ஊடாத உன் நான்

This entry is part of 39 in the series 20041028_Issue

மாலதி


—-

நிரம்ப அதிர்ச்சி இதில்.
ஏன் இப்போதெல்லாம்
உன்னிடம் பழையபடி
ஊடவும் சீறவும் பாயவும்
முடிவதில்லை ?
மூக்குக்கு மேல் கோபம்
தெறிக்கிறது உனக்கு.
விலகலின் பச்சை இறைச்சி
அபாய வீச்சத்துடன்
கொதிக்கிறது நம்
பேச்சுக்களின் அடியில்.
விறகிழுத்து
செயற்கையாக சமாதானம்
ஆகிறோம். மூர்க்கமாக
தக்கவைக்கிறோமெல்லாமும்.
இங்கு போரின் சாகசமும்
ஒற்றின் மன்னிக்கப்படவொண்ணாக்
கூறும் உண்டென்று நம்புகிறேன்.
என் உடனிருப்பே!ஒற்றை உறவே!
கோபக்கார காண்டாமிருகமே!
காணாமல் போகிறேன் உனக்கு.
மீண்டும் தேடித்தேடி என்போல்
இயல்புகளைக் கண்டுபிடி.
முதல்நாளில் ஆரம்பி
உனக்கு முடியுமானால்.
உன்னைச்சாராதிருக்கும் வீரமாவது
என்னைச் சாரட்டும்.

மாலதி
20-9-04

malti74@yahoo.com

Series Navigation