விளையாட்டுப் பொம்மை

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

பசுபதி


மண்ணாசை வளருவதேன் பூம்பொழில்சூழ்
. . மாளிகையை நெருங்கும் போது
பெண்ணாசை பெருகுவதேன் கன்னியரின்
. . பேரழகைப் பருகும் போது
பொன்னாசை பொங்குவதேன் சொகுசான
. . பொருளைக்கை உரசும்போது
விண்ணகத்தில் வீற்றிருக்கும் அவளியக்கும்
. . விளையாட்டுப் பொம்மை யோநான் ?

இட்டமுட னிவ்வுலகில் உதித்திடவே
. . எவரையும்கை ஏந்த வில்லை.
திட்டமிட்டுப் பருவங்கள் தாண்டவில்லை;
. . செத்தழிதல் கையி லில்லை;
கட்டுமர வாழ்வினிலே கழித்துவிட்டேன்
. . காலமெனும் கடலில் நீந்தி !
வெட்டவெளி அரசாளும் மின்னாளின்
. . விளையாட்டுப் பொம்மை யோநான் ?

மதிசொன்ன வழியொன்றால் வளம்பெற்று
. . மார்தட்டி மகிழும் போது
சதிசெய்யும் சக்தியவள் சிரித்திடுவாள்!
. . ‘சாதனைகள் எனதே ‘ என்பாள் !
கதியொன்று காட்டிடுவாய் ! எஞ்சியுள்ள
. . காலத்தைக் கொடுவென் கையில் !
விதியெழுத்தை வென்றவனாய் மாற்றிடுவாய் !
. . விளையாட்டுப் போதும் போதும் !

Series Navigation

பசுபதி

பசுபதி