காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

மலர்மன்னன்


காஷ்மீரில் இன்று நடப்பது ஹிந்துஸ்தானத்திற்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை மணி என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இனியாகிலும் சமபந்தப்பட்டவர்களுக்கு வர வேண்டும்.

காஷ்மீர மக்களுக்குத் தங்கள் மாநிலத்தின் நிர்வாகம் குறித்துச் சுய நிர்ணய உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் புத்துயிர் பெற்று வீரியமாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. காஷ்மீரின் பின்னணி தெரியாத நமது இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் இது மிகவும் நியாயமான கோரிக்கை என்றுதான் எண்ணத் தோன்றும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்துக்களே இல்லை என்கிற நிலைமை உருவாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காஷ்மீரில் வீடு வாசல், தொழில் என வாழ்ந்த காஷ்மீர்ரப் பண்டிதர் சமுதாயம் இன்று அங்கு இல்லை. அது அடித்து விரட்டப்பட்டு, அதன் உடைமைகள் யாவும் இப்போது கேட்பாரின்றி, காஷ்மீரிலுள்ள பல்வேறு முகமதிய அமைப்புகளால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் காஷ்மீர் மாநிலம் என ஒட்டு மொத்தமாக அறியப்படும் ஹிந்துக்கள் பெருமளவில் வாழும் ஜம்மு, பௌத்தர்கள் பெருமளவில் வாழும் லடாக் ஆகியவற்றில் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு ஒரு முகமதியர் கூட இல்லாத லடாக்கில் இன்று பல முகமதியக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.

முன்பிருந்த காஷ்மீர் சமஸ்தானத்தின் மூன்றில் ஒரு பகுதி, இன்று பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலுள்ளது. அதிலிருந்து ஒரு பரப்பை வழிப் பிள்ளையாருக்குக் கடைத் தேங்காயை உடைப்பது போல பாகிஸ்தான் சீனாவுக்கு தானமாக வழங்கிவிட்டது. இது பற்றி எந்தக் காஷ்மீரத்து முகமதியரும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை. சுய உரிமை, காஷ்மீரியம் என்கிற கூப்பாடுகள் எல்லாம் இங்கே இருக்கிற காஷ்மீரில், ஹிந்துஸ்தானத்து அரசை நோக்கித்தான் எழுப்பப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15 க்கு முன் இருந்த சுயேற்சையான சமஸ்தானங்கள் பலவற்றுக்கும் இனியும் அவை தனித்து இயங்குவது சாத்தியம் இல்லை என்கிற நிதர்சனம் உணர்த்தப்பட்ட போது, அவை உசிதம் போல ஹிந்துஸ்தானத்துடனோ பாகிஸ்தானுடனோ இணைந்தன. ஹிந்துஸ்தானில்தான் கூடுதலான சமஸ்தானங்கள் இருந்தனவாதலால் அவை அனைத்தும் ஹிந்துஸ்தானுடன் இணைவதே இயல்பான தேர்வாக இருந்தது. இதனை உணராமலும் ஒரு சில சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுக்கு அந்த உண்மை உணர்த்தப்பட்டு, அதன் பயனாக அவையும் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தன. முரண்டு பிடித்த அந்த ஒரு சில சமஸ்தானங்களுக்கு நிதர்சனத்தை உணர்த்த நல்ல வேளையாக நமக்கு ஒரு வல்லமை பொருந்திய வல்லபாய் பட்டேல் கிடைத்தார். பொறுப்பில் ஜவஹர்லால் நேரு மட்டுமே இருந்திருந்தால் ஹிந்துஸ்தானம் என்றோ பல கூறுகளாகச் சிதறுண்டு போயிருக்கும்.

இவ்வாறாக இணைந்த சமஸ்தானங்கள் யாவும் அந்தந்த சமஸ்தானங்களின் மக்களிடம் அபிப்பிராயம் கேட்டு அதன் பிறகு இணையும் முடிவினை எடுக்கவில்லை. மன்னராட்சி நிலவிய அந்த சமஸ்தானங்களின் மன்னர்களும் திவான்களுமாகச் சேர்ந்தே ஹிந்துஸ்தானத்துடன் இணையும் முடிவினை எடுத்து, அந்த முடிவுக்கு இணங்க ஹிந்துஸ்தானத்துடன் தத்தம் சமஸ்தானங்களை இணைத்தனர்.

தான் வெளியேறியதுமே அதுகாறும் தனது காலனியாக இருந்து வந்த ஹிந்துஸ்தானம் சமஸ்தானங்களின் சுதந்திர பிரகடனங்களால் திணறி, உட்பூசல்கள் மலிந்து, சிதறுண்டு போகும், தன் பொறுப்பில் இருந்தவரைதான் “இந்தியா’ என்பதாக ஒரு தேசம் இருந்தது என்பதை உலகம் ஒப்புக்கொள்ளும் என்று இறுமாந்து எதிர்பார்த்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏமாந்து போகச் செய்தார், மத்திய உள்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல்.

இப்போதுள்ள கேரளத்தின் ஒரு சிறு பகுதியான திருவாங்கூர் சமஸ்தானம் மட்டும் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் விரும்பியதுபோல சுதந்திர பிரகடனம் செய்தது. அதற்குக் காரணம் அதன் திவானாக இருந்த ஸர் ஸி பி. ராமஸ்வாமி ஐயரேயன்றி திருவாங்கூர் சமஸ்தான மக்கள் அல்ல! மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டுத்தான் ஐயர் அப்படியொரு பிரகடனம் செய்தாரா என்றால் அதுவும் இல்லை. மன்னரின் உட்கிடைக்கையைத் தெரிந்துகொண்டுதான் அவர் அவ்வாறு அறிவித்தார் என்றும் கூறுவதற்கில்லை. ஆனால் ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திர திருவாங்கூர் தேசத்தின் தூதுவர்களைக் கூட அவர் நியமித்து, அறிவிப்பும் செய்துவிட்டார்! பாகிஸ்தானுக்கு ஒரு முகமதியர், ஹிந்துஸ்தானத்திற்கு ஒரு ஹிந்து என்று மிகவும் சாமர்த்தியமாக! அனாவசியமாக லட்சக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தக் குளியலில், மத அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தானுக்கு சுதந்திர திருவாங்கூர் தேசத்தின் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பதிலுக்கு ஜின்னாவிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ளவும் திவான் ராமஸ்வாமி ஐயர் தவறவில்லை! அரபிக் கடல் வழியே திருவாங்கூருக்கும் பாகிஸ்தானுக்குமிடையே எளிதாக ஏற்றுமதி இறக்குமதி வாணிபம் தொடங்கலாம் என்றெல்லாங்கூடக் கனவு காணத் தொடங்கிவிட்டார், திவான் ராமஸ்வாமி ஐயர். அதற்கெல்லாம் அவர் தமது சமஸ்தான மக்களின் கருத்தைக் கேட்டார் இல்லை. நல்ல வேளையாக வல்லபாய் என்கிற அரு மருந்து நமக்கு அப்போது கிடைத்திருந்தது. அந்த மருந்து சரியாக வேலை செய்து, ராமஸ்வாமி ஐயரைப் பிரத்தியட்ச உலகில் கண் விழிக்கச் செய்தது. இதே மருந்து பிற்பாடு ஹைதராபாத் நிஜாம் விஷயத்திலும் மிகச் சரியாக வேலை செய்தது. நிஜாமும் கூட மக்களின் கருத்தைத் தெரிந்துகொண்டு அவர்களின் விருப்பதிற்கு இணங்கத் தனது பாகிஸ்தானுடன் இணையும் இச்சையை வெளியிடவில்லை.

இந்த இரு சமஸ்தானங்களின் விஷயத்திலும் ஹிந்துஸ்தான அரசு மிகப் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டது. ரஜாக்கர் என்கிற குண்டர் படையை நிறுவித் தனது சமஸ்தான ஹிந்துக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு செய்த நிஜாமை நியாயப்படி சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒரு ராஜப் பிரமுகராக மதிக்கப் பட்டார். பிரிவினை கோரிய ராமஸ்வாமி ஐயர் பிற்காலத்தில் தேசிய ஒருமைப்
பாட்டுக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்!

இந்தப் பின்னணியில் அன்றைய காஷ்மீர் சமஸ்தானத்தைப் பார்ப்போம். அன்று அதன் மன்னராக இருந்தவர் ஹரி சிங். அன்று அவரது சமஸ்தானத்தின் வெளியுலகிற்கான வாயில்கள் திறந்திருந்த பகுதி பாகிஸ்தானத்திற்குரியதாகிவிட்டிருந்தது. பாகிஸ்தான் வழியாகத்தான் தனது சமஸ்தானம் வெளியுலகோடு தொடர்புகொள்ள முடியும் என்கிற நிலைமை இருந்ததால் அதனை பாகிஸ்தானுடன்தான் இணைக்கும்படியாகிவிடுமா என்று ஹரி சிங் சிந்திக்கலானார். அவர் விரைந்து சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. அதன் வெளியுலகத் தொடர்பு முடக்கப்பட்டது. வெளியிலிருந்து அத்தியாவசியப் பண்டங்கள் காஷ்மீருக்குள் செல்ல முடியாமலும், காஷ்மீரிலிருந்து அதன் விளை பொருள்கள் வெளியே செல்ல இயலாமலும் நிஜமான பொருளாதாரத் தடையை பாகிஸ்தான் அதிபதி ஜின்னா காஷ்மீர மக்கள் மீது வலிந்து திணித்தார்.

இன்று காஷ்மீரில் உள்ள முகமதிய பிரிவினை சக்திகள் ஜம்மு ஹிந்துக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக தேசிய நெடுஞ் சாலையில் நடத்தும் மறியல் போராட்டத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கின் மீதான பொருளாதாரத் தடை என்று திரித்துக் கூறி, காஷ்மீரின் முகமதிய மக்களைத் திசை திருப்பித் தனது பிரிவினை கோஷத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் அன்று மெய்யாகவே ஒரு பொருளாதாரத் தடையை காஷ்மீர் சமஸ்தானம் முழுமைக்கும் பாகிஸ்தான் ஏற்படுத்தியது. காஷ்மீர் மக்களின் நலனுக்காகப் பரிந்து பேசுவது போல முதலைக் கண்ணீர் சிந்தும் இதே பாகிஸ்தான்தான்!

அன்று பாகிஸ்தான் விதித்த பொருளாதரத் தடை காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரி சிங்கை விரைந்து முடிவெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து கூலிப் படைகளும் வன வாசிகள் போல வேடம் அணிந்த பாகிஸ்தான் ராணுவமும் சேர்ந்து காஷ்மீர் மீது ஆக்கிரமிப்பும் செய்துவிட்டது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. மன்னர் புத்திசாலித்தனமாகத் தமது சமஸ்தானத்தை ஹிந்துஸ்தானத்துடன் இணைத்தார். இதற்கிடையில் பாகிஸ்தானின் ராணுவம் சமஸ்தானத்தின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றிக்
கொண்டுவிட்டிருந்தது.

ஹிந்துஸ்தானத்துடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது சுதந்திர நாடாக விளங்குவதா என்கிற சுய நிர்ணய உரிமை எதுவும் எந்த சமஸ்தான மக்களுக்கும் தரப் படாத நிலையில் காஷ்மீர மக்களுக்கு மட்டும் அப்படியொரு வாக்களிக்க வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது? பாகிஸ்தானின் மறைமுக ஆக்கிரமிப்பை ஹிந்துஸ்தானத்து ராணுவம் முறியடித்து, பாகிஸ்தான் ஆகிரமித்த பகுதியையும் எளிதில் மீட்டுவிட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்த நேரு அவசரப்பட்டு ஆக்கிரமிப்பு பிரச்சினையை ஐ. நா. அவையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதால், தேவையில்லாமல் போர் நிறுத்தம், அப்போதைய நிலவரப்படியான நிலைமையை இருக்கச் செய்தல் போன்ற தீர்மானங்
களோடு, காஷ்மீரின் எதிர்காலம் குறித்த முடிவைக் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு விடுதல் என்கிற தீர்மானத்திற்கும் வழி ஏற்பட்டுவிட்டது. விளைவு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியைப் பாகிஸ்தானே தக்க வைத்துக்கொண்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை முதலான அக்கிரமங்களைச் செய்துதான் பாகிஸ்தான் காஷ்மீரில் தனது ஆக்கிரமிப்பை நிகழ்த்தியது. எனவே சூட்டோடு சூடாக ஆக்கிரமிப்புச் செய்த பகுதி உள்ளிட்ட காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு சுய நிர்ணய உரிமைக்கான கருத்தறிதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் தங்களின் உண்மையான பாதுகாவலன் ஹிந்துஸ்தானமே என்பதை நேரடியாகவே உணர்ந்திருந்த நிலையில் அவர்கள் ஹிந்துஸ்தானத்துடன் இனையும் முடிவைத்தான் எடுத்திருப்பார்கள். இதனை நன்கு புரிந்து கொண்டிருந்த பாகிஸ்தான் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப் படுவதற்குக் கால தாமதம் செய்து வந்தது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியும் மீட்கப்பட்டு அனைத்து காஷ்மீர மக்களும் சுதந்திரமாக சுய நிர்ணய உரிமையை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று நேரு சர்க்கார் வற்புறுத்தியதையே தனக்குச் சாதகமாகப் பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டு மக்கள் கருத்தறிதலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதற்குக் காலந்தாழ்த்தி வந்தது.

இன்று பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தும், காஷ்மீர் சமஸ்தானம் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இடையில் எவ்வளவோ மாறுதல்கள் நிகழ்ந்தாயிற்று. புதிய தலைமுறைகளுக்குத் தமது மாநிலத்தில் நடந்தவையெல்லாம் என்ன வென்று சரியாகத் தெரியாது. மேலும் அங்கு எல்லை தாண்டி வரும் பயங்கர வாதிகளின் அச்சுறுத்தல் மிகுதி. பொதுவாக முகமதிய மக்கள் மதப் பிடிவாத சக்திகளுக்கு அடி பணிந்து போகப் பழகியவர்கள். மத அடிப்படையில் எழுப்பபடும் குரலுக்கு மறுப்புக் குரலை முகமதிய சமுதாயத்தில் கேட்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் அரிது. அப்படியே ஒன்றிரண்டு குரல்கள் மென்மையாக எழுந்தாலும் அவை முரட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டுவிடும். இத்தகைய நிலைமை இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூடுதலாகவே உள்ளது. பாதுகாவலுக்கு இருக்கும் ஹிந்துஸ்தானத்து ராணுவத்திற்கு உளவு சொன்னதாகக் குற்றம் சுமத்தி காஷ்மீரத்து மக்களை, அவர்கள் முகமதியராகவே இருப்பினும் மிகக் கொடூரமாகத் தண்டிக்கும் பயங்கரவாதிகளின் செல்வாக்கு எல்லைப் புறங்களில் மிகுதியாக உள்ளது. இஷ்டம் போல எவர் வீட்டிற்குள் வேண்டுமானாலும் புகுந்து பலவந்தமாக உணவு, பணம் என இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொள்வது போதாதென்று பெண்களையும் கடத்திச் செல்லும் பயங்கர வாதிகளின் ஹிம்சையால் விரக்தியடைந்துவிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின் சராசரி முகமதியன், ஹிந்துஸ்தானத்தின் பாதுகாப்பு போதுமானதாக இல்லாத நிலையில் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைவிட, சட்டம் ஒழுங்கு நிலவும் அமைதியான வாழ்க்கை முறை திரும்ப வேண்டி பாகிஸ்தானுக்கு ஆதரவாகச்
சாய்ந்துவிடுவதே மேல் என்கிற கட்டாயத்திற்கு வந்துவிட்டான். ஹிந்துஸ்தானத்து அரசோ
முகமதிய சமூகத்தாரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்கிற தவறான அனுமானத்தின் பேரில் ராணுவத்திற்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்காமலும், பந்தோபஸ்து நடவடிக்கைகளைக் கடுமையாக்காமலும் தனக்குத் தானே பள்ளம் தோண்டிக்
கொண்டிருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்தை ஆபத் பாந்தவானகப் பார்த்து, தனது வாழ்விடம் ஹிந்துஸ்தானதின் அங்கம் என மனப் பூர்வமாகக் கருதிய காஷ்மீரத்து முகமதியன் இன்று பிரிவினைக் கூக்குரல்களுக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கிறான். மத்தியில் ஆட்சிப் பொறுப்பைப் பல காலம் தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

வருடத்தில் இரண்டே மாதங்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் மக்களுக்குத் தாற்காலிகமாக ஓரளவு வசதியான தக்குமிடங்களை அமைப்பதற்காக அமர் நாத் தேவஸ்தானத்திற்கு அனுபோக அனுமதி என்கிற அடிப்படையில் மட்டுமே நாற்பது ஹெக்டேர் நிலம் அளிப்பதாக காஷ்மீர் மாநிலம் பிறப்பித்த ஆணை செயல்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுங் கூட மத்திய மாநில அரசுகளால் அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட இயலவில்லை. காஷ்மீரத்து மத வாத முகமதிய அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்பதால்! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அந்த உத்தரவைச் செயல் படுத்த முடியாத நிலைமை தமக்கு ஏற்படுமானால் அதைத் தம்மால் சகித்துக் கொள்ள இயலுமா என்று பிற சமூகத்தவர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அமர்நாத் தேவஸ்தானத்தின் தாற்காலிகப் பயன்பாட்டிற்கென நிலம் வழங்கும் ஆணையை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று மூன்று மாத காலமாக ஜம்முவில் உள்ள
ஹிந்துக்கள் அற வழியில் போராடி வருகிறார்கள். அதனை அடக்க வன்முறை பிரயோகிக்கப்பட்டு அதன் விளைவாக மக்களும் வன்முறையில் ஈடுபட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைகிறது. ஆனால் அப்பொழுதெல்லாம் கவலைப்படாத மத்திய அரசு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முகமதியருக்கு அத்தியாவசியப் பொருள்கள் போக முடியாதபடி தேசிய நெடுஞ் சாலையில் ஜம்மு ஹிந்துக்களின் மறியல் தொடர்வதாகத் தெரிநததும் பிரச்சினைக்குத் தீர்வு காண அலறிப் புடைத்துக் கொண்டு வருகிறது!

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டபோது ஓடி வராத மத்திய அரசு, இப்போது மட்டும் ஓடி வரக் காரணம் என்ன?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதிய பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைச் சக்திகள் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களைத் திரட்டி “ஆஜாதி, ஆஜாதி’ (சுதந்திரம், சுதந்திரம்)என்று குரலிடச் செய்கின்றன. மக்களைத் தூண்டிவிடும் பிரிவினைச் சக்திகளை இனம் பிரித்து தயை தாட்சண்யமின்றி அவற்றை ஒடுக்க வேண்டிய அரசோ, அவற்றிடம் குறைந்த பட்ச கண்டிப்புக் காட்டுமாறு மாநில காவல் துறை, எல்லைக் காவல் படை, ராணுவம் ஆகியவற்றுக்கு உத்தரவு போடுகிறது! நாம் ஜன நாயகத்தின் பேராதரவாளர்கள் என்று உலகின் முன் காட்டிக்கொள்வதற்காகப் பிரிவினைச் சக்திகள் சுதந்திரமாக ஊர்வலம் சென்று ஐ நாவுக்கு மனு அளிக்கவும் அனுமதிக்கிறது!

மக்களை மத அடிப்படையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரித்துப் பார்ப்பதால் வரும் வினை இது. சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதாகப் பழிச் சொல் வருமோ என்று தேவையின்றித் தயங்கும் மனப் பான்மையால் விளையும் விபரீதம் இது.

வியாபாரிகளையும், மக்களையும் தூண்டிவிட்டுப் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராபாதுக்குச் செல்ல பிரிவினைச் சக்திகள் முனைந்தபோது எல்லைக் கோட்டை அவர்கள் தாண்ட விடாமல் தடுத்ததும் அரசின் செயல் திறனைக் காட்டுவதாக இல்லை. அந்தக் கூட்டம் முழுவதும் முஸாபராபாதுக்குச் செல்ல அனுமதித்துவிட்டு, அதன்பின் அது திரும்பி வராதவாறு தடுத்து விட்டிருந்தால் இனி இப்படியெல்லாம் சாகசம் செய்யக் கூடாது என்கிற விவேகம் அவற்றுக்கு வந்திருக்கும். கடந்த அறுபது ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் லட்சணம் எப்படியிருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணரும் அந்தக் கூட்டம் இனி பாகிஸ்தான் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டோம் என மன்றாடும் நிலைக்கு வந்துவிட்டிருக்கும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் பிரிவினைச் சக்திகள் அமர்நாத் தரிசனத்திற்கு வரும் ஹிந்துக்களை விருந்தோம்பும் பணியைத் தாம் நீண்ட காலமாகவே செய்து வருவதாகவும், இனியும் தமது விருந்தோம்புதல் தொடரும் என்றும் மிகப் பெருந்தன்மையுடன் தெரிவித்து, ஆகையால் அமர் நாத் தேவஸ்தானத்திற்கு நிலம் எதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றன. விரு ன்தோம்பல் என்றால் உண்டி, உறையுள் என எல்லா வசதிகளையும் இலவசமாகவே அளித்து உபசரிப்பதாகும். ஆனால் உண்மை நிலவரம் தெரிய வேண்டுமெனில் அமர் நாத் தரிசனத்திற்கு வரும் ஹிந்து யாத்ரிகர்களிடம் இட வசதி, உணவு வசதி என்ற பெயரில் மிக மோசமான வசதிகளை மிக அதிகக் கட்டணத்திற்கு அளிப்பதில் காஷ்மீர் முகமதிய வியாபாரிகள் வருடா வருடம் ஈடுபட்டுக் கொள்ளை லாபம் சம்பாதித்து வருவது அமர்நாத் யாத்திரை சென்று வந்தவர்களைக் கேட்டால் விளங்கும். தேவஸ்தானம் அந்தப் பொறுப்பை ஏற்க நேர்ந்தால் காஷ்மீர் முகமதிய வியாபாரிகள் தங்கள் லாபத்தை இழக்க நேரிடும் என்பதால்தான் இப்படியொரு பெருந்தன்மையான பேச்சு பிரிவினைச் சக்திகளிடமிருந்து வருகிறது.

அமர்நாத் விவகாரத்தை காஷ்மீரில் உள்ள பிரிவினைச் சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக மத்திய மாநில அரசுகள் தேவஸ்தானத்தின் பொறுப்பில் நிலம் விடுவதைக் கைவிடும் முட்டாள் தனத்தைச் செய்யலாகாது. மாறாகப் பிரிவினைச் சக்திகளைக் கடுமையாக ஒடுக்கும் துணிவை அவை பெற வேண்டும். இதே போன்ற பிரிவினைச் சக்திகள் பாகிஸ்தானிலோ சீனாவிலோ தலையெடுத்தால் அவற்றின் கதி என்ன வாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

துரதிருஷ்ட வசமாக இன்று ஹிந்துஸ்தானத்திற்குச் சரியான தலைமை அமையவில்லை. வல்லபாய் பட்டேல், கோவிந்த வல்லப பந்த, லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் இன்று இல்லை. தேச விரோத சக்திகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைச் சந்தர்ப்பம் வாய்த்தபோது செய்து காண்பித்தவர்கள் அவர்கள்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்