கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எப்படி ஆக்கலாம்
எனது கடைசி கானத்தை ?
மெய்வருந்திப் பெற்ற
மனதின்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
எனது கானத்தில்
பின்னிக் கொள்ளட்டும்!
புல்லினம் காடாய் அடர்ந்து
புதர்கள் பெருகிப்
புவித்தளம் நீட்சி யாகும்
மகத்துவம் எடுத்துச் சொல்லட்டும்!
அகண்ட உலக னைத்தும்
மகிழ்ச்சியாய் நடனமிடும்,
பிறப்பு, இறப்பெனும் இரட்டைச்
சகோதரர்
பிணைத்துக் கொண்ட
பிறவி
உறவினை எடுத்துக் கூறட்டும்!

மொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்
மட்டிலாத் துயர்கள்
நிலைத்துக்
கண்ணீர் குவிக்க வைக்கும்
சூறாவளி அடிப்புகள்,
கோர தாண்டவம் ஆடி
ஆரவார மூட்டிப்
பெருகும்
வேதனை சிரிப்பு
எனது
கீதத்தில் மலரட்டும்!
தம்மிட முள்ள
பொருள் அனைத்தையும்
தெருப் புழுதியில் வாரி யிறைத்து,
ஒரு வார்த்தை சொல்லாத
உவகைப் பண்பு
என்னிறுதிப் பாடலில்
ஒலிக்கட்டும்!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 20, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா