காலடியில் ஒரு நாள்

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

சேதுபதி அருணாசலம்


நான் ‘காலடி’யில்தான் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகச்சிறு வயதில் எப்போதோ ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடியைப் பற்றிப் படித்ததிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்ற பேராவல் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. என் கற்பனையில் அது ஒரு மிக அழகான மிகச்சிறு கிராமம். ஆற்றங்கரையில் கோயிலும் தென்னை மரங்களும் சூழ்ந்திருக்கும். கேரளாவின் உட்பகுதியில் எங்கோ, செல்லவே முடியாத இடத்திலிருக்கும் என்பதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன்.

அலுவலக வேலை நிமித்தமாக கொச்சினுக்குப் போயிருந்தபோது என் நிறுவனத்தின் பெரிய அதிகாரி கொச்சினைச் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிக் கூறிக் கொண்டே வந்துவிட்டு ஒரு தயக்கத்துக்குப் பின், “ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், கோயில்களைப் பார்ப்பதில் விருப்பமிருந்தால் விமானம் ஏறுவதற்கு முன்னால் ஆதிசங்கர் பிறந்த காலடியையும் பார்த்துவிடுங்கள்” என்றார். பொதுவாகவே இந்துக் கோயில்களைப் பற்றியோ, இந்து மதம் தொடர்பான விஷயங்களைப் பற்றியோ ஒரு அந்நியரிடம் பேசும்போது பெரும்பாலான இந்துக்களுக்கு இருக்கும் தயக்கம் அவர் குரலிலிருந்தது. ஆனால் என் காதுகளை என்னால் நம்பவே முடியவில்லை. “காலடி கொச்சிக்கு இவ்வளவு அருகில் இருக்கிறதா?”

பெங்களூருக்குப் புறப்பட வேண்டிய நாளன்று காலையிலேயே ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு காலடிக்குப் புறப்பட்டு விட்டேன். மாலை ஐந்து மணிக்குதான் என் விமானம். ஒரு முழு நாளை காலடியில் கழிக்கலாம் என்ற பேராவல் எனக்கு இருந்தது.

ஆனால் என் கற்பனையிலிருந்த காலடியுடன் ஒத்துப் போகாமல் நிஜமான காலடி கொஞ்சம் ஏமாற்றம் தருவதாக இருந்தது. நான் கற்பனை செய்திருந்த கிராமம் போலில்லாமல் ஒரு சிறு நகரமாக சலசலப்புடன் இருந்தது. ஊருக்குள் நுழையும்போதே ஒரு பள்ளிக்கூடமும் அதில் மிக உயரமான ஸ்தூபியும் இருந்தது. “இவ்வளவுதான் நீங்கள் காலடியில் பார்க்க வேண்டிய இடம். என்னை அனுப்பி விடுங்கள். நான் கொச்சிக்குப் போய்விடுகிறேன்” என்றார் டிரைவர். எனக்கு ஏமாற்றம் மேலும் அதிகரித்தது. “ஒரு பத்து நிமிடம் காத்திருங்கள். நான் உள்ளே சென்று விசாரித்து வருகிறேன்” என்று அந்த பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தேன்.

பழங்கால மணிமண்டத்தை நவீனமான முறையில் கட்டியது போன்று ஒரு உயரமான கோபுரம் இருந்தது. அதற்குக் கீழே ஒரு நாற்காலியில் அலுவலர் போன்றொருவர் மேசையில் தாளமிட்டப்படி அமர்ந்திருந்தார்.

அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

“நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். இந்த இடத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் வந்துவிட்டேன். இந்த இடத்தைப் பற்றிக் கூறுகிறீர்களா? இங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?”

“இது ஆதிசங்கரர் பிறந்த ஊர். இங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? இதோ இந்த மணி மண்டபம்தான் இருக்கிறது. இந்த மண்டபத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். உங்களால் எவ்வளவு காணிக்கை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்”.

மதியத்தூக்கத்தைக் கலைத்து பதிமூன்றாம் நம்பர் ஒற்றைப்படையா, இரட்டைப்படையா என்று கேள்வி கேட்கப்பட்டவர் போல் எரிச்சலாக பதிலளித்தார்.

எனக்கு மேலும் ஏமாற்றமானது.

“இல்லை.. இங்கே ஏதோ மடம், வேத பாடசாலை இருக்கிறது என்று சொன்னார்களே…” என்று இழுத்தேன்.

“அதுவா? அது சிருங்கேரி மடம். அங்கே கோயிலும் இருக்கிறது. உங்களால் எவ்வளவு காணிக்கை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்”

“இப்போது மடம் திறந்திருக்குமா?”

“அது எப்போதும் திறந்திருக்கும். உங்களால் எவ்வளவு காணிக்கை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்”

“உங்கள் பின்னால் இருப்பதென்ன பள்ளிக்கூடமா?”

“ஆம்!”

ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டு திரும்பிக்கொண்டார். நான் காணிக்கை கொடுப்பதற்காக சட்டைப்பையில் கை விட்டேன். காணிக்கை என்றால் எவ்வளவு கொடுப்பது என்று எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

“எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்கள். சில்லறையாக இருந்தாலும் பரவாயில்லை”. என் கையில் தட்டுப்பட்ட நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு வெறுப்பாக மணிமண்டபத்திற்குள் நுழைந்தேன்.

அந்த மணி மண்டபம் மொத்தம் எட்டு தளங்களைக் கொண்டதாக இருந்தது. வெகு சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள். எட்டாவது தளத்தில் மிகப்பெரிய ஆதிசங்கரரின் சிலை இருக்கிறது. உச்சிக்குச் செல்லும் வழி முழுவதும் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார்கள்.

அலுவலர் மீதான வெறுப்பு முதல் ஒரு சில ஓவியங்களிலேயே மறைந்து விட்டது. கீழே டிரைவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்ற அவசரத்தில் சற்று வேகமாகவே ஏறினேன். ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கான மிக எளிமையான, அழகான வழியாக இந்த மண்டபம் இருந்தது. உச்சியில் ஆதிசங்கரர் சிலையைப் பார்ப்பது மிக ரம்மியமான, தெய்விகமான அனுபவமாக இருந்தது. சிலையைச் சுற்றியிருக்கும் ஜன்னல் வழியே மொத்த காலடியும் தென்னை மரங்களால் நாற்புறமும் சூழப்பட்டிருந்தது மிக அழகாகத் தெரிந்தது. கண்ணை மூடி சற்று நேரம் அமர்ந்து விட்டு, வேகமாகக் கீழிறங்கினேன்.

அலுவலரிடம் சென்றேன்.
“ஆதிசங்கரரின் பெற்றோர் வழிபட்ட விருஷாலீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா” என்றேன்.

திரும்பவும் முகத்தை வதங்கிய அப்பளம் போலாக்கி அருகிலிருந்த நபரிடம், “இங்கே ஈஸ்வரன் கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?” என்றார்.

“விருஷாலீஸ்வரர் கோயில்” என்று நான் திருத்தினேன்.

இரண்டு பேரும் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு “அப்படி எதுவும் இங்கே இல்லை” என்றார்கள்.

திரும்பிவந்து டிரைவரிடம் “இங்கே சிருங்கேரி மடம் இருக்கிறதாம். அதையும் பார்த்துவிடுவோம். அங்கே என்னை விட்டுவிட்டு நீங்கள் கொச்சின் போய்விடுங்கள்” என்றேன்.

மெயின் ரோட்டிலிருந்து மடத்துக்குப் போவதற்காக ஒரு சிறிய சாலையில் திரும்பியவுடன் மொத்த நகரச்சூழலும் மாறி ஒரு அழகான கேரள கிராமச்சூழல் வந்தது. இரண்டு புறமும் பச்சைப் பசேலென்ற பாசி படர்ந்த சுற்றுச்சுவரையும், பெரிய கேட்டையும், நான்கைந்து பலா மரங்களையும் கொண்ட வீடுகள், அங்கங்கே தென்னை மரங்கள் என மிக அழகாக இருந்தது அந்தச் சூழல்.

மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டரில் இந்த மடம் இருக்கிறது. நான் அங்கே சென்று இறங்கியதுமே மாலை வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். டிரைவரிடம் பேசி வெயிட்டிங் சார்ஜ் தருவதாகச் சொல்லி விட்டு கோயிலுக்குள் சென்றேன்.

எனக்குப் பொதுவாக நவீன கோயில்கள் அவ்வளவு திருப்தி தருவதில்லை. பழங்காலக் கோயில்களின் கருங்கல் மண்டபங்களிலிருக்கும் குளுமையும், சாந்நித்யமும் நவீன கோயில்களில் கிடைப்பதில்லை. அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்தது சிருங்கேரி மடம் கட்டியிருக்கும் ஆதிசங்கரர் கோயில். அழகான, குளிர்ச்சியான கான்க்ரீட் மண்டபம், அழகிய நவீன சுவரோவியங்கள், கோயிலின் அரையிருட்டு, அன்பான அர்ச்சகர்கள் என மிகவும் அமைதிப்படுத்தும் அழகிய கோயிலாக இருந்தது அது.

இக்கோயில் பாலாற்றின் கரையிலிருக்கிறது. ஆதிசங்கரர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு நடுகல்லும் அதற்கருகிலேயே ஆதிசங்கரரின் அன்னையும் சமாதியும் இருக்கிறது. அதைச் சுற்றிலும் சிருங்கேரி மடத்தால் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர், சாரதா தேவி இருவருமே பாலாற்றைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது குளிர்ந்த காற்று ஆற்றிலிருந்து கிளம்பி நம்மைத் தொட்டுச் செல்கிறது. நீண்ட நேரம் கண்மூடி அமர்ந்திருந்தேன். நல்ல வேளையாக கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. இல்லையென்றால் கண்மூடி தியானித்து மகிழும் அனுபவத்தை இழந்திருப்பேன்.

நீண்ட நேரம் அந்த மண்டபத்தில் அமர்ந்துவிட்டு கோயிலின் புத்தகக் கடைக்கு வந்தேன். ‘காணிக்கை’ அலுவலரைப் போலில்லாமல் இங்கிருக்கும் அலுவலர்கள் அன்பானவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானோர் சிருங்கேரியிரிலிருந்து இங்கே இடம் பெயர்ந்தவர்கள். அவர்களுடன் கன்னடத்தில் உரையாட முடிந்தது.

ஆதிசங்கரரின் ஜன்மபூமிக்கோயிலுக்கருகே ஒரு அழகான கிருஷ்ணர் கோயிலும் அதனருகில் வேதபாடசாலையும் இருக்கிறது. கிருஷ்ணர் கோயிலில் நீண்ட நேரம் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தேன். வேதபாடசாலைக்குள் நுழைந்தேன்.

நான்கைந்து பாடசாலை மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த பாடசாலையின் சுற்றுச்சூழல் என் கிராமத்து வீட்டை நினைவு படுத்துவதாக இருந்தது. நானும் என் சிறு வயதில் என் நண்பர்களுடன் வீட்டுக்குள்ளே இருந்த தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். இந்த மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மிக அழகாக கவர் ட்ரைவ், புல், ஹூக் எல்லாம் ஆடிக் கொண்டிருந்தார்கள். இது போன்ற சிறு இடங்களில் விளையாடப்படும் கிரிக்கெட் தனக்கென புதிய விதிமுறைகளைக் கொண்டிருக்கும். தூக்கி அடித்தால் அவுட், ஒரு பெரிய மரத்தைத் தாண்டினால் அவுட் போன்ற விதிமுறைகள் வேதபாடசாலை கிரிக்கெட்டுக்கும் இருந்தது.

வெவ்வேறு இடங்களில் நின்று கொண்டு நான் அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததால் ஏற்படும் வெட்கம் கலந்த இளநகையுடன் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஷாமாவும், வெங்கிட்டும் மிக நன்றாக விளையாடினார்கள். ஒவ்வொரு முறையும் ஷாமா உயரமான பலா மரத்தைத் தாண்டி அடித்து அவுட் ஆகிக் கொண்டிருந்தான்.

ஒருமுறை அவன் அடித்த பந்து, புகைப்படமெடுத்துக் கொண்டிருந்த என்னை மயிரிழையில் உரசிச் சென்றது. பேட்டைத் தூக்கிப்போட்டு ஓடி வந்து “சாரி.. சாரி” என்றான். “பந்து என் மேல் படவேயில்லை. உங்கள் விளையாட்டுக்கு இடையூறாக இருப்பதால் நான்தான் சாரி சொல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு, பாடசாலைக்குள் நுழைந்தேன்.

சில சிறுவர்கள் ஒரு திண்ணை மேலமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் நான்கு தென்னிந்திய மொழிகள், சம்ஸ்கிருதம், ஹிந்தி இதெல்லாம் சரளமாகப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் திராவிட வெறுப்பியலில் வளர்ந்திருந்த எனக்கு பெங்களூருக்கு வரும் வரை தமிழ், ஆங்கிலம் இரண்டைத் தவிர வேறு மொழியெதும் தெரியாது. (அது சரி, மற்ற மொழிகள் கற்றுக் கொண்டால் தமிழெப்படி வளரும்?). கோடை விடுமுறையாகையால் வேதபாடசாலை விடுமுறை எனவும் அடுத்த வாரம் முதல் மீண்டும் பள்ளி ஆரம்பமாகும் என்றும் சொன்னார்கள். இன்னும் நிறைய மாணவர்கள் அடுத்த மாதம் வருவார்கள் என்றும் சொன்னார்கள். “ஏன் நீங்களெல்லாம் வீட்டுக்குப் போகவில்லையா?” என்றேன்.
அவர்கள் பதில் சொல்லாமல் புன்னகைத்தார்கள்.
அதன்பின்புதான் அவர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.

“எங்களுடன் சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்ட அவர்களிடம் வேண்டாமென்று சொல்லிவிட்டு பாடசாலைக்குப் பின்புறமிருக்கும் ஆற்றங்கரைக்கு வந்தேன். இங்குதான் ஆதிசங்கரரை முதலை கவ்வியது என்று நம்பப் படுகிறது.

இரண்டு சிறுவர்கள் அவர்கள் அப்பாவுடன் அந்த மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
“அப்பா.. இன்னும் ஒரே ஒரு டைவ்…” என்று அந்த சிறுவன் அப்பாவிடம் கெஞ்சிக் கெஞ்சி அனுமதி வாங்கிக் குளித்துக் கொண்டிருந்தான்.

அங்கிருந்து மீண்டும் கோயிலுக்கு வந்தேன். இன்னொரு முறை பாடசாலைக்குப் போய் மாணவர்களைப் பார்த்துவிட்டு வரலாமே என்று தோன்றியது. கொஞ்ச நேரம் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தேன். இப்படியே இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் விமானத்தைத் தவர விட்டு விடுவோமென்று கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.

தி.ஜா-வின் ‘அம்மா வந்தாள்’ கதையின் சூழல் இங்குதான் இருந்திருக்குமோ என்று மனம் எண்ணிக் கொண்டேயிருந்தது. காரில் கிளம்பி வரும்போது வேதபாடசாலைச் சிறுவர்கள் நினைவாகவே இருந்தது. பணத்தைத் துரத்தும் உலகில் கோயில், ஆற்றங்கரை, ஏகாந்தம், அமைதி, வெறுப்பை போதிக்காத கல்வி இதிலெல்லாம் தோய்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு அவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு கணமாவது தாங்களும் பணத்துரத்தலில் சேர்ந்து கொள்ள மாட்டோமா என்று நினைத்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

பெங்களூருக்குப் போனபின் நானெடுத்த புகைப்படங்களை ப்ரிண்ட் போட்டு அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எனக்குத் தெரியும்… அவர்கள் பள்ளி நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரும் அந்தப் புகைப்படங்களை அவர்கள் பொக்கிஷம் போல் வைத்துக்கொள்வார்கள்!

******
புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
http://www.flickr.com/photos/sethuarun/tags/cochin/

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

******

ஆச்சரியம் 1:
கேரள சுற்றுலாத்துறை போல்காட்டி அரண்மனையில் கொச்சியைச் சுற்றியிருக்கும் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியலிட்டு ஒரு நோட்டீஸ் தந்திருந்தது. கொச்சியைச் சுற்றியிருக்கும் அத்தனை சர்ச், பிரிட்டிஷ் மாளிகைகளையெல்லாம் பட்டியலிட்டிருந்த அந்த நோட்டீஸில் கொச்சினுக்கு மிக மிக அருகிலிருக்கும் சோட்டானிக்கரை, த்ரிபுணித்ரா கேசவன் கோயில், காலடி என ஒரே ஒரு இந்து மதக் கோயில் கூட குறிப்பிடப்படவில்லை.

ஆச்சரியம் 2:
ஒரு நாள் முழுதும் என்னுடன் காலடியில் செலவழித்த என் டிரைவர் வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே அதிகமாகப் பெற்றுக் கொண்டார். நான் வற்புறுத்திக்கொடுத்த நூறு ரூபாயை என் கையிலேயே திணித்து விட்டார்.

*****
sethupathi.arunachalam@gmail.com
*****

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்