டான் கபூர் கவிதைகள்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

டான்கபூர்



நெருப்பினில் வடித்து

இடிந்த கட்டிடங்களுக்குள்
மூச்சற்று நகருகின்ற
உணர்வுகள் என் சேவலாய்த்; தலை உசுப்பின.

மெல்லிய தென்றலுக்கு
ஒரு காற்றாடியை விட்டு மகிழ
ஒரு குழந்தைக்காக நிலவு குளித்துச் சென்றது.

இன்னமும் காதுக்குள் இரைகின்ற
மென்மைக் கீதம்
உடைந்து தொங்குவது
முகாமைச் சுற்றிலும்.

நெருப்புக்குள் உலகைத் தேடி
ஆயிரம் ஆயிரம்
புறாக்களை பறக்கவிட்ட கரங்கள்
இரத்தத்தைத் துடைத்து நகைபுரிகின்றன.

முழு சந்தோசத்தை
பூமிக்குள் அனுப்பி மண்புழுக்களிடம் விசாரிக்க
ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்

ஒரு எல்லைக்கப்பாலேனும்
வட்டமேசை போட்டு அழ
குளிர்கின்ற நாட்டுக்குள்
என் கூதல் விறைக்கின்றது.

நாளை பெய்யும் மழை
காட்டு மழையா ?
கடல் மழையா ?….
முகாம்களை முகத்தூரத்தை விட்டும் வைக்க.


கனவின் துண்டு

கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்

நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.

துண்டு துண்டுகளாக
அந்தரத்தில் தொங்கும் என் இளமை
பழுக்கத் தொடங்கிவிட்டது.

ஒரு மயிர்
கோழி கிளறிய என் குப்பைக்குள்
மின்னின.

நெஞ்சுக்குள் உடைந்த
மலை முகட்டின் பாறை
வேர்விட்ட நிலையிலே.

அன்னார்ந்து பனிப்படரின் வீதியில்
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்.
கனிந்த மாம்பழத்தின் பக்கம்
அணில் ஆட்கொள்ளவில்லை.
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.

ஒரு பாதி இரவுக்குள்
இன்னும் என் கனவு வாயு கலையாத வயிறு.


குளிர்ச்சியின் காதல்

அசைத்துப் பார்த்தேன்.
கயிற்றால் கட்டிய காற்று.
உறுமிப் பார்த்தேன்.
சுடரால் பிணைத்த சூரியன்.
கொழுவிப் பார்த்தேன்
மொட்டால் மெழுகிய மலர்.

விரல் நுனிவரை உண்மை உரைத்தது
பிரண்டு மடியாத நா.
என்னில் வளர்த்த மூச்சு பிணத்தோடு சேரும் வரை.

கருவாடு நெருப்பில் வேவி
உள்ளம் குளிர்ந்தது.
காலை உயர்த்தி தலைமேல் பதித்து
நடக்கத் தெடங்கியது கர்வம்.

ஓயாத அலையில் குளித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு ஆண் அலையேனும் அழைக்க.
இந்தப் பன்னல்கள்
என்னைத் தூக்கி நுரையில் தள்ளட்டும்.

காக்கை ஒரு மிரடு குடித்தது.
என் அழுகையின் நீரை.
பசிதீர்ந்ததோ.
பாசச் சுள்ளிகளை நிறைத்து கட்டிய கூடு
யாரும் கலைக்காது
உயரத்தில் மனிதவாடை வீசாது காணும்.
இவனும்….


மூடுபனிக்குள் நான் அலற

பனி என்னைத் தெரியாமல் மூடியது உனக்கு.
நான் கொறிக்கப்பட்டு.
நான் உமியாக்கப்பட்டு.
நான் எதற்கு ?

சூப்பிய மாங்கொட்டையை வீச.
அம்பொன்றைப் பாயவிட.
எனக்கும் தெரியும்.

நீ மேலும் புத்தகங்களைப் புரட்டு.
சமூகத்தை நண்பனாக்கு.
உன் வயது
உன்னைத் துரத்தும் போது
பல கடல்களையும்
பல ஆறுகளையும்
நீ கடக்க நேரிடும்.

எனது காலம் கனைத்தது.
எனது நினைவுகள் அகவின.
போரிட்டுப் புகைந்தது.
மனிதம் என் மடிக்குள் கிடக்க
சமூகச் செதிழ்களை சுரண்டிப் புலம்பி.

என் திரி கருகிக்கொண்டிருக்க
பின் ஒருநாள் புரிவாய் நீ.
உன்னால் ரசிக்காத பூக்களைக் கசக்கிடுவாய்.
உன்னால் இயலாத பட்டைகளை உரித்திடுவாய்.
மென்மை என்ற இறகு
உன்னில் முளைக்காதவரை
நீ.
நீ.
நீ… ?
பனி என்னைத் தெரியாமல் மூடியது உனக்கு.


சமாதானக் குழம்பு

உருவியது பூமி எங்கும்.
ஊர்த்தேங்காய் எண்ணெய்.
நச்சீரகம்
வெங்காயம்
கறிவேப்பிலை மணம் மூக்கை.
தாளித்து மணத்த சமமதானக் குழம்பை.

ஆத்துமா நெஞ்சுக்குள்ளே.
விரல் நுனியில் கடத்திய காலம் மறந்து
இடைவெளியில்
ஒரு சிற்றெறும்புக்கு உள்ள
வலிமை கூட இருக்கவில்லை.
தொய்ந்து கிடந்தது ஆத்துமா.

சமாதானக் குழம்பு மணத்தது.
வண்ணத்துப் பூச்சியும் சந்தோசமாய்ப் பறந்தது.
இரவுகள் பூரித்து விடிந்தன.
சோதனைச் சாவடி சோம்பலாய்க் கிடந்தன.

தாளித்த குழம்பு தவறி விழுந்த கதையால்
ஆத்துமா திரும்பியது இடத்துக்கு.
சட்டி உடைந்தது.
சிலாவின குழம்பு.
உருவியது பூமி எங்கும்.
மணம் புதையுண்டு போயின.
மணம் நாசியை உரசிக் கொள்கின்றது.

பெருமூச்சாய் புயற்காற்று கிளம்பியது.
முகர்ந்த இரவும்
மாசற்ற பயணமும்
இடிவிழா கிரகமும்
நமக்குச் சொந்தமாகுமா என்று.

ஆயினும் சமாதானக் குழம்பு
தாளித்து இறக்கப்படவேண்டும்.
இன்னும்….
இன்னும்….
அலுமினியம் பாத்திரத்திலேனும்.
—-

டான்கபூர், இலங்கை

Series Navigation

டான்கபூர்

டான்கபூர்