மத்தளராயன்
புத்தனங்காடி. ஆலப்புழைக்குத் தொட்டடுத்த இடங்கழிப் பிரதேசம். தென்னை மரங்கள் அடர்ந்த பரம்பு. நடுவில் ஒரு பதினாலு கெட்டு வீடு. என்றால் பதினாலு கோணம். அதாவது சின்னதும் பெரிசுமாகப் பதினாலு மாடங்கள். தேக்கு மரத்தால் செய்து தச்சு சாஸ்திரப்படிக்கு உருட்டி அமைத்துத் தூக்கி நிறுத்தியவை. மரமும், ஓடும், சுண்ணாம்புமாக எது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று புரியாதபடிக்கு இழைத்து இழைத்துக் கலந்து சேர்த்துக் கட்டிய இருப்பிடங்கள்.
தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் வாசல் நிலை. ஏறிச் செல்ல நயமான மரப்படிகள். பாதி வரைக்கும் அறுத்து ஒரு கதவும், மேல் பாகம் இன்னொரு பகுதிக் கதவும். கீழ்க் கதவை அடைத்து, மேலே உள்ளதை அடுத்துச் சாத்தி, மணிச் சித்திரத் தாழை இழுத்துச் செருகினால் உள்ளே ஈசல் கூட நுழைய முடியாது.
இந்தத் தரவாட்டின் காரணவராக, மருமக்கள் தாயம் மரபாகிப் போன வீட்டோடு இருக்கப்பட்ட மூத்த மருமகனாக, அனந்திரவர்களான வீட்டுப் பிள்ளைகளை அதிகாரம் செய்துகொண்டு, குடை பிடித்தபடி படகில் போய், பக்கத்துக் கிராமத்தில் பச்சைக் கறிகாயும், மீனும் வாங்கி வந்து, நெல் பாட்டத்தில் முண்டு வலித்துக் குத்தி நடந்து விதைப்புப் பணி நோக்கியிருந்து, சாயந்திரம் குளித்து அம்பலத்தில் தொழுவதற்கு நெற்றியில் சந்தனமும் மேலே வெற்றுடம்போடும் நாலு முழ முண்டுடுத்தி நடந்து தேய்ந்து ஒரு நாள் மூச்சு நின்று இங்கேயே பலா மரத்தின் சுவட்டில் தகிக்கப்பட்டு இடிந்து போன நினைவு மண்டபமாகப் போனவன் நானாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் அந்தக் கூட்டில் புகுந்து கொள்ள ஒரு சிரமமும் இல்லை. அவ்வளவுக்கு இந்தச் சூழல் மனதிலோ மரபணுவிலோ ஆழமாகப் பதிந்திருக்கிறது.
எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிகிற வேம்பநாட்டுக் காயல். அந்தி வண்ணம் பூச ஆரம்பித்திருக்கும் வெள்ளப் பெருக்கில் அங்கங்கே மீனுக்காகத் தண்ணீரில் மூழ்கும் பறவைகள் கும்க் கும்க் என்று மெல்லச் சத்தம் கூட்டுகின்றன. முக்குளித்து அலகில் மீனோடு மீண்டும் எவ்விப் பறக்கின்றன. நீர்த் தாவரங்கள் நீரோடு மிதந்து அங்குமிங்கும் ஒரு நிமிடம் ஒதுங்கி, அது நிலையான இடமில்லை என்று படத் திரும்ப நகர்கின்றன.
டப்டப் என்று பக்கத்தில் எங்கேயோ மோட்டார் படகு சத்தம். கையால் துழைத்துப் போகிற படகில் ஒருத்தன் வாழைக் குலைகளை ஏற்றிக் கொண்டு, வேகவேகமாகத் துடுப்புப் போட்டுப் போகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்து பீடி வலிக்கிற கிழவருக்கு அருகே கிடைமட்டத்தில் ஒரு பழைய சைக்கிள். அக்கரையில் ஏதோ ஒரு கிராமத்துக்கு இன்னும் அரை மணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ போய்ச் சேர்வார்கள். போனதும் அங்கே மண்தரையில் அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவார். வாழைக்குலை பின் சீட்டில் அப்படியும் இப்படியுமாக ஆடித் தரையைத் தொட்டுக்கொண்டு நகரும். படகுக்காரன் தன் வள்ளத்தைத் தன் கிராமத்துப் படகுத்துறையில் சேர்த்துக் கட்டிவிட்டு கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வீட்டுக்கு நடப்பான். அது படகுத் துறைக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.
குளிர் மணக்கும் காயல் பக்கம் மெல்லிய கீற்றாக டாசல் வாடை. படகின் எஞ்ஜின் அணைக்கப்பட்டு திரும்ப உயிர் பெற்றுப் புகையை உமிழ்கிறது. கடல் பறவை போல் இரைகிற படகின் அழைப்புச் சத்தம். தூரத்தே சீன வலைகள் தண்ணீரில் குனியத் தயாராக நிற்கின்றன.
வன்னு கேரு சாரே. நமுக்கு ஒண்ணு காயலில் கெறங்ஙி வராம்.
படகுக்காரன் இடுப்பு லுங்கியை முட்டுக்குக் கீழே தழைத்துக் கொண்டு அன்போடு விளிக்கிறான்.
ஏறி உள்ளே போகிறேன். மீன் வாடை. இப்போதுதான் கூடை இறக்கி இருக்க வேண்டும்.
மேல் தளத்தில் ஓய்வாக உட்கார்ந்து கேம்கார்டரை எடுக்கிறேன்.
தூரத்தில் தெரியும் தென்னந்தோப்புகளை நோக்கி நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு படகு முன்னேறுகிறது. மேற்கே இறங்கிக் கொண்டிருக்கும் சூரியன். மேலே வட்டம் போட்டு நகரும் ஒற்றைப் பருந்து. சீரான கதியில் சஞ்சரிக்கும் காற்று.
அப்புறம் கிராமங்கள். கரைக்கு இரண்டு பக்கத்திலும். ஒரு சாட்டம் சாடினால் அங்கே போய் யார் வீட்டு வாசலிலாவது விழுந்து விடலாம்.
எல்லா வீட்டிலும் மாக்சி அணிந்த பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் காயலில் சமையல் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முண்டும் ப்ளவுஸும் உடுத்திய நாடன் மலையாளிப் பெண்ணை இனிமேல் செம்மீன் டி.வி.டியிலும் கள்ளி செல்லம்ம வி.சி.டியிலும் தான் ஷீலா உருவத்தில் பார்க்க வேண்டும்.
பல வர்ணத்தில் லுங்கி அணிந்து முழங்காலுக்கு வெகு மேலே உயர்த்திக் கட்டி பீடி பிடித்தபடி நடக்கிற ஆண்கள் தான் கேரளத் தனிமையைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம்.
பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சூடிதார் கன்னியர் சைக்கிள் மணி ஒலித்துக் கொண்டே வருகிறார்கள். ஒருத்தி வெள்ளையாகச் சிரித்துக் கையை அசைக்கிறாள். மகள் நினைவு வரத் திரும்பக் கையசைக்கிறேன்.
கரையில் வேகமாகப் போகிற டெம்போ பெட்டிக்கடையில் நிற்கிறது. கால்கேட் விளம்பரமும், ஒருவருக்காக உருவாக்கப்பட்ட மற்றவர் பற்றிய வில்ஸ் சிகரெட் விளம்பரமும் (சிகரெட்டும் புற்றுநோயும் போல) எழுதிய கடை. நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் அலமாரியிலிருந்து டிடர்ஜெண்டோ சோப்போ எடுத்துத் தருகிற மாக்சிப் பெண் ஒரு வினாடி என் படகை அசிரத்தையாகப் பார்த்துவிட்டு வியாபாரத்தைத் தொடர்கிறாள்.
பக்கத்து வீடுகளில் மின்சார விளக்கு அணைத்து, நிலவிளக்கேற்றி நாம ஜபம் செய்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது.
அந்த விளக்குகள் தவிர வெளிச்சம் இல்லை. கருப்புத் திரவமாக இருட்டில் மினுமினுக்கும் காயல். தூரத்தில் சீன வலைகளை மீன் பிடிக்கத் தாழ்த்திக் கொண்டிருக்கிறவர்களின் சத்தம் காற்றில் கலந்து வருகிறது.
திரும்பலாம் என்கிறேன்.
********************************************************************
கேரளத்தில் சர்வ சாதரணமாகப் பார்க்கவும், கேட்கவும் கிடைக்கும் இரண்டு வார்த்தைகள் – ‘கள்ளு ‘ மற்றும் ‘பணிமுடக்கு ‘.
தலை குளிக்காத மலையாளிப் பெண்ணைக்கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், கள்ளுக்கடையில்லாத கேரள கிராமத்தைப் பார்க்க முடியாது.
பணிமுடக்கு என்ற வேலை நிறுத்தம் அதே போல் வருடம் முழுக்க நடக்கிற விஷயம். யார் ஆண்டாலும், யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பணிமுடக்கு இல்லாமல் ஒரு மாதமும் கழியாது.
வேம்பநாட்டுக் காயல் பக்கம் கால் வலிக்க நடந்து விட்டுப் புட்டும் கடலையுமாகக் காலைச் சாப்பாடும், இன்னும் நாலு வருஷத்துக்குச் சேர்த்து வைத்து மிக நீண்ட குளியலும் முடித்து ( இந்தச் சுகானுபவம் சென்னை நண்பர்களுக்குச் சொல்லாமலேயே புரியும்) டபுள் முண்டான எட்டு முழ வேட்டியும் ஷேர்ட்டுமாய் அம்பலப்புழைக்குப் புறப்படத் தயாராக இறங்க, பணிமுடக்கு குறுக்கே புகுந்து ஓடியது.
டாக்சி ஓட்டிக்கான் பாடில்ல. கல்லு கொண்டு எறியும்.
யாரு ?
பணிமுடக்குக்கார் தன்னே.
அதான்பா, யாரு ஸ்டிரைக் செய்யறது ?
சிவசேனா, சாரே.
பால் தாக்கரேயின் சிவசேனை ஆள் பலமுள்ள கட்சிதான். அது மராத்திய மாநிலத்தில். இந்த நிமிடத்தில் ‘சாம்னா ‘ படித்துக் கொண்டு, ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ் கி ஜெய் ‘ சொல்லிக் கொண்டு அங்கே லட்சக் கணக்கில் சைனிக்குகள் வெப்ப மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கேரளத்தில் ? இருக்கப்பட்ட சிவசேனைக் காரர்களை நாலு மடேடார் வேன்களில் அடைத்துக் கொண்டு வந்துவிடலாம். அதிலும் இரண்டு வேன் மும்பை ரிஜிற்றேஷனோடு, பதினெட்டுப் படி ஏற வந்த மராத்திச் சாமிகளாயிருக்கும்.
என்ன போச்சு ? நீர்க்கோலி (தண்ணீர்ப் பாம்பு) நினைத்தாலும் அத்தாழம் (ராச்சாப்பாடு) முடக்கும் கேரளத்தில், சிவசேனை நினைத்தாலும் ஜாம்ஜாமென்று பணிமுடக்கலாம். யார் ஸ்ட்ரைக் நோட்டாஸ் கொடுத்தாலும் உடனே அன்போடு ஆதரித்து அதை வெற்றிகரமாக்கக் கேரளீயர் கொடுக்கும் ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்ல முத்தமிழில் (டி.சி.புக்ஸ், கோட்டயம் பதிப்பித்த மலையாள அகராதிப்படியான பொருள் கொள்க) வார்த்தை இல்லை.
விஷயம் இதுதான். சபரிமலை யாத்திரைக்கு, ஆன்றணியின் ஜக்ய ஜனாதிபத்ய முன்னணி அரசு பஸ் டிக்கட்டுக்கு மேல் சர்சார்ஜ் விதிக்க, மந்திரிசபையில் கதாகத வகுப்பு (போக்குவரத்து) மந்திரி பகுமானப்பட்ட பாலகிருஷ்ண பிள்ளை அதை நடப்பாக்க, போராட்டம் என்று மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சபரிமலை போகக் கிளம்பிய சிவசேனைக் காரர்கள் வண்டியோடு பத்தனந்திட்ட பஸ் ஸ்டாண்டில் அதிரடியாகப் பிரவேசிக்க, பொலீஸ் தடியடியில் மனுஷரும் மாடும் எல்லாம் காயம் அடைய, அடுத்த நாள் தென் மாவட்டங்களில் சிவசேனா பந்த் அறிவிப்பு.
இவ்வளவுக்கும் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழை வட்டத்தில் முந்திய நாள்தான் ஏதோ உள்ளூர் விஷயமாகச் செறிய தோதில் ஒரு ‘பந்த் ‘. கடையடைப்பு. ஆனால் என்ன ? இன்னொரு நாள் பணிமுடக்கு என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன ?
சாயந்திரம் ஐந்து மணிக்குப் பணிமுடக்கு முடிந்ததும் அம்பலப்புழை போகலாம் என்று தள்ளிப்போட்டு, காயலைப் பார்க்க பிரம்பு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கரிக்கயும், சம்பாரமும் குடித்தபடி (என்றால் இளநீரும், மோரும்) கையில் எடுத்துப் போயிருந்த குந்தர் கிராஸின் ‘கிராப் வாக் ‘ நாவலை முழுக்கப் படித்துத் தீர்த்தேன்.
அப்புறம் எடுத்தது சில மலையாள வாரப் பத்திரிகைகளை. பாதிப் பக்கம் கருணாகரன் வெர்சஸ் ஆன்றணி. முன் முக்ய மந்திரி தோழர் நாயனார் தில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயன்ஸ் இன்ஸ்ற்றிட்யூட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கருணாகரனும், மார்க்சிஸ்ட் நேதாவு அச்சுதானந்தனும் அன்போடு கைகுலுக்குகிறார்கள். மார்க்சிஸ்ட் நட்பைக் கொண்டாடுவதற்காக, கருணாகரனின் மகனும் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான முரளீதரன் லண்டனுக்கு அவசரமாகப் புறப்பட்டுப்போய், கார்ல் மார்க்ஸ் சமாதியில் மலரஞ்சலி செலுத்தி ஸ்வெட்டரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
கருணாகரன் ஆதரவாளர்களும், ஆன்றணி ஆதரவாளர்களும் தில்லிக்குக் குளிரில் நடுங்கிக் கொண்டு படைபட்டாளமாகக் கிளம்பிப்போய் கதவிலக்கம் பத்து, ஜன்பத் வீட்டு வாசலில் சோனியா காந்தியிடம் புகார், பதில் புகார் என்று பட்டியல் கொடுக்க மஃப்ளரைத் தலையில் சுற்றிக் கொண்டு தேவுடு காக்கிறார்கள். ‘அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார் – நாளைக்கே ஆன்றணியை அம்பேலாக்கிடுவார்னு புரிஞ்சு போச்சு ‘ என்றோ, ‘அம்மா கருணாகரன் பேரைக் கேட்டதுமே மூக்கை உறிஞ்சினார். அந்த ஆள் அரசியல் ஆட்டம் க்ளோஸ் இனிமே ‘ என்றோ சந்தோஷத்தோடு உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருகிறார்கள்.
கேரளா காங்கிரஸ் மாணி குழு, கேரளா காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை குழு, இடது சாரியிலிருந்து வெள்ளை சாரியுடுத்து வலம் தாவிய முன்னாள் மார்க்சிஸ்ட் கெளரி அம்மாளின் கட்சி, லீக், தேசலாகிப் போன சி.பி.ஐ என்று ஏகப்பட்ட கட்சிகள், குழுக்கள், தலைவர்கள். நம்மூர்ப் பத்திரிகைகள் சினிமாக்காரர்களைப் பிடித்துத் தொங்க, மலையாளிகளுக்குச் செய்தித் தீனி போடுவது இந்த அரசியல் தான்.
இதற்கு இடையே கேரளச் சட்ட மன்ற உறுப்பினர்கள் காடு மலையெல்லாம் கஷ்டப்பட்டு ஏறி, அவர்கள் பிரதேசத்து நதிகளிலிருந்து தமிழகம் தண்ணீர் திருடுகிறதா என்று துப்பறியத் தொடங்கி வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்கள். தண்ணீர் திருட்டெல்லாம் ஒன்றுமில்லை, நதி போகிற திசையே தமிழகம் நோக்கித்தான் என்று ஈன சுவரத்தில் காலைப் பிடித்தபடி சொல்ல, அதிகாரிகள் ‘அன்னிக்கே இதானே சார் சொன்னோம் ‘ என்று முணுமுணுக்கிறார்கள்.
ஆன்றணியோ பரப்பிரம்மமாக ‘சதாம் உசைனைக் கவுரவமாக விசாரிக்க வேண்டும் ‘ என்று ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கோரிக்கை தெரிவித்து அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்.
பத்திரிகையில் வாசகர் கடிதம் பகுதியில், அமெரிக்காவில் சிக்காகோவில் உட்கார்ந்து கொண்டு சாக்கோ கணியாலில் என்ற மலையாளி இன்னொரு டிபிக்கல் மலையாளி நடப்புக்காகக் கவலைப்பட்டு எழுதியிருந்தார். அது திடார் விடுமுறை பற்றியது.
கேரளத்தில் எந்த மாஜி மந்திரிக்குச் சிவலோக பதவி கிடைத்தாலும், உடனே சர்க்கார் விடுமுறை. ஃபைலை மூடி வைத்துவிட்டு, சேட்டரும், சேச்சிமாரும் குடையோடு வீட்டுக்குப் பகல் தூக்கம் போடத் திரும்ப, அரசு ஊழியர்க்குச் சம்பளப் பணம் போன்ற வகையில் இருபது கோடி ரூபாய் தண்டத்துக்குச் செலவு.
கிட்டத்தட்ட அறுபது மாஜி மந்திரிகள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கு இப்பவோ அப்பவோ என்று நிற்கிறது. கேரளம் தாங்குமா இதை என்ற சிக்காகோ சாக்கோச்சனோடு நானும் நொந்து நூலாகிப் போனேன்.
திரும்பவும் டி.வி. திருவனந்தபுரம் திரைப்பட விழா.
சோமரத்ன திஸ்ஸநாயகா என்ற இலங்கை இயக்குனர் எடுத்த ‘லிட்டில் ஏஞ்ஜல் ‘ படம் பற்றிய உரையாடல். மலையகத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த ஒரு தமிழ்ச் சிறுமிக்கும், தோட்ட முதலாளி மகன் சிங்களச் சிறுவனுக்கும் நடுவே இயற்கையாக ஏற்படும் நட்பு பற்றிய அழகான அந்தப் படத்தை யார் பார்க்கிறார்களோ இல்லையோ, சுஜாதாவும் மணிரத்தினமும் கட்டாயம் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து, முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்களும் ஆங்கில, சிங்கள சப் டைட்டில்களுமாக, ‘இன் தி நேம் ஓஃப் புத்தா ‘ என்ற இலங்கைப் படம் பற்றி அதைத் தயாரித்த மிஸ்டர் டச்வாட்டரோடு பேட்டி. டச்வாட்டர் சரளமாக மலையாளத்தில் சம்சாரிக்க ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்புறம் தான் மனதில் ஒரு பளிச். புள்ளிக்காரன் மலையாளிதான். தொடுப்புழ என்ற குடும்பப் பெயர். அதை அதிரடியாக மொழிபெயர்த்து டச்வாட்டர் ஆக்கி விட்டார்.
லண்டனில் தன் ஈழத் தமிழ் நண்பர்கள் விவரித்த சோகங்களைக் கேட்டு அதிர்ந்து போய், அனுதாபம் கொண்டு அவர்கள் நாடு விட வேண்டி வந்த காரண காரியங்களைச் சித்தரிக்கும் இப்படத்தை உருவாக்கியதாகச் சொன்னார் ராஜேஷ் டச்வாட்டர். லோ பட்ஜட் படம் இல்லை என்பதால் விவரணையோடு கூடிய காட்சிச் சித்தரிப்புகள். மலையாள பூமியிலேயே இலங்கைச் சூழ்நிலையைத் தத்ரூபமாகப் பதிவு செய்த படத்தின் காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். சொந்த பூமியை விட்டுச் சாரி சாரியாக நடக்கும் குடும்பங்கள், நடைக்கு இடையே ஓடி வந்து மகனின் கல்லறையில் அழும் அன்னை, கொட்டும் மழையில் கையில் இறந்த மகனின் சடலத்தோடு புரட்சிப்படைத் தலைவன் முன்னால் நடந்து சடலத்தைக் கிடத்தி, ‘நாம் இப்படி வித்துக்களையே பறிகொடுத்திட்டு இருக்கோம். அப்புறம் அறுவடைக்கு என்ன மிஞ்சும் ? ‘ என்று கதறும் தந்தை..
மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கண்ட சில காட்சிகளிலேயே தெரிந்து போனது.
லண்டனில் அரங்கு நிறைந்து படம் ஓடியதாகப் பேட்டியில் சொன்னார் ராஜேஷ். தமிழ்நாட்டில் இப்படம் பார்க்க வாய்ப்புக் கிட்டுமா என்பது தெரியாது. ஆனால், தமிழ் டிவி சானல்களிலும் இது பற்றிப் பேசப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரியும்.
நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோசஃப் கூட அபிமுக சம்பாஷணம். (சாராவுக்கு இந்த வருடம் சாகித்ய அகாதமி விருது கிட்டியிருக்கிறது.) சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப் படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்.
சிவசேனைக்கு நன்றி. ஒரு பகல் பொழுது உருப்படியாக இப்படிக் கழிய எனக்கு வசதி செய்து கொடுத்ததற்கு.
சேட்டா, அம்பலப்புழ போகான் கார் வன்னெத்தி.
*********************************************************************
மியூசிக் அகாதமியில் செளமியா கச்சேரி. மாலை நாலரை மணிக்கு. ரெண்டுங் கெட்டானான நேரம் அது. இந்த நேரத்தில் கச்சேரி என்றால் போகவே பிடிக்கலை என்று நேற்றுத்தான் அவர் எக்ஸ்பிரஸ்ஸில் சொல்லியிருந்தார்.
முதலிலிருந்தே மனது ஒட்டாமல் பாடிக் கொண்டிருந்தார். நர்மதா எவ்வளவோ அனுசரணையாக வயலின் வாசித்தும் செளமியாவிடம் ஒரு இயந்திரத்தனம். சுருதி சுத்தமான பிலகரி. ஆனாலும் அவர் குரலை மட்டும் பிலகரிக்குக் கொடுத்து விட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்கிற மாதிரி விலகியிருந்தார்.
சட்டென்று தமிழில் சாளகபைரவி என்ற அபூர்வ ராகத்தில், ‘கோல மயில் ஏறும் குமரனைக் கண்டாயோ ‘ என்று எடுத்தார். அப்புறம் தன்னாலேயே உற்சாகம் வந்துவிட்டது. மோகனத்தில் ராகம் தானம் பல்லவி சாதாரணமாக ஆரம்பித்துப் போகப்போக லயிப்போடு உள்ளே புகுந்து விட்டார் செளமியா.
பக்கத்தில் இருந்த நண்பர் லாஸ் ஏன்ஜல்ஸ் ராம், ‘இந்தக் கச்சேரியிலே செளமியா அனுபவிச்சுப் பாடிட்டிருக்காங்க முருகன்; முந்தாநாள் பார்த்தசாரதி சபாவிலே அரை இருட்டுலே உக்கார வச்சுப் பாட வச்சுட்டாங்க. மகாஜனங்களும் நூறு பேர்தான். ஏதோ பாடி ஒப்பேத்தி சட்டுனு முடிச்சுட்டு எழுந்து போயிடுத்து பாவம் ‘ என்றார். அவர் கண்ணீரைத் துடைத்தேன்.
தமிழில் துக்கடாவாக பாரதியின் ‘வில்லினையொத்த புருவம் வடித்தனை வேலவா ‘ காவடிச் சிந்து -அது மட்டும் தான் – பாடி திரையை இறக்கி விட்டார் செளமியா.
செளமியா பாடியது முடிந்து வெளியே வந்து மவுண்ட் மணி கேண்டானில் காப்பி குடித்து (மகா மகா சுமார்) திரும்ப உள்ளே நுழைவதற்குள் மும்பை ஜெயஸ்ரீ டாணென்று ஏழரைக்குக் கணீரென்று தொடங்கி விட்டார்.
ஜெயஸ்ரீக்குச் சங்கீதத்தில் லயிப்பு கூடவே பிறந்தது. ஒரே ஒரு ரசிகன் இருந்தாலும், மைக் செட் தகராறு செய்தாலும், ஏர் கண்டிஷன் திடாரென்று துருவப் பிரதேசத்தையும் அடுத்த நொடியில் சஹாரா பாலைவனத்தையும் சிருஷ்டித்தாலும், யார் குறுக்கே மொபைலோடு நடந்தாலும் அவர் சங்கீதத்தில் அமிழ்ந்து விடுவார்.
சாரங்கா, காம்போதி என்று கிறங்கடித்துக் கொண்டு போகிறது அவர் குரல். கூடவே போஷித்து வாசித்த இளைஞர் யாரென்று ராம் பின்னால் திரும்பிக் கேட்க, எச்.எஸ். பாஸ்கர் என்றார்கள். அபூர்வமான வில்வித்தைக் கலைஞன் தான்.
தோடியில் ராகம் தானம், பல்லவி ராகமாலிகை என்று நேர்த்தியாகச் செய்துவிட்டு ஜெயஸ்ரீ தேஷ் ராகத்தை எடுத்தார். தேஷ் என்றால் எனக்கு முதன்முதலில் நினைவு வருவது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ‘ தான்.
ஊஹும். இன்பம் சேர்க்க பாரதிதாசன் கவிதை மியூசிக் அகாதமியில் நுழைய முடியாது போலும். வேறு மொழிப் பாடலாகத் தான் ஜெயஸ்ரீயின் தேஷ் வந்தது.
பக்கத்தில் இருந்த நண்பர் பத்ரி சொன்னார் – ‘இன்னும் இளங்கோவடிகளுக்கே சபாவிலே அனுமதி இல்லே.. எம்.எஸ்
இசைத்தட்டுலே ‘வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி ‘ன்னு சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையைப் பாடினதுக்கு அப்புறம் நம்ம வித்வான்கள் யாரும் பாடிக் கேட்டிருக்கீங்களா ? ‘.
யோசித்துப் பார்த்தேன். பத்ரி சொன்னது சரிதான். யாரும் இல்லை!
முடிக்கும் முன்னால், ஹமீர் கல்யாணியில் ‘தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய ‘ திருப்பாவை பாடி
பாரதிதாசனை அழைக்காத குறையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்தார் ஜெயஸ்ரீ.
முழுக்க முழுக்கப் பாரதி, பாரதிதாசன் பாடல்கள். யாராவது வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்வார்களா ?
ராஜ்குமார் பாரதி போன்றவர்கள் முயன்றால் முடியும்.
******************************************************
- கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- நாற்பது வருட தாபம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- ஸ்தலபுரம்
- டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்
- கடவுள் போருக்குப் போகும்போது
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- நிழல்கள்.
- நதி
- எனக்கு வேண்டும் வரம்
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- பல சமயம் நம் வீடு
- வரம் கொடு தாயே!..
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு
- விடியும்!(நாவல் – 29))
- பிச்சிப்பூ
- ஆசாரப் பூசைப் பெட்டி
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- எமன் – அக்காள்- கழுதை
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- உத்தரவிடு பணிகிறேன்
- பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்
- கடிதங்கள் – 01 ஜனவரி,2004
- வலுக்கும் எதிர்ப்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- முன்னேற்றமா! சீரழிவா!!
- ‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘
- புத்தாண்டே வருகவே
- மரக்கொலைகள்
- அன்பே மருந்தானால்…
- அன்புடன் இதயம் – 1
- எழுதாக் கவிதை
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- அடங்கோ… அடங்கு!
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்