தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சின்னக்கருப்பன்


கடந்த இரண்டு வாரங்களாக விகிதாச்சார தேர்தல் முறை பற்றிய கட்டுரைகள் திண்ணையில் வெளியாகியிருக்கின்றன.

அவற்றை படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

‘தோசையை திருப்பிப்போடு ‘ம் தேர்தல் முடிவுகள் கடந்த பல தேர்தல்களில் பலரை சிந்திக்க வைத்திருக்கின்றன.

சென்ற தேர்தலில் (2001) ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற வாக்குக்கள் சதவீதம்

மொத்த இடங்கள் 234

அதிமுக கூட்டணி

அதிமுக 141 இடங்களில் போட்டியிட்டு 131 இடங்களை கைப்பற்றியது. தமிழ்நாட்டில் ஓட்டுப்போட்டவர்களில் அதிமுக பெற்ற ஓட்டு சதவீதம் 31.44%

தமகா 32 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 6.73

பாமக 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 5.56%

காங்கிரஸ் 14 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 2.48%

சிபிஎம் 8 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 1.68%

சிபிஐ 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 1.59

திமுக கூட்டணி

திமுக 181 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களைக் கைப்பற்றியது. சதவீதம் 30.92%

பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 3.19%

கூட்டணியின் இதர உதிரிக்கட்சிகள் சதவீதம் 4%

தனி

மதிமுக 211 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களைக் கைப்பற்றியது சதவீதம் 4.65%

**

இதையே இன்னொரு விதத்தில் பார்க்கலாம்

அதிமுக 31 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 56 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

திமுக 31 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 13 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

தமகா 7 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 10 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

காங்கிரஸ் 2 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 3 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

பாஜக 3 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 2 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

பாமக 6 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 9 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

மதிமுக 5 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 0 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

சிபிஎம் 2 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 3 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

சிபிஐ 2 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 2 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றது

**

குறிப்புகள்

மேல்கண்ட விவரங்கள் இந்த இணைய முகவரியிலிருந்து பெறப்பட்டவை

http://eci.gov.in/high_Stats/se2001/Stat_Rep_TN_2001.pdf

அதிமுக கூட்டணி 49.48 சதவீத வாக்குக்களையே பெற்றது.

திமுக கூட்டணி 38 சதவீத வாக்குக்களையே பெற்றது.

ஆயினும் வினோதங்கள் நடந்திருப்பதை கவனியுங்கள்.

1) அதிமுக கூட்டணி கூட குறைந்த பட்சத்தேவையான 50 சதவீத வாக்குக்களைப் பெறவில்லை

2) ஆட்சி அமைத்த அதிமுக வாக்களித்த கூட்டணியோடு பதவி ஏற்கவில்லை. தானே தேவையான அளவு தொகுதி பிரதிநிதிகளைப் பெற்றிருப்பதால், அதுவே ஆட்சி அமைத்தது. அதாவது சுமார் 31.44 சதவீத வாக்குக்களின் பிரதிநிதிதான் ஆட்சி அமைத்தது. 49.48 சதவீத வாக்குக்களின் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கவில்லை. பாமக, காங்கிரஸ், தமகா சேர்ந்த பிரதிநிதிகள் ஆட்சிப்பொறுப்பேற்கவில்லை.

3) வெற்றி பெற்ற அதிமுகவின் ஓட்டு சதவீதமான 31.44 சதவீதத்துக்கும் அடுத்தாற்போல வந்த திமுகவின் ஓட்டு சதவீதமான 30.92 சதவீதத்துக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.52 சதவீத வாக்குக்களே. சில பழைய தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குக்களை விட தோற்ற கட்சியின் வாக்குக்கள் அதிகமாக இருப்பதையும் காணலாம்.

***

விகிதாச்சார முறை தேர்தல் அமைப்பு உபயோகிக்கப்படும் சுமார் 80 சதவீத நாடுகளில் கட்சி வேட்பாளர் வரிசை முறையே பின்பற்றப்படுகிறது, party list voting இதுவே சுதந்திரமடைந்த தென்னாப்பிரிக்காவிலும் உபயோகிக்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் தென்னாப்பிரிக்காவில் வாக்குச் சதவீதம்

மொத்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 400 மக்கள் தொகை 42,718,530 அதாவது ஒரு பிரதிநிதிக்கு சுமார் 1 லட்சம் மக்கள். கவனியுங்கள் இது நாட்டின் பாராளுமன்றத்துக்கு. மாநிலங்களின் சட்டமன்றத்துக்கு அல்ல. இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு இருக்கும் தொகுதிகள் சுமார் 535, அதாவது ஒவ்வொரு எம்பியும் சுமார் 18 லட்சம் மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்கிறார்.

கீழே தென்னாப்பிரிக்காவின் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதமும் அந்தந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் பெற்றிருக்கும் பிரதிநிதிகள் சதவீதமும் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ANC 66.40% ANC 266 66.5

DP 9.60% DP 38 9.5

IFP 8.60% IFP 34 8.5

NNP 6.90% NNP 28 7

UDM 3.40% UDM 14 3.5

ACDP 1.40% ACDP 6 1.5

FF 0.80% FF 3 0.75

other 2.90% other 11 2.75

400

ஏறத்தாழ அந்தந்த கட்சிகள் எந்த அளவு ஓட்டுக்களைப் பெற்றனவோ அதே விகிதத்தில் கட்சிகளும் பிரதிநிதிகளைப் பெற்றிருப்பதைக் கவனியுங்கள். இந்தியாவில் ஏஎன்சி போல ஒரு கட்சி 66 சதவீத வாக்குக்க்ளை இதுவரை பெற்றதே இல்லை. அப்படி ஒருமுறை பெற்றிருந்தால் நமது தேர்தல் முறை காரணமாக எதிர்கட்சிக்கு ஒரு பிரதிநிதி கூட நம் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டார்கள் என்பதையும் கவனியுங்கள்.

ஆகவே, நம் நாட்டுக்கு விகிதாச்சார முறை மிகவும் அவசியமானது என்பதே என் கருத்து.

பல விகிதாச்சார முறைகள் முந்தைய திண்ணைக் கட்டுரைகளில் காணப்படுகின்றன.

அவற்றில் நான் தமிழ்நாட்டுக்கென ஆதரிப்பது ஒரு மாறுபட்ட கட்சி வேட்பாளர் வரிசை முறை. அதனை நான் இந்தக் கட்டுரையில் விளக்க முற்படுகிறேன்.

***

எல்லா விகிதாச்சார முறை தேர்தல்களைப் போலவே இதிலும் ஒரு தொகுதிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த தொகுதிகள் 234 (அதாவது 2,56,000 பேருக்கு ஒரு தொகுதி)

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பிரதிநிதிகள் என்று கொண்டால், மொத்த சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 702 ஆக இருக்கும். இது அதிகமில்லை. தமிழ்நாட்டில் 6 கோடி மக்கள் இருக்கிறார்கள். 702 பிரதிநிதிகள் என்றால், சுமார் 80000 பேருக்கு ஒரு பிரதிநிதி. உண்மையில் இதனை விடக் குறைவாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அதனைப் பற்றி இறுதியில் எழுதுகிறேன். பாராளுமன்றத்துக்கான் பிரதிநிதிகளை விட மக்களுக்கு நெருங்கியவர்களாக மாநில சட்டமன்ற பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

தமிழ்நாட்டில் படிப்பறிவற்றவர்கள் ஏராளமானோர் தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்பதுவும், அவர்கள் பெரும்பாலும் கட்சி சின்னத்தை அடையாளம் கண்டுகொண்டே வாக்களிக்கிறார்கள் என்பதுவும் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

ஆகவே எந்த ஒரு தேர்தல் வாக்குச்சீட்டிலும் சின்னங்களுக்கு இடம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு எந்த வேட்பாளருக்கு தாம் ஓட்டுப்போடுகிறோம் என்பதுவும் தெரிந்திருக்க வேண்டும்.

**

நான் தயாரித்திருக்கும் மாதிரி வாக்குச்சீட்டினை கீழே காணுங்கள்.

இந்த வாக்குச் சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒன்றுதான் தரப்படும். அவரும் இன்று இருக்கும் முறையிலேயே ஒரே ஒரு வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்.

ஆனால் நான் ஆதரிக்கும் மாற்றம், ஒரே கட்சி மூன்று வேட்பாளரை கட்டாயம் நிறுத்த வேண்டும்.

நிற்கும் வேட்பாளர்களில் தனிப்பட்ட முறையிலும் கட்சி சார்ந்தும் மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

***

***

மேற்கண்ட வாக்குச்சீட்டில் கவனிக்க வேண்டியவை

1) ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியும் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது

2) ஒவ்வொரு சுயேச்சையும் தனித்தனியே நிற்பது தனித்தனி சின்னங்களும் வழக்கம்போல ஒதுக்கப்பட்டிருக்கிறது.

**

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைகளை பார்க்கலாம்

திமுக -37000

அதிமுக -56000

சிபிஎம் -12000

பாஜக -22000

முஸ்லீம்லீக் -7000

காங்கிரஸ் -3400

வாக்குப்பெட்டிகளில் உள்ள மொத்த வாக்குக்கள் 146900

மூன்று வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும். (ஏன் ஒவ்வொரு கட்சியும் மூன்று வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்பது இதன் மூலம் வெளிப்படை. ஒரே கட்சியிலிருந்து மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெறும் சாத்தியமும் இதில் உள்ளது)

மேலே உள்ள எண்ணை மூன்றால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கை 48967

ஆகவே ஒவ்வொரு வேட்பாளர் வெற்றிபெறவும் தேவையான வாக்குக்களின் எண்ணிக்கை 48967.

ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குக்களை இந்த மேற்குறிப்பிட்ட எண்ணால் வகுத்தால் கிடைக்கும் எண் முதல் சுற்றில் எந்த வேட்பாளர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்பதை அறிவிக்கிறது.

உதாரணமாக திமுக 37000 வாக்குக்களைப் பெற்றிருக்கிறது. இந்த எண்ணை 48967 ஆல் வகுத்தால் கிடைக்கும் எண் 0. மீதமிருக்கும் ஓட்டுக்கள் 37000. முதல் சுற்றில் தி மு கவிற்கு இடம் இல்லை.

அதிமுகவின் 56000 வாக்குக்களை 48967ஆல் வகுத்து கிடைக்கும் எண் 1. இது அதிமுகவில் அதிக வாக்குக்களைப் பெற்ற கண்ணன் வெற்றி பெற்றதை குறிக்கிறது. மீதமிருக்கும் அதிமுக வாக்குக்கள் 7033. முதல் சுற்றில் அ தி மு கவைச் சேர்ந்த கண்ணன் வெற்றி பெறுகிறார்.

இதே போல ஒவ்வொரு கட்சியின் ஓட்டுக்களையும் இந்த எண்ணால் வகுத்தால் கிடைக்கும் எண்கள் முதல் சுற்றில் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அறிவிக்கிறது.

முதல் சுற்றிலேயே 3 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இரண்டாம் சுற்றுக்கு செல்லத் தேவையில்லை. அதாவது மூன்று வேட்பாளர்கள் தலா 48697 வாக்குகள் பெற்றாலோ அல்லது கட்சி 48697 வாக்குகள் பெற்றாலோ இரண்டாம் சுற்று அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் முதலாவது சுற்றில், கண்ணன் அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்னும் இரண்டு வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்படவேண்டும்.

இரண்டாவது சுற்றுக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் மீதமிருக்கும் வாக்குக்கள் கணக்கிடப்படும். எந்தக் கட்சிக்கு மிக அதிகமான வாக்குக்கள் மீதமிருக்கிறதோ அந்த கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும். அடுத்தாற்போல மிக அதிகமான வாக்குக்களைப் பெற்ற கட்சிக்கு அடுத்த இடம் அளிக்கப்படும்

மீதமிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் மிக அதிகமாக திமுக 37000 வாக்குக்களைப் பெற்றிருக்கிறது. அதன் அதிக வாக்கு பெற்ற வேட்பாளர் குமரகுரு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அடுத்தாற்போல மிக அதிகமான மீதமிருக்கும் வாக்குக்களை பெற்றிருக்கும் பாஜக 22000 வாக்குக்களைப் பெற்றிருப்பதால் அதன்சார்பாக அதில் அதிக வாக்குப் பெற்ற ஸ்டாபன் ராஜ் தேர்தெடுக்கப்படுகிறார்.

இப்போது வாக்குச் சதவீதத்தையும், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சதவீதத்தையும் பார்க்கலாம்.

—->கட்சி வாக்கு சதவீதம் —> கட்சி எம் எல் ஏ சதவீதம்

திமுக —-> 25% —-> 33%

அதிமுக —-> 38% —-> 33%

பாஜக —-> 15% —-> 33%

ஆனால்,

தற்போது இருக்கும் முறையில் அதிமுக வாக்குக்கள் அனைத்தும் ஒரே ஒரு எம்எல்ஏவுக்கே சென்றிருக்கும்.

அதாவது 38 சதவீதம் பெற்ற அதிமுக 100 சதவீத எம் எல் ஏக்களைப் பெற்றிருக்கும்.

***

இந்த முறையில் ஒரே கட்சியின் வேட்பாளர்கள் மூவரும் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய சாத்தியம் உண்டு. இதைத் தவிர்த்து, அவசியம் மாற்றுக்கட்சியின் வேட்பாளரும் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற ஜனநாயக உணர்வு எழுந்தால், கட்சிகள் 2 வேட்பாளர்களை நிறுத்தலாம் என்று விதியை ஏற்படுத்தலாம். இல்லையென்றால் கட்சிக்கு மூன்று வேட்பாளர்கள், தேர்தலில் தேர்வு செய்யப்படக்கூடியவர்கள் 5 அல்லது ஆறு பேர் என்று வைக்கலாம்.

****

வெற்றி பெறும் கட்சிகள் பெறும் பிரதிநிதித்துவம் ஏறத்தாழ பெற்ற வாக்குக்கள் சதவீதத்தை ஒத்திருப்பதைக் கவனியுங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் அதிகமான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறைந்துகொண்டே வரும். இஸ்ரேல் நாட்டில் நாடு முழுவதும் ஒரே தொகுதியாக பார்க்கப்படுகிறது. மக்கள் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப்போடுகிறார்கள். அப்போது பெறும் வாக்குக்களின் சதவீதத்துக்கு தகுந்தாற்போல அந்தந்த கட்சிகளுக்கு இடங்கள் அளிக்கப்படுகின்றன. அந்தந்த கட்சிகள் யார் பிரதிநிதி என்று அறிவிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் நமக்கு மிகவும் ஏற்றது என்பது என் கருத்து. நான் குறிப்பிட்டுள்ள முறையில் வாக்காளர்கள் இப்போது எப்படி வாக்களிக்கிறார்களோ அப்படியேதான் வாக்களிப்பார்கள். ஒரே ஒரு வித்தியாசம், ஒவ்வொரு கட்சியிலும் ஒரு வேட்பாளர் நிற்பதற்கு பதிலாக மூன்று வேட்பாளர்கள் நிற்பார்கள். வாக்கு எண்ணிக்கையும் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று அறிவிப்பதும் மட்டுமே மாறுகிறது. ஒரு தொகுதியில் ஒரே ஒரு எம் எல் ஏவை நம்பி இருக்கவேண்டிய மக்கள் இன்று மூன்று எம் எல் ஏக்களில் யாரை வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அவரவர் கட்சி எம் எல் ஏக்களைச் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.

ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்தும் கட்சி மூன்று தொகுதிகளில் நிற்காமல் போவதற்கு ஈடானது என்பதால் பெரும்பாலான கட்சிகள் மூன்று வேட்பாளரையும் நிறுத்தும். இது ஓரளவுக்கு உள்கட்சி ஜனநாயகத்தை பொதுமக்களுக்குக் கொண்டு வரும் முயற்சியும் கூட.

இன்று ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு ஒரு எம் எல் ஏ இருக்கிறார். இது மிகவும் அதிகமானது. தொகுதியை அப்படியே வைத்துக்கொண்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 எம் எல் ஏக்களை கொண்டுவருவது அதிகாரப்பரவலுக்கும் உகந்தது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் 10 எம்எல்ஏக்கள் இருப்பது கூட சிறந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, இன்னும் சரியாக ஓட்டு விகிதாச்சார முறையில் தேர்தெடுக்கப்பட்ட எம் எல் ஏக்களின் விகிதாச்சார முறை அமைய வழி வகுக்கும். எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக மக்கள் தொகை அதிகரிக்கும்போது, தொகுதியை அப்படியே வைத்துக்கொண்டு எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்கலாம்.

ஆனால் இங்கு நான் குறிப்பிட்டுள்ள முறையில் எந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். கட்சி முடிவு செய்யாது. ஒரு கட்சியில் எந்த வேட்பாளர் அதிக வாக்குக்கள் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 3 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் கட்டாயப்படுத்தப்படும். ஆகையால், கட்சி மேலிடத்துக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறவைக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இல்லை என்பதை கவனியுங்கள். உதாரணமாக ஜெயலலிதா ஒரு தேர்தலில் நின்றால் கூடவே இரண்டு அதிமுக வேட்பாளர்களும் இருக்க வேண்டும். மக்கள் ஜெயலலிதா வேண்டாம் என்று வேறொருவருக்கு ஆனால் அதே அதிமுக கட்சி சார்ந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போட இயலும். ஸ்டாலின் ஒரு தொகுதியில் திமுக சின்னத்தில் நின்றாலும், திமுக ஆதரவாளர்கள் குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்றால் அவருக்கு ஓட்டுப்போடாமல் திமுக கட்சிக்கு – பிற வேட்பாளர்களுக்கு – ஓட்டுப்போட இயலும்.

பெண்களை கட்சி வேட்பாளராக நிறுத்தினால் ஓட்டுக்கிடைக்காது என்று அபத்தமாக கட்சிகள் நம்புவதால், பெண்களை வேட்பாளராக நிறுத்த மறுத்துவருகின்றன. இந்த முறை மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கட்சி நிறுத்தும் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டுவந்தால், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அவர்கள் வாக்குப் பெறுவதும் பெறாததும் அந்தந்த வேட்பாளரின் பாடு.

படிப்பறிவற்றவர்கள் சின்னத்தைப் பார்த்துத்தான் ஓட்டுப்போடுகிறார்கள் என்பதால் சின்னங்கள் இருக்கின்றன. மூன்று உதய சூரியனில் எந்த உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டாலும் அது திமுக கட்சிக்குத்தான் சேர்கிறது. ஆகவே கட்சி ஓட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. படிப்பறிவற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்றால், ஓவ்வொரு உதய சூரியனுக்கு அருகாமையிலும் ஒரு எண்ணை தரலாம். உதாரணமாக உதயசூரியன் சின்னத்துக்கு அருகில் 3 என்ற எண் இருப்பது குமரகுரு தன் வாக்காளர்களை உதயசூரியன் 3-க்கு ஓட்டுப் போடச் சொல்லி கேட்க உதவலாம்.

இந்திய அரசியல் சட்டம் ஒரு நபருக்கு ஒரு ஓட்டுத்தான் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த வாக்குச் சீட்டு அதனை மாற்றவில்லை. ஆனால் பிரதிநிதிகள் உருவாக்கத்தின் செயல்முறையை மட்டுமே மாற்றுகிறது.

இந்த முறை கொண்டுவந்தால், எந்தக் கட்சி தரும் வேட்பாளர்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு இல்லை.

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 எம் எல் ஏக்கள் இருப்பது எம் எல் ஏக்கள் மத்தியில் ஒரு போட்டி உணர்வை உருவாக்கி மக்களுக்கு அதிக நன்மை கிடைக்க ஏதுவாகலாம்.

மக்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சி எம் எல் ஏக்களை அணுகி தங்கள் குறைகளைச் சொல்லவும் நிவாரணம் பெறவும் ஏதுவாகும்.

நிறைய பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதால், அதிகாரப்பரவலுக்கு சாத்தியம் உண்டு.

**

மேற்கண்டவை என் இறுதி முடிவுகள் அல்ல.

இதில் என்ன குறைகள் இருக்கின்றன, என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதைப் பற்றி எழுதுங்கள்.

**

karuppanchinna@yahoo.com

நன்றி

http://www.mtholyoke.edu/acad/polit/damy/BeginnningReading/howprwor.htm

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்