கடைசி உணவு நாட்கள்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தீபச்செல்வன்



01
நமது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.

03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.


23.10.2007
deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்