ரவி ஸ்ரீநிவாஸ்
காந்தி புரிதல்களும்,பிரமைகளும்
சுந்தர ராமசாமியுடன்,ஜெயமோகன் காந்தி குறித்து தொடர்ந்து உரையாடியிருப்பதை தன் இணையதளத்தில் ஜெயமோகன் இட்டிருக்கிறார்.
அந்த உரையாடல் ஜெயமோகனின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படித்தியுள்ளது, வேறுபாடுகள் இருந்தாலும் சிலவற்றில் இருவருக்கும்
காந்தி குறித்து ஒத்த கருத்து இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். சு.ராவின் கருத்துகளில் ஏற்படும் மாற்றங்களின் பிண்ணனியும் நமக்குச் சொல்லப்படுகிறது.காந்தி குறித்த புரிதல் நேருவை அத்தனை எதிர்மறையாகக் காண்பதில் போய் முடிகிறது. சுந்தர ராமசாமி எந்த நூல்களைப்
படித்தார் என்பது இதில் புலப்படவில்லை.ஆனால் காந்தியை முற்றாக எதிர்மறையாகக் காண்பதிலிருந்து இன்னொரு நிலைப்பாட்டினை நோக்கி அவர் நகர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. இதில் காந்தியைப் பற்றி சொல்லப்படும் ஒன்று காந்தியை இந்தியர்கள் எவருமே புரிந்து கொள்ளவில்லை, மேலை நாட்டினரே புரிந்து கொண்டனர் என்பது. இந்த கருத்தினை அவர்(கள்?) எந்த அடிப்படையின் கீழ்
கண்டடைந்தார்கள் என்பது தெளிவாக இல்லை.ஏனெனில் குமரப்பா ஷுமாக்கர், இலிச் போன்றோர் எழுதுவதற்கு முன்னரே எழுதியவர்.காந்தியத்தை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியான கிராமத் தொழில்கள் குறித்து கவனம் செலுத்தியவர்.வேளாண்மை குறித்து அன்றே அழுத்தமான சில கருத்துக்களை முன் வைத்தவர். வினோபா காந்தியின் பிரதான சீடர்களில் ஒருவர்.பூதானம் மூலம்
நிலங்களை பெற்று பகிர்ந்தளிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். ஜெயப்பிரகாஷ் நாரயண் 1974ல் முழுமையான புரட்சிக்கு அழைப்புவிடுத்ததன் மூலம் இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனைக்கு வித்திட்டவர்.அவர் சர்வோதய இயக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தவர். இவர்கள் எதைப் புரிந்து கொள்ளவில்லை, மேலை நாட்டினர் இவர்கள் புரிந்து கொள்ளாத எதைப் புரிந்து கொண்டனர் என்று விளக்கம் எதுவும் தரப்படுவதில்லை.மாறாக சொல்லப்படுவது ’வினோபா ? ” புரிஞ்சுண்டிருந்தா அவர் அப்டி ஆசிரமத்தில ஒக்காந்து கீதைபடிச்சுண்டு வரவாளுக்கு அனுக்ரகம் பண்ணிண்டிருக்கமாட்டார். அவர் என்ன சங்கராச்சாரியா ? ‘. சரி ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய கிருபளானி ?. “என்ன லட்சணமா பேசறாங்க பாருங்க… காந்தி வாயில ஒரு தப்பு வருமா… ? ” மொரார்ஜி தேசாய் ?. “அவர் காலத்திலதான் இந்தியால பியூரோக்ரஸி ஜாஸ்தியாபோச்சு. காந்தியவாதி என்னைக்குமே பியூராக்ராஸிக்கு எதிராத்தான் இருப்பார்…. “.ஜெ.சி.குமரப்பா ?. “அவருக்கு காந்தியை நன்னா தெரியும்.ஆனா அவர் மனசு இந்திய மனசு இல்ல. அவரு அடிப்படையில வெஸ்டனர் “. மேலைநாட்டினரே காந்தியை நன்றாகப் புரிந்துகொண்டார்கள் என்றார் சுந்தர ராமசாமி. நான் அதை உடனே ஏற்றுக் கொண்டேன்.”
வேடிக்கையாக இருக்கிறது.ஆச்சாரிய கிருபளானி யார் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.மொரார்ஜி அன்றைய பம்பாய் மகாணத்தில் முதல்வராக இருந்தவர்.பின் 1977ல் இந்தியப் பிரதமர் ஆன பின் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஜனதா ஆட்சிக்காலத்தில் முன் வைக்கப்பட்டன.காந்தியப் பொருளாதாரக் கொள்கை ஒரளவாவது கவனம் பெற்றது.Production for masses என்பதற்கு பதிலாக production by masses என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.1948க்குப் பின் பல காந்தியவாதிகள்
பதவி அரசியலிலிருந்து ஒதுங்கி காந்திய நிறுவனங்களை அமைத்து, பொதுச் சேவையில் ஈடுப்பட்டனர்.குமரப்பா, தரம்பால் உட்பட பலர் அவற்றில் பணியாற்றினர்.தரம்பாலின் முதல் நூலை இந்த இருவரும் படித்திருப்பார்களா என்று சந்தேகம் எழுகிறது. குமரப்பா போன்றவர்களுக்கு அன்று அரசின் கொள்கைகளை வகுப்பதில் செல்வாக்கு இல்லை. கதர்,கிராமத் தொழில் என்பதற்கு போதுமான ஊக்கம் தரப்படவில்லை.விவசாயத்தில் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது.அன்று அனைத்துக் கட்சிகளும் தொழில்மயமாக்கலை, பெரிய திட்டங்க்ளை, பெரிய நீர்ப்பாசன திட்டங்கள்/அணைகளை ஆதரித்தன. இந்த நிலையில் காந்தியர்கள் விளிம்பில்தான் இருந்தனர். அவர்கள் காந்தியைப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது. அவர்கள் எழுதியதன் அடிப்படையில்,மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில். அப்படிப் பார்த்தால் குமரப்பாவையும், வினோபாவையும் ஒற்றை வாக்கியத்தில் தூக்கி எறிந்து
பேசிவிட முடியாது. மார்டின் லூதர் கிங் செய்தது தெரியும், ஆனால் பூதானம் என்றால் என்னவென்று தெரியாத அமெரிக்கர் இதைத் சொல்லவில்லை.சொல்லியிருப்பது சுந்தர ராமசாமியும்,ஜெயமோகனும். இவர்கள் எதைப் படித்து இந்த முடிபுகளுக்கு வந்தார்கள். இருவரும் குமரப்பாவின் எத்தனை கட்டுரைகளைப் படித்திருப்பார்கள். நீர்வளம்,வேளாண்மை குறித்து அன்றே குமரப்பா எழுதியதை அறிவார்களா ? – தெரியவில்லை. ஆனால் அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும்
‘அறிஞர்கள்’ என்பது தெரிகிறது. அதை விட வேடிக்கை ’ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட் அப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு… ” என்ற அவதானிப்பு. வெஸ்டர்ன் மனசு என்பதற்கு சொல்லப்படும் விளக்கம் இன்னும் வேடிக்கை- காந்தி சயண்டிபிக்கா பார்க்கிராராம். அறிவியலில் உள்ள fact-value பிளவு குறித்து எழுதப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் மனசு என்றால் என்ன, அதற்கும் இந்திய மனசிற்கும் என்ன வேறுபாடு எதுவும் சொல்லப்படுவதில்லை. இந்தியாவில் அழுக்கும்,குப்பையும் இருப்பது ‘வெஸ்டனர்’ கண்ணிற்குத்தான் தெரியுமோ.
உண்மையில் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்த பிற விவாதங்களை, காந்தி குறித்து வெளியான ஆய்வுகளை இவர்கள் ஒரளவே அறிந்திருக்கின்றனர் என்றே நான் கருதுகிறேன்.அதே சமயம் ஒரு பரந்த புரிதல் இல்லாத காரணத்தினால் அவர்களால் எதையும் சரியாக அணுக முடியவில்லை. உதாரணமாக நேரு, அம்பேத்கர் குறித்த கருத்துக்கள், ஜனநாயகம் குறித்த கருத்துக்கள். சுதந்திர இந்தியாவின் அரசியல்-பொருளாதார வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரிந்த எளிய அடிப்படை உண்மைகள் கூட இவர்களுக்கு தெரியவில்லை. சாதியை எப்படி முன்னகர்த்துவது என்று சொல்லப்படுவதில்லை. நேருவும்,அம்பேத்கரும்,ராயும் ஜனநாயகம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். அன்று உலகில் எந்த நாட்டிலும் காந்தியத்தின் அடிப்படையில் அரசோ/நாடோ இல்லை. ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று சோசலிசம் என்று கூறப்பட்ட அடிப்படைகள் இருந்தன. சோவியத் யூனியனின் சாதனைகளும், அமெரிக்காவில் தொழிற்துறை, அறிவியல் பலமும் வியக்கவைத்தன. இன்னொரு புறம் சுதந்திர அரசின் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் இருந்தன. காந்தியின் ஹிந்த் சுவராஜை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசு எப்படி செயல் பட முடியும். 1947ல் இந்தியா ஒரளவேனும் தொழில்வளர்ச்சி பெற்றிருந்தது, உயர்கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் போன்றவை இல்லாமல் இல்லை. அன்றைய நிலையில் ஜனநாயகம், வலிமையான மைய அரசே சரியான தெரிவு. அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை உறுதி செய்திருந்தது. காலனி ஆதிக்க ஆட்சி விட்டு சென்ற நிர்வாக முறை,நீதி முறை இருந்தன. முற்றிலும் புதிதாக புரட்சிக்கும் பின் அனைத்தையும் முதலிலிருந்து அமைக்கும் நிலை அன்றில்லை. காந்தி கிராம சுயராஜ்யம் என்று பேசினாலும் இந்தியாவிலுள்ள தொழிலதிபர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் அம்பேத்கரும், நேருவும் அன்று செயல்பட்டனர்.நேருவின் காலத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் முதல் பத்தாண்டுகளில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையவில்லை. நேருவின் காலத்தில் நுகர்வியம் ஊக்குவிக்கப்படவில்லை.தொழில்மயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டது.
காந்தியம் என்று பேசப்படும் போது நுகர்வியம் குறித்தும் பல சமயங்களில் பேசப்படுகிறது. நுகர்வியம் குறித்து காந்தி கூறியதை கருத்தில் கொள்ள வேண்டும்.ஆனால் எளிய தீர்வுகள் மூலம் அதை தீர்த்துவிட முடியாது. நுகர்தல் என்பது மக்கள் தொகை உட்பட பலவற்றுடன் தொடர்புடையது. தனி நபர் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும் மக்கள் தொகை அதிகரித்தால் ஒட்டு மொத்த நுகர்வும்,
அதற்கான இயற்கைவளங்களின் தேவையும் அதிகரிக்கவே செய்யும். மேலும் நுகர்வு என்பது உளவியல், தனி நபர் தெரிவுகளுடன் தொடர்புடையது.எழுத்தாளர்கள் நூற்கள் அதிகமாக விற்றால் நல்லது என நினைக்கலாம். நூற்களை வாங்குவதும்,படிப்பதும் நுகர்வியத்தின் பகுதிதான். காகிதம் என்பதற்கும் மூலப்பொருள் தேவை,அதை தயாரிக்க பெரிய தொழிற்சாலைகள் தேவை.கைத்தொழிலாக அதை எந்த அளவு செய்ய முடியும். நூல் நூற்க பஞ்சு தேவை. இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளில் குறிப்பிடதகுந்த அளவு பருத்தியை விளைவிப்பதில் பயன்படுகிறது. பருத்தியின் விளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க அதன் தேவையும் கூடும். அமெரிக்காவில் உள்ள குடிமகர் சராசரியாகப் பயன்படுத்தும் காகிதத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அது குறைவு. ஆனால் இந்தியாவில் காகிதத்தின் நுகர்வு அதிகரித்தால் அதற்கான மூலப் பொருட்களுக்கு என்ன செய்வது. ஒரு தேசியப் பொருளாதாரத்தில் இது போல் பல ஆயிரம் கேள்விகள் உள்ளன.
கிராமக் குடியரசுகளால் எந்த அளவு எந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதற்கும் வரையரை இருக்கிறது. பலவற்றை உற்பத்தி செய்வதில் economies of scale முக்கியமான ஒன்று. இல்லாவிட்டால் பொருளின் விலை அதிகமாக இருக்கும். மேலும் இன்று நுகர்வு என்பது உலகமயமாகிவிட்டது. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றால் திருப்பூரிலும், சென்னையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. 1948ல் இந்த அளவு உலகமயமாதல் இல்லை.ஆனால் அப்போதும் இந்தியப் பொருளாதரம் காந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும்
பின்பற்றக் கூடிய நிலையில் இல்லை. இன்றைய நிலையில் நுகர்வியத்திற்கு காந்தியம் என்ன தீர்வு கூறும். ஆசையை குறைத்துக் கொள் என்று சொன்னால் அது ஏதோ ஒருவிதத்தில் எங்கோ பாதிப்பு ஏற்படுத்தும்.மேலும் தனி நபர் தெரிவுகள் எப்படி இருக்கின்றன. நேற்று பேருந்திலும், ரயிலில் போனவர்கள் பொருளாதார வசதி வந்தவுடன் விமானத்தில் செல்ல தயங்குவதில்லை, தேவை ஏற்படின். இன்று பெரும்பாலான மத்தியதரவர்க்க குடும்பங்களில் குளிர்சாதனப் பெட்டி, வண்னத் தொலைக்காசட்சி இருக்கிறது. இது நுகர்வியமா இல்லை
அத்தியவசியத் தேவையா. காந்தி கூறும் எளிமையான வாழ்க்கை இன்று சாத்தியம், இந்தப் பொருளாதர-சமூக அமைப்பிலிருந்து ஒரளவேனும் விலகி இருந்தால். ஆனால் அது சாத்திய்மா? எது தேவை,எது வசதி, எது அடிப்படைத் தேவை என்பது இன்று சர்ச்சைக்குரியது. காந்தி சொன்ன கதரை அணியுங்கள், காதி கைத்தொழில்களை ஆதரியுங்கள் என்று எழுதினால் அதில் காந்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சி தெரியும். ஆனால் காந்தியம் குறித்து பேசும்/எழுதும் பெரும்பாலோருக்குத் தெரியும் நடைமுறையில் தேவைகளை குறைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்று. அது மட்டுமல்ல நுகர்வியம் குறித்து நான் என்னதான் குறை கூறினாலும் நுகர்வியம் நேரடியாக தொடர்புடையது அறிவு உற்பத்தியுடன். ஒரு எழுத்தாளர்/ஆய்வாளர் பயன்படுத்தும் காகிதம், செய்யும் பயணங்கள் இவை நுகர்வியம் அல்ல என்று யார் முடிவு செய்வது. நுகர்வியத்தின் வகைகள் வேறுபட்டாலும் இறுதியில் அனைத்தும் மூலவளங்களைப் பயன்படுத்துவது குறித்த கேள்விகள்தான். எழுத்தாளர்கள் அச்சிட்ட நூற்களை ஊக்குவிக்காமல் மின் நூற்களை ஊக்குவிக்கலாம் என்று சொன்னால் ராயல்டி பாதிக்கும் என்று எதிர்க்குரல்
எழலாம். எல்லோரும் நுகர்வு என்ற வலைப்பின்னலில் அழுத்தமாக சிக்கியிருக்கிறோம். இதுதான் உண்மை. காந்திய நோக்கில்ப் பார்த்தால் இதற்கான தீர்வு நுகர்வைக் கட்டுப்படுத்தல், எளிய வாழ்க்கைக்கு திரும்புதல்,ஆசைகளை கட்டுப்படுத்தல். இது எளிதல்ல என்றாலும் சிறிதளவாவது முயலலாம்.ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அதன் விளைவு யாருக்கோ பாதகமாகக் திரும்பும் சாத்தியம் உள்ளது. அமெரிக்கர்கள் கைவினைப் பொருட்களை வாங்குவதை குறைத்தால் அதன் பாதிப்பு எங்கே ஏற்படுகிறது. சுற்றுலாத்துறையில் சுணக்கம்
ஏற்பட்டால் யாருடைய வயிறிற்கான உணவு கிடைப்பதில்லை. இன்றைய சூழலில் காந்தியத்தை முன் வைத்து நுகர்வை குறை என்பதை ஒற்றைப் பரிமாணமாக முன் வைக்க முடியாது. அப்படி காந்தியத்தை முன் வைப்பவர்கள் செயல்முறை தீர்வுகளையும் விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும்.
காந்திய முறைகள் இன்று பல இயக்கங்ளால் கைக் கொள்ளப்படுகின்றன. ஜெயமோகன் ’Mohandas K. Gandhi: Citizenship and Community for an Industrial Age-Robert W. Hunt’ ஐ மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பெயரில் நூல் வந்திருப்பதாகத் தெரியவில்லை. கட்டுரை வெளியாகியுள்ளது (Bulletin of Science, Technology & Society, Vol. 23, No. 3, June 2003, 192-200). அதில் கட்டுரையாசிரியர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது
“Moreover, even the “grassroots” activists that Sheth and Nandy viewed as possibly reviving the Gandhian social vision tend to focus on his techniques, “disregarding the deep, personal, spiritual and philosophical basis of the practice” (Suhrud,
2002).”
அதாவது காந்தியம் தொழில்னுட்பம்/செய்முறை சார்ந்த ஒன்றாக இயக்கங்களால் பயன்படுத்தப்படுகிறது. காந்தியத்தின் தத்துவ,ஆன்மிக அடிப்படையிலிருந்து அன்னியப்பட்ட ஒன்றாக அவற்றின் செயல்முறை இயங்குகிறது. இது உண்மைதான் எனில் காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு எத்தகையது. அது விழுமியங்கள் சார்ந்த ஒன்றா அல்லது செயல்பாட்டிற்கு உதவும் கருவியின் தன்மை சார்ந்த ஒன்றா. அடுத்த பகுதியில் இதை சற்று விரிவாக அணுகுவோம்.
காந்திய அகிம்சை கோட்பாட்டை பிரபலபடுத்தியதில் பெரும் பங்கு வகித்த ஜீன் ஷார்ப் ஒரு கட்டத்திற்குப் பின் வன்முறையற்ற போராட்டம் என்பதை காந்தியத்தின் அறவியல் கூறுகளிலிருந்து பிரித்து ஒரு போராட்ட யுக்தியாக , அதிகாரம் சார்ந்த ஒன்றாக,அறம் சாரா ஒன்றாக வளர்த்தெடுத்தார். அவர் எழுதினார்
‘Nonviolent action is a technique by which people who reject passivity and submission, and who see struggle as essential, can wage their conflict without violence. Nonviolent action is not an attempt to avoid or ignore conflict. It is one response to the problem, of how to act effectively in politics, especially how to wield power effectively’.
எனவே காந்தியம் என்பது நடைமுறையில் எப்படி கையாளப்படுகிறது என்று பார்த்தால் அது ஜெயமோகன் எழுதியதிலிருந்து வேறாக இருக்கிறது. காந்திய முறையைக் கைக்கொள்ளும் இயக்கங்கள் காந்தியத்தின் விழுமியங்களை ஏற்கின்றன என்று கருத முடியாது. இப்படிப் பார்த்தால் காந்தியம் பரவலாக இயக்கங்களால் பயன்படுத்தப்படும் போது அது காந்தியமாக இறுதி வரை இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
அடுத்த பகுதியுடன் முடியும்
http://ravisrinivas.blogspot.com
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66
- நிரப்புதல்…
- இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்
- அமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா
- ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்
- சந்திரவதனாவின்-‘மனஓசை’
- வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்
- நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்
- அழியாப் புகழ் பெறும் இடங்கள்
- ‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்
- கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு
- வேத வனம் விருட்சம் -61
- காத்திருந்தேன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு
- புத்திசாலி
- பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்
- கனவுகளின் நீட்சி
- பனிவிழும் அதிகாலையொன்றில்
- உதிரும் வண்ணம்
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1
- தொலைதூர வெளிச்சங்கள்
- விளம்பரம் தரும் வாழ்வு
- தத்ரூப வியாபாரிகள்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2
- வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
- முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9
- முடிவுறாத பயணம்