கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது

This entry is part of 52 in the series 20040513_Issue

பா. சத்தியமோகன்


யூகித்தேன்
கடவுளின் மூச்சு
பச்சைப் பசும்புல்வெளியின்
தோகை அசைவு போல
அத்தனை இதமாக இருக்குமென.

மயிலிறகின் மேல் நழுவும்
பனிக்கட்டியின் நகர்வோ எனவும் இருக்கலாம்

விடாமல் பொழியும் மழைத்தாரைகளின்
குள்ளக் குளிர் போன்ற
காற்றுப் பயணமோ

எப்படியிருக்கும் கடவுளின் மூச்சு
அதனை விடவேண்டும் அவர் நாசி கொண்டு
தீர்மானித்த ஆசையின்படி

கடவுளின் மூச்சு ஒரு வேளை
இறந்த பிறகுதான் தெரியுமா
யாருக்கும் எழுதிக் காட்ட முடியாதா

ஒரே ஒரு தரம் பகிர்க இறையே
மனைவியின் கட்டில் சுகத்தில்
போக மூச்சு உன்னதுடையதோ என்றேன்

கிசுகிசுக்கிறார் கடவுள்

சுவாசத்தின் நடுவே திக்கித் திணறும்
உன் தாயின் இருமலைப் போன்றதென.

****

cdl_lavi@sancharnet.in

Series Navigation