இனியொரு வசந்தம்!!

This entry is part of 47 in the series 20030510_Issue

வேதா


இன்று,
புழுக்கம்கூட இதமானது,
புனிதமான வசந்தம்
புதிதாய் பிறக்கப்போவதால்!

உன்
இதயக் கதவுகளைத் திறந்துவை…
என்
உயிர்க்காற்று, வந்து பரவட்டும்!
உன் இளமைக்கு
உயிரூட்டி சுகம் தரட்டும்!

என்
மூச்சுக்காற்றில் முடிந்திருக்கிறேன்
முன்னூறு கவிதைகளை…..
நீயோ, இன்னும்
மூழ்கி முத்தெடுக்க
முடியாமல் திணறுகிறாய்!!

நிஜங்களில்,
பாவம், உனக்கோ நேரமில்லை.
என் நினைவுகளிலாவது….
நீ வந்து தானே தீர வேண்டும் ?

ஒரு முறை கூட உரசிவிடு,
சில முடிவுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!

என் மூக்கு நுனியில்
உன் முத்தத்தின் வியர்வை,
உன் காற்று பட்டு
கனிந்து போன மனசு..
நான் கதறி அழுத நேரம்
என்னைக் கட்டிக்கொண்ட கரம்,
என் கண்கள் பார்த்து
நீ கவிதை சொன்ன இடம்,
துடிக்கத் துடிக்க
என்னைத் துடைத்துப்போன சிரிப்பு,
எனக்கே என்னை
அடையாளம் சொன்ன உன் இளமை,

இன்னும் கூட மிச்சமிருக்கும்
சில முதல் ஸ்பரிசம்….

நானும்,
வலிகள் தீர்க்க வேண்டும்,
வாழ்ந்து பார்க்க வேண்டும், கொஞ்சம்
வாரி அணைத்துக்கொள்ளேன்!!

சுழலும் இயற்கை,
ஏதோவொரு சுற்றில்
என்னிடமே திரும்ப வருவாய் நீ!
எதிர்பார்த்துக் காத்திருப்பேன்
இனியெந்த ஜென்மத்திலும்!!

piraati@hotmail.com

Series Navigation