வைரமுத்துக்களின் வானம்-8

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

ருத்ரா


அம்பிகைகளுக்கு
பிள்ளைத்தமிழ் பாடிய
புலவர்களிடையே
‘அன்னைத்தமிழ் ‘ பாடி
அர்ச்சிக்க வந்த
பிள்ளைப்புலவனே !
கொள்ளையடித்து விட்டாய்
முழுதுமாய்
எங்கள் உள்ளங்களை.
உன்னை
கருவிலே சுமக்கும்போது
அவள்
வெறும் பிண்டத்தையா
சுமந்தாள் ?
தமிழ் எனும்
பிரபஞ்சத்தின் ஒரு
பிஞ்சையல்லவா
பத்திரப்படுத்தினாள்.
எழுத்துக்களின்
பிரவாகத்தையல்லவா
வயிறு
பிசைய பிசைய
சுமந்திருந்தாள்.
அந்த மாணிக்கச்செப்புக்குள்
செதில் செதில்களாய்
உன் கனவுகளை
அல்லவா
செதுக்கி வைத்திருந்தாள்.
முட்டிக்கொண்டு நின்ற
கவிதை அலைக்கூட்டத்தின்
ஏழுகடல்களையும்
அவள்
கருப்பையின்
சுறுக்குப்பைக்குள்
கருத்தாக
காத்து வைத்து
திறக்காத உன்
கண்ணுக்குள் அல்லவா
காத்திருந்தாள்.
அவள் விழுங்கிய
லேகிய உருண்டைகளும்
பத்திய குழம்புகளும்
வெறும் கிளிஞ்சல்களை
கரையொதுக்கவா
இரையாகிக் கரைந்தன ?
வைரமுத்தை
பொத்தி வைத்த
தங்கச்சிப்பியல்லவா
தரையிறங்கியது !
அந்த தக தகப்பில்
சூரியனே
அன்று குருடாகிப்போனான்.
அவசரப்பட்டு
வாய் திறந்து
மடை உடைந்தால்
எல்லாமே பொசுங்கிவிடும்
என்றெண்ணி
அந்த எரிமலையை
சுருட்டி மடக்கி
உயிர் பின்னிய
தன் தொப்பூள் கொடியை
முறுக்கி அல்லவா
முடிச்சுபோட்டு
வைத்திருந்தாள்.
தும்பு அறுத்துக்கொண்டு
கன்றுக்குட்டியாய்
இன்று நீ
துள்ளி குதித்தாலும்
அந்த தொப்பூள்கொடியின்
மின்னல்கொடியில் தானே
ஊஞ்சல்கள் ஆடுகின்றாய்.
கவிதைகளின்
அந்த ‘நூலேணி ‘ ஏறி
உயரங்கள் பல
நீ கண்டுகொண்டதால்
இந்த வானங்களும்
உன்னைக்கண்டு
தொலைந்து போயின.
உன் ஊரை
ஒரு நாள்
வைகை வந்து
விழுங்கியபோதும்
அந்த பிரளய காலத்து
‘நோவாவின் கப்பலாய் ‘
அந்த பாசத்தின்
மடிச்சீலையில்
மடித்துவைத்து
உன் பூந்தமிழின்
மகரந்தங்களை
பாதுகாத்து தந்தவள் அல்லவா
அந்த தாய்.
தாய்மை பூத்த ஒரு
‘பேங்க் ஆஃப் தமிழ்நாட்டின் ‘
அந்த ‘பத்து மாத ‘
சிறு சேமிப்பில்
பத்து பன்னிரண்டு
நூற்றாண்டுகளின்
இலக்கிய முதலீடு அல்லவா
உன் பிறப்பு.
கொஞ்சம் துளி தான்
உன் கவிதை.
அதற்கே
‘அட்டை ‘போட்டு
அலங்கரித்து தர
காத்திருக்கின்றன
நோபல் பரிசுகள்.
அப்படியென்றால்
அந்த சமுத்திரத்துக்கு
என்ன பரிசு தருவது ?
தூளியில் உன்னை
தூங்கவைக்க
தூங்கா விளக்காய் இருந்த
உன் அன்னையின்
அந்த தாலாட்டுப்பாடல்களை
சொல்கிறேன்.
அதற்கு என்ன பரிசு தருவது ?
எல்லா பரிசுகளையும் விட
உயர்ந்த பரிசு ஒன்று
அந்த தாய்க்கு உண்டு.
கோடிக்கணக்கான
தமிழ்த்தாய்களின்
கோடிக்கணக்கான
தமிழ்ப்பிள்ளைகள் பாடும்
‘தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட்டில் ‘
அந்த வடுகபட்டித்தாய்க்கும்
வாழ்த்துக்கள் உண்டு.
ஆம்.
வாழ்த்துக்கள் உண்டு.

***
(குமுதம் இதழ் 03.11.03)

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா