விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

டக்ளஸ் ஜே அமி


(குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன)

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தீவிரவாதத்தை அதிகரிக்கும்

விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்துக்கு எதிராக வைக்கும் இன்னொரு விமரசனம் அது தீவிரவாதத்தை அதிகரிக்கும் என்பது. தீவிரவாத வலது மற்றும் தீவிரவாத இடதுசாரிக் கட்சிகள் விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்தால் ஆட்சியிலேறுவார்கள் என்று விமர்சிக்கிறார்கள். சிறிய கட்சிகளும் சட்டமன்றத்துக்குள் நுழைய விகிதாச்சார முறை இடமளிப்பதால், தீவிரவாதக்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களில் சிலரை அரசாங்க அலுவலுக்குத் தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு ஆதாரமாக, நாஸிக்கட்சி ஜெர்மனியில் வலிமை பெற்றதை குறிப்பிடுகிறார்கள். வைமர் குடியரசின் விகிதாச்சார முறையை உபயோகப்படுத்திக்கொண்டு மிகச்சிறிய நாஸிக்கட்சி அரசியல் அமைப்புக்குள் நுழைந்து அதனைக்கொண்டு தன்னுடைய பிரபலத்தை அதிகரித்துக்கொண்டு இறுதியில் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியது. அதுபோல ஒரு விஷயத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியுமா ?

நாஸிகளின் வளர்ச்சியை உபயோகப்படுத்திக்கொண்டு விகிதாச்சார முறையை விமர்சிப்பது மிகவும் எளிமையான முறையில் அதனை அணுகுவதும், தவறான சிந்தனையுமாகும். 1930இல் மிகவும் சிக்கலான காரணிகளாலும், அந்த காலத்தில் இருந்த பொருளாதார வீழ்ச்சியும், அதற்கு முன்னால் முதலாம் உலகப்போரில் தோல்வியுற்றதால் வைமர குடியரசு உருவாக்கப்பட்ட அவமானத்தினாலுமே நாஸிகட்சியின் வளர்ச்சி நிகழ்ந்தது என்பதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட காரணிகள் இருக்கும்போது எந்த வகை தேர்தல் முறை இருந்திருந்தாலும் நாஸிக்கட்சி அங்கு வளர்ந்திருக்கும். அதே காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவமே இருந்தது. இருப்பினும் அவைகளில் ஏதும் பாஸிஸ அரசுகள் தோன்றவில்லை.

இருப்பினும், விகிதாச்சார முறையின் மிகக்குறைந்த வாக்கு தேவையின் காரணமாக தீவிரவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியும் என்பதும், பெரும்பான்மை வாக்கு முறையின் அதிகமான வாக்கு தேவையின் காரணமாக தீவிரவாதிகள் அரசை பிடிப்பது கடினம் என்பதையும் விமர்சகர்கள் வலியுறுத்திக்கூறுகிறார்கள்.

விகிதாச்சார முறை ஆதரவாளர்கள் அது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும் தீவிரவாதம் குறித்த கவலை மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்று கூறுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் தீவிரவாதம் என்பது ஒரு பிரச்னையே அல்ல. கடந்த 50 வருடங்களாக விகிதாச்சார முறை ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கு அரசியல் தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்டு இருக்கவில்லை. அதற்குக் காரணம் குறைந்த பட்ச வாக்குச் சதவீதமாக அதிகமான அளவு வைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் 5%மாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மிகச்ச்சிறிய கட்சிகள் அரசுக்குள் நுழைவது கடினமானதாக இருக்கிறது.

இரண்டாவதாக, ஓரிரு தீவிரவாத குழுவினர் சட்டமன்றத்துக்குள் நுழைந்தாலும், அது ஒரு பெரிய அரசியல் அழிவாக இருக்காது என்றும் கூறுகிறார்கள். அது சில நல்ல விஷயங்களைக் கூட விளைவிக்கலாம். இந்தக் குழுக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை நீட்டுவது, அவர்களின் தீவிரவாதத்தை மட்டுப்படுத்தும் முயற்சியாகவும், அவர்களை கூட்டுறவில் இணைக்கும் முயற்சியாகவும் இருக்கும் என்றே கருதுகிறார்கள். இந்தக் குழுக்களுக்கு தங்களுக்கும் அரசியல் குரல் இருக்கிறது அதுவும் சட்டமன்றத்தில் ஒலிக்கிறது என்ற எண்ணம் இருக்கும்போது, அவர்களது அன்னியப்படுதலை இது குறைக்கும் என்றும் அவர்கள் வன்முறையை நாடுவது குறையும் என்றும் வன்முறை மூலம் அவர்கள் தங்களது குரலை கேட்க வைக்க வேண்டிய நிர்பந்தம் குறையும் என்றும் கருதுகிறார்கள். சமீபத்தில் தேர்தல் முறை பற்றிய ஆய்வுகள், விகிதாச்சார முறை மூலம் சிறுபான்மை இனக்குழுக்கள் அன்னியப்படுவது குறைகிறது என்றும், விகிதாச்சார முறை இருக்கும் நாடுகளில் இன ரீதியான வன்முறையின் இறங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

—-

விகிதாச்சார முறை நிர்வாக சிக்கலை அதிகப்படுத்துகிறது. இது தேர்தலின் செலவை அதிகப்படுத்துகிறது

—-

சில விமர்சகர்கள் இந்த விகிதாச்சார முறையை ஏற்றுக்கொள்வதனால், தேர்தலை நிர்வகிப்பது மிகவும் செலவாகும் விஷயமாகும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் புதிய ஓட்டு எண்ணிக்கை முறையையும் எவ்வாறு தொகுதிகளைப் பங்கிடுவது என்றும் புதியதாகச் சொல்லித்தரவேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். சில வேளைகளில் புதிய வாக்கு இயந்திரங்களும் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

விகிதாச்சார முறை ஆதரவாளர்கள், இப்போது விகிதாச்சார முறை இருக்கும் பல நாடுகளில் விகிதாச்சார முறை எந்த விதமான பிரச்னையும் இல்லாமலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. ஆகவே இதனை இந்தியாவுக்கு மாற்றுவதிலும் பிரச்னை இருக்காது என்று கருதுகிறார்கள்.single transferable vote முறை தவிர மற்ற விகிதாச்சார முறைகள் இப்போது இருக்கும் வாக்கு இயந்திரங்களாலேயே நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றும் கூறுகிறார்கள்.

**

விகிதாச்சார முறை தனி நபருக்கு வாக்களிப்பதை தவிர்த்து கட்சிகளுக்கு வாக்களிப்பதை முன்னிருத்துகிறது

விகிதாச்சார முறையின் விமர்சகர்கள் தனி நபருக்கு ஓட்டுப்போடாமல் கட்சிகளுக்கு ஓட்டுப்போடும்படி விகிதாச்சாரமுறை தேர்தல்கள் இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியர்கள் தனிநபருக்கே ஓட்டுப்போடுவதை விரும்புவார்கள் என்றும் கூறுகிறார்கள். யார் தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்பதை பொதுமக்களே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கட்சி நிர்ணயிக்கக்கூடாது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை வெளியே அனுப்புவதை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோருகிறார்கள்

ஆனால், விகிதாச்சார முறை ஆதரவாளர்கள், ஒரே ஒரு விகிதாச்சார முறையில் மட்டுமே (closed party list system மூடியகட்சி வரிசை அமைப்பு) மக்கள் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். மற்ற எல்லா விகிதாச்சார முறையிலும் மக்கள் தனி நபருக்கே வாக்களிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இந்தியாவுக்கு என பிரேரணை செய்யப்படும் முறைகள் தேர்வு வாக்குchoice voting, கலவை வேட்பாளர் முறைmixed-member system, திறந்த கட்சி வரிசை முறைopen party list voting ஆகியவை. இவற்றில் எல்லாம் மக்கள் தனி நபருக்கே வாக்களிக்கிறார்கள்.

—-

விகிதாச்சார முறை அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது

விமர்சகர்கள் இந்த முறை அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை என்றும், இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப்புறம்பானது என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தில் இது அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், அதனை பெரும் விவாதத்துக்குப் பின்னர், அதனை அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிப்பதில் தவறில்லை என்று ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

கிராம பஞ்சாயத்துக்கள், நகரியங்கள், கார்பரேஷன்கள், பெருநகர் வாரியங்கள் ஆகியவற்றில் இவற்றை பயன்படுத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் தேவையில்லை. மாநில அரசாங்கங்களே இவற்றை தங்கள் சட்டமன்றத்தில் அங்கீகரித்து நடைமுறைப் படுத்திப் பார்க்கலாம். அவை சிறப்பாக வேலை செய்கின்றன என்ற கருத்து பரவலான பின்னர் மத்திய பாராளுமன்றத்தில் விவாதத்துக்குப் பின்னர் முடிவெடுக்கலாம்.

விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களைப் பற்றிய பார்வை

எந்த ஒரு தேர்தல் முறையும் துல்லியமானது அல்ல. அது விகிதாச்சார முறைக்கும் பொருந்தும். ஆகவே விகிதாச்சார முறைக்கு மாறுமுன்னர், அதன் மூலம் ஏதேனும் அரசியல் பின்னடைவுகள் உண்டா என்று கேட்பது சரியே. ஆனால், இந்த பின்னடைவுகள் இதனால் இருக்கும் ஆதாயங்களை விட குறைவுதான் என்பது பலரது கருத்து.

http://www.mtholyoke.edu/acad/polit/damy/articles/common_criticisms_of_pr.htm

—-

  • பகுதி – 1

    Series Navigation

  • டக்ளஸ் ஜே அமி

    டக்ளஸ் ஜே அமி

    விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்

    This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

    டக்ளஸ் ஜே அமி


    (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன)

    விகிதாச்சார முறை பற்றிய எந்த ஒரு ஆராய்ச்சியும் அதன் அரசியல் ஆதாயங்கள் மற்றும் அதன் அரசியல் பாதிப்புகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நடக்க வேண்டும். வெற்றிபெறுபவருக்கே அனைத்து ஆதாயமும் தரும் முறையில் இருக்கும் பாதிப்புகளைப் பேசும்போது விகிதாச்சார முறையிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். எந்த ஒரு தேர்தல் முறையும் துல்லியமானது அல்ல. கீழே விகிதாச்சார முறைக்கு எதிராக மக்கள் வைக்கும் விமர்சனங்களும் விகிதாச்சார முறைக்கு ஆதரவானவர்கள் தரும் பதிலும் காணலாம்.

    விகிதாச்சார முறை ஆதரவாளர்களுக்கு எதிராளர்களுக்கும் இடையேயான இந்த விவாதத்தில் கூறப்படும் விமர்சனங்கள் மிக முக்கியமானவை. தற்சமயத்தில் இருக்கும் முறையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன (வீணடிக்கப்படும் வாக்குக்கள், கட்சிக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லாதது. குறைவான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவது, ஒரு குறிப்பிட்ட ஆள் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தொகுதியை கன்னாபின்னா என்று வரைவது, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் குறைவாக பிரதிநிதித்துவம் பெறுவது ஆகியவை) என்பதை மறுப்பதில்லை. ஆனால், இருக்கும் தேர்தல் முறையே விகிதாச்சார முறையை விட சிறந்தது என்பதையும் விகிதாச்சார முறை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வாதிடுகிறார்கள். ஆகவே அந்த விமர்சனங்களை எதிர்கொள்வதும் அந்த விமர்சனங்கள் எந்த அளவு சரி என்று பார்ப்பதும் முக்கியம்.

    விமர்சனங்கள்

    விகிதாச்சார முறை நிலையில்லாத கூட்டணிகளையும், சட்டமன்றத்தில் வேலை நடக்காமல் போவதையும் உருவாக்குகிறது.

    கூட்டணியில் மிகச்சிறிய கட்சிகள் மிக அதிகமான அளவு சக்தி கொண்டவையாக இருக்கின்றன.

    கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் மிக அதிகமான வளமைகளைப் பெறுகின்றன

    விகிதாச்சார முறை இந்தியாவின் அரசியலை மேலும் கூறுபோட்டுவிடும்

    விகிதாச்சார முறை மிகவும் அதிக செலவாகும் பெரிய பிரச்சார வேலையை கட்சிகளிடம் திணிக்கின்றன

    விகிதாச்சார முறை தேர்தல் மிகவும் சிக்கலானது. அது வாக்காளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும்

    விகிதாச்சார முறை தொகுதிக்கும் – பிரதிநிதி (எம் எல் ஏ, எம்பி) ஆகியோருக்கும் இடையேயான உறவை பலவீனப்படுத்துகிறது.

    விகிதாச்சார முறை தீவிரவாதகட்சிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    விகிதாச்சார முறை நிர்வாகத்தை மேலும் சிக்கலாக்குகிறது. தேர்தல் செலவை அதிகரிக்கிறது

    விகிதாச்சார முறை கட்சிகளையே தேர்ந்தெடுக்கிறது தனிநபர்களை தேர்ந்தெடுப்பதில்லை

    விகிதாச்சார முறை அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது

    ****

    விகிதாச்சார முறையைப் பற்றிய விமர்சனங்களும் அவற்றின் பதில்களும்

    —-

    விகிதாச்சார முறை நிலையில்லாத கூட்டணிகளையும், சட்டமன்றத்தில் வேலை நடக்காமல் போவதையும் உருவாக்குகிறது.

    விகிதாச்சார முறைக்கு எதிராக வைக்கும் மிகப்பெரிய விமர்சனம் இது என்றால் மிகையாகாது. அரசாங்கத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அதேவேளையில் அதில் நிலையாமையையும் அதிகரிக்கிறது. பல கட்சிகள் கொண்டதாக சட்டமன்றங்கள் உருவாவதன் விளைவே இது. ஏராளமான கட்சிகளுக்கு இடம் இருக்கும் காரணத்தால் ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையை காணலாம். இதன் காரணமாக பெரிய மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி செய்யும் நிலைமை உருவாகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்காகவும், கொள்கை மற்றும் நிலைப்பாடு காரணமாகவும் இந்தக் கூட்டணிகள் உடையும் நிலையையும் இது குறிக்கிறது. இத்தாலி ஒரு சிறந்த உதாரணமாகக் காட்டப்படுகிறது. இங்கு தொடர்ந்து கூட்டணிகளும் அவை வெகுவேகமாக உடைந்து மறு கூட்டணிகள் உருவாவதும் தொடர்ந்து நடக்கிறது.

    விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாளர்கள் இந்த விமர்சனத்துக்கு பல பதில்களைத் தருகிறார்கள். முதலாவது கூட்டணிக் கட்சிகள் மூலம் உருவாகும் அரசு ஒரே கட்சி அரசை விட அதிக நிலையாமை கொண்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், விகிதாச்சார தேர்தல் முறை அமைப்புக்கொண்ட நாடுகளில் பரந்த மற்றும் அமைப்பு ரீதியான நிலையாமை என்பது அது இல்லாத நாடுகளை விட அதிகம் என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. இது பிரசினையாக இருந்தால் பெரும்பாலான விகிதாச்சார முறை பிரதிநிதித்துவம் உள்ள நாடுகளில் அந்த முறையை தொடர்ந்து உபயோகித்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் பதில் கூறுகிறார்கள். பெரும்பாலான விகிதாச்சார முறை பிரதிநிதித்துவம் உள்ள நாடுகள் நிலைத்த ஆக்கப்பூர்வமான அரசாங்கங்களையே கொண்டிருக்கின்றன. ஏராளமான கட்சிகள் இருந்தாலும், இடதுசாரி மற்றும் வலதுசாரி கூட்டணிகள் மூலம் ஏறத்தாழ இரண்டு கட்சி முறை அரசாங்கங்கள் போலவே செயல்பட்டுவருகின்றன. ஒரு முறை ஒரு கூட்டணி ஏற்பட்டுவிட்டால், அந்த கூட்டணியை தொடர்ந்து நீட்டித்திருக்க வைத்திருப்பதில் பல ஆதாயங்கள் இருக்கின்றன. இந்த கூட்டணிகள் பொதுவாக பலவருடங்கள் நீடிக்கின்றன. சில உதாரணங்களில் இவை பல பத்தாண்டுகள் கூட நீடித்திருக்கின்றன. சொல்லப்போனால், விகிதாச்சார முறை தேர்தல் கொண்டிருக்கும் நாடுகளில் அது இல்லாத நாடுகளை விட நிலையான அரசாங்கங்கள் இருக்கின்றன.

    விகிதாச்சார முறை எதிர்ப்பாளர்கள், ஏராளமான கட்சிகள் இருப்பது நிலையற்ற அரசாங்கங்களை உருவாக்குமென்றும், பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு கடினமானதாகவும் ஆகுமென்றும் வாதிடுகிறார்கள். ஏராளமான கட்சிகள் இருப்பது பாராளுமன்றத்தில் (சட்டமன்றத்தில்) எதனையும் செய்யமுடியாத நிலையை உருவாக்கலாம். ஆனால், விகிதாச்சார முறை ஆதரவாளர்கள் கூறுவதுபடி பார்த்தால், விகிதாச்சார நடைமுறையை ஒப்புக்கொண்ட நாடுகளில் அப்படிப்பட்ட நிலை உருவானதே இல்லை.

    நம் பாராளுமன்றம் சட்டமன்றங்களில் தற்போது கொறடா என்ற அமைப்பு இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட சட்டதிருத்தம் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ ஓட்டுக்கு வரும்போது, கட்சி மாறி ஓட்டுப்போடுவதை தடுக்கிறது. கட்சி மாறி ஓட்டுப்போட்டவர்கள் தங்கள் பிரதிநிதி பதவியை இழக்கிறார்கள். இது ஒரு கலவையான நிலையையே இந்திய தேர்தல் முறைக்குக் கொடுத்திருக்கிறது. கட்சி மாறுவதைத் தடை செய்யும் சட்டத்தால், மக்கள் தேர்தலில் தனி நபருக்கு ஓட்டுப்போட்டாலும், சட்டமன்றத்தில் அவர்கள் பெற்ற ஓட்டு, கட்சிக்கு போட்ட ஓட்டாகவே மதிக்கப்படுகிறது.

    —-

    சிறிய கட்சிகள் மிக அதிகமான வலிமையை கூட்டணி அரசாங்கங்களில் கொண்டிருக்கிறார்கள்

    பல கட்சி அமைப்புள்ள நாடுகளில் மிகச்சிறிய கட்சி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு பொருந்தாத அளவில் மிக அதிகமான சக்தியை பெற்றிருக்கிறதைக் காணலாம். ( இந்தியா விகிதாச்சார முறை பிரதிநிதித்துவம் கொண்ட நாடு இல்லையென்றாலும், இந்தியாவின் பாராளுமன்றத்திலேயே இத்தகைய நிலையைக் காணலாம்) உதாரணமாக ஒரு கட்சி 42 சதவீதத்தையும் இன்னொரு கட்சி 38 சதவீதத்தையும் மற்றுமொரு கட்சி 20 சதவீதத்தையும் பெற்றிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மிகச்சிறிய கட்சியிடமே வலிமை இருக்கும். இது எந்தப்பக்கம் சாய்கிறது என்று வைத்து அந்த கட்சி ஆட்சிக்கு வரும். இது கிங்-மேக்கர் நிலைக்கு வருகிறது. இந்த நிலையில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது மிகச்சிறிய ஓட்டுக்களைப் பெற்ற கட்சி நிர்ணயிக்கிறது. பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெற்ற கட்சி அல்ல. இதனை விமர்சிப்பவர்கள், மிக அதிகமான ஓட்டுக்களைப் பெற்ற கட்சி அரசாங்கம் அமைக்க முடியாமல் இருப்பது ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்று விமர்சிக்கிறார்கள்.

    விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் ஆதரவாளர்கள் இத்தகைய பிரச்னை இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், தேர்தலுக்கு முன்பே எந்தக் கட்சி யாரோடு கூட்டணி சேரப்போகிறோம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் அப்படிப்பட்ட தேர்தலுக்குப் பின்னால் மாறும் கூட்டணிகளைத் தவிர்க்கலாம். அப்படியே ஒரு சட்டம் இல்லாவிட்டாலும் கூட, பெரும்பாலான வேளைகளில் மிகச்சிறிய கட்சி மிக அதிகமான வாக்குக்களைப் பெற்ற கூட்டணியுடனேயே கூட்டணி அமைக்கிறது. ஆராய்ச்சியில் 12 சதவீத அளவிலேயே சிறிய கட்சிகள் குறைந்த வாக்குக்களைப் பெற்ற கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கின்றன என்று கண்டிருக்கிறார்கள்.

    ஆகவே இந்த விகிதாச்சார முறையால் இருக்கும் நிலைமையை விட மோசமான நிலைமையைக் கொடுத்துவிட முடியாது. ஆனால், விகிதாச்சார முறை ஆட்சியில் இருக்கும் கூட்டணி எப்போதுமே 50 சதவீத வாக்குக்களுக்கு அதிகமான வாக்குக்களைப் பெற்ற கூட்டணி என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம். தற்போதையை முறையில் எப்போதுமே ஆட்சியில் இருக்கும் கட்சி 50 சதவீத வாக்குக்களைப் பெற்றதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    —-

    சிறிய கட்சிகள் ஏராளமான சலுகைகளை கூட்டணி அரசில் பெறுகின்றன.

    (இன்றைய மத்திய கூட்டணியிலேயே அப்படித்தான் நிலை இருக்கிறது) விகிதாச்சாரமுறையின் விமர்சகர்கள் சிறிய கட்சிகள் அளவுக்கு மீறிய சலுகைகளைப் பெற்றுவிடும் என்று அஞ்சுகிறார்கள். பெரும்பாலான வாக்காளர்கள் விரும்பாத சட்டங்களை சிறு கட்சிகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கங்கள் நிறைவேற்றிவிடலாம் என்றும் அஞ்சுகிறார்கள். உதாரணமாக இஸ்ரேலில் இருக்கும் விகிதாச்சார முறை தேர்தலால், மிகப்பழமைவாதக் கட்சியினர் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவோம் என்று பயமுறுத்தி ஏராளமான சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று குறை கூறுகிறார்கள்.

    விகிதாச்சார முறை ஆதரவாளர்கள், பெரும்பாலான நேரங்களில் சிறு கட்சிகளின் கோரிக்கைகளை பெரும் கட்சியினர் கேட்பது நல்லதுதான் என்று கருதுகிறார்கள். ஆட்சி அதிகாரபங்கீட்டில் இதுபோன்ற சலுகைகள் ஒரு அடிப்படை என்றும் கருதுகிறார்கள். அதிக வாக்காளர்களைப் பெற்ற கட்சிகள் தங்கள் வாக்காளர்களுக்கு எதிரானதாக கருதும் ஒரு விஷயத்தை சிறு கட்சிகள் சொல்லுகின்றன என்பதால் மட்டுமே அங்கீகரிக்க மாட்டார்கள், அப்படி அங்கீகரித்தால், எதிர்காலத் தேர்தலில் வாக்குக்களை இழக்க நேரிடும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்வார்கள். அப்படி தங்கள் வாக்காளர்களும் அங்கீகரிக்கக்கூடிய சிறு கட்சியுடன் மட்டுமே கூட்டணிகள் நடைபெறும் என்பதை விகிதாச்சார முறை ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

    —-

    விகிதாச்சார முறை தேர்தல் இந்திய அரசியலை கூறுபோட்டுவிடும்.

    இந்த விகிதாச்சார தேர்தல் முறை இன மொழி மத ஜாதிகளாக பல அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்து இன்னும் இந்திய அரசியலைக் கூறுபோட்டுவிடலாம் என்று விகிதாச்சார முறைத் தேர்தலை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் இன மொழி மத ஜாதிப்பிரிவுகளை இன்னும் தீவிரப்படுத்தி விடும். இன்று ஓரளவுக்கு ஜாதி இன மொழி மதப்பிரிவுகளுக்கு அப்பால் மக்களிடம் தேர்தல் கட்சியினரும் வேட்பாளர்களும் ஓட்டு கேட்கிறார்கள். விகிதாச்சார முறை வந்தால் அனைவரும் தங்கள் ஜாதி இனம் மொழி ஆகிய்வற்றை முன்னிருத்தி ஓட்டுக்கேட்க கிளம்பிவிடுவார்கள் என்றும் அஞ்சுகிறார்கள். ஏற்கெனவே பெரும் கட்சிகளாக இருக்கும் கட்சிகளை உடைத்து சிறு சிறு கட்சிகளாக ஆக்கிவிடும் என்றும் அஞ்சுகிறார்கள்.

    ஆனால், விகிதாச்சார முறை ஆதரவாளர்கள் பல கட்சி அமைப்புள்ள விகிதாச்சார முறை, பேச்சுவார்த்தையையும், கொடுக்கல் வாங்கலையும் அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். இரண்டு கட்சி ஆட்சி முறை அல்லது இன்றைய தேர்தல் வாக்குமுறை ஆகியவை பேச்சுவார்த்தைகளை தேர்தலுக்கு முன்னால் வைக்கின்றன. பல கட்சிகள் பங்கேற்கும் விகிதாச்சார தேர்தல் முறையில் தேர்தலுக்குப்பின்னால் பேச்சுவார்த்தைகளும் கொடுக்கல் வாங்கல்களும் நடைபெறலாம்.

    மிகவும் தீவிரமான இன மற்றும் மொழி வாதத்தால் பிளவு பட்டிருக்கும் இடங்களில் விகிதாச்சார வாக்குமுறையையே மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை விகிதாச்சார முறைத் தேர்தல் ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக வடக்கு அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் விகிதாச்சார வாக்குமுறையையே மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் மற்றும் இன மொழிப் பிரிவினருக்கும் முழுமையான பிரதிநிதித்துவம் அளிப்பதே அரசியல் நிலைத்த தன்மைக்கும் ஒற்றுமை ஒருங்கிணைப்புக்கும் ஏற்ற உபகரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    —-

    விகிதாச்சார முறை மிகவும் அதிக செலவாகும் பெரிய பிரச்சார வேலையை கட்சிகளிடம் திணிக்கின்றன.

    சில அரசியல் விமர்சகர்கள் விகிதாசார தேர்தல் முறையினால் தொகுதி விரிவுபட்டு , தேர்தல் செலவுகள் அதிகரிக்கும் என்று கவலை தெரிவிக்கிறார்கள். ஒரு நகரவைத் தொகுதியில் ஒருவர் நின்றால் ஒரு சிறியபகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் செய்யலாம். ஆனால் பல வேட்பாளர்கள் போடியிடும் நிலை ஏற்பட்டால் தொகுதியின் பரப்பு அதிகரிக்கப் பட்டு செலவுகளும் அதிகரிக்கலாம்.

    ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் ஆதரவாளர்கள் கூறுவது இது. வேட்பாளர்கள் தம்முடைய வெற்றிவாய்ப்பு உள்ள சிறு பகுதிகளில் பிரசாரம் செய்தால் போதும். அதனால செலவு குறைய வாய்ப்புண்டு.

    —-

    விகிதாசார தேர்தல் முறை சிக்கலானது , வாக்காளர்களைக் குழப்பக் கூடும்.

    விகிதாசார முறையை விமர்சிப்பவர்கள் , புதிய முறையிலான வாக்குச் சீட்டுகள் வாக்காளர்களைக் குழப்பக் கூடும் என்று சொல்கிறார்கள். ஆனால் விகிதாசார முறையை ஆதரிப்பவர்கள், ஏற்கனவே பல மேநாடுகளில் இது வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட தேர்தல் முறையினால் ஏதும் குழப்பமடையவில்லை என்று தெளிவுபடுத்துகின்றனர். வாக்காளர்களிடம் சரியான முறையில் விளக்கினால் எந்தக் குழப்பமும் விளையாது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

    —-

    விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வாக்காளர்கள்- தொகுதி பிரதிநிதி உறவை இது பலவீனப் படுத்தும்.

    பல பிரதிநிதிகளைக் கொண்ட தொகுதி முறையினால், ஒற்றை பிரதிநிதிகள் கொண்ட தொகுதிகளில் இருக்கும் உறவுமுறை இருக்காது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இஸ்ரேல் , நெதர்லாந்து போன்ற நாடுகளில் நாடு முழுதுமே ஒரே தொகுதியாக உள்ளது. பிராந்தியத் தொகுதிகளைப் பயன்படுத்தும் நாடுகளிலும் கூட வாக்காளர்-பிரதிநிதியின் உறவுசிக்கலாகி விடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    விகிதாசாரப் பிரதிநிதி முறையைக் குறித்த இந்த விமர்சனத்தில் சிறிது உண்மை உள்ளது என்று ஒப்புக் கொள்ளத்தக்கதே. விகிதாசாரப் பிரதிநிதி தேர்தல் முறையில் (Choice Voting) சிறு தொகுதிகளாய் உள்ள முறையும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். Mixed Member Proportional Voting இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே உருவாக்கப் பட்டது என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்ட்டுகின்றனர். ஒரு பிரதிநிதி உள்ள சிறு தொகுதிகளைக் கொண்டுள்ள இந்த முறை பிரதிநிதி-வாக்காளர் உறவு முறையை மனதில் வைத்து உருவாக்கப் பட்டது.

    பல பிரதிநிதிகளைக் கொண்ட தொகுதிகள் உண்மையில் பிரதிநிதிகளை அணுக பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறுகின்றனர். ஒரு கட்சியைச் சேர்ந்த நபர் , வேறு கட்சியைச் சேர்ந்த பிரதிநிதியை அணுகத் தயக்கம் காட்டுகிறார்கள். தம்முடைய கட்சியின் பிரதிநிதியும் இருப்பார் எனில் அந்தத் தயக்கம் இருக்காது. இதனால் கொள்கையளவில் வாக்காளர்கள் பிரதிநிதிகளை அணுகித் தம்முடைய பிரசினைகளைக் கூறலாம். வெவ்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே தொகுதியில் இருப்பதால் அவர்களிடையே தொகுதி மேம்பாட்டிற்கு போட்டி நிலவும். இதுவும் தொகுதிக்கே நல்லது.

    —-

    (மீதி அடுத்த வாரம்)

    Series Navigation

    டக்ளஸ் ஜே அமி

    டக்ளஸ் ஜே அமி