டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2

This entry is part of 32 in the series 20081225_Issue

பாஸ்கர்ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தின் முடிவை எதிர் நோக்கி இருக்கும் ரசிகர்களின் மன நிலையில் காத்திருந்த தேடிரோஇட் மக்களை மகிழ்விக்கும் விதமாக வெளி வந்தது புஷ்ஷின் ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்) மற்றும் க்ரச்லேர் நிறுவனங்களுக்கான 13.6 பில்லியன் அரசின் கடனுதவி.மேலும் 4 பில்லியன் டாலர்கள் கடனாக பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.அந்தமுடிவை வரப்போகும் அதிபர் ஒபாமாவிடம் புஷ் ஓப்படைத்திருக்கிறார். மார்ச் 15ம் தேதிக்குள் எடுத்த,எடுக்கப் போகும் நடவடிக்கைகளை அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அரசின் எதிர்கால முடிவுகள் அமையும். ஆனால் அதனுடன் வந்த கட்டுப்பாடுகள் கடுமையானவை.குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்களின் கூட்டமைப்பு தனது ஊழியர்களின் ஊதியத்தை அமெரிக்காவிலுள்ள ஜப்பானிய கார் நிறுவனங்களின் ஊதியத்திற்கு சமமாக மாற்றுவது, உதிரி பாகங்கள் அளிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக முடிந்தளவு பங்குகளை கொடுப்பது, தன்னுடைய கடனை 2/3 பங்காக குறைப்பது,நடைமுறை செலவினங்களை கட்டுப் படுத்துவது முதலானவை முக்கியமானவைகள்.,.”வேலை வங்கி” என்ற பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சலுகையை முழுவதும் விட்டுக் கொடுக்க வேண்டும்.வேலை வங்கி என்பது வேலை இல்லாத போதும் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் 90% ஊதியத்தை பெறுவது.

ஜி.எம் க்கு 13,6 பில்லியனில் 9.6 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது.உடனடியாக தொழிலாளர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கி சென்ற ஆண்டு செய்து கொண்ட ஓப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக ஜி.எம் இன் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வெக்னர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் எந்த அளவிற்கு தியாகத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.சென்ற ஐந்து ஆண்டுகளில் இந்த கூட்டமைப்பில் 1 1/௨ லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.மேலும் புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர் என்று ஊதியம் நிர்ணயம் செய்ய கூட்டமைப்பு சென்ற ஆண்டு ஒத்துக் கொண்டது.தொழிலாளர்களின் மன வலியை இரும்புத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் லியோ ஜெரல்ட் “வேலைக்கு போகும் முன் குளிப்பவர்களுக்கு அமெரிக்கா அரசு உதவும்,ஆனால் அதையே வேலைக்குப் பிறகு குளிப்பவர்களுக்கு செய்யாது” என்று தெரிவித்துள்ளார்.ஜி.எம் நான்கு வர்த்தகக் குறிகளை (brands) விற்கவும் முடிவுசெய்துள்ளது.மேலும் தற்போதுள்ள 96000 தொழிலாளர்களின் எண்ணிக்கையை 66000 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த கடனுதவியால் ஜி.எம் மீண்டும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.ஜி.எம் இன் பங்குகள் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.ஒரு வேளை ஜி.எம் திவாலானால், அரசு கொடுத்த கடன் பணம் கூட திரும்ப வருவதற்கு சாத்தியமில்லை. இந்த நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கும் “வெறும் கை வெங்கட்ராமா” என்ற கதை தான்.

ஆனால் இந்த கெட்ட நேரத்திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.GMAC என்ற ஜி.எம் இன் கார்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தை வங்கிகள் போல் பாவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரி இருந்தது. அதனை அரசு ஏற்றுக் கொண்டு அறிவுப்பு வெளியிட்டுள்ளது.அதனால் அமெரிக்கா அரசினால் சிக்கலில் தவிக்கும் நிதி நிறுவனங்களுக்கு ஓதுக்கப் பட்ட 700 பில்லியன் டாலர் பணத்திலிருந்து ஒரு குறிப்ப்பிட்ட தொகை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த நிதி நிறுவனம் திவாலாகி விடுவதில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளது.மேலும் ஜி.எம் கார்கள் வாங்குபவர்களுக்கு கடனுதவி அளிக்க முடியும். அதன் விளைவாக கார்களின் விற்பனை சரிவை தடுக்க ஏதுவாகும்.இதன் பயனாக ஜி.எம் இப்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவிலிருந்து மீளும் சிறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போர்ட் நிறுவனம் எந்த நிதி உதவியும் தற்போது தேவையில்லை என்று அரசிடம் கூறியுள்ளது. 2006ம் ஆண்டிலேயே தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றது. அதை அன்று கேலி செய்தவர்கள் இன்று போர்ட் புத்திசாலிதனமாக செயல் பட்டதாக கூறுகின்றன.அடுத்த வருடம் அமெரிக்காவில் கார்களின் விற்பனை 20% குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.அந்த அளவிற்கு உற்பத்தியை குறைக்கவும், செலவினங்களை குறைத்தும் செயல்பட போர்ட் தயாராக இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலன் முல்லாலே கூறியுள்ளார். இருந்தாலும் எந்த எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்க அரசிடம் 10 பில்லியன் டாலர்கள் கடன் பெறும் வசதியை கோரியுள்ளது.மேலும் 2009 மற்றும் 2010௦ம் ஆண்டுகளில் போர்ட் வெளியிட உள்ள புதிய கார்கள் தரமானதாகவும்,பெட்ரோலை குறைவாக உபயோகிப்பதாகவும் உள்ளது. இந்த கார்கள் வாடிக்கையாளர்களை போர்ட் பக்கம் திருப்பி இழுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமிக்க போர்ட் நிறுவனம் இந்த சிக்கலில் இருந்து மீண்டு லாபத்தை ஈட்டும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

க்ரஸ்லெர் ஒரு தனியார் நிறுவனம். அதில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.4 பில்லியன் டாலர் கடனுதவி கிடைத்துள்ளது.கடன் கிடைத்துடனேயே அதனை திருப்பிக் கொடுப்பது கடினம் என்று அதனுடைய தலைமை நிவாக அதிகாரி நறேடெல்லி கூறியுள்ளார்.இந்த நிறுவனம் தனியாக செயல் பட்டு மீண்டும் லாப நோக்கத்துடன் திரும்புவது நடக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஒன்று இந்த நிறுவனம் திவலாகவோ அல்லது வேறு நிறுவனத்துடன் இணைவதோ தான் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதாக அனுமானிக்க முடிகிறது.இந்த நிறுவனத்தின் சரித்திரத்தின் கடைசி அத்தியாயம் எழுதப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஒபாமா புஷ்ஷின் இந்த கடன் கொடுக்கும் முடிவை வரவேற்றுள்ளார். ஆனால் பதவி ஏற்றவுடன் ஒபாமா பலவிதமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கார் நிறுவங்களின் தொழிலாளர் கூட்டமைப்பு தேர்தலின் போது அவருக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது நினைவிருக்கலாம். தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் செலவினங்களை குறைத்து லாப நோக்கத்துடன் செயல் படும் நிலையை உருவாக்க வேண்டும். மிகவும் கஷ்டம்தான். என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தேட்டிரைட் மக்கள் வரும் புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மன அழுத்தத்துடன் எதிர்கொள்ளும் துரதிருஷ்டமான நிலையில் உள்ளார்கள்.

tlbhaskar@gmail.com

Series Navigation