விக்ரமாதித்யன் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

விக்ரமாதித்யன்


வினோத ரசமஞ்சரி
விக்ரமாதித்யன் நம்பி

எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி

அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு

கவிதை மொழியே
கவித்துவம் போல

யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்

நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்

மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை

ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை

மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்

****

பாவக்கதை

விக்ரமாதித்யன்

உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது

அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்

ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்

பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய

என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.

******

எந்த போதையிலும்

விக்ரமாதித்யன்

சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்

சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ

திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்

திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை

பாரதி
ஒரு
கவிஞானி

கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்

பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே

*******

கவிதை

விக்ரமாதித்யன் நம்பி

என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்

பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்

சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே

கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா

மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்

நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே

என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல

தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா

****

மேலும் மேலும்

விக்ரமாதித்யன் நம்பி

மேலும் மேலும்
குழப்புகிறார்கள்

மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்

மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்

மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்

மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்

மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்

மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்

மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்

மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்

மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்

மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்

மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்

மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்

மேலும்மேலும்
கோழையாகிறார்கள்

மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்

மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்

மேலும் மேலும்
என்ன இருக்கிறது

மேலும் மேலும் எனும்
மனசுதான்

மேலும் மேலும்
என்ன எழுத.

****

கூட்டுக் கவிதை

காக்கைப்பாட்டு

காகமே எங்கே போனாய் நீ

எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு

காகமே எங்கே போனாய் நீ

பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ

காகமே எங்கே போனாய் நீ

துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி

காகமே எங்கே போனாய் நீ

காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது

காகமே எங்கே போனாய் நீ

காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்

காகமே எங்கே போனாய் நீ

குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ

என்று சொல்வாயோ

திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ

என கரையும் காகமே எங்கே போனாய் நீ

கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்

(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.
கேள்விகள் எம்.டி.எம். உடையவை.
பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை)
–விக்ரமாதித்யன் நம்பி

******

ஐந்திணை

குறிஞ்சி

விக்ரமாதித்யன் நம்பி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்

* * *

முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்

* * * * *

மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்

* * * * *

நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்

* * * * *

பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா

* * * * *

அவன்
அவள்

விக்ரமாதித்யன் நம்பி

எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள்.
எந்தவிதத்திலும் சமாதானம் செய்துவிடமுடியாது என்கிற மாதிரி
பிடிவாதமாக இருந்தாள்.
இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழமுடியும்.
அன்பான வார்த்தைகளைக் கூட ஆணின் பசப்புமொழிகள் என்பது
போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள்.

தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்தாள்.
பார்வையை எதிர்கொள்வதை விட்டுவிட்டிருந்தாள்.
இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை
நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு
சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு
எல்லாம் ஆகக்கூடிப் பாறையாக நின்றன.

அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது.
நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான்.
நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான்.
அவள் மனசில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லைதான்
தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை
என்றாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பகையாளி போலவேதான் அவள் நடந்துகொண்டாள்.
வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள்.
இது இப்படி ஆகியிருக்கக் கூடாது.
இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு.

அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை.
ஆசையும் பாசமும் கொண்டவள்.
குழந்தைதான்.
கவலை தெரியாத அந்த பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா.
காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான்.
பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம்.
நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன்.
அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான்.
அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம்.
அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா.
உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான்.
இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது.
ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை.
என்னை விட்டுவிடு என்கிறாள்.
வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள்.
நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள்.
அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம்.
பெண்தெய்வங்களே பெண்தெய்வங்களே
பிழை பொறாத பெண்தெய்வங்களே

* * * *

ஆயாசமாக இருந்தது.
பக்கத்தில் இருந்தும் விலகிப்போயிருப்பது இருவருக்குமே
புரிந்த ஒன்றுதான்.
பேசினாலே தப்பாகிவிடுகிறது.
விஷம் தோய்ந்த கத்திகளாகின்றன வார்த்தைகள்.
முகத்திலேயே விழிக்காதவர்கள் போலத்தாம் பேசிக் கொள்ளும்படியாகின்றன.
அன்பாக இருந்தோம் என்பது கனவாகவும்
அப்படி இனிமேல் இருக்கமுடியாது என்பது எதார்த்தமாகவும் மாறியிருந்தன.
நாலு சுவர்களுக்குள் இந்தமாதிரி இருப்பது அவளுக்கும்
தாளமுடியாத அவஸ்தையாகத்தான் இருக்கும்.
என்னசெய்தும் இந்த மனமூட்டத்தை விலக்க முடியாது போயிற்று.
ஆண்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்துச் சுடவேண்டும்.
கோபமாகக் குரல் உயர்த்தி அவள் அன்றொருநாள் சொல்லக் கேட்டபோது
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதுநாள் வரை பத்து தடவையாவது சொல்லியிருப்பாள்.
எரிச்சல்தான் இது.
எரிப்பது தீதானே.
இது தீதான்.
இதை அணைக்கமுடியுமா.

* * * *

கொஞ்சம் நாடியைப் பிடித்துத் தாங்கினால் போதும் முதலில்.
பிறகு உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று
மண்டியிட வேண்டியிருந்தது.
காலகதியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்டையிடம் அடிமை
போல மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தான்.
நாடகத்தின் காட்சிகள் மாறுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவள்
நடிப்பு என்று கருதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.
அவனும் நாடகத்தை முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தான்.
என்றபோதும் அவள் அவனுக்குப் பெரிதும் வேண்டியிருந்தாள்.
உணவை ஒழிக்கமுடியுமா.
உறக்கத்தை விடமுடியுமா.
சுவாசத்தை எப்படி நிறுத்த.
இப்படியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவன் அவளிடம்
சமரசம் செய்து கொண்டிருந்தான்.
இனி சமரசத்துக்கு இடமில்லை என்று அவள் முடிவு செய்திருப்பது
போலப் பட்டது.
இவனுக்குமே அபத்தமாகத்தான் இருந்தது.
இதுவரை ஏதோ ஒரு பந்தத்தில் கட்டுண்டிருந்திருக்கிறோம்.
எல்லாம் கழிந்துபோனதாகத் தோன்றுகிறது.
அவளுக்கு அவன் வேண்டியதில்லை.
ஒரு பரிவிலும் பற்றிலும்தாம் நடையேற்றி வைத்திருக்கிறாள்.
பாவம் என்றுகூட இருக்கலாம்.
காலம்காலமாக எல்லாப் பெண்களும் பாவம் பார்த்துத்தான்
ஆண்களை விட்டு வைத்திருக்கிறார்கள்.
எந்த நேரமும் எளிதாகத் துண்டித்துவிடமுடியும் உறவை.
ஒரு பெண்ணை உண்மையான ஆண் ஒதுக்கிவிட்டுப் போகமுடியாது.
இது ஆணின் பலவீனமாக இருக்கலாம்.
அது பெண்ணின் சக்தியாக இருக்கும்.
இந்த மாயவளையில்தான் எல்லாரும் சிக்கிக் கிடக்கிறார்கள்.
இவனும் விதிவிலக்கு இல்லை.
இதுதான் பெரியசோகம்.

* * * *

அவளுக்குத் தெரியும் அவனை.
திரும்பத்திரும்பத் தேடி வருவான்.
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான்.
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது.
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக் கூடியவள்.
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு.
இனி நடக்கவிருப்பது வினை.
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன்
வினைக்கு என்ன ஆவான்.

* * *

தூங்கிக் கொண்டிருந்தாள்.
தொட்டு எழுப்பலாம்.
தயக்கமாக இருந்தது.
எப்படி தூங்கமுடிகிறது அவளுக்கு
அவன் தூக்கத்தைப் பறித்துவிட்டு.
அவள் அயர்ந்து உறங்குவதே அவன் அருகாமையில்தான்.
நிம்மதியான உறக்கம் அவன் சார்ந்தது.

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்