பூமகளே! மன்னித்துவிடு!

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

பசுபதி


சின்னஞ் சிறுவயதில் — நீயொரு
. . சிட்டாய்த் திரிநாளில்
இன்பம் விளைசூழல் — இன்றது
. . எங்கே மறைந்ததடி ? (1)

தூய உலகமதின் — சுற்றுச்
. . சூழல் இறந்தாச்சோ ?
தாயெனும் மண்ணினையே — நன்கு
. . சாக அடிச்சாச்சோ ? (2)

நாசி திறந்தவுடன் — சேய்கள்
. . நஞ்சை முழுங்குதடி!
காசினி சாகுதடி — காண்போர்
. . கலங்கும் போக்கிதடி ! (3)

எத்தனை கோடியின்பம் — இன்று
. . எங்கே தொலைந்ததுவோ ?
வித்து விதைப்பதற்கே — ஈசன்
. . மெத்தத் தயங்குவனோ ? (4)

நீலக் கடல்வானம் — புவி
. . நிறைய மாசுமயம் ;
காலம் விளைத்ததல்ல — காரணம்
. . காட்டிட வெட்குதடி ! (5)

பன்னரு பூக்களையே — முகரப்
. . பரமன் தந்திருந்தான் ;
கன்னெஞ்சன் நானன்றோ — அவற்றைக்
. . கசக்கி விட்டெறிந்தேன் ! (6)

ஞாலம் நசித்துவிட்டேன் — விஞ்
. . ஞானத் துணையுடனே !
ஆலம் கடைந்தெடுத்தேன் — சூழல்
. . அவலம் ஆக்கிவிட்டேன் ! (7)

வேதனைப் பாதையிலே — வழுக்க
. . வெண்ணெய் தடவிவிட்டேன் ;
மேதினித் தற்கொலைக்கே — இனி
. . மீளும் வழியுமுண்டோ ? (8)

ஐந்திணை ஒன்றாகி — பாலை
. . அண்டம் படர்ந்திடுமோ ?
என்னைமன் னித்துவிடு ! — மகளே!
. . யாவுமே என்பிழைகள் ! (9)

உன்னெதிர் காலமதை –மகளே!
. . ஒட்ட எரித்தேனோ ?
என்னை எரித்திடுமுன் — மகளே!
. . என்னைமன் னித்துவிடு ! (10)

*~*~*
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி