“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”

This entry is part of 41 in the series 20080508_Issue

கே.பாலமுருகன்தாண்டவம் ஆடுகிறான்!
கடவுளைப் போல பார்க்கிறான்
திடீரென்று அவன் கைகளில்
சூலம் தெரிகிறது!

பிறகு
ஞானப் பழத்தைத்
தூக்கிக் கொண்டு
ஓடுகிறான்!

ஒருநாள் இரவு
ரங்கநாதன் போல
படுத்துக் கொண்டு
வெறிக்கிறான்!

அவன் பிம்பம்
உடையும் சப்தமும்
மீண்டும் ஒரு பிம்பத்தை
உருவாக்கும் சப்தமும்
பயத்தை ஏற்படுத்துகிறது!

மறுநாள் இரவில்
அலறிக் கொண்டு
புரள்கிறான்!
சாத்தான் நெருங்கிவிட்டதாகக்
கூறிவிட்டு ஓடுகிறான்!

கடவுள்
சிதைந்துவிட்டார்
இனி நான்
சாத்தான்
என்று அலட்சியமாக
வந்தமர்கிறான்
மற்றுமொரு இரவில்!

அவன்
சிரிப்பொலியைக் கேட்டு
மிரள்கிறேன்!

அவன்
சுருண்டு
என்மீது
படுத்துக் கொண்டு
தாவுகிறான்!

ஏழாம் அறிவை
வரமளிப்பதாகக் கூறி
சிரிக்கிறான்!

சாத்தான்களின் உலகம்
மிதப்பவை!
சாத்தான்களுடன்
அலைந்து திரிவது
இன்பம்!
சாத்தான்கள் உறங்குவது இல்லை!
சாத்தான்களின் கதவுகள்
நாளிகையாகிவிட்டதென்று அடைப்பதில்லை!
சாத்தான்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை!
சாத்தான்களின் உடலில்
பட்டோ நகையோ
அவசியமில்லை!
நீ சாத்தானோடு
இருப்பதுதான் உத்தமம்
என்கிறான்
அவன்!

சாத்தானாக மாறி
விஷ்வரூபங்கள்
காட்டுகிறான்!

எல்லாமும்
களைந்து
பிம்பத்தை உடைத்து
மீண்டும் கடவுளாக
மாறி
உறங்கிவிடுகிறான்!

கடவுள்களின்- சாத்தான்களின்
கதறல்களுக்கு நடுவே
இந்த
பிம்பம் உடைக்கும்
ஓசைகளை
எழுப்பிக் கொண்டிருப்பது
நான்தான் என்று
புரிந்து கொள்வதற்கு
எனக்கொரு
பின்நவீனத்துவக் கோளாறு
அவசியமாகியது!

களைத்து
களைத்து
மீண்டும்
எல்லாவற்றையும்
உற்பத்திச் செய்து கொண்டிருக்கிறேன்!


கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation