடனே
இரண்டல்லா என்றுமுள
பிரம்மத்தை தெரிவாய்
கணமதுவும் கழியவிடாதே
வெற்றுப்போதாய்.

தோன்றி மறையாதொன்று
பிரபஞ்சம் தாண்டிய ஒன்று
மாயை
உடல் மனம்
தொடா நின்று
அலை எழா சமுத்திரமாகி
முக்காலமும் உய்யும்
பழுதில்லா விடுதலையாகி
அனுபவமாகும்.
உயர் பிரம்மமாய்
அது ஆகிறாய் நீ.
தியானி தேர்ந்து கொள்.
பனி மறையும்
பகலவனால்
அஞ்ஞானம் அகலும்
அறிவொளியால்.

உணர்வுச்சுழல்
அடிமைத்தளை
விடுதலையோ
விருப்பைத்தொலைப்பது.
ஆசை விதை அழிய
பிரம்மம் பிடிபடும்
இரண்டென்பதில்லா
இன்பத்தின் இருப்பு.
பிரம்மத்தின் உறைவிடம்.

உள்ளும் புறமும்
மேலும் கீழும்
முன்னும் பின்னும்
இடமும் வலமும்
எங்கும் எதிலுமுறை
பிரஞையின் இயக்கம்
பிரம்மம் என்பது.

உணர்வுகளை
மீட்டும்
விஷயங்களினின்று
மனதை வென்றெடு.
ஒருநிலைப்படுத்து
ஔர்ந்து அறி சுயத்தை
அச்சம் தவிர்
புனித வாழ்வு சித்திக்கும் -அத்வைத அம்ருத உபநிசத்

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி