தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.


(பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் ‘தங்கமான என் வங்காளம் ‘ என்று வருணனை செய்து உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதை இது! பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையைப் பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது)

பொன்னான என் வங்காள நாடே!
நின்னை நான் நேசிக்கிறேன்.
நின் வானளாவிய தென்றல் காற்றென் நெஞ்சில்
எப்போதும் புல்லாங்குழல் போல் இசை மீட்டும்!
வசந்த காலத்தில் என்னரும் தாயகமே! நின்
வனாந்திர மாந்தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னை ஆட்டும்!
என்னே நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில் என்னரும் தாயகமே!
நின் முற்றும் மலர்ந்த நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்! என்னே உந்தன் நிறமயம்!
என்னே உந்தன் அருமை! என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய் நீ!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் சொற்கள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என்கண்களில் பொங்கி எழும் நீர்த்துளிகள்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா