நேர்த்திக்கடன்

This entry is part of 50 in the series 20040812_Issue

தீபம்கோபி


அன்று….

அதிகாலை துயிலெழுந்து
ஆற்றுநீரில் தலைக்குளித்து
ஆதவனை தொழுதுவிட்டு
பசுஞ்சோலை வயல்வெளியில்
தலையசைக்கும் இளம்பயிரில்
எனைமறந்த “பொற்காலம்”!

இன்று….

அந்திமேகம் கருக்கவில்ல
அடைமழையும் பெய்யவில்ல..
ஆத்துநீரை பார்த்து பார்த்து
ஆண்டுபல போயாச்சு..

வயல்வரப்பு வறண்டுபோயி
வாழ்க்கை இன்று கனவாச்சு..
சேத்துவெச்ச செல்வமெல்லாம்
வட்டிக்கடை வசமாச்சு…

வெயிலெடிச்சி வெடிச்ச நிலம்
விண்பார்த்து காத்திருக்க!
மண்குளிர மழைபெஞ்சா
மாவிளக்கு நானெடுத்து
கூழூத்த கோவில் வரேன்
குறைதீரு மாரியாத்தா….!

– தீபம்கோபி, சிங்கப்பூர்.
dewwinds@yahoo.com

Series Navigation