இன்னொரு ரஜினிகாந்த் ?

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஞாநி


அரசியலுக்குள் நுழைய முயற்சித்து அவமானப்பட்டுப் போயிருப்பவர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது பரபரப்பான அரசியல் விமர்சனங்களைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் விரோதத்தை சந்திக்கத் தொடங்கியிருப்ப்பவர் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் இன்னொரு ரஜினிகாந்த்தா ?

ஆமாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.

நடிகராக அறிமுகமான புதிதில் விஜயகாந்த், அப்போதுதான் பிரபலமாகி வந்த ரஜினி ஸ்டைலைப் பின்பற்றி நடிக்கத் தொடங்கினார். பெயரையும் விஜயராஜிலிருந்து விஜய்காந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். நடிகர் மோகனுக்கு புவர் மேன்ஸ் கமல் என்று பெயர் இருந்தது போல விஜய்காந்த்தும் புவர் ப்ரொட்யூசர்ஸின் ரஜினியாக இருந்தார். ஆரம்ப கட்டங்களில் ரஜினியை விட விஜய்காந்த்தே சாதாரண மக்களுக்காகப் போராடும் கோபக்கார ஆங்ரி யங் மேன் பாத்திரங்களை அதிகமாக ஏற்றிருக்கிறார். ரஜினி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் அரசியலில் நுழைவதற்கான ஆயத்தமாகக் கருதப்பட்டது போலவே விஜய்காந்த்தும் அரசியல் கமெண்ட்டுகள் செய்து வந்திருக்கிறார்.

ரஜினியைப் போலவே விஜய்காந்த்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடன்தான் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது.

உண்மையில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் இத்துடன் முடிந்து விடுகின்றன. விஜய்காந்த் இன்னொரு ரஜினிகாந்த் அல்ல என்பதே உண்மை.

விஜய்காந்த்தின் ரசிகர் மன்ற அமைப்பு என்பது ரஜினியுடையது போன்றது அல்ல. அதை விடக் கட்டுக் கோப்பான நிர்வாக அமைப்பு உடையதாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினிக்கு நேரடி தொடர்பு மன்றங்களுடன் இல்லை. சத்யநாராயணா மூலமே அது இயக்கப்பட்டது. விஜய்காந்த் அடிக்கடி மாவட்ட அளவிலான ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்பின் மூலம் தொடர்பு வைத்திருக்கிறார். மன்றம் ஏற்கனவே அரசியல் அனுபவத்தை ஓரளவு பெற்றிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் விஜய்காந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் ஆங்காங்கே தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறார்கள்.

விஜ்ய்காந்த்தின் அரசியல் என்பது என்ன. இமேஜ் என்பது என்ன ?

இரண்டுமே ரஜினியிடமிருந்து மாறுபட்டவைதான். விஜய்காந்த் தன்னை ஒருபோதும் இந்துத்துவா, பி.ஜே.பி ஆதரவாளனாக வெளிப்படுத்தியதில்லை. காங்கிரஸ் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தபோதும், தி.மு.கவினரைப்போல தமிழ், தமிழன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் தன்னை தி.மு.க காரனாக அடையாளம் காட்டுவதை தவிர்த்திருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், மூப்பனாரை ஆதரித்த காங்கிரஸ் அனுதாபி.

சூழலின் கட்டாயத்தால் ரஜினி காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் கூட, தமிழுணர்வுள்ளவராக ஏற்கப்பட்டவரல்ல. விஜய்காந்த்துக்கு பலமாக உள்ள ஒரு இமேஜ் தமிழ் உணர்வுள்ள நடிகர் என்பதாகும். அவருடைய தாய்மொழி தெலுங்கு என்று எதிரணி பிரசாரம் செய்தாலும், அது எடுபடக்கூடியதல்ல. எம்.ஜி.ஆர் மலையாளி என்பதை தமிழர்கள் பொருட்படுத்தாமல், அவ்ரை தமிழ் நடிகராகவே பார்த்தது போன்ற வசதிதான் விஜய்காந்த்துக்கும் இருக்கிறது. எம்.ஜி.ஆரைப் போலவே விஜய்காந்த்தும் பிற மொழிப்படங்களில் நடிப்பதில்லை.

விஜய்காந்த்தின் சினிமா ஒன்றும் முற்போக்கானதல்ல.

ரஜினி, சரத் குமார் வகையறாக்களின் படங்கள் போலவே பிற்போக்கான கருத்துக்களை உடையவைதான். ஆரம்பகாலத்தில், சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை போன்று தனி நபர் சாகசக் கம்யூனிச பூச்சுடைய படங்களில் நடித்தார். அடுத்த கட்டத்தில் கிராமிய அப்பாவி இளைஞனின் நெகிழ்ச்சியான காதல் கதைகள். பின்னர் வயதாக ஆக, நிலப்பிரபுத்துவக் கதைகளில், ஊருக்கு நல்லது செய்யும் பணக்கார நிலச்சுவான்தார் – நாட்டாமை, ஜாதித் தலைவர் பாத்திரங்களை ஏற்றார். முஸ்லிம் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கும் சினிம பார்முலா தேசபக்தியில் போலீஸ்- ராணுவ அதிகாரிகள் பாத்திரங்களில் சில படங்கள். சற்று வித்யாசமானது என்று கருதப்படும் ஒரே படம் லஞ்சத்தை எதிர்த்துப் போராடும் இளைஞர் படையை உருவாக்கும் தீவிரவாதக் கல்லூரி ஆசிரியராக நடித்த ரமணா. இவை எதிலும் விஜய்காந்த்தின் அரசியல் பார்வை தெளிவாக விவரமாக வெளிப்பட்டுவிட்டதாகக் கொள்ள முடியாது.

சுமார் இருபதாண்டுகள் முன்னர் வெளியான ஆபாவாணனின் ஊமை விழிகள் படம் விஜய்காந்த் தன்னை நல்ல நடிப்புத்திறமை உள்ளவராக வெளிப்படுத்திக் கொண்ட படம் என்று அது வெளியானபோது கருதப்பட்டது. அந்தப்படத்தில் விஜய்காந்த்த் ஏற்ற போலீஸ் அதிகாரி பாத்திரத்திற்குத் தமிழ்ப் பெயர் கிடையாது. காமராஜருக்கு காங்கிரசாரால் தரப்பட்ட பட்டங்களில் ஒன்றான தீனதயாளன் என்பதே விஜய்காந்த்தின் பாத்திரப் பெயர். படத்தில் இரு வில்லன்கள்., ஒரு பாத்திரம் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஊழல் அரசியல்வாதி (மலேசியா வாசுதேவன் நடித்த நினைவு). இன்னொன்று எம்.ஜி ஆரை நினைவுபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட, பெண் பித்து பிடித்த கவர்ச்சியான வில்லன். இரு வில்லன்களுமாக சீரழிக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற தீனதயாளனுக்கு உத்வேகம் தருபவர் கதர் சட்டை அணிந்த விடுதலைப் போராட்ட தியாகி ( விசு). உடன் ஒத்துழைப்பவர் நேர்மையான பத்திரிகையாளர் ( ஜெய்சங்கர்). அன்புக்குரிய மனைவி கொல்லப்பட்ட பிறகும் போலீஸ் அதிகாரி தீனதயாளன், பத்திரிகைத் துறையினர் உதவியுடன் இரு வில்லன்களையும் வீழ்த்துவதுதான் கதை.

இதுவரை விஜயகாந்த்தின் படங்கள், ரசிகர் மன்ற நடவடிக்கைகள், விஜயகாந்த்தின் அவ்வப்போதைய பேட்டிகள், அறிக்கைகள் எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் அறிகுறிகளைத் தொகுத்துப் பார்த்துச் சொல்வதானால், விஜயகாந்த் தனக்கு உருவாக்கி வைத்துள்ள இமேஜ்படி அவர் தமிழ் உணர்வாளர். ஆனால் திராவிடக் கட்சிக்காரர் அல்ல. இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. கடவுள் நம்பிக்கை உடையவர். அழைத்தபோது சங்கர மடத்துக்கு சென்று வந்து அது பற்றி பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தவர். ஆனால் பி.ஜே.பி ஆதரவாளரோ, இந்துத்துவ வாதியோ அல்ல.

விஜய்காந்த் போன்ற ஒரு நடிகருக்கு எப்படிப்பட்ட நிர்வாகத்திறமை இருக்க முடியும் ? ரஜினிக்கு பெரும் நிர்வாகத் திறமைகள் எதுவும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட அவரால் நேர்த்தியாக நடத்த முடிந்ததில்லை.

விஜய்காந்த்தின் ரசிகர் மன்ற அமைப்பு அரசியல் கட்சி போல கட்டமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்காந்த்துக்கு சொந்தமாக பொறியியல் கல்லூரி நடக்கிறது. அது பற்றி இதுவரை பெரிய புகார்கள் எதுவும் எழவில்லை. விஜய்காந்த்தின் நேரடி நிர்வாக அனுபவத்துக்கு ஒரே சாட்சி நடிகர் சங்கம்தான். அதன் தலைவராக விஜய்காந்த் பலதரப்பட்ட பார்வையுடைய நடிகர்களை அரவணைத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார். காவிரி பிரச்சினைப் போராட்டத் தகராறுகளில், பாரதி ராஜா ஒரு புறமும், ரஜினி ஒரு புறமுமாக விஜய்காந்த்துக்கு நெருக்கடிகளை உருவாக்கிய போதும், அவற்றை அவ்ர் வெற்றிகரமாக சமாளித்திருக்கிறார்.

இந்த இமேஜ், இந்த அனுபவம் எல்லாம் நிச்சயம் அரசியல்ரீதியாக ரஜினிகாந்த்துடன் ஒப்பிடும்போது விஜயகாந்த்தின் நிலைமை ரஜினியை விட மேலானதாகவே இருக்கிறது. அதனல் ரஜினியை அரசியல் செல்வாக்கு அற்றவர் என்று எளிதில் அம்பலப்படுத்தி வெற்றி கண்டது போல விஜய்காந்த்தையும் செய்துவிடலம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைமை போடும் கணக்கு முற்றிலும் சரியான கணக்கு அல்ல. ( இதழ் அச்சாகும் வேளையில் பா.ம.க தன் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பது ஓரளவு தப்புக் கணக்கை உணர்ந்திருப்பதன் அடையாளம்தான்.)

பா.ம.கவின் வன்முறைக்கு பயந்து ரஜினி ரசிகர்கள் சிதறி ஓடியது போல, விஜய்காந்த்தின் ரசிகர் மன்றம் ஓடவில்லை. பதில் தாக்குதல் நடக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். ரஜினிக்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து எழுந்த குரல்களை விட அதிகமான குரல்கள் விஜய்காந்த்துக்கு எழுந்துள்ளன.

ஆனால் விஜய்காந்த்துக்கு தமிழக அரசியலில் பா.ம.கவுடன் மோதலில் தொடங்கி தன்னை ஒரு அரசியல் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? அதற்கான அரசியல் வெற்றிடம் ஏதும் காலியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

தமிழக அரசியலில் இன்று தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் சரியான மாற்று சக்தி ஒன்று உருவானால், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தலைமை அதற்கு இருக்குமானால், நிச்சயம் மூன்றாவது அணி வளர இடமிருக்கிறது. ஓட்டு போடாத 42 சதவிகிதம் பேரில் கணிசமானவர்கள் ஓட்டு போடாமலிருப்பதற்கான காரணங்களில் ஒன்று தி.மு.க, அ.தி.மு.க இரண்டின் மீதும் உள்ள வெறுப்பும் அலுப்புமாகும்.

இந்த வெற்றிடத்தை தன் தலைமையின் கீழ் காங்கிரசால் நிரப்பிவிட முடியுமென்று மூப்பனாருக்கும், சிதம்பரத்துக்கும், வாழப்பாடிக்கும் , இளங்கோவனுக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆசையும் நம்பிக்கையும் இருந்ததுண்டு. அந்த வெற்றிடத்தை இன்னும் பத்தாண்டுகள் கழித்தாவது தான்தான் நிரப்பப்போவதாக பி.ஜே.பி இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறது.

ரஜினிகாந்த் உதவியுடன் இந்த ஆசைகளை சாதித்துவிட முடியுமென்று காங்கிரசின் சிதம்பரமும், பி.ஜே.பியின் சோவும் நம்பி வந்தார்கள். ரஜினி அரசியல் சக்தி அல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் விஜய்காந்த்தை பி.ஜே.பியோ, பி.ஜெ.பியை விஜய்காந்த்தோ பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு. சோவும் சங்கர மடமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் கூட விஜய்காந்த் உடன்படும் வாய்ப்பு குறைவுதான். ( ரஜினியும் விஜய்காந்த்தும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சில வருடங்கள் முன்பு ஜயெந்திரர் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.)

காங்கிரஸ் சார்பு, உணர்வு உடையவரான விஜய்காந்த்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளுமா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி. ரஜினிகாந்த்துக்கு பதில் புவர் ப்ரொடியூசரின் ரஜினியாக விளங்கிய விஜய்காந்த், தமிழக அரசியலிலும் புவர் ப்ரொட்யூசராக இருக்கும் காங்கிரசின் ரஜினியாகத் திகழ கணிசமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் தான் கிங் ஆகவேண்டாம். கிங் மேக்கராக இருந்தாலே போதுமானது என்ற கருத்து விஜய்காந்த்துக்கு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். (ஏனென்றால் ஏற்கனவே காங்கிரசில் ஏராளமான கிங்குகளும் ஜோக்கர்களும் இருக்கிறார்கள்.) அவரை தற்போது கடுமையாகக் எதிர்க்கும் பா.ம.க நிறுவனர் ராமதாசின் வழியை அவர் பின்பற்றலாம். தான் எந்தப் பதவியிலும் அமராமலே, சர்வ வல்லமையுடன் அதிகாரம் செலுத்தும் வழி இது.

விஜய்காந்த்துக்கு அரசியல் அபிலாஷைகள் நிஜமாகவே இருக்குமானால், அவருக்குள்ள ஒரேவழி, தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் மாற்றாக காங்கிரசை தமிழ் நாட்டில் வளர்ப்பது ஒன்றுதான். இதை நிச்சயம் அவர் காங்கிரசில் சேர்ந்து செய்ய முடியாது. மாற்று அரசியலுக்கான தனி இயக்கமாக தன் இயக்கத்தை வளர்த்துவிட்டு, தேர்தல் சமயத்தில் காங்கிரசுடன் உடன்பாட்டுக்குச் செல்வதுதான் சிறந்த வழி. தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் உடனடியாக் விஜய்காந்த்துடன் உறவு கொள்ள இயலாது என்பதால், அதுவே உகந்தது.

ஆனால் தி.மு.க, அ.தி.மு.க,பா.ம.க இவற்றுக்கெல்லாம் மாற்று அணியை விஜய்காந்த் உருவாக்க வேண்டுமானால், அதற்கு இப்போதைக்கு அவருக்குள்ள ஒரே பலம் அவருடைய சினிமா பாப்புலாரிட்டியும் ரசிகர் மன்ற அமைப்பும்தான். இது கணிசமான் பலம் என்றாலும் இது போதாது.

தலித் அமைப்புகளையும் கட்சிகளையும், இடதுசாரிக் கட்சிகளையும், சிறுபான்மையினர் அமைப்புகளையும் , மிக முக்கியமாக பெண் வாக்காளர்களின் நம்பிக்கையையும் திரட்டினால் மட்டுமே இது சாத்தியம்.

நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் பெற்ற அனுபவம் இதற்கெல்லாம் விஜய்காந்த்துக்கு உதவலாஅம். ஆனால் மக்கள் நம்பிக்கையைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு தன் அரசியல் பார்வை என்ன என்பதை தெளிவாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

இப்போதைக்கு விஜய்காந்த் வெளிப்படுத்தியிருப்பதெல்லாம் இலாகா விவகாரத்தில் தி.மு.க காட்டிய

பேராசைப் போராட்டம் பற்றியும் பா.ம.க வின் பின்கதவுப் பதவி அரசியல் பற்றியுமான விமர்சனம் மட்டும்தான்.

அ.தி.மு.க பற்றிய மெளனம், விஜய்காந்த்-பா.ம.க மோதலுக்குப் பின்னால் அ.தி.மு.க சக்திகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகத்துக்கு இடமளித்துள்ளது. இந்த சந்தேகம் உண்மையானால், விஜய்காந்த் அரசியலில் எஸ்.எஸ்.சந்திரனை விட அதிக உச்சங்களை அடையும் வாய்ப்பு கிடையாது. இன்னொரு ராதா ரவியாகிவிடுவார்.

மூன்றாவது அணிதான் விஜய்காந்த்தின் நிஜமான அரசியல் ஆசை என்றால், நிச்சயம் அவர் ரஜினிகாந்த் கதியை அடைய மாட்டார். எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஆக முடியாவிட்டாலும், தி.மு.கவில் அண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரசுக்கு விஜய்காந்த் விளங்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.

சட்டம் ஒரு இருட்டறை என்பது விஜய்காந்த்தின் முதல் வெற்றிப்படம்.

அரசியலும் ஒரு இருட்டறைதான். அதில் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்தான் அரசியல்வாதியின் கையில் இருக்கும் விளக்கு.

மக்களின் முட்டாள்தனங்களைப் புரிந்துகொண்டு ஏமாற்றும் ஆற்றல்தான் அரசியல்வாதியின் கையில் இருக்க வேண்டிய விளக்கு என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். தான் எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறார் என்று பாத்திரத் தேர்வை செய்ய வேண்டிய தருணம் விஜய்காந்த்துக்கு வந்திருக்கிறது.

—-

தீம்தரிகிட ஜூலை 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி