குலேபகாவலி Vs மிராண்டா

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

பரிமளம்


ஒரு நபர் இன்னொருவர் மீது போலீசில் புகார் செய்கிறார். காவலர்கள் அந்த இரண்டாவது நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். உடனே நீதிபதி அவரைப் 15 நாள்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிடுகிறார். இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காண்கிறோம்.

தன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படும் ஒருவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படுவதற்கு முன்பே அவரைக் காவலில் போடுவதற்கு ஒரு நீதிபதிக்குள்ள அதிகாரம் நியாயமானதாகத் தெரியவில்லை. அவர் குற்றவாளி அல்லர் என்பது பிறகு உறுதியானால் இந்தச் சிறைவாசத்தால் அவர் அடையும் துயரங்களுக்கு யார் ஈடு வழங்குவது ? வழங்க முடியுமா ?

ஒருவர் மீது புகார் கூறப்பட்டால் போலீசார் வழக்குப் பதிவுசெய்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர் குற்றம் இழைத்திருக்கிறார் என்பது உறுதியானால் அதன் பிறகே அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். வழக்கு உடனடியாக ஆரம்பித்தாலும் அல்லது பின்னொரு தேதியில் ஆரம்பித்தாலும் நிகழ்ந்துள்ள குற்றத்துக்கேற்ப குற்றம் சாட்டப்பட்டரைப் பிணையில் விடலாமா வேண்டாமா என்பதை நீதிபதி முடிவு செய்ய வேண்டும். இதை விடுத்து எடுத்த எடுப்பில் விசாரணை என்னும் பெயரில் எவரையும் 15 நாள் சிறையில் போடுவது சரியல்ல.

உண்மையில் இப்படிப்பட்ட விசாரணைக் கைதிகள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுக் கணக்காக இந்தியாவின் பல்வேறு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு இல்லாமல் பாகிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளின் சிறைகளில் வாடும் இந்தியர்களுக்கு ஆதரவான குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் இந்தியச் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளைப் பற்றி மெளனமே நிலவுகிறது.

தொலைக்காட்சிகளில் ‘இன்ன குற்றம் நிகழ்ந்திருக்கிறது; காவலர்கள் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்’ என்று செய்தி வாசிக்கும் போதே கைது செய்யப்பட்டவர்களை நிறுத்தி நிதானமாகத் திரையில் காட்டுவதும், நாளிதழ்களில் புகைப்படங்களை வெளியிடுவதும் மனித உரிமை மீறல்களே. அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களேயொழிய குற்றவாளிகளல்லர். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே குற்றவாளியின் படத்தை நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளியிடலாம்.

ஆட்சியில் உள்ளவர்களின் விருப்பத்துக்கேற்ப காவல்துறை செயல்படுவதும் அப்படிச் செயல்படுமாறு ஆட்சியில் உள்ளவர்கள் காவலர்களைப் பணிப்பதும் கடுமையான குற்றங்கள் என்பதை இந்தியா எப்போது உணரும் என்பது தெரியவில்லை.

காவலர்களுடன் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் குண்டு பாய்ந்து இறப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவல் துறை தரும் தகவல்களைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் ஊடகங்கள் அவற்றை அப்படியே வெளியிடுகின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று இறந்து போனவரின் கொடூரக் குணங்களையும், செயல்களையும் விவரிக்கவும் தவறாத அவை இறந்தவரின் நடமாட்டம் அதிகமிருந்த பகுதி மக்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் என்றுகூட அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பொன்பரப்பி வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற தமிழ்த் தீவிரவாதிகள் சிலர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். (தற்காப்பு இல்லை) கொலை செய்தவர்களில் ஒருவருக்குப் போலீஸ் வேலை கொடுத்து அரசு மரியாதை செய்தது. கொலையை யார் செய்தாலும் யாரைச் செய்தாலும் அது தண்டனைக்குரியதில்லையா ?

பொய்க்குற்றம் சுமத்தி உள்ளே தள்ளுவதைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம்.

***

குலேபகாவலி படத்தில் தந்தையின் பார்வையை மீட்டுத் தரும் ஒரு பூவைத் தேடிச்செல்லும் மூன்று சகோதரர்களுக்கு இறுதியில் ஒரு நல்ல யோசனை தோன்றும். அதன் படி அவர்கள் முதலில் காட்டில் கிடைக்கும் பூக்களையெல்லாம் வகைக்கொன்றாகப் பறித்து மூட்டையாகக் கட்டுவார்கள். பிறகு ஒரு பார்வையற்ற பிச்சைக்காரனைக் அழைத்து வந்து (பிச்சையெடுப்பதற்காக அவன் பார்வையற்றதுபோல நடிப்பவன் என்பது அந்தக் காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கும்) படுக்கவைத்து ஒவ்வொரு பூவாகக் கசக்கிச் சாற்றை அவன் கண்களில் ஊற்றுவார்கள். எந்தச் சாறு கண்ணில் படும்போது அவன் பார்வையைப் பெறுகிறானோ அந்தப் பூவே அவர்கள் தேடிவந்த பூவாக இருக்கவேண்டும் என்பது அவர்களது யோசனை.

எங்கள் ஊருக்கருகே வசதியானவர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு முறை இரவில் ஒரு வழிப்பறி நடந்தது. மறுநாளிலிருந்து காவலர்கள் திருட்டு நடந்த இடத்தருகே சுற்றுக்காவலில் ஈடுபட்டு, ஏறக்குறைய திருட்டு நடந்த நேரத்தையொட்டிய நேரத்தில் அந்தப் பக்கமாக நடந்து சென்றவர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களையெல்லாம் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து நன்கு பிழிந்தனர். இளைஞர்களான எங்களை இரவு நேரத்தில் பெற்றோர் வீட்டில் தடுத்துவைக்கும் அளவுக்குத் தேடுதல் வேட்டை நடந்தது. காவலர்கள் எத்தனைப் பேரைக் கசக்கினார்கள்; யார் குற்றத்தை ஒப்புக்கொண்டது என்னும் விவரங்கள் தெரியவில்லை. குலேபகாவலியில் பூக்களைக் கசக்குவது போன்ற வேலை இது என்று அப்போது நினைத்துக்கொண்டேன்.

***

காலத்தால் சற்றே பழமையான பெரிமேசன் கதைகளில் தன் கட்சிக்காரர் கைது செய்யப்படும் கட்டங்களில் பெரிமேசன் தவறாமல் அவருக்கு ஒரு ஆலோசனையைக் கூறுவார். ‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசார் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டாம். மணி என்ன என்று கேட்டால் கூட வாயைத் திறக்கக்கூடாது’ (என்பது போல அந்த ஆலோசனை இருக்கும்). விசாரணைக்குத் தடையாக இருப்பதால் கைது செய்யும் காவல் அதிகாரிக்கு இந்த ஆலோசனை மிகவும் சங்கடமாக இருக்கும். குற்றவாளி என்று கருதப்படுபவரிடம் விசாரணை செய்யாமல் உண்மையை அறிவது கடினம். அதே நேரத்தில் பெரிமேசனின் ஆலோசனை சட்டப்படி மிகவும் சரி. ஏனென்றால் கைது செய்யப்படும் ஒரு நபர் தன் வாயை மூடிக்கொண்டிருக்கும் முழு உரிமையை அமெரிக்கச் சட்டம் அவருக்கு வழங்குகிறது. இந்த உரிமையை அறியாத குற்றவாளிகளிடம் (குற்றவாளி என்று கருதப்படுபவர்களிடம்) இதைச் சுட்டிக் காட்டவேண்டிய கடமை காவலர்களுக்கு இல்லை. ஆகவே பெரிமேசன் அந்தக் கடமையைச் செய்கிறார்.

ஆனால் பிற்காலக் கைது நடவடிக்கை வேறுமாதிரி மாறிவிட்டது. இப்போதெல்லாம் காவலர்கள் கைது செய்யும்போது கைது செய்யப்படுபவரிடம் ‘உங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது’ என்று கண்டிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும். You are under arrest…. எனத் தொடங்கும் இந்த வாசகம் குழந்தைகளுக்கும் அத்துப்படியானது. (‘மிராண்டா உரிமை’ என்றழைக்கப்படும் இதைக் காவலர்கள் கட்டாயமாகச் சொல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பது தனிக்கதை. Miranda Vs Arizona என்று தேடினால் இணையத்தில் நிறைய கிடைக்கும்) 15 நாள்களுக்கு இவரை உள்ளே தள்ள முடியாது; அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கே காவல் நிலையத்தில் வைத்திருக்கலாம். காவலர்களுடன் பேசும்போது தன் வக்கீலைத் தன்னுடன் வைத்துக்கொள்ளவும் கைதானவருக்கு உரிமை உண்டு. தன் விருப்பப்படி வாக்கு மூலம் கொடுக்கலாம். ஆனால் இந்த வாக்கு மூலத்தைத் திரும்பப் பெற முடியாது. பிறகு மாற்றிச் சொன்னால் அதற்குத் தனியே தண்டனை கிடைக்கும்.

இந்தியாவில் தன்னைக் கசக்கி எடுத்த பிறகு தரும் வாக்குமூலத்தைக் குற்றவாளி நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்லலாம்; சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம். (ஒரு சில வழக்குகளில் சிலர் தப்பிக்கவில்லை) சாட்சிகளும் காவல்நிலையத்தில் ஒன்றும் நீதிமன்றத்தில் வேறொன்றும் சொல்லலாம். நீதிமன்றத்தில் சொல்வதே இறுதியானது. காவல்நிலையத்தில் பொய் சொன்னாலும் அதற்குத் தண்டனை இல்லை.

(அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு அப்பழுக்கற்றதல்ல. கறுப்பினத்தவர்களுக்குக் காலங்காலமாக நீதி மறுக்கப் பட்டதையும், பலர் அடித்துத் தூக்கிலிடப்பட்டதையும், சிறுபான்மையினர் இன்றுவரை மோசமாக நடத்தப்படுவதையும் மறந்துவிட முடியாது)

***

இந்தியாவில் தன்னைக் கைது செய்யும் காவலரிடம் ‘என் உரிமைகள் யாவை ?’ என்று எவரும் கேட்க முடியுமா ?

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்