ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

சோதிப் பிரகாசம்


‘இந்த நாட்டிலே —-

பேசுவதற்கு உரிமை இல்லை;

எழுதுவதற்கு உரிமை இல்லை;

மனித உரிமைகள் எதுவும் இல்லை! ‘

ஓங்கிக் கத்திக் கொண்டு இருந்தான் அறிவாளன் —- அறிவைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருபவன்!

அவனது கூச்சலைக் கேட்டுக் கண் விழித்த பாமரனுக்குக் கோவம் வந்தது.

‘என்னத்தைப் பேசிக் கிழித்து விடப் போகிறான் இவன் ? இவன் பேசுவதாலும் எழுதுவதாலும் எனது வயிறு நிறைந்து விடப் போகிறதா ? அல்லது ஒரு வேலைதான் எனக்குக் கிடைத்து விடப் போகிறதா ? ‘

எதிர்க் குரல் எழுப்பினான் பாமரன்!

அறிவாளனுக்குக் கோவம் வந்து விட்டது.

‘என்ன கேட்டாய் நீ ? வேலையா கேட்டாய் ? உனக்கு வேலை வேண்டும் என்று நீ கேட்கின்ற உரிமையை உனக்கு யார் கொடுத்தது ? ‘

பாமரன் சிரித்தான்.

‘வாய் இருக்கிறது கேட்கிறேன். நான் பேசுவதற்கு யார் எனக்கு அனுமதி தர வேண்டும் ? ‘

இப் பொழுது அறிவாளன் சிரித்தான்.

‘சட்டம் தெரியுமா, உனக்கு ? சட்டத்தின் அனுமதி இல்லாமல் நீ பேசிட முடியுமா ? ‘

பாமரன் இன்னும் சத்தமாகச் சிரித்தான்.

‘நான் பேசுவதற்குச் சட்டம் வேண்டுமா ? எனக்குச் சட்டம் இடுவதற்கு நீ யார் ? உன் சட்டங்கள் இல்லாத காலத்தில் வாய் திறந்து யாரும் பேசியது இல்லையா ? ‘

அறிவாளன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தான்.

உண்மைதான்! ஒருவன் பேசுவதை அனுமதிப்பதற்கும் தடுப்பதற்கும் எவன் சட்டம் போட முடியும் ?

தான் படித்தது திடிரென்று அவன் நினைவுக்கு வந்தது.

‘ஏ, பாமரனே, உனக்குத் தெரியுமா, உன் கையை நீ அசைத்துக் கொள்ளும் உரிமை கூட என் மூக்கு வரைக்கும்தான் உனக்கு உண்டு என்று ? ‘

அறிவாளன் தனக்குள் தானே பெருமைப் பட்டுக் கொண்டான். வெள்ளைக் காரன் நாட்டில் இருந்து கறுப்புக் காரன் நாட்டிற்கு இறக்குமதி ஆகி இருந்த ஒரு கருத்து இது. இதை எதிர்த்துப் பாமரன் எதுவும் பேசிட முடியாது என்று அவன் நம்பினான்.

பாமரன் இப் பொழுது ஓங்கிச் சிரித்தான்.

‘யாரடா இவன்! நான் கை வீசும் இடத்திற்குள் இவன் ஏன் தன் மூக்கை நுழைக்க வேண்டும் ? ‘

இந்தப் பாமரனின் கேள்விக்குக் கூட தன்னால் பதில் சொல்ல முடிய வில்லையே என்று அறிவாளனுக்கு வருத்தம் ஏற்பட்டு விட்டது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தான்.

‘கை அசைக்கிறேன் என்று என் மூக்கில் நீ ஓங்கிக் குத்தினால். . .

வாய் இருக்கிறது என்று என்னை நீ வசை பாடினால் . . . ‘

பாமரன் கொஞ்சமும் யோசிக்க வில்லை; பட்டென்று பதில் சொன்னான்:

‘உன் மூக்கில் நான் குத்தும் போது அதற்கு நீ பரிகாரம் தேடிக் கொள்!

நான் பேசுவது பொய் என்னும் போது என் வசையை நீ தண்டித்துக் கொள்!

அதற்கு முன் —-

உன் மூக்கில் நான் குத்தி விடுவேனோ என்று பயந்து கொண்டு என் கைகளை நான் கட்டி வைத்துக் கொண்டு இருக்க முடியாது!

என் பேச்சு உனக்கு வசையாகத் தெரியலாமோ என்று பயந்து கொண்டு என் வாயை நான் மூடி வைத்துக் கொண்டு இருக்க முடியாது!

மீண்டும் நான் சொல்கிறேன்:

என் மூளை; என் கருத்து; என் வாய்; என் பேச்சு!

என் வாயைக் கட்டிப் போடுவதற்கு எந்தச் சட்டத்திற்கும் உரிமை இல்லை. ‘

பாமரன் சொல்வது சரிதானே!

அவன் கருத்து; அவன் பேசுகிறான்.

இதில் இன்னொருவன் யார், அவன் பேச்சை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் ?

அறிவாளன் தீவிரமாகச் சிந்தித்தான்; பின்னர் ஓங்கிக் கத்தினான்:

‘பேச்சு உரிமை என்பது இயற்கை உரிமை;

எந்தச் சட்டமும் தடுத்திட முடியாத தனி மனித உரிமை;

எந்தச் சமுதாயத்திற்கும் —-

எந்தக் கொம்பனுக்கும் —-

இதற்குக் குறுக்கே வருவதற்கு உரிமை இல்லை. ‘

திடுக்கிட்டுக் கண் விழித்த அம்பேத்கர் தமது நெற்றிக் கண்ணை மெல்லத் திறந்தார்; சுட்டு எரிப்பதைப் போல அவனைப் பார்த்தார்.

4-11-1948 அன்று இந்திய அரசமைப்புப் பேரவையில் அம்பேத்கர் பேசியது இதுதான்:

‘அடிப்படை உரிமைகள் முழுமை ஆனவை என்பது சரி அல்ல. . .

ஏனென்றால் சட்டம் தருகின்ற பரிசுதான் அடிப்படை உரிமைகள்!

அரசு தருகின்ற பரிசுதான் அடிப்படை உரிமைகள் என்பதால், அரசு அவற்றைக் கட்டுப் படுத்திட முடியாது என்று நாம் கூறி விட முடியாது. ‘

அம்பேத்கரின் குரலா இது!

அல்லது ஓர் ஆண்டையின் குரலா ?

அம்பேத்கரின் குரல், ஓர் ஆண்டைச் சாதிக் காரன் குரல் போல இங்கே ஒலித்திட வில்லையா ?

அடிமைச் சாதிக் காரன் உழைப்புக்கு ஆண்டைச் சாதிக் காரன் கூலி கொடுப்பது இல்லை.

ஏனென்றால், கூலி கேட்கும் உரிமை அடிமைச் சாதிக் காரனுக்கு இல்லை!

ஆண்டை கொடுப்பதை வாய் பொத்தி வாங்கிக் கொள்ள வேண்டும் அடிமை!

ஏனென்றால், அடிமையின் உழைப்புக்கு ஆண்டை கொடுப்பது கூலி அல்ல; பரிசு!

அடிமைச் சாதிக் காரனுக்கு உரிமைகள் கிடையாது.

ஏனென்றால், அவனிடம் உள்ளவை அனைத்தும் ஆண்டைச் சாதிக் காரன் அவனுக்கு அள்ளிக் கொடுத்து இருக்கின்ற பரிசுகள்!

ஆண்டைச் சாதிக் காரன் ஊற்றுகின்ற கூழைத்தான் அடிமைச் சாதிக் காரன் குடித்திட வேண்டும்.

ஆண்டைச் சாதிக் காரன் உடுத்திக் கிழித்த கந்தலைத்தான் அடிமைச் சாதிக் காரன் உடுத்திட வேண்டும்.

ஆண்டைச் சாதிக் காரனின் மாளிகைக்கு அப்பால் வெகு தொலைவில்தான் அடிமைச் சாதிக் காரன் ஓட்டைக் குடிசையில் ஒடுங்கிக் கிடந்திட வேண்டும்.

அடிமைச் சாதிக் காரன் —-

குடிப்பது கூழாக இருந்தாலும்,

உடுப்பது கந்தையாக இருந்தாலும்,

ஒடுங்குவது குடிசையாக இருந்தாலும்,

அத்தனையும் ஆண்டைச் சாதிக் காரன் அவனுக்கு அளிக்கின்ற பரிசுகள்!

எத்துணை விலை மதிப்பு அற்ற பரிசுகள் இவை!

ஆண்டை–மனத்தின் தரத்தினைத்தான் அவன் அளிக்கின்ற பரிசுகள் எவ்வளவு துல்லியமாக நமக்கு எடுத்துக் காட்டி விடுகின்றன!

ஏன், அடிமைச் சாதிக் காரனின் காதல் கூட ஆண்டைச் சாதிக் காரன் காலடிக்குள் கசங்கிப் போய்க் கிடந்திட வில்லையா ?

இதனால்தானே,

‘நான்

எச்சில் கிண்ணங்களை

இரகசியமாக ருசி பார்க்கும்

அடிமை இனத்தவன்தானே! ‘

என்று

ஆண்டையின் சுகங்களைத் திருட்டுத் தனமாகச் சுவைத்து வந்த அடிமைகளின் அவல நிலையினை கவிஞர் இன்குலாப் படம் பிடித்துக் காட்டிட நேர்ந்தது!

இங்கே,

ஆண்டைச் சாதியின் இடத்தில் அம்பேத்கர்!

அடிமைச் சாதியின் இடத்தில் குடி மக்கள்!

ஆனால்,

அம்பேத்கரோ அடிமைச் சாதிகளின் தலைவர்!

அடிமைச் சாதிகளின் விடுதலைக்குத் திசை காட்டும் வழி காட்டி!

இந்தியாவின் ஆண்டைச் சாதிக் காரர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்!

அடிமைச் சாதிக் காரர்களின் தலைவனைக் கொண்டே அவர்களை அடக்குவது எப்படி என்னும் தந்திரம் தெரிந்தவர்கள் அவர்கள்!

காய்களை எப்படி நகர்த்துவது என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன!

பேச்சு உரிமை என்பது யாரும் மீறிட முடியாத இயற்கை உரிமை என்றான் ஈரோப்பியன்; அது பிறப்பு உரிமை என்றான் அமெரிக்கன்!

இங்கே அம்பேத்கர் கூறுகிறார் —-

அரசு தருகின்ற பரிசு அது வென்று!

இதனால்தான், தந்தையின் அரசு கொடுத்த பரிசுகளை மகளின் அரசு பிடுங்கிக் கொண்டது போலும்!

உயிர் வாழ்கின்ற உரிமை கூட குடி மக்களுக்கு இல்லை என்று அவசர நிலைக் காலத்தில் வாதிட வில்லையா, இந்திரா அம்மையார் ?

அரசு என்பது என்ன, உரிமைகளைப் பரிசாக வழங்கும் புரவலனா ?

1-12-1948 அன்று அம்பேத்கரின் குரலுக்கு எதிர்க் குரல்கள் கிளம்பின —- அரசமைப்புப் பேரவையில்!

‘அயலவன் ஆட்சிக் காலத்தில் நாம் அனுபவித்து வந்த கருத்துச் சுதந்தரத்தை விட அதிகமான உரிமை எதுவும் நமது அரசமைப்புச் சட்டத்தால் நமக்குக் கிடைத்து விடப் போவது இல்லை என்பது தெளிவாகி விட்டது. ‘

இப்படிப் பேசினார் தாமோதர் ஸ்வரூப் சேத்.

‘சட்ட மன்றத்தின் அதிகாரத்திற்கும் நிருவாகத் துறையின் அதிகாரத்திற்கும் அப்பாற் பட்டனவாக அடிப்படை உரிமைகள் உயர்த்தி வைக்கப் பட வேண்டும்.

இராஜத் துரோகச் சட்டமும் அரசு அந்தரங்கச் சட்டமும் இன்னமும் அப்படியேதான் இருக்கப் போகின்றன.

அடிப்படை உரிமைகள் நமக்குத் தருகின்ற வரங்கள் அனைத்தும் நமக்கு எட்டாத இடத்தில்தான் இன்னமும் வைக்கப் பட்டு இருக்கின்றன ‘

என்பன அவரது வாதங்கள்.

‘அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கின்ற வரம்பு எதுவும் இருந்திடக் கூடாது ‘

என்று பேசினார் பேராசிரியர் கே. :டி. ஷா.

‘ஒரு வலது கை கொடுப்பதை நாலைந்து இடது கைகள் பறித்துக் கொள்ளுகின்றன; இந்தச் சட்டப் பிரிவு எதற்கும் உதவாது ‘

என்று அவர் வாதம் புரிந்தார்.

‘ஜெர்மனியின் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான், சட்ட மன்றத்தின்

சட்டங்களால் அடிப்படை உரிமைகள் கட்டுப் படுத்தப் படலாம் என்று சொல்கிறது.

அடிப்படை உரிமைகளின் அடிவேரையே அறுக்கின்ற ஒரு கட்டுப்பாடு இது. இதனால், அடிப்படை உரிமைகள் அடிப்படைகளையே இழந்து விடுகின்றன ‘

என்று வாதிட்டார் மெஹ்:பூத் அலி :பேக் சாஹிப் பகதூர்.

ஹெச். வி. காமத் அன்று கூறியது போல, காங்கிரஸ் கட்சிதான் அரசமைப்புப் பேரவையில் ஆதிக்கக் கட்சியாக இருந்து கொண்டு வந்தது. அம்பேத்கரோ, காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் மந்திரியாகி இருந்தவர்!

அம்பேத்கர் சொல்வதற்கு எல்லாம் கை உயர்த்திட வேண்டும் என்று காங்கிரஸ் காரர்களுக்குக் கட்டளையும் இடப் பட்டு இருந்தது.

இப்படி, ஒரு முடி சூடா மன்னராக அரசமைப்புப் பேரவையில் கம்பீரமாக நின்று கொண்டு இருந்தார் அம்பேத்கர் —- காங்கிரஸின் கைப் பாவையாக!

இந்த எதிர்க் குரல்களை எதிர் பார்த்த அம்பேத்கர் ஏற்கனவே அவற்றிற்கு எதிராக வாதங்கள் புரிந்து இருந்தார்.

4-11-1948 அன்று அவர் புரிந்து இருந்த வாதங்கள் பின்வருமாறு:

‘அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வழங்குகின்ற பேச்சு உரிமை என்பது கட்டுப்பாடு அற்ற பேச்சு உரிமை அல்ல; இந்த உரிமையைத் தவறாகப் பயன் படுத்துவோருக்குத் தண்டனை உண்டு என்று ஒரு வழக்கில் அமெரிக்க உச்ச நீதி மன்றம் தீர்ப்புக் கூறி இருக்கிறது.

எனவே, அமெரிக்காவில் அடிப்படை உரிமைகள் முழுமை ஆனவை என்று சொல்வது தவறு. ‘

ஒரு விசயத்தை அம்பேத்கர் மிகவும் வசதியாக மறந்து விட்டார்.

எனது பேச்சுரிமை —-

இன்னொருவர் மீது நான் பொழிகின்ற வசையாக மாறி விடலாம்; இது வேறு!

எனது பேச்சுரிமை —-

இந்தச் சமுதாய அமைப்பிற்கும் அரசு அதிகாரத்திற்கும் எதிரான கிளர்ச்சியாக எழுச்சி பெற்று வந்திடலாம்; இது அதனினும் வேறு!

இந்த வேறுபாடுதான் அம்பேத்கருக்குப் புரிய வில்லை.

அடிப்படை உரிமைகளுக்கு ஞாயமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்கலாம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு-19 கூறுகிறது.

இதனை ஆதரித்துதான் அம்பேத்கர் அன்று வாதங்களைப் புரிந்து கொண்டு இருந்தார்.

ஆனால், ஏன் இந்தக் கட்டுப்பாடு ?

பிள்ளை பிழை புரிந்து விடக் கூடாதே என்று பரிதவிக்கின்ற ஒரு தாயின் கட்டுப்பாடா, இது ?

இல்லை.

பிறந்த பொழுதே ஞானியாகப் பிறந்து விட்ட ஒருவன் முட்டாளாகப் பிறந்து விட்ட ஒருவனுக்கு ஒளிர்ந்து காட்டுகின்ற அறிவு விளக்கா, இது ?

அதுவும் இல்லை!

ஆட்சி அதிகாரத்திலே அமர்ந்து இருக்கின்ற ஒருவன்,

தனது அடக்கு முறைக்கு எதிராகக் குடி மக்கள் கொதித்து எழுந்து விடக் கூடும் என்னும் அச்சத்தில்,

அவர்களின் உரிமைகளை ஒடுக்கி வைத்திடத் துடிக்கின்ற ஓர் ஆதிக்கக் கட்டுப்பாடு இது!

இதில் மனிதத் தன்மையும் இல்லை; தனி மனித உரிமையும் இல்லை!

எனது கருத்துகள் இன்னொருவர் மீது நான் பொழிகின்ற வசைகளாக மாறுகின்ற பொழுது அவர் என்னைத் தண்டிக்க முன் வரலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இதற்கு என்று வரையறுக்கப் பட்டு இருப்பவைதாம் களங்கக் குற்றமும் அதற்கு உரிய தண்டனையும்!

ஆனால், எனது பேச்சும் எழுத்தும் வசையாக மாறிடக் கூடுமோ என்று என் வாயைக் கட்டிப் போடுவதுதான் அடக்கு முறை!

களங்கச் சட்டப் பிரிவில் உரிமைக் களங்கம் எதுவும் இல்லை.

ஏனென்றால், இன்னொருவனை வசை பாடுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆண்டி முதல் அமைச்சன் வரை அனைவரும் அந்தச் சட்டத்தைப் பயன் படுத்தித் தங்கள் மேல் சுமத்தப் படுகின்ற களங்கங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

ஆனால்,

அரசு அமைப்பையும் சமுதாய நிலவரங்களையும் சாடுகின்ற விள்ளனங்கள் களங்கங்கள் அல்ல; எள்ளனங்களும் அல்ல!

மாடாக உழைத்து விட்டு மனிதனாக வாழத் துடிக்கின்ற இதயங்களின் எழுச்சிகள் அவை!

அரசின் அடக்கு முறைக்கு எதிரான முழக்கங்கள் இராஜத் துரோகம்அல்ல; கொலை வெறியும் அல்ல!

உழைக்கின்ற மக்களின் உயிர் வாழ்க்கைப் போராட்டங்கள் அவை!

அடிமை விலங்குகளை உடைத்து எறிந்திடத் துடிக்கின்ற மக்களின் விடுதலை முனைப்புகள் அவை!

கொடுமைகளுக்கு முடிவு கட்டிட வேண்டும் என்கின்ற மனித நேயத்தின் அறை கூவல்கள் அவை!

இந்த வாழ்க்கைப் போராட்டங்களுக்கும்

இந்த விடுதலை முனைப்புகளுக்கும்

மனித நேயத்தின் இந்த அறை கூவல்களுக்கும்

குறுக்கே நிற்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை;

அடக்குவதற்கு எந்த ஆட்சியாளனுக்கும் உரிமை இல்லை!

ஆனால், அம்பேத்கர் கூறுகிறார் —-

மக்களை அடக்குவதற்கு ஆட்சியாளனுக்கு உரிமை உண்டு என்று!

அழுந்திக் கிடக்கின்ற மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஆதிக்கக் காரனுக்கு உரிமை உண்டு என்று!

அடிமைச் சாதியின் விடுதலைத் துடிப்பினை ஒடுக்குவதற்கு ஆண்டைச் சாதிக் காரனுக்கு உரிமை உண்டு என்று!

ஓர் அதிகார ஞானம்தான் இது என்ற போதிலும் ஓர் அடிமை ஞானமாக அல்லவா அம்பேத்கரின் ஞானம் இங்கே வெளிப் படுகிறது!

அம்பேத்கருக்குத் தெரியாதா —-

ஒடுக்கப் பட்டவர்களின் விடுதலை எழுச்சிகளைப் பல காலமும் தடுத்து நிறுத்திட முடியாது என்று!

வரலாற்று இயக்கத்தின் தேசிய எழுச்சியினைப் பல காலமும் அழுத்தி வைத்திட முடியாது என்று!

உரிமையின் குரல் வளையைப் பல காலமும் நெரித்து வைத்திட முடியாது என்று!

எல்லாம் அவருக்குத் தெரியும் என்ற போதிலும் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக வாதிடத் தயங்க வில்லை அவர்!

தீவிர வாதம் என்கிறார்களே,

பயங்கர வாதம் என்கிறார்களே,

அந்தரங்க அரசியல் இயக்கம் என்கிறார்களே,

இவற்றிற்கு எல்லாம் காரணம் இத் தகைய கட்டுப்பாடுகள்தாம் என்பது இவர்களுக்குத் தெரியாதா ?

மகளுக்கு எழுதிய மடல்களுக்குள் உலக வரலாற்றுக் காட்சிகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டு வந்த நேருவுக்குத் தெரியாதா ?

ஆங்கிலேயரின் அடக்கு முறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு வந்த இந்திய மாணிக்கங்களுக்கு இது தெரியாதா ?

ஆசை வெட்கம் அறியாது என்பது போல, ஆய்வும் அறியாது போலும்!

கருத்துகளை வெளிப்படையாக உரைத்திட முடியாத போதுதான் கரசியமாக மக்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்;

கரசிய இயக்கங்கள் சமுதாயத்தில் உருவாகத் தொடங்குகின்றன!

சொற்களின் மோதல்களைத் தடுக்கின்ற சட்டம்–ஒழுங்குகளைத்தான் கற்களைக் கொண்டு மக்கள் தகர்த்திட முயல்கிறார்கள்;

வன்முறை இயக்கங்கள் சமுதாயத்தில் வளர்ந்திடத் தொடங்குகின்றன!

கட்டுப்பாடுகளால் வரலாற்று வளர்ச்சிகளைக் கட்டுப் படுத்திட முடியாது என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

எனவே,

தீவிர வாதத்தை எதிர்ப்பவர்கள் —-

பயங்கர வாதத்தைக் கண்டு பதறுபவர்கள் —-

அந்தரங்க அரசியலை வெறுப்பவர்கள் —-

மனித நாகரிகத்தின் வளர்ச்சியினை உண்மையிலேயே அவர்கள் மதிப்பவர்களாக இருந்தால்,

பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கூட்டம் கூடும் உரிமை, நம்பிக்கை உரிமை, முதலிய உரிமைகளுக்கு —-

இன்று விதிக்கப் பட்டு இருக்கின்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிகின்ற வகையில் —-

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி எழுதிட முன் வர வேண்டும் என்பது முடிவு.

ஆனால்,

சாதிக்கு ஒரு நீதி என

சிந்தையிலும் செயலிலும் ஒருமைப்பாடு இல்லாத இந்தக் குடி மக்களால் இதனைச் சாதித்திட முடியுமா ? என்பதுதான் கேள்வி.

கலைஞர் இளவேனில் எழுதுவது போல, ‘அரசியல் சாஸனத்தின் இடத்தில் மனு சாஸ்திரம் அல்லவா இங்கே வைக்கப் பட்டு இருக்கிறது!

(புதிய கோடாங்கியில் வெளியானது)

sothipiragasam@hotmail.com

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்