உழைப்பாளர் சிலையோரம்….

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


“எதற்கிந்த மல்லுக்கட்டல் ?
எதற்கிந்தப் போராட்டம் ?”

*
கல்லைப் புரட்டி
கல்லாகிப் போனவர்களே….
உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ?

கல்புரட்டும் கம்பிக்கு
சிறுகல்லால்
முட்டுக்கொடுக்கும் உத்தி
புதியுள்ளவனின்
புரட்டு உருட்டு வேலை.

பெருங்கல்லால் சிறுகல்
குட்டுப்பட்டு குனிய….
குனியாமல் திமிற….

சிறுகல்லால் பெருங்கல்
இருந்தஇடம் தலை நிமிரும்
இருந்தும்
விட்டுவிலகி வேறுபுலம் பெயரும்.

நெம்புகோலானவர்களே….
உங்கள் தத்துவம்
உங்களுக்குத் தெரியுமா ?

கல்லுக்குத் தலைகாலில்லாவிடினும்
தன் எடையை ஓரிடத்தில்
நிறுத்தி வைத்திருப்பதை
நினைத்ததுண்டா ?

கல்லின் ஈர்ப்பு மையத்தைக்
காட்டுங்கள் எனக்கு.

என்னிடம் சொல்லுங்கள்
என்ன செய்கிறீர்கள்

மயிரைக்கட்டி மலையை இழுப்போம்
வந்தால் மலை போனால் மயிரா
உங்கள் கதை ?

மதம்பிடித்த யானை
மரத்தையே முறிக்கலாம்.

ஆனால் அதுவே அந்த
மரத்தடி சிறுவேரில்
கட்டுமொரு கட்டில்
கட்டுப்படும் தெரியுமா ?

இந்தக் கல்லை வைத்துக்கொண்டு
கால்பந்தா விளையாடுகிறீர்கள் ?

இருவர் இருஎதிர் திசை உதைக்க
ஒரு பக்கமும் ஓடாமல்
உதைபடுமே ஒரு நேரம்….

பாறாங்கல்
மண்ணில் கிடந்தாலும்
உங்கள் தோளில் கனக்கிறது
சுமந்தாலும் உயராதிருக்கிற
வாழ்க்கை வழக்கெண்ணி
வலிக்கிறது மனசு.

ஓ…. என் உழைப்பாளிகளே….
ஒரு நிமிடம் ஓய்வெடுங்கள்….
உங்கள் வேலையை விட்டு சற்று
விலகிவந்து நில்லுங்கள்.

உங்கள் நெற்றி வியர்வையை
ஒற்றி எடுங்கள்.
அதற்கும் இடுப்புத்துணி யொன்றுதானா
இருக்கிறது உங்களிடம் ?

சரி….மீன்களுக்கு
நீச்சல் கற்றுக்கொடுப்பதாய்
நினைக்காதீர்கள் என்னை.

உழைப்பாளிகளே….
உங்களோடு நானிப்போது
ஒருகை பிடிக்கட்டுமா ?

நிரயுதபாணி என்றாலும்
நெஞ்சுயர்த்தி நிற்கும் வீரம்
உங்களைப் போல் எனக்கும்.

என்றாலும்
இன்னுமொரு நெம்புகோல்
எந்திரத்தோடு
புரட்டப் பார்க்கலாமா….
புத்தியோடிந்த பூமியையும்.

என்னை மன்னியுங்கள்.
என்னோடு உங்களை எவர்பார்த்தாலும்
சந்தேகச்சேறு பூசி
நான்கேட்ட கேள்விகளெல்லாம்
கேட்காமல் விடமாட்டார்.

எட்டாண்டாய் என் தொழிலில்
எதையும் எட்டாமல் போனேனென்று
ஏச்சும் பேச்சும்
எனக்கு வந்த கடிதத்தில்….

அதை உங்கள் காதில்விழ
கத்தி மீண்டும் படிக்கிறேன்.

“எதற்கிந்த மல்லுக்கட்டல்
எதற்கிந்தப் போராட்டம் ?

முடியாதென்று விட்டுவிலகாமல்
ஏனிந்தப் பிடிவாதம் ?”

என் உயிரை வைத்த என்
தொழிற்கூடத்தைவிட்டு
இந்த உடம்பா விலகும் ?
விலகுவது மரணமில்லையா ?

ஓ என் உழைப்பாளிகளே….
உழைப்பவன் வீணில்
வீழானென்று உரையுங்கள்!

(சுயதொழில் என்று சுதந்திரமாய் தொடங்கி பறந்து பறந்து, என் சிறு தொழிற்கூடத்துக்குள் இடை இடையே சிக்கிச் சிறகடித்த பத்தாண்டுக் காலத்தில் இந்த உணர்வுப் பொங்க ஒருநாள், சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலையோரம்…)
—- —-
thamilmathi@yahoo.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி