தேவை கருணை பார்வை

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

பி.ஏ. ஷேக் தாவூத்


சென்னையின் மின்சார இரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம் இழைந்தோடும் பாடல்கள். சில சமயம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கம்பீரமான பாடல்களும் காற்றில் கலந்து வருவதுண்டு. அப்பாடல்களுக்கு மெருகூட்டுவது போல் சிலசமயம் தப்பு என்ற வாத்தியத்தை கொண்டு எழுப்பப்படும் தாளச் சத்தமும் கூடவே கேட்கும். இதைப் போன்றே பேருந்து நிறுத்தங்களுக்கு அருகினிலோ அல்லது மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலோ இந்த விதமான பாடல்கள் நம் காதுகளில் வந்து ஒலிக்கும். இத்தகைய பாடல்களை ரசித்தோ அல்லது கழிவிரக்கத்தின் அடிப்படையிலோ பொது மக்கள் தம்மால் இயன்ற அளவு நிதி உதவியை அப்பாடல்களைப் பாடுபவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்வதும் வழமையான ஒன்றாகி விட்டது.

ஊனமுற்றவர்கள் தம்முடைய வயிற்றுப்பசியை போக்க வெறுமனே யாசகம் கேட்காமல் ஏதோ தம்மாலான ஒன்றைச் செய்து வாழ்வைக் கழிக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் கட்டை பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை விட பலபடி உயர்ந்த இடத்தினில் இருக்கின்றனர். இப்படி ஊனமுற்றவர்கள் தம்முடைய குரலை வருத்திக்கொண்டு பாடுவது வருங்கால சேமிப்புகளுக்காகவோ, வாரிசுகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவோ இல்லை. அவர்களுடைய அதிகபட்ச தேவைகளான அவயவங்களை மறைப்பதற்கான ஆடைகளுக்கும், வயிற்றுப் பசியாற்றும் உணவுக்காகவும்தான். இவர்களுடைய குரல்கள் பெரும்பாலும் இனிமயாக இருப்பதுமில்லை. அப்படி இனிமையாக இருந்தாலும் இவர்கள் குளிரூட்டப்பட்ட அரங்கத்தினில் இத்தகைய பாடல்களை அரங்கேற்றுவதுமில்லை. எனவே மேல்தட்டு குடிமக்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. உதவி செய்பவர்களெல்லாம் சாதாரணர்கள். அவர்களிடமிருந்து அதிகபட்சமாக கிடைக்கும் சில நூறுகளை தம்மிடையே பிரித்துக் கொண்டு அன்றைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் பார்த்தால் இப்படிப்பட்ட ஊனமுற்ற மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஊனமுற்று எத்தகைய வேலையையும் செய்ய இயலாமல் பல சமயம் சாலையைக் கடப்பதற்கு கூட அடுத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கும் இவர்களுக்கு குறைந்த பட்சம் உடுத்த உடையையும், பசியாற்ற உணவையும், காலம் முழுவதும் வசிப்பதற்கு அரசு இல்லங்களையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். தம்முடைய குடிமக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். ஏற்கனவே அரசு ஊனமுற்றவர்களுக்காக இல்லங்கள் நடத்தினாலும் ஏன் அவற்றில் ஊனமுற்றவர்கள் தங்காமல் இருக்கின்றார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். கடமைக்கு நடத்தாமல் அவர்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களை அந்த இல்லங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தால் எந்த ஒரு ஊனமுற்றவர்களும் அந்த இல்லங்களை விட்டு வெளியில் வந்து உணவுக்காகவும் உடைகளுக்காகவும் கஷ்டப்பட மாட்டார்கள்.

இந்த மாதிரியான தரமான சேவை இல்லங்களை அரசு நடத்துவதற்கு நிதியாதாரம் கொஞ்சம் மிகுதியாகத் தேவைப்படலாம். எனவே நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி இதிலிருந்து அரசு நழுவிக் கொள்ள முயலுதல் கூடாது. ஏழை மாணவர்களை படிப்பதற்கு அவர்களின் பசி ஒரு தடையாகி விடக் கூடாதென்பதற்காக அன்றைய அதிகாரிகள் நிதியாதாரத்தைக் காட்டி பயமுறுத்திய போதும் அதை கண்டு கொள்ளாது மதிய உணவு திட்டத்தை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக நின்று, கலங்கி நின்ற மாணவர்களையெல்லாம் கட்டியணைத்து அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்த காமராஜரை முன்மாதிரியாக கொண்டு இந்த அரசு குறைந்த பட்சம் கழிவிரக்கத்தின் அடிப்படையிலாவது இந்த மாதிரியான இல்லங்களை நிறுவ வேண்டும்.

பி.ஏ. ஷேக் தாவூத்

pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்