நீ வரப்போவதில்லையென..

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

கோகுலன்


இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்

உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதின்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவுத்துண்டுகளை
கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை

அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
சட்டென உனை அணைத்துக்கொள்வதற்கென
நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!


gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்