பெரியபுராணம்-52

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

பா. சத்தியமோகன்


திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி

1390.

அவர்கள் அச்செயலை செய்து முடித்து அகன்றனர் நீங்கினர்- பின்பு

ஒப்பற்ற ஆழ்கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் மெய்த்தொண்டர்

உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும்-

“எத்தகுநிலை வரினும் எந்தை சிவனை ஏந்துவேன்” என

செப்பினார் வளமுடைய தமிழ்ப் பாக்களால்

சிவபெருமானின் ஐந்தெழுத்தை துதித்து.

1391.

சொற்றுணை வேதியன் எனும் தூய திருமொழியால்

நல்லதமிழ் மாலையாக நமச்சிவாய என்று

துன்பகாலத்தில் முன்னிருந்து காக்கும் அஞ்செழுத்தை

அன்போடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.

(இங்கு பாடிய பதிகம் “சொற்றுணை” எனத் தொடங்கும்)

1392.

பெருகிய அன்பினர் பிடித்த தன்மையால்

அருமலரோன் நான்முகன் முதல் அமரரும் போற்றுதற்கரிய

அரிய அஞ்செழுத்தையும் திருநாவுக்கரசு போற்றிட

கருங்கடலினுள் கல் மிதந்ததே.

1393.

அப்பெரும் கல்லும் அங்கு திருநாவுக்கரசு

அதன் மீது வீற்றிருக்கும்படி தெப்பமாய் மிதந்தது

கட்டிப் பிணித்த கயிறும் அறுபட்டது

அக்கல்லின் மீது தோன்றினார்

கெடுதல் இல்லாத சிறப்புடைய மெய்ப் பெருந்தொண்டனார்.

1394.

நல்வினை தீவினை என்ற பாசக்கயிற்றால்

ஆணவம் என்ற கல்லுடன் கட்டி

பிறவிக்கடலுள் வீழ்ந்த மாக்கள் ஏறிட

அருள்கின்ற அஞ்செழுத்து

இக்கடலில் ஒரு கல் மேல் திருநாவுக்கரசை ஏற்றுவது வியப்போ.

1395.

திருவருள் நயந்து அஞ்செழுத்தினால் ஏத்தப் பெற்ற

அக்கருணை நாவுக்கரசினை அலைக்கரங்களால் ஏந்தி

தன் தலைமீது தாக்கிட

வருணணும் முன்பு செய்திருந்தான் மாதவம்.

1396.

சீர் பெற்ற வருணன்

வாக்கின் மன்னரை நாவுக்கரசரை

கருங்கல்லே பல்லக்கு ஆகிட

ஏந்திக் கொண்டெழுந்து அருள்வித்தான்

சேர்ப்பித்தான் பாதிரிப்பூக்கள் பூத்த

புலியூர் என்ற தலத்தின் பக்கத்தில்.

1397.

அந்தத் தலத்தின் அத்திருப்பதிதனில்

வந்து சேர்ந்த அன்பரை

மெய்த்தவக் கூட்டமான அடியார்கள் ஆரவாரித்து எழுந்து

எத்திசையிலும் அர அர என்று ஒலிக்கும் ஓசைபோல்

தத்தும் நீர்ப்பெருங்கடல் தானும் ஆரவாரித்ததே.

1398.

யாவரும் தொழத்தக்க நாவினுக்கரசும் பாதிரிப்புலியூரில்

வெண்மையான கொழுந்து பிறைச்சந்திரன் சூடி

தொண்டர்முன் வீற்றிருக்கும் சடை கொண்ட சிவனாரை

கும்பிட்டார் கீழே விழுந்து வணங்கி

அருள் நெறி உலகில் விளங்கப் பாடுவார்.

1399.

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாகி” எனத் தொடங்கி

“தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கு”

என முடியும் கருத்து கொண்ட

குளிர்தமிழால் ஆன பதிக மாலைகளைச் சார்த்தினார்.

வானிலிருந்து தாழும் நீரையுடைய கங்கை சூடிய சடையானுக்கு

எவ்வுயிர்க்கும் சான்றாய் இருக்கும் ஒருவனுக்கு.

1400.

மேலும் இவை போன்ற வளமான தமிழ்மாலைப் பாடி

அப்பதியில் தங்கிப் பிறகு

வெற்றியும் இளமையும் உடைய காளை கொண்ட

வீரட்டர் திருவடிகளை மிக நினைத்து எழுந்த காதலினால்

அங்கு நின்றும் சென்று

பகைவரின் திரிபுரங்கள் எரித்த வீரட்டானத்து இறைவர் வாழும்

திருவதிகைத் தலம் சென்றடைவார்.

1401.

தேவர்பிரான் இறைவரின் திருமாணிக்குழி என்ற தலத்தையும்

திருத்தினை நகர் என்ற தலத்தையும் அடைந்தார்

விரும்பிய சொல்மலர் மாலைகளால் இறைஞ்சி

வேழியில் சோலை மலர்களின் மணம் தன் திருவடியில் பொருந்துமாறு

நடந்து சென்றார் மொழியின் காவலர்

திருக்கெடிலம் கடந்து வந்தார்.

1402.

கொடிய சமணகுண்டர்கள் செய்வித்த கொடிய துன்பங்களெல்லாம் அழிய

வெற்றி பெற்று மேலேறி இன் தமிழ் அரசர் எழுந்தருள

மேகம் தவழும்படி உயர்ந்த மாடமுடைய திருவதிகை நகரில்

வாழ்பவர் எல்லாம்

தாங்கள் எதிர்கொண்டு உபசரித்து சிறக்குமாறு பொங்கினர்

இச்செய்தியை ஊரில் எல்லாம் எடுத்துக் கூறினர்.

1403.

அழகான நீண்ட தோரணம் வளமான பாக்குக்குலை

மடலுடைய வாழைகள் யாவும் இணைந்துக் கட்டி

ஏழுநிலை கோபுரம்; தெற்றி ஆகிய எங்கும்

கெடாமல் பெருகும் ஒளியுடைய மாலைகள் தொங்கவிட்டனர்

சிவந்த சாந்து பூசியும் அழகிய அணி நகரை முன்னைவிட அழகு படுத்தினர்.

1404.

நிலைபெற்ற அன்பு கொண்ட அவ்வளமான நகரிn மக்களும்

அணிகள் அணிந்த பெண்களும் இனிய நாதமும் ஏழிசை ஓசையும்

எங்கும் பெருகச் செய்து பொன்வண்ணமான பொடிகளும்

பூவும் பொரிகளும் எங்கும் தூவி

பழமையான அந்நகரின் வெளியே வந்து சூழ்ந்து

எதிர்கொண்டு வரவேற்றனர் நாவுக்கரசை.

1405.

தூய வெண்ணீறு அணிந்த பொன்மேனியும்

உருத்திராக்க மாலை அணிந்த கோலமும்

ஆன்ம நாயகரான சிவபெருமான் சேவடி நைந்து உருகி

இடைவிடா அன்பினால் நீர்பொழியும் கண்ணும்

தேவாரத் திருப்பதிகமான செவ்விய சொற்களுடைய சிவந்த வாயும் உடைய

திருநாவுக்கரசு நாயனார் திருவீதியுள் புகுந்தார்.

1406.

பார்த்தவர்கள் கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு

கருணையே உருக் கொண்டதுபோல் விளங்கும்

பெருமானைக் கண்ட பிறகும்

குண்டர்களான சமணக் கீழ் மக்கள் இவர்க்கு

தீங்கு விளைக்கும்படி சினம் கொண்டது எப்படி என உரைப்பர்

மேலும் தொண்டரை ஆண்டு கொண்ட

சிவபெருமானைத் தொழுது துதித்தனரே.

1407.

இவ்வாறு அளவற்ற மக்கள் சொல்லித் துதிக்க

அழகிய திருநீற்றின் ஒளி வடிவில் பொலிந்த அடியார் குழாங்கள்

உடன் பொருந்திச் செல்ல

அவ்வண்ணம் அடைந்த அன்பரான நாவுக்கரசரும் வந்து எய்தி

பவளம் போல் சிறந்த வண்ணரான

சிவபெருமான் எழுந்தருளிய கோயிலான

திருவீரட்டானத்தை அடைந்தார்.

1408.

தேவர்களின் தலைவரான இறைவரை

கோவிலுள் புகுந்து வணங்கி

நம்புதற்குரிய அன்பின் விருப்பம் மிகுந்த காதலினால் திளைத்தார்

“எம்பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தேனே” என்று

தம் பரிவினால் திருத்தாண்டகச் செந்தமிழ்பாடி வாழ்வடைந்தார்.

(“வெறிவிரவு” எனும் பதிகத்தை திருநாவுக்கரசு சுவாமிகள் பாடினார்.

அறுசீர்கள் அல்லது எண்சீர்கள் அமைய ஆடவரையேனும்

கடவுளையேனும் பாடுவது தாண்டகம்)

1409.

அறிவதற்கு அரியானை அடியவர்க்கு எளியானை

பரந்த நீரால் சூழப்பட்ட

திருவதிகை வீரட்டானத்து அமுதான சிவபெருமானை

அறிவதற்கு பெருந்தகையான திருநாவுக்கரசு

மனம் பரிவுறும் செந்தமிழ்ப்பாட்டு பலவும் பாடி பணி செய்து வரும் நாட்களில்-

1410.

புல்லிய அறிவுடைய சமணர்களுக்காக

பொல்லாங்கு புரிந்தொழுகும் பல்லவ மன்னனும்

தன்னுடைய பழவினைப் பாசம் நீங்கியதும்

அல்லல் நீங்கி திருவதிகை எய்தி நாவுக்கரசரைப் பணிந்து

வலிய சமணர்தமை நீத்து

இளங்காளையுடையோன் திருவடி அடைந்தான்.

1411.

வீடுபேறு நெறியை அறியாத சமணர் மொழிகள் பொய்யெனக் கண்டான்

மெய்யுணர்ந்தான் பல்லவமரபு சேர்ந்த காடவ மன்னன்

பாடலிபுத்திரத்தில் இருந்த

சமணர் பள்ளிகளும் பாழிகளும் இடித்து கொணர்ந்து

திருவதிகை நகரின் கண்

நெற்றிக் கண்ணுடைய இறைவர்க்கு

குணபர ஈச்சரம் என்ற கோவில் எடுப்பித்தான்.

(பாழி- சமணர் கோயில் ; பள்ளி – சமண குருமார்
தங்குமிடம்)

1412.

இத்தகு நாட்களில் திருப்பணிகள் செய்கின்ற

இனிய தமிழுக்கு மன்னரான வாகீச திருமுனிவரும்

சடைமீது பாம்பு அணிந்தவரின் தலங்கள் பலவும் சென்று வணங்கி

அவர் நாமம் சொல்லித் துதிக்கும்

தமிழ் புனைந்து தொண்டு செய்ய தொடர்ந்து எழுந்தார்.

(வாகீசர் – வாக்கின் ஈசர் திருநாவுக்கரசர்)

1413.

திருவதிகைப் பதியின் பக்கத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூர்

அருள் தரும் திருஆமாத்தூர் திருக்கோவலூர் முதலியன வணங்கி

பதிகள் பிறவும் வணங்கி வளத்தமிழ்ப்பாடி

பெருகும் விருப்புடன் காளை வாகனம் கொண்டு

மகிழ்வுடன் சிவனார் விரும்பி உறையும் பெண்ணாகடம் அடைந்தார்.

1414.

கரிய மேகங்கள் தங்குதற்கு இடமான மாளிகைகளில்

வேத ஒலி வளர்க்கும் சிறப்புடைய அந்தணர் வாழும் செழும்பதி அடைந்து

நீண்ட சடையுடைய சிவபெருமான் நிலைபெற்று விளங்கும்

தூங்கானை மாடக் கோயிலை உலகம் போற்றும்

திருமுனிவர் நாவுக்கரசர் பணிந்து துதித்துப் பரவினார்.

1415.

புன்மையான சமண சமய நெறியால் தொடக்குடைய

இந்த உடலுடன் உயிர் வாழத் தரிக்க மாட்டேன்

நான் தரிப்பதற்கு உம்முத்திரை இட்டு அருளவேண்டும் என்ற

கருத்துடைய செந்தமிழ் மாலையை இறைவன் திருமுன் நின்று பாடினார்.

1416.

பொன்னார்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் எனத் தொடங்கி

எப்பொருட்டும் முன்னாகியும் முடிவாகியும் நின்றானை

தந்திருமேனியில் உமையை பாகமாக கொண்டானை சங்கரனை

அவரது நன்னாமம் பாடும் திருவிருத்தப் பதிகத்தை நலம் சிறக்கப் பாடவும்-

1417.

செல்வம் நிலைத்த திருத்தூங்கானை மாடத்தில் நிலவும்

பொன் மேருமலையை வில்லாக உடைய சிவபெருமானின் திரு அருளால்

ஒருவரும் அறியாதபடி ஒரு சிவபூதமானது

வாகீசர் திருத்தோளில்

ஒளிமிக்க மூவிலை சூலக்குறியை சினக்காளை குறியுடன் சாத்தவும் –

1418.

ஆங்கு அவர் தம் திருத்தோளில் நிறைந்த திருமுத்திரைகளைக் கண்டு

மனம் அளித்து தம் பெருமான் அருள் நினைந்து

தூங்காது இடைவிடாமல் வரும் அருவிபோல கண்ணீர் வடிய

தொழுது விழுந்தார் ஆர்வத்தால்

மேலேெழுந்த சிந்தையுடன் உய்ந்து ஒழிந்தேன்

(பொன்னார்ந்த எனத் தொடங்கும் பதிகம் திருத்தூங்கனை மாடப்பதிகம்)

1419.

தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும்

சுடர்க்கொழுந்து நாதரின் அடி போற்றி

பாங்குடன் திருத்தொண்டு செய்து பயின்று வாழும் நாளில்

காட்டுப்பூக்களின் மணம் கமழும்

ஒப்பற்ற திருவரத்துறையினையும்

தேன் பொருந்திய சோலை மேகங்கள் உறங்கும்

திருமுதுகுன்றமும் வணங்கி-

(திருமுதுகுன்றம்- விருதாசலம். கருமணியை எனத் தொடங்கும் பதிகம் இங்கு
பாடியது)

1420.

வளமான தமிழால் ஆன மென்மலர் மாலைகளைப் புனைந்து

அருகிலுள்ள குளிர் துறைகளையுடைய நீர் பொருந்திய தலங்களிலும்

ஒப்பிலாத காளை ஊர்தி உடைய சிவபெருமான் உறையுமிடங்களை கும்பிட்டு

கிழக்குதிசை நோக்கி தாமரைத்தடங்கள் சூழ்ந்த

நிவாநதியின் கரை வழியே செல்பவராகி-

( திருவருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்