தூண்டில்காரர்கள்

This entry is part of 47 in the series 20030510_Issue

-கார்திக் வேலு


சருகுகள் மக்கத் தொடங்கி ,எங்கு போகிறதென்று அறியாத
புரண்டு நெளியும் ஒற்றையடிப் பாதைகளில்
நடந்து சென்றிருக்கிறேன் – நான்
தூண்டில்காரர்களுடன்.

முனுமுனுப்புடைய ஆயாசமோ
வேட்டை நவிற்ச்சியோ அற்று
கனத்த மூச்சிரைப்புக் கிடையில் தோன்றும்
அபாரமான புன்சிரிப்பும் குதூகலமும்
பொருந்திய தூண்டில்காரர்களுடன்.

மீன்களுக்கான தூண்டில்காரர்களும்
தூண்டில்காரர்களுக்கான மீன்களும்
முன்னும் பின்னும் அற்ற காத்திருப்பாய்
கேள்வியும் பதிலும் பினைந்த கணங்களுடன்.

புறங்கை ரோமங்களில் பட்டுத் தெரித்து
வலிக்குமோ – என்ற பாவனையில்
மெல்ல வழிந்து கீழ் உருகும் மழைத் துளியும்
அதிசயகத்தக்க அமைதியான
வாத்துக்களின் இணக்கமும்
மெல்ல மீட்டெடுக்கும்
நம் மயிலிரகுகளை – சிதைந்த மன இடுக்குகளினின்று.

பிடிக்கப்பட்டோ..
பிடித்துக்கொண்டோ..
திரும்புகையில்
இரட்சிக்கப்பட்டவர்களாகின்றனர் தூண்டில்காரர்கள்.

-கார்திக் வேலு
karthikvelu@yahoo.com

Series Navigation