ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி

This entry is part of 47 in the series 20040325_Issue

பா.சத்தியமோகன்


கவனித்தேன்
மெதுவாகச் சுழல்கின்றவை ஞாயிறு மின்விசிறிகள்
இறக்கைகளின் மின்சாரம் ஏக்கத்தால் ஆனவை
ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள் ஒவ்வொரு முறையும்
விடுதலைக்கு ஏங்கி வீட்டு வேலைகளில் முடியும்
நீண்ட நேரம் நீடிக்க விரும்பும் விடுமுறை மின்விசிறி
சீக்கிரமே சுழன்று முடித்திருப்பது
மறுநாள் புலரும் திங்கட்கிழமையை எண்ணித் துடிப்பதில்
அடிநெஞ்சுக்கும் புரிந்துவிடும்
விருப்பப்படி பறக்க ஆசைப்பட்ட மின்விசிறிகள்
தாம் ஒரு எளிய சுவிட்சுக்கு கட்டுப்பட்டோம்
என்பதை பொதுவில் மறக்கின்றவை
‘வலமிருந்து இடப்புறம் சுழல்வதையே பறப்பதாக
கருதிக்கொள்க ‘
எவரோ சொல்லிய வேதனையில்தான்
கடக் கடக் என்ற குரல் எழுப்புகின்றன விசிறிகள்
கவனித்தேன் ஆம் என்கிறது
இன்னொரு கடக் !

****
cdl_lavi@sancharnet.in

Series Navigation