கருணாகரன் கவிதைகள்

This entry is part of 29 in the series 20070614_Issue

கருணாகரன்
மூடிய யன்னல்

அந்தரித்துத் தவிக்கும்

இசைக்குறிப்புகளின் பின்னோடி

ஒரு மரக்கிளையில் உறங்கிய

உன் கண்களை எடுத்;து வந்திருக்கிறேன்

தீராத மோகத்தோடு

என்னைக் கவ்வி

இழுத்துப் போன அந்தக் கண்கள்

உன் படுக்கை மீது

என்னைச் சாய்த்து விட்டு

நாம் சேர்த்த இசைக்குறிப்புகளால்

என்னைப் போர்த்தியபின்

மெல்ல வௌளியேறிப் போயின

யன்னலோரத்தில்

நினைவுக்கும் கலக்கத்துக்குமிடையில்

துடித்துக் கொண்டிருக்கும்

வாழையிலையில்

தத்தளித்துக் கொண்டிருந்த

இசைக்குறிப்புகள்

என் போhர்வையிலிருந்து எழுந்து சென்றவையா

வெளியேறிப் போன கண்களைத்தேடியலையும்

யாத்திரையில்

இளமையின் பிரியாவிடை

காலடியில் நிகழ்கிறது

எனக்கும் உனக்குமிடையில் அந்;தரித்து

ஏனின்னும் உட்திரும்பல்களில்லை

எப்போதும்

எதிர் முனைப்பயணங்களில்

தீராப்பிடிப்பென்ன

அறியேன்

அறியேன்

குழந்தையின் குரல்

தத்தளிக்கும்

ஒரு குழந்தையின் குரல்

திருவிழாவிலிருந்த விலகிவிட்டது

கூட்டத்தில் நசிபடாமல்

அந்தரிப்போடும் துயரின் கனதியோடும்

அது பெருகிப் பரவுகிறது எங்கும்

அப்படியே

திருவிழாவைத் தீண்டி

அதன் மேல் விசமாகப்பரவி

தன்னை எழுப்பி விடுகிறது

மாபெரும் துயரொளியாய்

அப்பெரும் கொண்டாட்டத்தில்

குழந்தையின் குரலில் மிதக்கும்

தத்தளிப்பை

திருவிழா பகிர்ந்தளித்தது

ஒவ்வொருவரிடமும்

தத்தளிக்கும் குழந்தைக்குரலை

எடுத்துச் சென்றனர்

ஒவ்வொருவரும்

இன்னும்

தத்தளிப்பை குழந்தையிடமே மிஞ்சவிட்டு.

பொம்மையின் ஞாபகம்

வாசலைத் திறந்து

செல்ல முடியாத

பொம்மை

எல்லோரும்

வெளியேறிச் சென்றபின்

தனித்திருக்கிறது

குழந்தையின் ஞாபகங்களுடன்

கiரையமுடியா நினைவுகள்

கரைய முடியா நினைவுகளின் மீது

எனது தனிமை மிதக்கிறது

திறந்த கண்களுடன்

மறக்க முடியா இளமையையும்

கனவின் தீராக் காதலையும்

தன் முடிச்சுகளில் வைத்திருக்கும் தனிமையின் கீழ்

துயரின் வேர்கள்

கூடவே சிறகுடைய மலர்;களும்

கரைய முடியா நினைவுகளின் மீது

கடவுளின்; நிழல் எப்போதுமிருக்கிறது

திரும்பிச் செல்லமுடியா இடங்களையும்

மறுபடியும்

காணமுடியாக் காட்சிகளையும்

சந்திக்க முடியா நண்பர்களையும்

மீண்டும் பெற முடியா முத்தங்களையும்

பிரிவின் இசையோடு சேமித்திருக்கின்றன

கரைய முடியா நினைவுகள்

வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையில்

நிரம்பியிருக்கும் சுனையில்

மிதக்கின்றன கரைய முடியா நினைவுகள்

காத்திருப்பின் நிழல்

உருகிச் சிதறும் நிமிடத்தின்

ஒவ்வொரு துளியும் சேமிக்கின்றன

நம்முகத்தின் பிரதிபலிப்புகளை

பகர்ந்து கொள்ள முடியா

முத்தத்தின் ஈரம்

வானவில்லாகி மிதக்கிறது

இந்த மாலையில்

நீ பருக மறுத்த பானத்தை

முழுவதுமாக

நான் பருகுகிறேன்

கசப்போடும் இனிமையோடும்

திரைகளின் பி;ன்னான

பள்ளத்தாக்குகளில்

மாயப்பறவையின் வினோதம் நிகழ்கிறது

இன்னும் காலியாகாத பானம்

மீதமிருக்கிறது

உன்னை நினைவூட்டியபடி

எப்போதும் பேசாமல் சேமித்திருக்கும்

எனக்கான உன் சொற்களின் ரகசியத்தில்

திரண்ட மகரந்தத்தில்

அமர்ந்திருக்கிறதென் வண்ணத்துப் பூச்சி

மலையின் உச்சிச் சிகரத்தில்

மீதிப்பானத்தோடு

ஒற்றைச் சிறகில் நடனமிடுகிறது

ஞாபகங்களும் கனவும் நிரம்பிய

என் மனம்

காத்திருப்பின் நிழல்

வீதியாய் நீண்டு

கடலாகி

வானத்தில் சேர்ந்து

விரிகிறது

வானமாகி

நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசைக்கப்பால்

சுழன்று கொண்டிருக்கும்

முடிலாப்புள்ளியின் காய்ந்த மலர்

இன்னும் வற்றாத ஞாபகங்களின் ரேகைகளோடு

படபடக்கிறது ரகசியங்களுக்காக

இப்போது

காலியாகி விட்டது பானம்

வானவில்லில் தெரியும்

அன்பறிந்த சொல்லை

மொழிபெயர்க்க முடியுமா உன்னால்

ஆயின்

என் காய்ந்த மலரிலும்

நடனமிடும்

வாசனையையும் தேன்துளியையும்

அறி

ஒரு கடைசி இரவு

எப்போதும் ஒளியூறும்

ஒரு திசைப்புள்ளியைச் சிதறடித்தபின்

அவர்கள் அந்த நள்ளிரவில்

பியர் அடித்தார்கள்.

நுரை பொங்கும் கண்ணாடிக்குவளைகளில்

காற்றின் குருதியை

நிரப்பிக்குடித்தார்கள்

அந்த இரவு முழுதும்

கொடூரத்தின் நிழல் கவியும் போதையில்

அந்த இரவு தள்ளாடியது

நரகத்தின் வாசலைத்திறந்து

அந்த மண்டபத்தில்

சிதறடிக்கப்பட்டவனின் குருதியை எடுத்துப்

பூவாய் அலங்கரித்தார்கள்.

அந்த மாளிகை கறுப்பாய் மாறியதை

அவர்கள் அறியவில்லை

அது பாம்புகள் விருந்துண்ட பேரிரவு

அன்றிரவு

அந்தத்திசைப்புள்ளி

நூறாயிரம் திசைமுகங்களாய்

திக்குகளெங்கும் பரவியது

பலி கொள்ளப்பட்டவனை

மறைக்க முடியாமல்

ஒளியானது அந்த இரவு

பதற்றத்தோடு

இருளில் மறைந்த திசைகளில்

அந்த ஒற்றையடிச்சுவட்டை

யாரின்னும் நினைவில் வைத்திருக்கக் கூடும்

அதை யாரால்

அடையாளம் காணமுடியும்

உதிர்ந்த மலர்களை

யாhர்தான் ஞாபகங் கொள்கிறார்கள்.

அவனுடைய தொலைபேசி இலக்கம்

அவன் எழுதிய இறுதிக்கட்டுரை

அவன் சொல்வதற்கிருந்த

ஏராளம் வார்த்தைகள்

எல்லாவற்றிலும் தீ மூண்டது

பாம்புகள் விருந்துண்ட பேரிரவில்

ஒருதிசைப்புள்ளியின் மீது வீழ்ந்தது

கிரகணம்

(தராகி டி சிவராம் நினைவாக )

வெளி

பெருவெளியில் இல்லை

படரும்

நிழல்

இல்லை நிழல்

வானத்துக்கும்

ஒரு நாள்

அந்த முற்பகலில்

அப்படியொரு நிலையில்

உன்னைச்சந்திப்பேனென்று

நான் நினைக்கவேயில்லை

அவர்;களால் தனித்துவிடப்பட்ட

பயணத்தின் ஓரவஞ்சனை

உன்னிதயத்தைச் சிதைத்திருந்தது.

மகிழ்வு ததும்பும்

உன் கண்களின் எல்லாக்கதைகளையும்

மறைத்தபடி துளிர்த்த கண்ணீர்

என்னைத்தடுமாற வைத்தது

கொந்தளிக்கும் இதயத்தின் வெக்கை

உன் வார்த்தைகளை உறுஞ்சியது

நீ பேசுவதற்கு விரும்பவில்லை

ஆயினும் சில வார்த்தைகள் சொன்னாய்

கோபமும் வேதனையும் நிரம்பிய குரலில்

உன் வார்த்தைகள் அவர்களைப்

பின்வாங்கச் செய்தது

அறிவின் ஒளி நிரம்;பிய

அந்த நியாயங்களை

அவற்றின் உண்மைகளை

கண்டு வியந்தேன்

கதையில்லாத கண்களின் கண்ணீரில்

என்னிதயம் கரைந்தொழுகியது

எங்;கும் பெருகியிருக்கும்;

பழியின்

சாறாய்

அதொரு சாபம் பெற்ற பொழுது

பிறகொருநாள்

இன்றிரவு

நீ முழுதாகப்பூத்திருந்தாய்

நட்சத்திரங்களுக்குக் கேட்கும்படியாகச் சிரித்தாய்

பலதை மறந்திருப்பதும் சிலதை நினத்திருப்பதும்

சந்தோசமானது

என்னவெல்லாமோ பேசினோம்

அப்போது

உன்னுடைய ஒளிப்படங்களைப்போல

நீ அழகாக இருந்தாய்

அந்தக்கண்கள் ஆயிரமாயிரம் கதை பேசின

குழந்தையைப்போல அழகாக

ஒரு குழந்தையின்; எளிமையாக

நான் இரண்டிரவுகள் தூங்காதிருந்திருக்கிறேன்

நீ அழுதபோதும்

நீ சிரித்தபோதும்.

.


poompoom2007@gmail.com

Series Navigation