சோற்றுப் புத்தகம்

This entry is part of 54 in the series 20040401_Issue

பா.சத்தியமோகன்


பச்சை நிற ரெக்ஸின் பை
ஜிப் வைத்த பெரிய பை
தோளில் தொங்கும் உள்ளே வெவால் தோல் போல
இரண்டு பகுதிகள் நடுவே மெலிய தடுப்பு அடிக்கடி கிழிகிறது.
ஒரு பகுதி உணவுக்கு ஒன்று புத்தகத்திற்கு
புத்தகங்கள் வெந்த சோறின் சூட்டால்
நமநமவென பக்கங்கள் ஊறிவிடுகிறது
சிலநாட்கள் குடிநீரின் ஈரம் பெற்று
தன்னை கிழிய விடுகிறது
மடக்கி மடக்கி வீட்டுக்கும் அலுவலத்திற்கும்
வாசிக்கப்படும் புத்தகம்
சோற்று டிபன் பாக்சின் சூட்டினால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது
சோற்றுக்குப் பக்கத்தில்தான் புத்தகம்
புத்தகத்திற்கு பக்கத்திலேயே சோறு
நீண்டநேரம் நீண்டதூரம் பிரித்துணவார் எவரேனும் உளரோ
பைக்கு உள்ளே தவிக்கும் புத்தகமே
நீயேனும் கூறு இரண்டும் தனியா ? ஒன்றா ?

cdl_lavi@sancharnet.in

Series Navigation