26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பா.சத்தியமோகன்


இவரது இயற்பெயர் விசார தருமர்.

சண்டாசர் என்பது சிவபெருமான் அருளிய சண்டாசப் பதவியில் வந்த பெயர்.

1206.

அழகிய குளிர்ந்த காவிரி எக்காலமும் பொய்க்காத ஊர்

சோழநாட்டின் தென்கரையில் நிலைத்த ஊர்

கிரெளஞ்ச மலை கிழியும்படிகூர்வேல் நிலைக்க

தேவர்களின் பகையாகிய சூரபன்மனின் பகை வென்று

முருகபெருமானின் ஆணையால் அளிக்கப்பட்ட அந்தணர்கள்

நெருங்கி வாழும் மூதூர் சேய்தலூர் எனும் ஊர்.

1207.

அவ்வூரில் வாழும் மறையவர்கள்

திருவெண்ணீறில் ஒன்றுபட்ட மனம் உடையவர்கள்

இருபிறப்பின் சிறப்புள்ளவர்கள்

மூன்று வித தீக்களை வளர்க்கும் நெறியுடையவர்கள்

நான்குவேதம் முறையாய்ப் பயின்றவர்கள்

தன் பின் ஐம்புலன்களும் வரச்செய்யும் இயல்புடையவர்கள்

தாம் செய்யும் ஆறு தொழிலின் மெய்யான ஒழுக்கத்தை

ஏழு உலகமும் போற்றத்தக்க வாழ்பவர்கள்.

1208.

குற்றமிலா மான்தோல் உடைய முப்புரிநூல் அணிந்த மார்புடன்

குழைந்த மெல்லிய மயிர்க்குடுமியுடன் வேதம் ஓதும் சிறுவர்களும்

அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் ஆசிரியனும்

இரவுப்பொழுதில் விளங்கும் விண்மீனும் சந்திரனும் போல

பொருந்தும் மடங்களின் மீது ?முழங்கும் மேகங்கள் தங்குமாறு

வேத ஒலிகள் முழங்கும்.

1209.

வேள்விகள் நிலவும் சாலைகள்

மறையோர் தந்த அவி உணவின் பாகத்தை உண்ண வரும்

திருமாலின் படரும் இறகுடைய கருடன் போலவும்

நான்முகனின் அன்னப்பறவை தங்கும் இடம் போலவும்

தேவேந்திரனின் ஐராவதம் எனும் யானைகட்டும் கட்டுத்தறி போலவும்

நாட்டப்படும் வேள்வித் தூண்களின் கூட்டம் அந்நகரில் உள்ளன.

1210.

ஓமங்களுக்கு பஞ்சகவியத்தின் பொருட்டு

வளர்க்கப்படும் பசுக்கள் இனிய பால் ஒழுக

வேளைதோறும் செல்லும்

தாம் கற்ற வேத சாகைகளை கணிக்க

ஓமத்திற்கு மாணவர்கள் சமிதைகள் கொணர்வர்

மலர்கள் நிரம்பிய நீர்நிலைகளில்

மறையவரின் மங்கையர் புகுவது போன்ற தன்மையுடன்

தெருக்கள் பலவும் விளங்கின.

1211.

சிறந்த வாழ்வுடைய அந்நகரின் அருகில்

மணியாற்றின் அலைகள்

முத்துக்கள் சொரியும் பக்கமாக வேள்விச்சாலைகள் உள்ளன.

தொடங்கிய சடங்கு முடித்துச் செல்லும்

வேள்வித் தலைவரின் பெரும் தேர்களும்

அங்கு வந்து அவிர் பாகம் உண்டு செல்லும் –

தேவர்களின் விமானங்களும் நெருங்கியுள்ளன.

1212.

நீர்மடையில் செங்குவளை மலர்கள் இருந்தன

நீர் சூழ்ந்த வயலில் செந்நெல் கற்றைகளும் ,

வண்டுகள் மொய்க்கும் பாக்குமரத்தில் பூத்த

நீர்ச் செழிப்பு மிக்க பாக்கு மரப்பாளைகளும்

இலைகள் மிகுந்த தாமரைகளின்

நீண்ட பூக்களில் உறங்கும் கயல்மீன்களும்

நடக்கும் வழியில் பந்தல்போல் படர்ந்த

மெல்லிய முல்லைக் கொடிகளும்

அரும்புகளால் விளங்கும் கிளைகளுடைய

காஞ்சி மரங்களும் இருந்தன.

1213.

அந்த சேய்ஞலூர் சோழர் மரபில் அபயன் எனவும்

குலோத்துங்க சோழன் எனவும்

தில்லையின் எல்லையில் பொன் வேய்ந்தசோழன் எனவும்

போரில் சிங்கமாய் என்றும் புவிகாக்கும்

மன்னர் பெருமான் அநபாயச்சோழன் அவதரித்த

தொல்மரபில் மூடிசூட்டுகின்ற தன்மையில்

பொருந்திய ஐந்து பதிகளில் ஒன்றாக விளங்கியது.

1214.

பண்ணின் பயன் நல்லிசையும்

பாலின் பயன் இனிய சுவையும்

கண் பெற்றதன் பயனான பெருகும் ஒளியும்

கருத்துக்குரிய பயன் ஐந்தெழுத்தும்

விண்ணின் பயன் மழைபொழிவும்

வேதத்தின் பயனான சைவமும் போல

மண்ணுக்குப் பயனாகும் அந்தப்பதியின்

வளத்தின் பெருமை அளவில் அடங்குமோ ? ஆகாது.

1215.

பெருமை விளங்கும் அந்தப்பதியில் அந்தணர்களுள் சிறந்த

இல்வாழ்க்கை அறங்களில் நிலைத்த

காசிப கோத்திரத்தில் தலைமையான குடியில்

அரிய பணியையும் அளித்து நஞ்சும் அளிக்கும் பாம்புபோல

நல்வினை தீவினை என்ற இரண்டு வினைக்கும்

ஒரு வடிவாய் வந்தான் எச்சதத்தன் எனும் ஒருவன்.

1216.

அந்த மறையவன் திருமனைவி நல்லமரபில் வந்து உதித்தவள்

சுற்றம் தழுவுதலை விரும்பும் தன்மையில்

இல்வாழ்வு நடத்தும் செயலுடையவர்

உலகில் துணையாய் உள்ள மகப்பேறு பெற்று

அதனால் விளங்கும் தவத்தை முன் செய்தவள்

மகப்பேற்றால் பெறும் பேறுகளுக்கு எல்லை பெறுவாள்

பற்றுகளை அறுக்கும் பற்று வந்தது அதனால்

சிவனிடம் பற்று வைக்கும் சார்பான குணம் உடையவள்.

1217.

நன்மை விரும்பிச் செய்யும் அவர்களிடம்

நன்மைதரும் மறைகளின் துறைகள் விளங்க

எக்காலத்தும் மறையவர்ின் குலம் பெருக

ஏழுபுவனங்களுமுய்ய

திரு அம்பலத்தில் நடனம் செய்கின்ற சிவனாரின்

சைவ உண்மை வளர

மாதவத்தின் வெற்றி விளங்க

?விசார சருமனார் ? தோன்றினார்.

1218.

ஐந்து வயது அவருக்கு நிரம்ப

ஆறு அங்கங்களும் கூடியவராகி

சந்த மறைகள் உட்பட

முன்னமே மொழிந்தருளிய சிவ ஆகமங்களின்

முந்தைய அறிவின் தொடர்ச்சியால்

அரும்பாசி முதிர்கின்ற மலரின் வாசம்போல

சிந்தை மலர அதனுடன் மலர்கின்ற

பக்குவ உணர்ச்சி சிறந்தது.

1219.

வயது நிகழும் முறைமையால் ஏழு ஆண்டு நிரம்பியது

புகழும் பெருமையும் உடைய உபநயனச் சடங்கு முடிந்தது

இகழப்படும் நெறி அல்லாதவை எக்காலமும்

அவர் அறிவில் பொருந்தியிருந்தது எனினும்

அவரைப் பெற்றவர் தம்மரபின் படி

வேதம் ஓதும் செயலைச் செய்வித்தனர்.

1220.

அறிவு விளங்கக் காரணமான வேதமும் பலகலைகளும்

கற்பிப்பதற்கு முன்னமே

தன் உள்ளத்தில் கொண்டு அமைத்து

நிலவும் உணர்வின் ஆற்றல் கண்டு

போதிக்கும் ஆசிரியர் வியப்பு கொண்டார் அதிசயித்தார்

அளவிலாத கலைகளில் குறிப்பிடும் பொருள்களுக்கெல்லாம்

எல்லையாய் உள்ள பொருள் –

அருட் பொருள்களுக்கெல்லாம் எல்லையாய் உள்ள பொருள்

அருட்பெரும் கூத்து இயற்றும் திருவடியே ஆகும் எனத்

தெளிந்து கொண்டார் தம் உள்ளத்தால்.

1221.

அருள் நடனம் ஆடுகின்ற திருவடிவுடையவர்

நம்மை ஆள்பவர் – நம்மை உடையார் எனும் உண்மை

உடனே தோன்றும் உணர்வினால்

ஒழியாமல் இடைவிடாமல் ஊறுகின்ற அன்பின் வழியே

கடமையாய் இயல்பாய் முயற்சி செய்யுமாறு காதல் மென்மேலும் எழுந்தது

அக்கருத்தின் உறுதிபட நேர்நின்ற

விசாரதருமர் வாழ்ந்துவரும் ஒருநாளில் –

1222.

வேதம் ஓதும் மாணவர் கூட்டத்துடன் சென்றார்

ஊராரின் ஆநிரையுடன் செல்லும்போது

அப்பசுமந்தையுள் ஒரு பசு

தன்னை மேய்ப்பவன் மீது கொம்பால் முட்டச் சென்றது.

சற்றும் கூச்சமில்லாமல் கோல்கொண்டு அவன் அடித்தான்

அதைக் கண்டதும்

மிக்க அன்பால் அவன் மீது சினம் கொண்டு

உண்மை உணர்ந்தவராய் –

1223.

பிரிந்த கலைகளும் ஆகம நூல்களின் பரந்த தொகுதியும்

உண்மையின் பெருமை பொருந்திய அரிய வேதங்களும்

மூலமாக விளங்குவதினால்

யாவும் தெளிந்து பொருள் நிலை தெளிந்து உணர்ந்த உள்ளத்தால்

பசுக்களின் பெருமை உள்ளபடி அறிந்தார்

ஆயனுக்கு அருள் செய்பவராக-

1224.

உயிர்கள் தங்கும் எல்லா யோனிகளுக்கும் மேலானது பசு

பொங்கும் தூய தீர்த்தங்கள் என்றும் எல்லாம் பொருந்தியது பசு

தேவர்கள் திருமுனிவர்கள் கணங்கள் யாவரும் சூழ்ந்து இருக்கை கொண்டு

பிரியாத அங்கங்களுடையது பசு அல்லவோ ?

1225.

அத்தகு சிறப்பால் ஈன்ற நாளிலிருந்தே

திரு அம்பலத்தில் கூத்தாடும் நாயனார்க்கு

வளர்மதியும் நதியும் வெண்மையான தலை மாலையும் கொண்ட

சடையுடைய திருமுடி மீது

அவர் விரும்பி அருளுதற்கேற்ப

தூயதிரு மஞ்சனம் ஐந்தையும் தருகின்ற

அந்தப் பசுக்கள் இறைவரின் உரிமைச் சுரபிகள் தாம்.

1226.

சிறப்பான தன்மையுடைய தேவருடன்

காலம் முழுதும் அனைத்துலகும் காக்கின்ற

முதல் காரணரான திருநீலகண்டரான

சடையுடைய கூத்தையுடைய பெருமானாகிய

சிவபெருமான் சாத்தும் திருநீரு தரும் கோமயம் என்ற

மூலம் தருகின்ற மூர்த்தங்கள்

சீலமுடைய இந்தப்பசுக்களே என்றால்

முடிவு வேறு என்ன உள்ளது ?

1227.

நினைக்க இனி வேறு உளவோ ?

உழைமான் கன்று ஆட இடமான திருக்கை உடையவரும்

அணியும் பாம்புகளின் ஒளியும்

தெள்ளிய கங்கை நீர்ச்சடையும் உடைய சிவபெருமான்

தேவரின் பிராட்டியுடன் எழுந்தருளும்

சினமால் விடைத் தேவரின் குலமன்றோ இந்தச்சுரபிக்குலம் ?

1228.

என்று இவ்வாறு பலவும் நினைத்தார்

கன்றுகளுடன் கூடிய இந்த ஆன்நிரைகளை

இதமாக மேய்த்துக் காக்கும் கடமை தவிர வேறில்லை

இதுவே கடமை;

மன்றில் ஆடும் நடராசப் பெருமானின்

திருவடிகளை போற்றும் நெறியும் இதுவே என்று எண்ணி

தம் எதிரே நின்ற ஆயனை நோக்கினார்

?நீ இப்பசுக்கள் மேய்க்கும் தொழிலை ஒழிக ? என்பார்.

1229.

யானே இனி இப்பசுக்கூட்டத்தின் மேய்ப்பன் என்றார்

ஆயன் அஞ்சினான் – அவரை வணங்கி

மேய்த்தல் தொழில் விட்டு அகன்றான்

மறையோரின் இசைவு பெற்று

பசுக்கள் நெருங்கும் பேராயம் காத்தார் தெய்வமறைச் சிறுவர்

பசிய பயிர்களுக்கு மழைபோல்.

1230.

பசுவை மேய்க்கும் கோலும் கயிறும் கொண்டார்

குழைந்த குடுமியானது அசைய

மான்தோலும் பூநூலும் சிறுமார்பில் துவள

இடுப்பில் கோவணம் சுடர

பாலும் கன்றுகளும் பெருக பசுக்களை மேய்த்தார்

அவை வேண்டுமளவு புற்கள் தந்தார்.

1231.

புல் அதிகமாகவுள்ள காலங்களில் மேய்ப்பார்

பறித்து அளித்தும் அப்பசுக்களின் துன்பம் போக்குவார்

நீர்த்துறையில் இதமாக நீர் உண்ண வைப்பார்

நீர் ஊட்டி அச்சம் வராமல் நீக்கி

நல்வழிகளில் அவை முன் செல்லவிட்டு

நிழலிலே இளைப்பாறச் செய்வார்

அமுதம் போன்ற சுவையான பால் தரும்போது

அவற்றை உடையோரின் இல்லங்களில் விடுவார்.

1232.

மண்ணியாற்றங்கரையில் வளரும்

முல்லைக் காட்டின் பக்கத்திலும்

மருத நிலச் சோலைகள் சூழ்ந்த கரைகளின் பக்கத்திலும்

எண்ணிலாமல் பெருகும் பசுக்கூட்டம் மேய்ப்பார்

சமிதையுடன் தீக்கடைக் கோலுடன் மேய்த்துவிட்டு

திரும்பும்போது பலநாட்களில் இரவாகிவிடும்.

1233.

பசுக்கூட்டமெல்லாம் அழகுடன் விளங்கிப் பெருகி மேய்ந்தது

இனிய புல் உணவும் தண்ணீரும் உண்டதால்

மனதில் எய்திய பெருமகிழ்ச்சியால் இரவும் நண்பகலும்

தூய்மையான இனிய பாலைப் பெருகிச் சொரிந்தன பசுக்களின் காம்புகள்.

1234.

வேதியர் தாம் மேற்கொள்ளும் வேள்விச் சடங்கு செய்வதற்கு

வேள்விக்கு பால்தரும் ஓமப்பசுக்கள்

முன்னைவிட அதிக மடங்கு பால் தந்தன

பசுவைப் பேணும் தகுதியுடன்

அந்த பிரம்மச்சாரி மேய்த்த பின்புதான் தம்பசுக்கள்

சிறந்தன ஆகின என உள்ளம் மகிழ்ந்தனர்.

1235.

எல்லாவிதத்தாலும் ஆவினங்கள்

அளவிலா மகிழ்ச்சி கொண்டு

வீட்டில் உள்ள தம்கன்றுகளைப் பிரிந்தாலும்

தன்முன் மருவிய வேதக்கன்றாகிய விசாரதருமரை பார்த்து

தாம் தாயான அனுபவம் அடைந்து கனைத்துக் கொண்டு

மடு சுரக்கும் காம்புகளிலிருந்து கறக்காமலே பாலைப் பொழிந்தன.

1236.

தம்மைச் சேர்ந்த பசுக்கள்

பால் கறவாமலே தாமே பொழியக் கண்டு

இப்பால் சிவபெருமானின் திருமஞ்சனத்திற்கே என

செம்மை நெறி கொண்ட மனதில் குறிப்புணர்ந்தார்

அத்தெளிவில் சிவபெருமானது பூசையை

விரும்பும் வேட்கை கொண்டார் விரைந்து.

( இறையருளால் தொடரும் )

sathiyamohan@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்