பாரதி – புதுநெறி காட்டிய புலவன்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

பாரதிதாசன்


(1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.)

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக் குநன்றி செலுத்துகின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்க்கு மிக்கு யர்ந்ததாம்
எக்கா ரணத்தால் ? என்பீ ராயின்
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவ ரிற்சுப் பிரமணிய னென்று
சொற் பாரதியைச் சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன், முடிவுரை கூறுவேன் பின்பே:-
கொலைமலிந்த நளில் கொல்ல நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா நுசனை ஈன்ற தன்றோ ?
இந்நாடு வடகலை ஏன்என் றெண்ணீத்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ ?
துருக்கர் கிறித்தவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணீ
இராமலிங்கனை ஈன்ற தன்றோ ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்த் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டில்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்:

கடவுளைக் குறிப்பாக கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றென்றைக் கென்றும்
கலம்பகம் பார்த்ததொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தோர் மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.

விழுந்தார் விழித்தே எழுந்தார் என அவன்
மொழிந்த பாங்கு மொழியைக் கேளீர்.
‘வில்லினை யெடடா – கையில்
வில்லினை யெடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா ‘
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகத் லானான்.
‘பாருக்குள்ளே நல்ல நாடு – இந்தப் பாரதநாடு ‘
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மையானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்.
‘தொன்று திகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய் ‘
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காண்பீர்:
‘முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் – எனிற்
சிந்தனை யொன்றுடையாள். ‘
இந்நாட் டிந்தெற் கெல்லை இயம்புவான்!
‘நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செய் குமரியெல்லை ‘
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
‘இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதம்திரு இரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும்
விதம்தருகோடி இன்னல் விளைத்தென்னை யழித்திட்டாலும்
சுதந்திரதேவி நின்னைத்தொழுதிடல் மறக்கி லேனே. ‘
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்காள்:
‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு ‘
‘விடுதலை விடுதலை விடுதலை ‘
‘மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே ‘ என்றறைந்தார் அன்றோ ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்போது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ ? இல்லவே இல்லை
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே ‘ – என்றான்.
சினம் பொங்கும் ஆண்டவன் செவ்வழி தன்னை
முனம் எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்.
‘வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா – அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா ‘ என்று கோலம் புதுக்கினான்.
பெண்உ தட்டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லுகின்றேன்:
‘அமுதூற்றினை யொத்த இதழ்களும் – சில
வூறித் ததும்பும் விழிகளூம் ‘
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
‘முனைமுகத்து நில்லேல் ‘ – முதியவள் சொல்இது!
‘முனையிலே முகத்து நில் ‘ – பாரதி முழக்கமிது.
‘மீதூண் விரும்பேல் ‘ – மாதுரைத்தாள் இது.
‘ஊண்மிக விரும்பு ‘ – என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் – ‘கோல்கைக் கொண்டு வாழ் ‘
‘குன்றென நிமிர்ந்து நில் ‘, ‘நன்று கருது ‘,
‘நினைப்பது முடியும் ‘, ‘நெற்றி சுருக்கிடேல் ‘,
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

**
தட்டச்சு பி கே சிவக்குமார்

Series Navigation

பாரதிதாசன்

பாரதிதாசன்