இணையத்துக்கு இல்லை இணை !

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

பசுபதி


கணவன்:
ஆறாம் திணைவெளியில் யாவரும் மன்னர்கள்!
மாறுபெயர் சூடி மடற்குழுக்கள் ஊடுருவி
நாரத வேலைக்கோர் நாடக மேடையது !
நாராசம் நாடோறும் வீசிட, நச்சுக்
கணைகள் தொடுத்தெனது காழ்ப்புணர்வைக் கக்க,
இணையத்துக்கு இல்லை இணை !

மனைவி:
கடவுச்சொல் ஒன்றே கணிச்சந்தை உள்ளே!
கடனட்டை எண்ணே கலிகால மந்த்ரம்,
கணவன் தயவின்றிக் காசினியில் உள்மின்
வணிகப் பொருளை மனைக்கே கொணர!
பணமின்றிப் பாரீஸ் பஜார்கூட்டிச் செல்லும்
இணையத்துக்கு இல்லை இணை !

மகன்:
பாங்காயென் பாட்டி பழங்கதையைச் சொல்லியே
தூங்கியபின் மின்வலையில் துள்ளுவேன் மீனாய்!
அணைக்கத் துடிப்பாள் அரையாடை ரம்பை!
பணமின்றிக் கிட்டுமோர் பாலியல் சொர்க்கம் !
புணர்ச்சிப் படங்கள் புதுக்கதைகள் ‘ஜொள் ‘ளும்!
இணையத்துக்கு இல்லை இணை !

மகள்:
இலக்கணம் வேண்டாம்! இலக்கியம் வேண்டாம்!
கலப்படக் கல்விக்கு மின்கணினி போதும்!
பள்ளிப் பணியைப் பனியெனக் காய்பானு,
எள்ளென்று தட்டுமுன் எண்ணெயருள் தேனு,
கணக்கற்ற கட்டுரைகள் தந்துதவும் கர்ணன்,
இணையத்துக்கு இல்லை இணை !

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி