கடவுள் போருக்குப் போகும்போது

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

காரென் ஆம்ஸ்ட்ராங்


கார்டியன்பத்திரிக்கையிலிருந்து

2004ஆம் வருடத்தைப் பற்றி ஒன்று நிச்சயமாகச் சொல்லமுடியும். கற்பனை செய்யமுடியாத அதிசயம் ஏதேனும் நடந்தாலொழிய, இன்னும் அதிகமான மதவெறி உந்துதலால் நிகழும் பயங்கரவாதத்தையே நாம் பார்க்கலாம். மதங்கள் இல்லையென்றால் நாம் இன்று இருப்பதைவிட நன்றாகவே இருக்கலாம் என்று அடிக்கடி தோன்றக் கூடும். சிலுவைப்போர்களையும், மதவிசாரணைக் கொடுமைகளையும் மேலோட்டமாகப் பார்த்தாலே மதவன்முறை என்பது இஸ்லாமிய உலகத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல என்பது தெளிவாகும். வெவ்வேறான மதங்கள் உண்மையிலேயே அமைதியையும் சமாதானத்தையும், நல்லெண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டவை என்றால், ஏன் அவை இப்படிப்பட்ட ஒரு வெறுப்பை தூண்டுகின்றன ? அவற்றின் மதப்புத்தகங்கள் ஏன் இப்படிப்பட்ட தீவிரவாதத்தன்மையுடன் இருக்கின்றன ?

ஆக்கிரமிப்பையும் வன்முறையையும் உயிரியல் ரீதியாக உடலுக்குள் தாங்கியுள்ள மனிதகுலத்தின் உருவாக்கமே மதம். சமாதானக் கனவு காண்கின்றோம் ஆனால் நம் மனித குலத்து மக்களை நாமே கொலை புரிகிறோம். ஆரம்ப காலத்திலிருந்தே நமது இந்த வருத்தத்துக்குரிய இரட்டைத்தன்மையை நமது மதங்களும் பிரதிபலித்தன. நமது மூத்த மதங்களில் கடவுளர்கள் மிகவும் வன்முறையாளர்களாக இருந்தார்கள். யூதர்கள், கிரிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் வணங்கும் – யெஹ்வா உட்பட- எல்லாக் கடவுள்களும் மிகவும் வன்முறையாளர்களாக இருந்தார்கள். மற்ற குழுக்களுடன் போரிடுவதன் மூலமே தங்களுக்கான பாதுகாப்பைப் பெற முடிந்தது மனிதர்களால். ஆகவே தேவலோகத்திலும் நிரந்தரப் போர் நடப்பதாகவும், அங்கு கடவுளர்கள், நாச சக்திகளை எதிர்த்துப் போராடுவதாகவும் கற்பனை செய்தார்கள்.

2000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய உலக மதங்கள் இந்த வன்முறை மிகுந்த மதத் தத்துவத்தை உதறிவிட்டு, கருணை, சகோதரத்துவம் மற்றும் அஹிம்சையை போதித்தன. ஆனால், இந்த மதங்கள் எல்லாமும், போரால் சிதிலமான சமூகங்களிலிருந்தே தோன்றின. இந்த பரந்த வன்முறைச் சூழல் அவைகளது புதிய மதப்புத்தகங்களுலும் புகுந்திருந்தன. உதாரணமாக, யூதமதம், அரசியல் ரீதியான அடக்குமுறை, அழிப்பு, வெளியேற்றம், நாடுகடத்தல் ஆகியவற்றின் கொடூரமான அனுபவத்தில் தோய்ந்த மனிதர்களிடையே தோன்றியது. அந்த மன அழுத்தம் யூத பைபிளில் தனது குறிப்புகளை விட்டுச் சென்றிருக்கிறது.

சில பைபிள் எழுத்தாளர்கள் வன்முறைக்கு பதில் வன்முறையே என்று எழுதியிருக்கிறார்கள். அவர்களது கடவுள் மோஸஸையும், ஜோஷ்உவாவையும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தில் வாழும் பழங்குடியினரை கொன்றொழிக்கக் கட்டளையிடுகிறார். ஆனால், மற்றவர்களோ விட்டுக்கொடுத்தலையும், ஒத்துவாழ்தலையும், புதியவர்களுக்கு மரியாதையையும் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் கடவுள் எப்போதுமே இஸ்ரவேலின் மக்களின் பக்கமே இருப்பதில்லை எனவும், இஸ்ரவேலின் மக்களது நியாயமற்ற அணுகுமுறையும், பொறுப்பற்ற நடத்தையுமே அவர்களது அழிவுக்குக் காரணம் என்றும் எழுதுகிறார்கள்.

ஜீஸஸ் தன் சீடர்களிடம், எதிரிகளிடம் அன்பு செலுத்த அறிவுறுத்துகிறார். யூதர்களுக்கும் புதிய கிரிஸ்தவர்களுக்கும் இடையேயான வன்முறையும், ரோமானிய ஆக்கிரமிப்பு கொடுக்கும் மன அழுத்தமும் இருக்கும் முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்தின் போராட்டகுழப்ப காலத்தால் புதிய ஏற்பாடும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் டோமிஷியன் பேரரசரின் அடக்குமுறையால் உந்தப்பட்டு புக் ஆஃப் ரெவலேஷனில் (புனிதக் காட்சிப் புத்தகம்)பழிவாங்கும் கற்பனைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அரேபியாவில் 7ஆம் நூற்றாண்டில் நடந்துகொண்டிருந்த வன்முறை மிகுந்த பழங்குடி போர்களை குரான் பிரதிபலிக்கிறது. முதல் 5 வருடங்கள் முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்படும் பயமுறுத்தலையும் தங்கள் உயிருக்காகப் போராடவேண்டிய நிர்ப்பந்தத்தையும் எதிர்கொண்டார்கள். எவ்வாறு போர்க்களத்தில் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தும் குரானின் வன்முறை வாசகங்கள் இறுதியில் ஒத்துவாழ்வதற்கு முயற்சிக்கவேண்டும் என்ற தூண்டுதலோடு பெரும்பாலும் முடிகின்றன. இறுதியில் அந்த தீபகற்பத்துக்கு, அஹிம்சை என்ற கொள்கையைக்கொண்டுதான் முகம்மது நபி சமாதானத்தைக் கொண்டுவந்தார்.

இந்த மதப்புத்தகங்கள் அனைத்தும், தங்களது வன்முறை மிகுந்த பிறப்பின் வடுக்களைத் தாங்கி உள்ளன. ஆகவே வெறுப்புக்கு தெய்வீக முத்திரையைத் தரும் வாக்கியங்களை தீவிரவாதிகள் தங்களது மதப்புத்தகங்களிலிருந்து பெறுவது எளிதானதுதான். போர் என்பது மனித வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. ஆகவே போர் என்பது நிரந்தரமாக ஆகும்போது, மதமும் அதனால் பாதிக்கப்படுவது என்பது ஆச்சரியமல்ல. இதுதான் சிலுவைப்போர்களின்போதும் நடந்தது.

இதே போல, வலதுசாரி கிரிஸ்துவம் இன்று அமெரிக்க சமூகத்தில் இருக்கும் நிரந்தர வன்முறையை உறிஞ்சி தன்னகப்படுத்திக்கொண்டுள்ளது. துப்பாக்கி சட்டங்களைச் சீர்திருத்தி, துப்பாக்கிகளை எல்லோருக்கும் வினியோகிக்காமல் இருப்பதை இது எதிர்க்கிறது. தூக்குத்தண்டனையை ஆதரிக்கிறது. ரெவலேஷன் பகுதிகளிலிருந்து தங்களது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் இவர்கள் எப்போதும் மலைப்பிரசங்கத்தை குறிப்பிட மாட்டார்கள். இதே போலத்தான் ஒஸாமா பின் லாடனும் தனக்குத் தேவையான வாக்கியங்களையே குரானிலிருந்து எடுத்து பிரயோகம் செய்கிறார். இன்று நம்மைத் துன்புறுத்தும் பெரும்பாலான முஸ்லீம் தீவிரவாதம் தோன்றுவது, நம்பிக்கை இழக்கவைக்கும் வெகுகாலமாய் நடக்கும் போர்களின் விளைவுகளாக உருவான சமூகங்களில்தான்: மத்தியக்கிழக்கு, பாலஸ்தீனம், செச்னயா, ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர்.

எல்லா மனித நடைமுறைகளைப் போலவே மதத்தையும் வக்கிரப்படுத்தலாம். மோசமான சமையல், மோசமான கலை, வக்கிரமான பாலுறவு போன்றே மோசமான மதமும் சாத்தியமே.மதச்சார்பற்ற போராட்டங்களாக ஆரம்பிப்பவையே பின்னர் மதங்களையும் உள்ளே இழுத்துக்கொள்கின்றன. கடந்த வரலாற்றில், தீர்க்கதரிசிகளும், ஞானிகளும், தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களுக்குக் கருணையைப் போதிப்பதை மிக முக்கியமான கடமையாய்ச் செய்து வந்தார்கள்.

இன்று மதத்தலைவர்கள் தங்களது மதங்களின் பாரம்பரியங்களை முன்னெடுத்து சீர்திருத்தி இந்த பாரம்பரியங்களை தீவிரவாதத்திலிருந்து துண்டிக்க முயல்வது அவசியம். மற்ற மக்களது வன்முறையைக் கண்டித்தால் மட்டும் போதாது. பிஷப்புகள், ரப்பைகள், இமாம்கள் ஆகியோர் தங்களது புத்தகங்களில் இருக்கும் வன்முறைக்கான வித்துக்களை ஆராய்ந்து அவற்றைப் பிரித்தெடுத்து தங்களது மதப்புத்தகங்களை சீர்திருத்தவும் இன்று தேவை உள்ளது. தம்முடைய மதத்தின் பழம் வரலாற்றில் உள்ள வன்முறையை ஒப்புக் கொள்வதும், பிற மதங்களின் மீது வெறுப்பை வளர்க்கும் பாடப் புத்தகங்களைச் சீர்செய்வதும் மிகவும் அவசியம். நாம் இன்று இந்த மத பயங்கரவாதத்துக்கு எதிரான போரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். துன்புறும் பிரதேசங்களில் இருக்கும் வன்முறையை அதிகரிப்பதன் மூலம், இந்த மதநம்பிக்கை கொண்டவர்கள் எந்தச் சூழ்நிலைகளால் புனிதப்போர்களுக்குத் தயாரானார்களோ அந்தச் சூழ்நிலையையே அதிகரிக்கச் செய்கிறோம்.

(காரென் ஆர்ம்ஸ்ட்ராங் கடவுளின் வரலாறு, இஸ்லாம், புத்தர் ஆகிய நூல்களை எழுதியவர்.)

karmstronginfo@btopenworld.com

——————————————–

  • கடவுளுக்கான போர்கள்
    Series Navigation

  • காரென் ஆம்ஸ்ட்ராங்

    காரென் ஆம்ஸ்ட்ராங்