ஞாநியின் டைரி

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue


ஒரு நண்பரின் மரணம்

கடந்த இரு வருடங்களாக ஏறத்தாழ தினசரி காலை ஏழு மணிக்கு என்னை வீட்டில் தவறாமல் சந்தித்து வந்த நண்பரின் மரணச் செய்தி ஒரு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வந்தது. எழுத்தாளர் பத்திரிகையாளர் வந்தியத்தேவன் என்கிற நாகராஜனின் மரணம் எங்கள் வீட்டில் உள்ள எல்லாரையும் பல நாட்கள் அவ்வப்போது உலுக்கிக் கொண்டே இருக்கிறது. நக்கீரன், குங்குமம், வளர் தொழில் என்று பல இதழ்களில் எழுதிய, பணியாற்றிய நாகராஜன் (52) திடார் என்று மாரடைப்பால் இறந்தார். நண்பர் ‘மா ‘வும் நாகராஜனும் தினசரி இயற்கை வைத்திய முறை, யோகா, இயற்கை உணவு முறை இவற்றில் கருத்துப் பரிமாற்றமும் பச்சைக் காய்கறிப் பரிமாற்றமும் செய்வார்கள். நானும் நாகராஜனும் பரிமாறிக் கொள்வது அரசியல், இலக்கிய , சாதிய சர்ச்சைகள்.

மத நல்லிணக்கத்துக்காக அவர் எழுதி மன ஓசை இதழில் வெகு காலம் முன்பு வெளியான ஒரு சிறுகதையை நான் 13 வருடங்கள் முன்பு ஜனதா தளப் பிரசாரத்துக்காகக் குறும்படமாக்கினேன். ஒரு கிராமச் சாலையில் அனாதைப் பிணமாகக் கிடக்கும் கிழவியின் பணத்துக்காக எல்லா மதங்களும் சொந்தம் கொண்டாடி கலவரத்தில் ஈடுபடுவதே அவருடைய ‘பிணந்தூக்கிகள் ‘ சிறுகதை.

பின்னர் அதை நாடகமாக்கி ஜனநாயக மாதர் சங்கத்தினருக்குத் தந்தேன். தொலைக்காட்சிக்காக அவர் தயாரித்த ஆவணப்படங்களுக்கு என்னை இயக்குநராக்கினர்.இன்னும் ஓராஅண்டுக்குள் ஒரு திரைப்படத்தை என் இயக்கத்தில் தயாரிப்பது அவ்ருடைய பல கனவுகளில் ஒன்று. இன்னொன்று நாங்கள் இருவரும் துறவிகளாகி ஆசிரமம் அமைப்பது.

பரீக்ஷா நாடகக் குழுவின் வெள்ளி விழாவின்போது நாகராஜனை நான் மேடை நடிகராக்கினேன். அதைத் தொடர்ந்து அவர் தங்கர் பச்சானின் தென்றலில் சிறு பாத்திரத்தில் தோன்றினார். மொழிபெயர்ப்பு, பேட்டிகள் எடுத்தல், மெய்ப்பு திருத்துதல் முதலியவற்றில் திறமையுடன் விளங்கியவர் நாகராஜன். வாழ்க்கையின் சில முக்கியமான ஆண்டுகளை அவர் மதுப் பழக்கத்தினால் தவ்றவிடாமல் இருந்திருந்தால், அவ்ர் பத்திரிகைத்துறையில் எழுத்துத்துறையில் உயர்ந்த இடங்களை நிச்சயம் அடைந்திருப்பார். தன் தவறுகளிலிருந்து தன்னைத்தானே மீட்டுக் கொள்வதற்கான வலிமையும் உந்துதலும் அவ்ரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை.

அவருடைய இன்னொரு சிறப்பு, பெண்ணியம் எதுவும் பேசாமலே நடைமுறையில் வீட்டுப் பணிகள் எல்லாவற்றையும் தான் மேற்கொண்டு பள்ளி ஆசிரியரான மனைவியை நேரத்துக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்பி வைத்து வந்ததாகும். இதை எழுதும் காலை ஏழு மணி வேளையில் பக்கத்தில் வந்து நின்று ‘ இன்னிக்கு என்ன எழுதறீங்க ? ‘ என்று அவர் கேட்பது போன்ற உணர்வு அவர் இறந்ததை நானும் என் வீடும் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதையே காட்டுகிறது. இதற்கு முன்பு இந்த அளவு என்னை உலுக்கிய மரணம் நண்பர் நேயம் வீரபாண்டியனுடையதுதான். அது பற்றி வேறொரு சமயம்.

ஒரு புத்தகத்தின் குறைப்பிரசவம்

ஒவ்வொரு மரணமும் நம்முடைய வாழ்க்கை பற்றிய விமர்சனக் கார்ட்டூன் என்று சொல்லலாம். ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் மரணம் மூன்றாண்டுகள் கழித்து சென்னையில் நினைவு கூரப்பட்டது. ஓவியர் அரஸ் அன்போடும் அனுபவக் குறைவோடும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உதயன் வாழ்ந்த காலத்தில் அவரை ஓரங்கட்டியவர்கள் உட்பட பலரும் பங்கேற்றார்கள். தமிழ் பத்திரிகையுலகில் ஒரே சமயத்தில் ஒரு அலுவலக்த்தில் இரண்டு கார்ட்டூனிஸ்ட்டுகள் இருக்க முடியாது என்ற நிலைமை வலுவாக இருந்து வருகிறது.

கறுமை வண்ணம் அடர்த்தியாக நிறைந்த உதயனின் கார்ட்டூன்கள் தினமணி, நக்கீரன் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. தமிழில் கார்ட்டூனிஸ்ட்டுகள் மிகக் குறைவு. அவர்களிலும் நகைச்சுவையையே பிரதானமாகக் கொள்பவர்களே அதிகம். கோபத்தை கார்ட்டூனில் வடித்த ஒரே தமிழ் கார்ட்டூனிஸ்ட் உதயன்தான். அவருக்குப் பின் அத்தகைய கோபத்தை புதிய கலாச்சாரம், தலித் முரசு இதழ்களின் ஓவியர்களிடம் மட்டுமே காண முடிகிறது. நானும் உதயனும் 1996ல் தினமணியில் ஒன்றாகப் பணி புரிந்தோம். திராவிடக் கட்சிகள் மீது அவருக்கு கடும் வெறுப்பு இருந்தது. தேர்தலில் நம்பிக்கை இல்லாத இடதுசாரிகள் பால் உதயனின் பரிவு எப்போதும் இருந்தது.

உதயன் குடும்பத்துக்கு உதவும் நோக்கத்துடன் அரஸ், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரின் முயற்சியில் ‘ஆங் ‘ என்ற தலைப்பில் உதயனின் கார்ட்டூன்கள் பல தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான் காலச்சுவடு பதிப்புகளின் துல்லியம் இதில் இல்லை. உதயனின் முக்கியமான தினமணி கார்ட்டூன்கள் இல்லை. எந்த கார்ட்டூன் எந்த ஆண்டில் வெளியானது என்ற தகவல் கூட இல்லை.ஒரெ கார்ட்டூன் இரு பக்கங்களில் அச்சாகியிருக்கிறது. ( 99,187)

ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற ஒரு திறமையான தொகுப்பாசிரியர் உதயனுக்கு வாய்க்காமல் போனது மரணத்துக்குப் பிறகும் அவருக்கு ஏற்பட்ட துயரங்களில் ஒன்று. எனினும் அச்சு நேர்த்தியுடன் நல்ல தாளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தின் விலையான 200 ரூபாயில் பாதித்தொகை உதயன் தாயாருக்கும், குடும்பத்துக்கும் கிட்டும் வாய்ப்பு இருப்பதால், வாசகர்கள் நிச்சயம் இதை வாங்க வேண்டும். நக்கீரன் கோபால் வெளியிடப்போவதாக அறிவித்துள்ள உதயன் கார்ட்டூன் தொகுப்பில் ஆங்கில இதழ்கள் உட்பட பல இதழ்களிலும் அவர் வரைந்த கார்ட்டூன்கள் இடம் பெறும் விதத்தில் சலபதி போன்ற ஒருவரிடம் தொகுப்புப் பணியை ஒப்படைப்பது உதயனுக்கு மெய்யான பாராட்டாக அமையும். திருமணம் செய்யாத காரணத்தால் உதயனின் குடும்பத்துக்கு ( தாயாருக்கு) தமிழக அரசின் பத்திரிகையாளர் உதவித்தொகை விதிப்படி தரப் பட மாட்டாது என்ற செய்தி அரசு இயந்திரத்தின் அசட்டு அராஜகத்துக்கு இன்னொரு சாட்சி.

ஒரு புகைப்படக் காரரின் பயம்

பல படைப்பாளிகளுக்கு பணம்தான் பிரச்சினை. புகைப்படமெடுத்தபின் கண்காட்சியாக வைக்கவும் செலவுக்கு பணம் தரவும் ஒரு தொழிலதிபர் தயாராக இருக்கிறார். யாரைப் படம் எடுக்க வேண்டுமோ அவர் இதற்காக நேரம் ஒதுக்கத் தயார். இனி புகைப்படக்காரருக்கு என்ன சிக்கல் ? போய் விதவிதமாக ஜாலியாக படம் எடுத்துவிட்டு வர வேண்டியதுதானே. இல்லை. புதுவை இளவேனிலுக்கு தெனாலி கமல் மாதிரி பயம். படம் எடுக்கப்பட வேண்டிய சுந்தர ராமசாமியின் எழுத்துக்களைப் படித்துத் தொலைத்துவிட்டதால், இளவேனிலுக்கு ஒரே பயமாம். சு.ராவின் ஆகிருதி, பிம்பம் அவரை பயப்படுத்துகிறது. சு.ராவின் வீட்டுக் கட்டடம் முதல் சாப்பாட்டு முறை, வீட்டில் வலம் வருபவர்கள் வரை எல்லாமே இளவேனிலை மிரள வைக்கின்றன. இந்த பயங்களை மீறி எப்படி சு.ராவை படம் பிடித்தார் என்று சென்னையில் அவர் நடத்திய சு.ரா புகைப்படக் கண்காட்சியில் இளவேனில் பேசியதைக் கேட்டால் அவர் ஏதோ வைல்ட் லைஃப் போட்டோகிராஃபியில் ஈடுபட்டது போலத் தோன்றும்.தேவையற்ற பயங்கள். சு.ராவைப் படித்துத் தொலைத்துவிட்டதால் பயந்து சாகிற ஒரு முடி திருத்துபவரிடம் ஷேவிங் அண்ட் கட்டிங்குக்கு செல்ல நேர்ந்தால் சு.ராவின் கதி என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே பயமாயிருக்கிறது.

படங்கள் நேர்த்தியானவை. கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு நிகரான உறுத்தலற்றவையாக கலர் படங்களும் இருப்பது இளவேனிலின் திறமைக்கு அடையாளம். சு.ராவை இளவேனில் எடுத்துள்ள படங்களைப் பார்த்தால் நல்ல நடிகராக பரிமளிக்கும் வாய்ப்பு சு.ராவுக்கு உள்ளது. ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹ்லாணி பாணி படங்களில் நடிக்க வைக்கலாம். நிஹ்லானி சு.ராவை சந்தித்திருந்தால் நிச்சயம் தேவ் படத்தில் முதல்வர் நரேந்திர மோடி பாத்திரத்துக்கு சு.ராவை அணுகியிருப்பார்.

ஒரு திரைப்படத்தின் மரணம்

கோவிந்த் நிஹ்லானியின் ‘தேவ் ‘ என்ற இந்தித்திரைப்படம் பார்த்தேன். ஒரு மோசமான படம் எடுக்கப்படும்போதே செத்துவிடுகிறது. ஒரு நல்ல படம் எப்போது சாகிறது ? அதைப் பார்க்க ஆளில்லாதபோது. சென்னையில் தேவ் படத்தைப் பார்க்க அதன் கடைசி நாளன்று என்னைச் சேர்த்து மொத்தம் இருபது பேர்தான் இருந்தார்கள். இந்தி வர்த்தகப் படக் கதை வடிவத்திற்குள்ளாகவே எடுக்கப்பட்டிருந்த போதும் இதற்கு முந்தைய நிஹ்லானி படங்கள் அளவுக்கு சிறப்பாக இல்லாத போதும், தேவ் ஒரு முக்கியமான படம்.

குஜராத்தில் சங்கப் பரிவாரங்கள் ஆட்சியில் இருந்து கொண்டு நடத்திய மத வெறிப் படுகொலைப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். ஒரு முதலமைச்சரும் காவல் துறை அதிகாரியும் மத வெறியர்களாக இருந்தால் மக்கள் கதி என்ன என்பதைச் சொல்கிறது. சட்டப்படி நடந்து கொள்ள விரும்பும் நேர்மைாயான அதிகாரியாக அமிதாப் பச்சனும், முதல்வரின் எடுபிடி அதிகாரியாக ஓம் பூரியும் நெருக்கமான நண்பர்கள் பாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முஸ்லிம் இளைஞர்கள் எப்படி வன்முறை தீவிர வாதத்துக்குள் இழுக்கப்படுகிறார்கள், அதிலிருந்து வெளி வருவது எப்படி, சஹீரா ஷேக் போல சட்டத்தின் மீது நம்பிக்கையுடன் எப்படி மத வாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது என்றெல்லாம் படம் நுட்பமாகச் சொல்கிறது.

நிஹ்லானியின் துரோக் கால் படத்தை தமிழில் கமல் குருதிப்புனலாக்கியது போல இதை செய்யமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். இதில் கமல் பாணி சாகச ஹீரோ பாத்திரத்துக்கு வாய்ப்பு இல்லை. அமிதாபுடன் சில ஹிந்தி படங்களில் நடித்த ரஜினி இந்தப் படத்தைப் பார்த்து எப்படி கெளரவமான முதியவர் பாத்திரங்களில் நடித்தும் கூட ரசிகர் அபிமானத்தைப் பெறலாம் என்று கற்றுக் கொள்ளலாம். தற்போது ஹிந்தியில் அமிதாப் வசம் 12 படங்கள் இருக்கின்றன. அமிதாபுக்கு வயது 62. விஜய் டி.வி அதிரடி ஆக்ஷன் படங்களை சுவையான சென்னைத் தமிழில் தருவது போல, மாதம் ஒரு படமாவது தேவ் போன்ற படங்களைத் தமிழில் ஒளிபரப்புவது பற்றி யோசிக்க வேண்டும்.

ஒரு அதிகார நாடகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. கலைஞர் கருணாநிதிக்கும் தயா நிதி மாறனுக்கும் நிகழ்ச்சி தொடர்வது தி.மு.க நலன்களுக்கு எதிரானது என்ற கருத்து ஏற்பட்டுவிட்டதே காரணம் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. வெளி நாட்டு முதலீடு உள்ள சேனல்கள் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்ற விதியை மீறியதற்காக ஸ்டார் ஒளிபரப்பையே நிறுத்திவிட அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது பற்றி டெல்லியில் ஸ்டார் டி.வி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாம். வியாபாரிகளுக்கு எப்போதும் கற்பூர மூளைதானே. நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. கடைசி நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்களான பத்திரிகையாளர்கள் ராம்கியும் நானும், கூட்டுக் குடும்பம், தனிக் குடித்தனம் முதலியவற்றின் சாதக பாதகங்களை அலசி மகிழ்ந்தோம்.

ஒரு அதிகாரம் பற்றிய நாடகம்

எந்த ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பல்லக்கு தூக்கியாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பல்லக்கு தூக்கிக் கொண்டே தான் இருந்தாகவேண்டும். சுமையைத் தூக்கத் தூக்க சுமை குறையும் என்று அவர்கள் நம்பவைக்கவும்படுவார்கள். இந்தக் கருத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் கலாப்பூர்வமாகவும் சொல்லும் நாடகம் ‘பல்லக்குத் தூக்கிகள் ‘.

நாடகக்காரர் அ.ராமசாமியின் இந்த நாடகப் பிரதி சு.ராவின் இதே தலைப்புள்ள சிறுகதையிலிருந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. சு.ராவின் கதையில் பல்லக்குத் தூக்கிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறவன் வேறு. அ.ராமசாமியின் நாடகத்தில் அந்தப் பார்வை வேறு. இதுவே இரு படைப்புகளையும் வெவ்வேறாக்கிவிடுகிறது. பரீக்ஷா, யவனிகா, முத்ரா, சுதேசிகள் என்று பல நாடகக்குழுக்கள் பல முறை நடத்தியுள்ள இந்த நாடகம் சு.ரா புகைப்படக் கண்காட்சியையொட்டி அ.ராமசாமி இயக்கத்தில் புதுச்சேரி நாடகப்பள்ளி நடிகர்களால் நடத்தப்பட்டது. நாடகப் பள்ளிகளுக்கே உரிய உடல் மொழி அக்கறையினால், பேச்சு மொழி பின்தங்கியது எனினும், முதல் முறை இந்த நாடகத்தைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் நிறைவான அனுபவமாக இருந்திருக்கும்.

ஒரு மகிழ்ச்சிச் செய்தி

அதிகாரமும் அரசியலும் ஒரு சில குடும்பங்களுக்காக மற்றவர்கள் பல்லக்கு துக்கிகளாக இருக்கும் நிலையை ஏற்படுத்தும் சூழலில், படைப்பாளிகள் குடும்ப அரசியலைப் பேசாமல், குடும்பத்துக்குள் இருக்கும் அரசியலை ஆராய்வதுதானே முறை ? எழுத்தாளரும், தீம்தரிகிட தொடரெழுத்தாளருமான நண்பர் ச.தமிழ்ச்செல்வன் ‘ ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் ‘ என்ற வித்யாசமான நூலை எழுதி முடிக்கும் தருவாயில் இருப்பதாக அறிகிறேன். இந்த நூலைப் பெண்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த நூலைப் படித்துப் பார்க்கவும் அனுபவ ரீதியாக யோசனைகள் சொல்லவும் நண்பர் நாகராஜன் இல்லையே என்பதுதன் வருத்தமாக இருக்கிறது.

தீம்தரிகிட ஜூலை 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி