பணமே பரமாத்மாவே !

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

புகாரி, கனடா


பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த
எங்களையே
நீ படைக்கிறாயடா

பூங்கொடி
என்று உன் கைகளில்
இரும்புச் சங்கிலியைக்
கொடுத்து விட்டோம்
அவை
எங்களுக்கே
விலங்குகளாகிவிட்டன

உன்னில்
தஞ்சமடைந்த
அடிமை நாய்கள்
குரைக்காத
நிமிடங்களே இல்லை

O

நீ அறிவாயா ?

உன் அதர்மங்களால்
எங்கள்
உடலும் உள்ளமும்
பிய்ந்துபோய்
இரத்த வடுக்களைச்
சுமக்கின்றன

உன் கொடுங்கோலில்
கற்பரசிகள்
விற்பனைக்கு நிற்கின்றனர்

எங்கள் குரல்கள்
நேர்மை நாண்களை
இழந்து
நாட்கள் நகர்ந்துவிட்டன

தன்மானத்தை உன்னிடம்
நிரந்தரமாய் அடகுவைத்துவிட்டு
வயிறு நனைக்கும் கூட்டங்கள்
பெருகிவிட்டன

அன்பும் பாசமும்
மூச்சுவிடமாட்டாமல்
புதைக்கப்பட்டு விட்டன

உறவுகள்
உன்னையே பாலமாக்கிக்கொண்டு
பவனி வருகின்றன

O

எங்களின்
ஆசை அடிக்கற்களில்
உன்
வானம் தொடும் கோபுரங்களை
எங்கள் முதுகிலேயே எழுப்பிவிட்ட

பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த எங்களையே
நீ படைக்கிறாயடா.

*

buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி