பெரியபுராணம் – 29

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

கண்ணப்ப நாயனார் புராணம் தொடர்ச்சி


— பா. சத்தியமோகன்
761.
போவார்! மீண்டும் வருவார்!
இறைவரைத் தழுவுவார் ! மீண்டும் போவார்! காதலுடன் நோக்கி நிற்பார்!
கன்றை விட்டுப் பிரிகின்ற தனிமையுடைய பசுவைப் போல ஆவார் !
நாதனே .. இறைவனே .. தாங்கள் அமுது செய்ய
நல்ல மெல் இறைச்சி
நானே குற்றமிலாததாய் வேறு கொண்டு வருவேன் என்பார்.
762.
நீவீர் உமக்குத் துணையாக எவரைக் கொண்டு இங்கு இருப்பீர் !
அகலமாட்டேன் நீவீர் பசித்திருக்க இங்கு நிற்கவும் மாட்டேன்
என்று கூறித் தளர்கின்ற கண்ணீர் பெருக போய்வரத் துணிந்தார்
பெரிய வில்லை எடுத்துக் கொண்டு
மலர் போன்ற கையால் குடுமித் தேவரை தொழுது கிளம்பினார்.
763.
குடுமித்தேவரின் முன் நின்று சிரமப்பட்டு நீங்கி
மலை விட்டுக் கீழே இறங்கி
நாணன் பின் தொடர
வேற்றுத்துறைகளில் ஆசை நீங்கி
அன்பு அவரை ஆட்கொள்ள
திருமுகலி ஆற்றின் பொன் கொழிக்கும் கரையில் ஏறி
பூக்கள் நிறைந்த பூஞ்சோலையுள் புகுந்தார்.
764.
அங்கு நின்ற காடன் எதிரே வந்து திண்ணனாரைத் தொழுது
தீயைக் கடைந்து வைத்தேன்
கொம்புடைய பன்றியின் உறுப்பை எல்லாம்
அடையாளப்படி நோக்கிக் கொள்க
மீள நாம் திரும்பிச் செல்ல
காலம் தாழ்த்த எது காரணமோ
என்றதும் அங்கு நின்ற நாணன் சொன்னான் :
765.
அங்கு இவன் மலை உச்சியில்
குடுமித்தேவரைக் கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பிடித்த வலிய உடும்பு போல நீங்காதவன் ஆனான்.
அத்தேவர் தின்ன இறைச்சி கொண்டு செல்லவே
இவன் இங்கு இப்போது வந்தான்
நம்குலத்தன்மை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்.
766.
என்ன காரியம் செய்தாய் திண்ணா நீதான்
எண்ணாமல் முடிவெடுத்தாய்
எங்கள் பெரும் தலைவனுல்லவோ நீ
என்ற காடனின் முகத்தை நோக்கவில்லை
வலிய பெரும் பன்றி தன்னை நெருப்பினில் வதக்கி
மிக்க இன்புறு தசைகளை வெவ்வேறாக அம்பினால் அரிந்து கொண்டு –
767.
கொழுப்புகளை தசைகளை
கோலினில் கோத்துக் காய்ச்சி
நல்ல பதமாய் வெந்ததும்
இனிய அவை முன் காண வாயினில் அதுக்கிப் பார்த்து
அவற்றிலே சாலவும் இனிய பகுதியை
சருகு இலையால் செய்த தொன்னையில் இட்டு நிரப்பலானார்.
768.
அருகில் நின்ற நாணனும் காடனும்
இவன் மையல் மிக முதிர்ந்து விட்டது
என்னே! அரிதாகப் பெற்ற இறைச்சியை
வேகவைத்து மென்று பார்த்து உமிழ்கிறான்
பெரும்பசி இருந்தும்தான் உண்ணவில்லை
எமக்கும் தரும் இயல்பில்லை.
769.
இத்திண்ணன் தெய்வமயக்கம் கொண்டான்
இதனைத் தீர்க்கும் வழி ஏதும் அறியோம்
தேவராட்டியை நாகனோடு அழைத்து வந்து தீர்க்க வேண்டும்
அவ்வேட்டைக் காட்டில் உள்ள
ஏவல் ஆட்களையும் கொண்டு போவோம் என
எண்ணிச் சென்றனர்.
770.
காடனும் நாடனும் கான் விட்டுப் போனதும் உணரார்
தொன்னையின் கண் ஊனமுது அடைத்துக் கொண்டு
குடுமித்தேவரை நீராட்ட எண்ணி
மாநதி நன்னீரை தூய வாயினில் கொண்டு
தூய்மையான திருப்பள்ளித் தாமங்களை
தன் தலை மேல் நிறையக் கொண்டார் –
771.
வில்லினை ஒரு கையில் கொடிய சரமுடன் தாங்கி
தொன்னையில் புனித மெல் இறைச்சி ஒருகையில் ஏந்தி
இனிய இறைவர் மிகவும் பசித்திருப்பார் என இரங்கி ஏங்கி
மிக விரைந்து இறைவனிருக்கும் மலையை அடைந்தார் திண்ணனார்.
772.
இளைத்துவிட்டார் தன் நாயனாரான இறைவர்
என மலை அடைந்தார்
முளைத்து எழுந்த முதலான இறை கண்டு
அவர் திருமுடி மலர்களைக்
காலில் இருந்த வளைத்த அழகிய செருப்பால் மாற்றி
வாயில் இருந்த மஞ்சன நீரை
தம் அன்பு முழுதும் உமிழ்வார்போல விமலனார் முடி மேல் விட்டார்.
773.
தலைமீது சுமந்த பள்ளித்தாமத்தை
காளத்தி மலைமீது எழுந்த தம்பிரானார் முடிமீது சாத்தி
வில்மீது விளங்கிய செம்மையான கையுடைய திண்ணனார்
இலைமீது படைத்த ஊனை திருஅமுதை எதிரே வைத்து –
774.
கொழுப்புடைய தசைகள் எல்லாம் அரிந்து நீக்கி
கோலினில் கோத்து தீயில் பதமாய் காய்ச்சி
பல்லினால் அதுக்கிப் பார்த்து
நாவினால் இனிமை ஆராய்ந்து படைத்த இந்த இறைச்சி
சாலச் சிறந்தது இறைவரே உண்டு அருள்வீர் என்றார்.
775.
இத்தகு சொற்கள் சொல்லி
அமுது செய்வித்த வேடர் மன்னரின் உள்ளத்தில்
திருக்காளத்தி மலை இறைவருக்கு
இனிய நல்ல ஊன் இன்னமும் வேண்டும் என எழுந்த பெரும் காதல் கண்டு
தன் பல நெடும் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் மறைந்தான்.
776.
அப்போது அந்தி மாலை ஆனவுடன்
இரவிலே வரும் கொடிய விலங்குகள் உள்ளனவே என அஞ்சி
மெய்மை தவிர வேறெதுவும் இல்லா செவ்விய அன்பு தாங்கி
திருக்கையில் வில் தாங்கி
கரிய மலை போன்று திண்ணனார் இறைவரின் அருகில் அகலாமல் நின்றார்.
777.
முனிவரும் தேவரும்
சேர்வதற்கரிய தவங்கள் செய்தும் கூட
மேகங்கள் தவழும் மலைகளும் காடுகளும் அடைந்தும் கூட
காண அரிய இறைவனை ஆசை முன்னே பெருகிட
ஆராத அன்பினாலே பார்த்த வண்ணம் நீண்ட இரவின் இருள் நீங்க நின்றார்.
778.
மூங்கில்கள் சொரியும் முத்துக்கூட்டங்களில்
கதிரான நிலவு ஒரு பக்கம் பொங்க
குகை வாழும் பாம்பு உமிழ்ந்த சிவந்த சுடர் ஒரு பக்கம் மொய்க்க
தழைத்த கதிர்களையுடைய பரிதியொடும் கூடி
குழை அணி அணிந்த இறைவரின் இந்த மலையை
அமாவாசை நாளில் கும்பிட வந்ததை ஒத்திருந்தது சந்திரன்.
779.
விரவும் பல வகை மணிகள் வெளியிட்ட விரிகதிர் பரப்பின் பரவுகளால்
மரகத மணிகளும் ஒளியுடைய நீலமணிகளும்
கதிரவனும் சந்திரனும் சுடரில் வெளியிடும் ஒளியானது
போரிட அதற்கு அஞ்சி
இரவும் இருளும் ஒதுங்கியது போலிருந்தது.
780.
சிவந்த தழல் ஒளியில் பொங்கும்
பெரிய தீப மரங்களின் ஒளியினாலும்
குரங்குகள் கற்குகையில் வைத்த முத்து மணி விளக்கின் ஒளிகளாலும்
ஐம்புலன்களும் அடங்கிய முனிவரின் அரும்பெரும் சோதியாலும்
எம்பெருமானின் திருக்காளத்தி மலையில் இரவு என்பதே இல்லை.
(தீப மரம் – ஒளி வீசும் இயல்புடைய மரம்)
781.
முன் இரவு நீங்கி அதனுடன் பொருந்திய யாமம் நீங்கி
இரவு சுருங்கிட அறிந்த பறவைகள் சிலம்புபோல் ஒலித்த ஓசை கேட்டு
கருங்கடல்போல் நின்ற கண் துயிலாத திண்ணனார்
பெற அரிய தம்பிரான் ஆன பெருமானுக்கு அமுது தேடி வர எண்ணி –
782.
செங்குத்து மலையேறும் பன்றி, கலைமான், காட்டுமான் மற்றும்
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத்தொழில் தந்திரத்தாலே
கொன்று ஊறு செய்யும் காலம் சிந்தித்தார்
உருவம் மிகத் தெரியாத பொழுதான காலையில்
வில்லுடன் வள்ளலைத் தொழுது கிளம்பினார் திண்ணனார்.
783.
செறிந்த இருள் வாங்கி முகம் காட்டி தேரில் வரும் கதிரவன்
கரிய இருள் திரை நீக்கி கண்டு கொள்க என
கைகாட்டுவான் போல் கதிர் காட்டினான் –
மெய்யன்பு காட்டி வில் வளைக்கும் திண்ணனாரின் தனி வேட்டைக்கு.
784.
சிறப்புடைய சிவ ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப
கொய்த மலரும் மஞ்சள் நீரும் முதலான பொருட்கள் கொணர்ந்தார்
நஞ்சு தழைக்கும் கழுத்துடைய மருந்தான காளத்திநாதரை
வழிபாடு செய்து வரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார்.
785.
திருமலையில் வந்து வான நாயகர் அருகில் நின்று
சிந்தை நியமத்தோடு இறைவர்முன் செல்பவரான அவர்
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்தோடி
ஓ கெட்டேன் இந்த அனுசிதம் செய்தவர் யார் என வருந்துவார்.
786.
நேர் வருந்துவதற்கு அஞ்சாத வேடர்களே இது செய்திருப்பார்
தேவதேவனே ! உம்திரு முன்பும் இவ்விதம் செய்து போவதா
இவ்வண்ணம் செய்ய திருவுள்ளம் கொள்வதா
எனப் பதறி அழுதார் விழுந்தா அலமந்து போனார் சிவகோசரியார்.
787.
மலையில் எழுந்த சுடர்க்கொழுந்தான இறைவரின் பூசனை
தாழ்க்கும்படி நான் இனி இருப்பதென்ன என்று
அங்கிருந்த இறைச்சி, எலும்புடன் கூடிய இலை
செருப்புத்தடம், நாய்க்காலின் தடம் யாவற்றையும்
திரு அலகால் சுத்தம் செய்தபின்
விருப்பத்தோடு திருமுகலி ஆற்றில் மூழ்கி எழ விரைந்தார்.
(திருஅலகு – துடைப்பம்)
788.
புகுந்த பழுது தீர பவித்திரமான செயல்புரிந்து தொழுதார்
பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
குற்றமிலாத திருமுழுக்கு ஆட்டல் முதலிய பூசை முழுதும்
முறையாய் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்.
789.
பணிந்து எழுந்து சிவனே தனிமுதல் கடவுள் என்று பல்முறை
ஓலமிடும் வேதமந்திரத்தால் துதி செய்து
சுடர் பிறை அணிந்த சடையுடன் கூடிய முடியுடைய
நெற்றிக்கண்ணரிடம் விடை பெற்று
தணிந்த மனமுடைய திருமுனிவர் தபோவனத்திற்குத் திரும்பினார்.
790.
இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார்
இனி இப்படி மையின் நிறமுடைய
கரிய குடுமி கொண்ட வனவேடர் பெருமானார்
கையினால் அழகிய வில் வளைத்து கானில் தனி வேட்டை ஆடிய
செயல் திறத்தை மொழிவேன் அதனால்
தீவினையின் திறத்தைப் போக்கிக் கொள்வேன்.
791.
திருமலையான காளத்தியின் புறம்பாகச் சென்ற திண்ணனார்
செறிந்த நீண்ட கற்களையுடைய சரிவில்
புனங்களை மேயும் பன்றிகளையும்
காட்டினின்று ஒரு வழியாகச் சென்று ஏறும் மானினங்களையும்
ஒளிந்து நின்று கொன்று அருளினார்.
792.
கலைமான் போல் கூப்பிடும் முயற்சியால் கூவி
அவை ஊடுருவும் போது கொடும் கூர்முக அம்பு எய்து கொன்றும்
அடிச்சுவடுகள் கண்டு உறங்கிக் கொண்டிருந்த மரை இனங்கள் கொன்றும்
வேட்டை வினை முடிந்தபோது
வெயில்படு வெங்கதிர் முதிர்ந்து கொண்டிருந்தது.
793.
வேட்டையில் இறந்த விலங்கையெல்லாம்
படர்வனத்தில் ஒரு சூழலில் இட்டு
உடைவாள் உருவி தீக்கடை கோல் வெட்டிஎடுத்து
நல்ல கொம்புத் தேனும் மிக எடுத்து
தேக்கிலையால் வட்டமான பெரியகல்லையில் குழிவாக அமைத்தார்.
(கல்லை – தொன்னை போன்ற அமைப்பு )
794.
விறகுக்கட்டைகளை முறித்து அடுக்கி
தீக்கடைக் கோலால் வெந்தழலைப் பிறப்பித்து
அத்தீயை மிக வளர்த்தார்.
அம்பினால் விலங்குகளைத் துண்டாக்கி
கொழுப்புகளை பகுதி பகுதியாக அரிந்து எடுத்து
மூண்டெரியும் தீயில் வதக்க வேண்டியதை வதக்கி —
795.
கூரிய அம்பால் அழிப்பதும் வகுப்பதும் ஆகிய செயல்கள் செய்து
விலங்குகளில் பல உறுப்பின் இறைச்சியெல்லாம்
அரிந்து ஒரு கல்லையில் வைத்து
தீயில் காய நெடிய கோலில் கோத்து நன்கு காய்ச்சித்
தூய திரு அமுது அமைக்க சுவை காணலும் உற்றார்.
(சுவை காணல் : வாயிலிட்டு சுவை அறிதல் )
796.
எண்ணிலாத கடவுளார்க்கு இடும் உணவை
கொண்டு சென்று ஊட்டுகின்ற சிவந்த தீக்கடவுளின் வாயில் வைத்தது போல
காளத்தி நாதருக்காகிய ஊன் திருவமுதை
தன் திருவாயில் இட்டார் திண்ணனார்.
797.
நல்ல பதமுற வெந்ததும்
நாவிலிட்டு சுவைகண்ட இறைச்சியை
கல்லையினில் வைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு
திருப்பள்ளித்தாமமும்
தூய மஞ்சன நீரும் முன் நாள்போல
உடன் கொண்டு விரைந்து வந்தணைந்தார் திண்ணனார்.
798.
வந்து திருக்காளத்தி மலையேறி
தேவர் தலைவரான சிவபெருமானை எய்தி
அந்தணனார் பூசைப் பொருளை முன்பு போல் அகற்றியபின்
முன்பு முறை செய்ததுபோல தமது பூசனையின் செயல் முடிப்பார்.
799.
ஊன்னான அமுதத்தைக் கல்லையுடன் வைத்து
இது முன்னை விட நல்லது
பன்றியோடு மான், கலை, மரை கடமை இவற்றால் ஆன
இறைச்சி அமுது இது அடியேனும் சுவை கண்டேன்
தேனுடன் கலந்த இது தித்திக்கும் என மொழிந்தார்.
800.
இப்பரிசு திருவமுது செய்வித்து
தனது ஒப்பிலாத பூசனையை தன் நெறியில் செய்தார்
எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால்
காளத்தி நாதர் திரு முன்பு இரவில் உறங்கார்
பகலில் வேட்டைக்குச் செல்வார்.
801.
மாமுனிவர் சிவகோசரியார் நாள்தோறும் வந்தணைந்து
வனவேந்தர் திண்ணனாரின் பூசனைக்கு மிகவும் தளர்வு அடைவார்
தீமையென அது நீக்குவார்;
செப்பிய ஆகம விதிப்படி பூசனைகள்
அர்ச்சனைகள் செய்து அந்நெறியில் ஒழுகுவார்.
802.
நாணணோடு காடனும் சென்று நாகனுக்குச் சொல்லினர்
ஊனும் உறக்கமும் இன்றி தேவராட்டியுடன் வந்தனர்
இறைவனையே பேணும் மகனிடம் மனதை மாற்ற பலவிதமாய் முயன்றனர்
தங்கள் குறி பலிக்காமல் அவரைக் கைவிட்டு அகன்றனர்.
803.
முன்பு திருக்காளத்தி முதல்வனாரின் அருள் நோக்கால் இன்புற்று
இரும்பு பொன் ஆனது போல்
உடலின் தன்மையும், இருவினையும் ,மும்மலமும் அறுத்து
அன்புப் பிழம்பாய் சிவபோத வடிவமான திண்ணனார்-
அழைப்பவர் அழைப்பை ஏற்கும் அளவினரோ!
804.
அந்நிலையில் திண்ணனார் அறிந்த நெறியில் பூசித்து வர
நிலை நின்ற ஆகமவிதிப்படி மாமுனிவர் அர்ச்சித்து அங்கு
என்னுடைய நாயகனே இப்படி செய்பவரைக் காணேன்
உனது திருவருளால் ஒழித்தருள வேண்டும் என்றார்.
805.
அன்றிரவு அருள் முனிவர் சிவகோசரியார் கனவிலே
மின்போல் திகழும் சடைமுடியரான சிவபெருமான் எழுந்தருளி
வலிய திறல் உடைய வேடன் என அவனை நீ நினையாதே
நல்லவன் தன் செயலை நான் சொல்லக் கேட்பாயாக என்று தொடங்கி —
(அன்றிரவு – திண்ணனார் குடுமித்தேவரைக் கண்ட 05ஆம் நாள் இரவு )
806.
அவனது வடிவெல்லாம் நம்மிடம் வைத்த அன்பு மயமே என்றும்
அவனது அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவே என்றும்
அவனது செயலெல்லாம் நமக்கு இனியனவாம் என்றும்
அவனது நிலை இப்படிப்பட்டதென நீ அறி என்று அருள் செய்தார்.
807.
உனக்கு அவன் தன் செயல் காட்ட
நாளை நீ ஒளிந்திருந்தால்
எனக்கு அவன் காட்டும் பரிவும் பரிசும் காண்பாய்
மனக்கவலை ஒழிக என்று மறைமுனிவர்க்கு அருள் செய்து
புனல் சூடிய திருமுடியார் எழுந்தருளிப் போயினார்.
808.
இரவில் கனவு நிலை நீங்கியபின் விழித்தார் உணர்ந்தார்
தவம் செய்யும் மாமுனிவர் புலரும் வரை கண்துயிலார்
மனம் அற்புதம் உற்றது
மனம் பயமும் உற்றது
விரையும் குதிரைகள் பூட்டப்பட்ட தனித்தேரில்
கதிரவனின் கதிர்கள் தோன்ற –
809.
முன்னை நாள் போலவே வந்து திருமுகலி ஆற்றில் மூழ்கிப்
பலமுறையும் கனவில் தனக்குத் தம்பிரான் அருள் செய்ததை நினைத்து
நிலைத்த திருக்காளத்தி மலை ஏறி முன்பு போலவே
இறைவனைப் பூசித்துப் பின்பாக ஒளிந்திருந்தார்.
810.
கருமுகில் போல் இரவெல்லாம் நின்ற வில்வீரரான திண்ணனார்
ஆறாம் நாள் விடியற்காலையில்
அருமறை முனிவனார் வருமுன் தனிப்பெரும் வேட்டைக்குத்
எவரும் அறியாமல் சென்றிருந்தார்.
811.
ஒப்பிலா இறைச்சியும் நல்ல தூய மஞ்சன நீரும்
திருமுடியில் ஏறிய அழகிய மலரும்
வெவ்வேறான தன்மையில் அமைத்துக் கொண்டு
தம் இயல்பைத் தேறுவார்க்கு அமுதம் போன்ற சிவபெருமானை அடைய
திண்ணனார் விரைந்து அணுகினார்.
812.
இத்தனை நேரம் தாழ்த்தினேனே என விரைந்து ஏகினார்
முன்பு கூடிய பல சகுனங்கள் எல்லாம் தீங்கை அறிவித்தன
இத்தகு புன்சகுனங்கள் இரத்தக்குறி காட்டிகின்றதே
என் தலைவனுக்கு என்ன ஆயிற்றோ! கெட்டேன்!
அடுத்து என்ன நடக்குமோ என வந்த போதில் –
813.
அண்ணலாரான இறைவன் திருக்காளத்திநாதன்
சிவகோசரி முனிவர்க்கு திண்ணனாரின் பரிவைக் காட்ட
திருக்கண்களில் ஒன்று துண் என இரத்தம் பாய இருந்தனர்
தூரத்தே அவ்வண்ணம் கண்ட
வில்லுடைய திண்ணனார் மிகவிரைந்து ஓடிவந்தார்.
814.
வந்தவர் குருதி கண்டார் மயக்கமுற்றார்
வாயிலிருந்த நன்னீர் சிந்தியது
கையினின்று ஊனும் வில்லும் சிதறி வீழ்ந்தது
கொத்தாக விரியும் பள்ளித்தாமம்
குடுமியினின்று அலைந்து சோர்ந்தது
உளம் குலைந்து நிலத்தில் பதைத்து வீழ்ந்தார்.
815.
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தார் குருதியை
வீழும் குருதி நிற்கக் காணார்
என்ன செய்வதெனத் தெரியாமல் பெருமூச்சுவிட்டு
உயிர்த்தார் வீழ்ந்தார் செயலிழந்தார்
இதைச் செய்தவர் யார் என எழுந்து
திசைகள் எங்கும் பார்த்தார் எடுத்தார் வில்லினையும்.
816.
தக்க அம்பு தேர்ந்து எடுத்துக் கொண்டு
இம்மலையில் எனக்கு மாறாக வன்மையுடைய
கொடிய வேடர்கள் இதனைச் செய்தாரோ ?
சிங்கம் முதலான விலங்குகள் செய்தனவோ ? அறியேன் என்று
நீள் மலைச் சாரலில் வெகு தொலைவு தேடிச் சென்றார்.
817.
வேடரைக் காணார்
தீயவிலங்குகள் பக்கத்தில் எங்கு நாடியும் காணார்
மீண்டும் நாயனார் தம் அருகில் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதத்தை
துக்கமுடன் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வடிய.
818.
பாவியேன் பார்த்தபடி இருக்க இறைவர்க்கு நிகழ்ந்தது எதுவோ
ஆவியினும் இனிய எங்கள் அத்தனுக்கு நிகழ்ந்தது எதுவோ
மேவினாரைப் பிரியாத எம் விமலானார்க்கு நிகழ்ந்தது எதுவோ
என்ன செய்யப் போகிறேன் என அறியேனே எனக்கதறினார் மீண்டும் –
819.
என்ன செய்தால் தீருமோ எம்பிரானுக்கு நிகழ்ந்த தீங்கு
செய்தவர் எவரும் முன் நிற்கக் காணேன்
வீரக்கழல் அணிந்த வேடர்களின் ஒளி உடைய அம்பால் வந்த புண்கள்
தீர்க்கும் மெய்மருந்து தேடி
பொன் திகழும் தாழ்வரையிலிருந்து கொணர்வேன் நான் என்று போனார்.
820.
நெருங்கிப் பார்த்து வனங்கள் எங்கும்
வேறு வேறு மூலிகைகள் எங்கெங்கு இருக்கும் என்று நினைத்தார்
தம் இனம் விட்டுப் பிரிந்த சிவந்த கண் உடைய
காளையைப் போல அச்சமுடன் சென்று காடுகளில் பறித்த மூலிகையுடன்
பூதங்களின் நாயகனான காளத்தியப்பரிடம்
மனதைவிட வேகமாக வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
821.
இவ்விதம் அவர் பிழிந்து வார்த்த மருந்தினால்
திருக்காளத்தி மன்னவர் கண்ணின் புண்நீர்
குறைபடாமல் வழியக்கண்டு இந்நாளில்
இந்நிலைக்கு என்னதான் செய்வது என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்க்க ஊனுக்கு ஊன் எனும் உரை நினைவு கொண்டார்.
(புண் நீர் : இரத்தம்)
822.
இதற்கு இனி என் கண்ணை அம்பினால் பெயர்த்து அப்பினால்
எந்தையார் கண்ணுக்கு இது மருந்தாகி புண்நீர் நிற்கவும் கூடும் என்று
மதர்த்த உள்ளத்தோடு மகிழ்ந்து இறைவன் முன் இருந்து
தன் கண்ணை அம்பினால் அடியோடு பெயர்த்து வாங்கி
முதல்வர் தம் கண்ணில் அப்பியதும் –
823.
இறைவனின் கண்ணில் வழிந்த செங்குருதி நிற்கக் கண்டார்
பெருமகிழ்வால் நிலத்தை விட்டு உயரப் பாய்ந்து குதித்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டிக் கூத்தாடி
நன்று நான் செய்த இந்தமதி என நகையும் தோன்ற
களிப்புடன் ஒன்றிப் போய் உன்மத்தர் போல ஆனார்.
824.
வலத்திருக் கண்ணில் தன் கண் அப்பிய வள்ளலாரின் நலத்தை
மேலும் காட்ட இறைவர் தன் மற்றைக் கண்ணிலும்
இடைவிடாது செங்குருதி பாய்ந்து சுழியச் செய்தார்
இவ்வுலகில் வேடர்குலம் செய்த பெரும் தவத்தால் வந்து தோன்றிய கொள்கையினால்
தேவரை விட மேலானவர் ஆன திண்ணனார் –
825.
அதைக் கண்டு கெட்டேன் ! எங்கள் காளத்தியார் கண் ஒன்றில்
புண் தரும் குருதி நின்றுவிட மறுகண் குருதி பொங்குகின்றது
இதனால் அஞ்சிவிட மாட்டேன் , மருந்து கண்டேன்
இன்னும் உண்டு ஒரு கண்
அக்கண்ணை இடந்து அப்பி இந்நோய் தீர்ப்பேன் என்று —
826.
நெற்றிக்கண் உடைய தேவரின் கண்ணில்
தன் கண் இடந்து அப்பினால் உண்டாகும் இடர்பாடு எண்ணிப் பார்த்தார்
தம் இறைவனின் திருக்கண்ணில் இடக்கால் ஊன்றி
உள்ளம் நிறைந்த விருப்பத்துடனும் ஒப்பிலா ஒரு அம்பு கொண்டு
அதனைத் தன் கண்ணில் திண்ணனார் ஊன்ற
தேவதேவர் தாங்க முடியாதவரானார்.
827.
சிவந்தகண் உடையவரும் வெண்காளையை ஊர்தியாக உடையவரும்
திண்ணனாரை ஆண்டவருமான அங்கணர்
திருக்காளத்தி நாதரின் அற்புதத் திருக்கை
இலிங்கத்தினின்று தோன்றி
தன் கண்ணைத் தோண்ட முயலும் அவர் கையைத் தடுக்க
பாம்பினைக் கங்கணமாகக் கட்டிக் கொண்டவரின் அமுதத் திருவாக்கு
மூன்று முறை கண்ணப்ப நிற்க என்றது.
(அங்கணர் = அங்கத்தில் கண் உடையவர் )
828.
கானக வேடரின் பெருமானார்
தம்கண் இடந்து அப்பும்போதும்
ஊன் அமுது உவந்து உண்டு அருளிய குடுமித்தேவர்
இடக்கண் தோண்டும் கையை உற்று கவனித்துத் தடுத்துப் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவரான சிவகோசரியார் கண்டார்
நான்முகன் முதலிய வானவர்கள்
பூ மாரிப் பொழிந்தனர் வேதங்கள் ஒலிக்க.
829.
எம்பிரான் திருக்கண்ணில் வந்த துன்பம் கண்டு அஞ்சி
தன் கண்ணை இடந்து அப்ப உதவும் கையை
காளைக்கொடி உயர்த்திய காளத்தியப்பர்
தன் கையால் பிடித்துக் கொண்டு ஒப்பிலாதவனே
என் வலப்பக்கத்தில் நிற்க என்று அருள் புரிந்தார்
இதை விட பேறு ஏதேனும் உண்டோ ?
830.
முகில் வாழும் இடமான திருக்காளத்தி மலையின் மன்னரான
இறைவனின் கண்ணில் புண்ணீர் வழிய
தன் கண்ணால் மாற்றும் பேறு பெற்ற தலைவரான
கண்ணப்ப நாயனார் திருவடியை தலையில் சூடி
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில்
கலயனாரின் பொங்கிய புகழ்மிக்க திருத்தொண்டை இனிப் புகல்வேன்.
(கண்ணப்ப நாயனார் புராணம் முற்றிற்று )
— திருவருளால் தொடரும்.
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்