பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

பா.சத்தியமோகன்


1928.

எத்திக்கிலும் பலவகையான மரங்கள் கொடிகள் பெருகின

கலங்கும் நீரும் குளிர்ந்து தெளிவன

விளங்கும் ஒளியுடைய வானமும் களங்கம் நீங்கின

மாறுபாடற்ற நயத்துடன்

நல்ல திசையெல்லாம் பறந்து ஒலி செய்தன.

1929.

அழகிய இடங்கள் தோறும் பெருகின விழாவின் மங்கலங்கள்!

பெருகும் சீகாழி என்ற பழைய ஊரில் உள்ள சங்குகள், ஒருகண்பறை

வேறு நரம்புக் கருவிகள் ,

தாரை, சின்னம் முதலிய இசைக் கருவிகள்

இயக்குபவர் இல்லாமலே இயங்கின மங்கல ஒலி மலிந்ததே.

1930.

இப்பெரிய உலகம் இத்தன்மை அடைய

அந்த ஞானசம்பந்தரைப் பெற்ற

அந்தணரின் தலைவரான சிவபாத இருதயர் தம் இல்லத்தின் முன்

பெருங்களிப்போடும் வியப்போடும்

சிவபிரான் அருளினாலே அரிய அழகிய மகனைப் பெற

பொருந்திய அணிகள் செய்தார்.

1931.

காதல் புரியும் சிந்தை கொண்டார் மகிழ்ந்தார்.

களிப்பில் சிறந்த களிப்பு அடைந்தார்

மேலே பூசப்படும் நெய் அணி விழா செய்து திளைப்பார்

மங்கல வினைகளின் ஆரவாரம் பொங்க

பல சடங்கு செயல்களும் செய்வார்.

1932.

சிறந்த வேத குல மங்கையர்கள் பெரு மகிழ்ச்சியுடன்

சாயலுடைய மயில்போல தூய அழகுடைய மணி விளக்குடன்

ஒளிவிடும் குழை முதலிய அணிகள் மின்ன

அழகான தம் மாளிகையை மேலும் அழகுறச் செய்வார்.

1933.

சுண்ணப்பொடிகளுடன் குளிர்ந்த மலர்த் தாதுக்களும் வீசி

உள்ளத்தில் நிறைந்த விருப்பத்துடன்

அவரது அவதாரச் செய்தியை மகிழ்வுடன் எங்கும் உரைப்பார்

வெண்மையான முறைகளுடன் கூடிய

முளைப்பாலிகளை மேடைதோறும் வைப்பார்

மணமுடைய புண்ணிய புதுநீர் கொண்ட

புதுக்குடங்களை வரிசையாய் வைப்பார்.

1934.

செம்பொன் முதலிய தான செயல் செய்தனர்

சிவனடியார்க்கு அமுது செய்ய நாடிச் சென்றனர்

புதிதாய் மலர்ந்த மணமலர் மாலைகளை வண்டுகளோடு கட்டினர்

வேம்பு செருகுதல் முதலான காப்புத் தொழில் செய்தனர்.

1935.

வெண்கடுகு முதலியன சேர்த்து அமைத்த புகையாலும்

நெய்யுடன் நல்மணம் மிகுந்த அகில் துண்டுகள் உண்டாக்கும் புகையாலும்

வேள்வித் தீயின் வெம்மையான தழல்தரும் புகையாலும்

தெய்வ மணம் கமழும் செயல் விளைவித்தார்.

1936.

அன்று முதல் அத்தகைய பற்பல செயல்களெல்லாம்

விண்ணோர் நாயகனான சிவபெருமானின்

அருட்பெருமை நலத்துடன் கூறப்படுமாறு தூய்மையான வேதங்களிலும்

அவற்றின் தொடர்புடைய கற்பசூத்திரம் முதலிய ஒழுக்க நூல்களிலும்

விதித்தபடி பத்துநாட்களிலும் விளைவித்தனர்.

1937.

நாமகரணம் எனும் சடங்கினை

அழகிய அவதார நாளுக்குப் பொருந்துமாறு செய்து

உதிக்கும் இளம் பரிதி போலத்திகழும் ஞானசம்பந்தப் பெருமானை

தாமரையில் எழுந்தருளியிருக்கும் தனி முதல் குழவியான

முருகப்பெருமானைப்போல —

அழகிய மணிகள் பதித்த தொட்டியில் இட்டனர்.

1938.

பெரிய இமயமலை மன்னன் பெற்ற பார்வதி அம்மை

பேணும் திருக்கொங்கையில் உள்ளதான இனிய பாலுடன்

அரிய சிவஞானம் குழைத்து அமுது செய்து

அருள உள்ள அக்குழந்தையை

அந்தணர் குல மாதரான பகவதியார் பரமரான

சிவபெருமான் தாள் போற்றும் அன்பே

தனது கொங்கையில் பாலாய்ச் சுரக்க அதனைத்

திருவமுது செய்து அருளினார்.

1939.

கங்கை ஆறு உலவும் சிவந்த சடையுடைய சிவபெருமான் அருளாலே

உலகுக்கு அதைக் காக்கின்ற பேறு இவர் எனத் தோன்றிய ஞானசம்பந்தருக்கு

வேறு பல காப்புகள் மிகை எனஏதும் விரும்பாமல்

திருநீற்றை நெற்றியில் நிறுத்திப் பூசியதோடு

சடங்கை நிறைவு செய்தார்.

1940.

சிறந்த பொருளுடைய தேவர்களும் தீந்தமிழும்

சிறப்புப் பெற வந்து தோன்றிய பிள்ளை நாயகனை

தூய சுடர் தொட்டிலில் தாலாட்டினர்

மலர்ப் பள்ளிச் சயனத்தில் தாலாட்டினர்

அவர் அவதரித்த நலங்களிலும் பாராட்டினர்.

1941.

முதன்மையாய் வருகின்ற பருவந்தோறும்

உரியபடி வளர்ச்சி பெறும் பிள்ளையார்

அரிய வேதங்கள் தலை எடுப்பது போல்

தலைமுடியை மேல் எடுத்தும்

பெருமழுவைக் கையில் ஏந்திய

சிவபெருமானின் தொண்டு தவிர பிற செய்யோம் என்பது போல

திருமுகமண்டலம் அசைய செங்கீரை ஆடினார்.

(ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி இருகைகளும் நிலத்தில்

ஊன்றி தலை நிமிர்த்தி ஆடுதல் செங்கீரை ஆடுதல் )

1942.

‘’யாம் சைவ சமயம் தவிர பிற சமயம் அறியோம்

உலகீரே எதிர்பட நாடாது அகல்க’’ என்று

கைகள் கொட்டுவது போலிருந்தது

புனிதராகிய சிவபெருமானிடத்து

அந்தத் தாமரைக் கைகள் சப்பாணி கொட்டுவது

விருப்பமுடைய தாளம் பெற கைகள் ஒத்துவது போலிருந்தது

(ச – சேர்ந்தது ; பாணி – கை ; சப்பாணி- இது சப்பாணிப் பருவத்தைக்
குறித்து)

1943.

வேற்று சமயங்கள் இறையின் வேதவிதியிலிருந்து
விழுந்து நிலை குலையுமாறு

பெரிய வானத்தில் நிறைந்த அளவாகி

பெரிய கங்கையாறு பொருந்திய சடையுடைய சிவபெருமான்

ஞானம் தந்தருளுவதற்கு உரிய அப்பிள்ளையார்

மதி தவழும் மாளிகையின் முன் பக்கம் தவழ்ந்தார்.

1944.

சீகாழி என்ற பதியினருக்கு சிறப்பே

கவுணிய குலத்தவரின் கற்பகமே

தமிழிசையும் வேதமும் எல்லாவுயிர்களும் வாழ

தனித்தனியே வாழ வந்து தோன்றிய பிள்ளையே வருக

என அந்தண மங்கையரும் தாதியரும் அழைத்தனர்.

(இது வருகைப் பருவத்தைக் குறிக்கிறது)

1945.

அழைத்தவர்களது செழுமையான முகங்களை

தம்திருநகையால் மலரச்செய்தும்

அதனால் உண்டாகும் மகிழ்ச்சி மேலும்மேலும் பெருகுமாறு

அவர்களின் மேனிமீது பொருந்துமாறு உந்தியும்

உள்ளம் உருகிக்கரைந்து நிலைகொள்ளாது இளகும்படி

உடன் அணைந்து தழுவியும்

பெருக்கெடுக்கும் இன்பம் அளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்

1946.

வளர்பருவம் முறைபடி ஓராண்டு நிறைவதற்குள்

மெலிய சுருண்ட தலைமுடி

பூக்களில் வரிவண்டு ஒலிப்பது போல அசைந்தது

கிளரும் கிண்கிணி ஒலிகளோடு கீழ்நெறி காட்டுகின்ற

சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி தளர் நடை பயின்று அருளினார்.

1947.

வளர்ப்புத் தாதியரின் கைகளைப் பற்றி

தளர்நடையின் அசைவு நீங்கியது

ஒளி அழகு கொண்ட மணிச்சதங்கை கட்டிய வடம் பக்கத்தில் சுற்றிய

திருவடி மலர்களோ நிலத்தில் பொருந்தின

பருவ முறையில் ஓராண்டு நிறைந்தது

நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் பிள்ளையார்.

1948.

சிறுமணித்தேர் தொடர்ந்து உருட்டுவார்

செழிய மணலால் சிறு வீடுகள் கட்டி விளையாடும் நல் நெற்றியுடைய

பேதைப் பெண்களிடத்தில் நடந்தும் ஓடியும் அழித்தும்

சிறுவியர்வைத் துளி அரும்ப அதனுடன் திருநீறும் அணிந்து

ஒளியுடன் வீதியில் பரப்ப இவ்விதமாக வளர்ந்து அருளினார்.

1949.

பெரியநாயகி உடனுறைந்து தோணியப்பர் வீற்றிருக்கும்

சீகாழியில் மதி சேர்ந்த சிவபெருமானின்

திருவருள் செய்த தவத்தின் முளை போல் வளர்ந்தருளி

அரிய மறைகளோடு உலகம் உய்ய

எம்பெருமான் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.

1950.

நாவினால் ஒதுதற்கு அரிய வேதம் முதலிய கலைகள் ஓதும் நாமகளும்

தாமரை மலரில் வாழும் திருமகளும் கலந்து

சிவபுண்ணியமும் பொருந்தியும்

காளையைக் கொடியுமாகக் கொண்ட

சீகாழியில் திருஞானசம்பந்தருக்கு

உலகம் உய்ய நிகழ்ந்ததனை மொழிகிறேன்.

1951.

முன்காலத்தில் திருவடியை மறவாத பான்மை உடையவரை

மிக்க தவம் இயற்றிய சிவபாத இருதயருக்குத் தந்து அருளினார்

திருத்தொண்டின் நிலையை உலகிற்கு அருள்வதற்கென்றே

தோன்றிய அப்பிள்ளையார்

சிவனையே நிலை நீங்காமல் தொடர்வார்

பிரிந்த உணர்வு ஒருகால் மனதில் கொண்டு அந்நினைவு எழுந்தவுடன்

அச்சம் கொண்டது போல் அயலான குறிப்புடன் அழுவார்.

1952.

மேதமையுடைய இந்நாட்களில் ஒருநாள்

வேதவிதிகளில் சொல்லிய சடங்கு நெறி முடிக்க

தந்தை சிவபாத இருதயர் நீராடச் செல்லும்போது

தம் பெருமான் அருள் கூடப் பெறுவதால்

திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில்

தந்தையைத் தொடர்ந்து அழுதபடி பின்னால் சென்றார்.

1953.

பின்னால் வந்த பிள்ளையார் தமை நோக்கி

பெருந்தவமுடைய சிவபாத இருதயர்

தாம் செல்வதை நிறுத்தி சினம் கொண்டவர் போல விளக்கினார்

ஒளி விளங்கும் பொன்னால் ஆன

சிறு கிண்கிணிஅணிந்த திருவடிகளை பூமியில் உதைத்து

நின்றார் ஆளுடைய பிள்ளையார்

“உன் செய்கை இதுவாகில் வா” எனக்கூறி அவருடன் சென்றார்.

1954.

ஊழி முடிவில் தோன்றப் போகும் தனி வெள்ளம் பலவற்றை

விரியுமாறு தோற்றுவிக்கும் கர்ப்பம் போல்

இடையறாது நிற்கும் பெரிய நீர்நிலைகள் யாவுக்கும் பிறப்பிடமாக

காளைக்கொடியை உயர்த்திய சிவபெருமான் எழுந்தருளிய

திருத்தோணியின் தொடர்ச்சியிலிருக்கும்

நீர்நிலையின் துறையை அடைந்தார்.

1955.

பிள்ளையார் தமைக் கரையில் வைத்து

தாம் பிரிவதை அஞ்சினார் அதனால் நீரில் நீராடவில்லை

தேவியுடன் இருக்கும் திருத்தோணி வள்ளலாரை

எழுந்தருளியிருக்கும் பெருமானை உள்ளே நினைந்து எதிரே வணங்கி

அழகிய குளத்தில் மூழ்கினார்

உலகம் உய்ய மகனைப் பெற்றவர்.

1956.

தன் திருமகன் தன்னைத் தேடிக் காண்பதற்கு முன்

நீரில் ஆடித் தருப்பணம் செய்து பிறகு

வேத நியமங்கள் பல செய்வார் சிவபாத இருதயர்

அடங்காத விருப்பத்தால் அதன் பின்

அகமருணே ஸ்நானம் செய்யும் பொருட்டு

தாம் நின்ற இடம் விட்டு அடிபெயராமல்

நீருள் மூழ்கினார் தன் மகனுக்குத் தன்னைவிடப் பெருங்காவல் பெற்றவராக.

(ரிக் வேதத்தின் 10ம் மணடலத்தில் 190 வது சூத்தம் அகமர்ஷணம் என்பது.

பாவத்தைக் கெடுப்பது எனப் பொருள்படும்.

இதனை நீரில் மூன்று முறை செபித்து மூழ்குதல்)

1957.

மறை முனியான சிவபாத இருதயர் மூழ்கியதும்

கண் எதிரே காணாமல்

சிறிது நேரமும் தாங்க மாட்டார் எனும் நிலைமையைக் காட்டி

சிவபெருமான் திருவடியை

இடைவிடாமல் எண்ணியிருந்த முன் உணர்வு மூண்டதனால்

நிறைந்த நீருடைய பொய்கைக் கரையில் நின்று

அழத் தொடங்கினார் ஞானசம்பந்த பிள்ளையார்.

1958.

கண்கள் என்ற மலர்களில் நீர் ததும்பியது

கை என்ற மலர்களால் பிசைந்து அழ

தாமரையும் கொவ்வைக் கனியும் போன்ற திருவாய் உதடு புடைத்துத் துடித்தன

எண்ணிலாத மறைகளின் ஒலி பெருக்கவும்

எவ்வுயிரும் குதூகலம் பெறவும்

புண்ணியத்தின் கன்றினைப் போன்ற பிள்ளையார்

பொருமி அழுது அருளினார்.

{ இறையருளால் தொடரும் }

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்