பெண்ணில்லா உலகம்.

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

PS நரேந்திரன்.


‘Male-female ratio in the country alarming ‘

India has reported a child sex ratio of 927 girls to 1000 boys in the 2001 census, against a world average of 1045 women to 1000 men. In some States including Punjab, Haryana, Gujarat, Himachal Pradesh, Delhi, some districts of Tamil Nadu, Maharashtra and recently Karnataka, the sex ratio has declined to about 900 girls per 1000 boys in the 0-6 age group. In some districts, the ratio has plummeted to less than about 850 to 1000 boys.

…..

— The Hindu. October 20th, 2003

********

ஏறக்குறைய பதினேழு வருடங்களூக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நம்புவதற்குக் கடினமாகக் கூட இருக்கலாம்.

என் பாட்டி அழுதுகொண்டே அந்த விஷயத்தைச் சொன்ன போது, முதலில் நான் நம்பவில்லை. வயதாகி விட்டதால் கிழவிக்கு புத்தி பிசகி விட்டது, அதனால்தான் உளறுகிறாள் என்று நினைத்தேன். அதையே மீண்டும் என் அம்மாவும், பெரியம்மாவும் வந்து சொன்னபோது நம்பாமலிருக்க முடியவில்லை. ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் ஆணியடித்தாற் போல நின்று கொண்டிருந்தேன். விஷயம் இதுதான்,

ஒரு மாதத்திற்கு முன், என்னுடைய சின்ன மாமாவிற்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று இறந்து போய்விட்டது. மருத்துவ வசதி அதிகம் இல்லாத கிராமங்களில் குழந்தைகள் நோய் கண்டு இறப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். துக்கம் விசாரிக்க நானும், என் அம்மாவும் கிராமத்திற்குப் போயிருந்த நேரத்தில்தான் பாட்டி இப்படியொரு வெடிகுண்டை வீசினாள்,

‘குழந்தை சாதாரணமாக இறக்கவில்லை. தொண்டையில் நெல்மணி இட்டு அதைக் கொன்று விட்டார்கள்! ‘

‘எதை வைத்து அப்படிச் சொல்கிறாய் ? நாமாகவே எதையும் தீர்மானம் செய்து கொள்ளக் கூடாது. உண்மையிலேயே அந்தக் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிருக்கலாம் இல்லையா ? ‘ என்றேன் பாட்டியிடம்.

‘ஐயோ! குழந்தையோட வாயிலயும் மூக்கிலயும் ரத்தம் வழியுறதை நான் கண்ணால பாத்தேண்டா அப்புனு! இப்படியொரு கொடுமைய பண்ணிட்டானே! ‘ என்று கதறினாள் பாட்டி. சின்ன மாமா, பாட்டியின் சொந்த மகன். அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

மாறு கண்ணிருக்கிற (cross eyed) குழந்தையை தூக்கிக் கொண்டு (அதிர்ஷ்டமாம்) மற்றொரு பெண் குழந்தையின் தொண்டையில் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டுவிட்டுத் தோட்டத்துப் பக்கம் போய்விட்டார்கள் என்று கேள்விப் பட்டேன். முழுதும் வளர்ச்சியடையாத, மென்மையான ஒரு சிறு குழந்தையின் தொண்டையை நெல் மணியானது கத்தி போல அறுத்து, சிறுகச் சிறுக கொன்றுவிடும் என்பது அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. கள்ளிப் பால், எருக்கம் பால் போன்றவையும் தமிழ்நாட்டு கிராமப்பகுதிகளில் இருக்கும் பெண் சிசுக் கொலைகாரர்களின் weapon of choice என்பது பலருக்குத் தெரியாத சங்கதியாக இருக்கக்கூடும்.

அரசல் புரசலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த இந்த மனிதாபிமானமற்ற கொடுஞ் செயலை, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்பு நடந்த விஷயம். இன்றளவும் தமிழ்நாட்டில் பரவலாக பெண் சிசுக் கொலை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கும்பகர்ணர்கள் வேண்டுமானால் அறியாதிருக்கலாம்.

தொண்டையில் நெல்மணியிட்டுக் கொல்லப் பட்ட அந்தக் குழந்தை எத்தகைய வேதனையை அனுபவித்து இருக்குமோ ? எப்படியெல்லாம் துடித்திருக்குமோ ? என்ற நினைக்கும் போதே இதயம் வெடித்துவிடும் போலிருந்தது எனக்கு. எந்தப் பாவமும் அறியாத, தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாத ஒரு சிறு குழந்தையைக் கொல்வது போன்ற மாபாதகம் எதுவும் இருக்க முடியாது. கொலையிலும் கேவலமான திட்டமிட்ட படுகொலை இது. ஆறறிவற்ற விலங்குகளிடம் கூட இது போன்ற கேவலமான ஒரு செய்கை காணக் கிடைக்காது. அன்பு, பாசம், மனிதாபிமானம் போன்ற நற் குணங்கள் மனிதர்களை விட்டுச் சிறுகச் சிறுக மறைந்து வருகின்றன என்பதற்கு இதை விட என்ன உதாரணம் வேண்டும் ?

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்க உயிரோடு இருந்திருக்க மாட்டேனோ என்னவோ ?

இந்த சம்பவம் நடந்த போதே ஏன் காவல் நிலையத்திற்குப் போகவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். சில தமிழ்நாட்டுக் கிராமங்களில் போலிஸ் நுழைவது என்பது, அந்தக் கிராமத்தினரைப் பொறுத்தவரை, மிகக் கேவலமான விஷயம். எனக்குத் தெரிந்து என் பாட்டனாரின் கிராமத்திற்குள் போலிஸ்காரர்கள் வந்து நான் பார்த்ததில்லை. சாதிக் கலவரங்கள் நடக்கும் போது வேண்டுமானால் வந்திருக்கலாம் (ஒரு முறை ராணுவமே வந்தது, சாதிக்கலவரத்தை அடக்க). கிராமங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் உடனுக்குடன் மூடி மறைக்கப்படும். அவ்வப்போது நடக்கும் சண்டை சச்சரவுகளையும் ஊருக்குள்ளேயே பஞ்சாயத்து செய்து சரி செய்துவிடுவார்கள். ‘ஊர்க் கட்டுப்பாட்டை ‘ மீறி யாரும் வாய் திறக்க மாட்டார்கள். இந்த சம்பவம் நடந்த போது நானிருந்த இரண்டும் கெட்டான் வயதில் என்னால் எதுவும் செய்திருக்க இயலுமா என்பது சந்தேகமே.

********

தமிழ்நாட்டில் இது போன்ற பெண் சிசுக் கொலைகளுக்கு முக்கியமான காரணம், வரதட்சிணை. கிராமப் புறங்களில் நீரிலில்லாமல் விவசாயம் நசிந்து விட்டது. அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் ஏழைகள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து எப்படித் தங்கள் பெண் குழந்தைகளூக்குத் திருமணம் செய்வார்கள் ? திருமணம் செய்வது வைப்பதுடனேயா அந்தச் செலவு நின்று விடப் போகிறது ? அதற்குப் பின் வரும் செலவுகளும் ஏராளம். அதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது ?

இரண்டாவது காரணம், ஆண் வாரிசுத் தேவை. எப்படிக் கஷ்டப்பட்டு வளர்த்தாலும், பெண் இன்னொரு வீட்டிற்குப் போய்விடுவாள். தன்னுடைய கடைசி காலத்தில் வைத்துக் காப்பாற்ற ஆண் மகனால்தான் முடியும் என்ற நிதரிசனம் கிராமத்தினரைப் பிடித்து ஆட்டுகிறது. கிராமத்தினரை மட்டும்தானா ? பெண் குழந்தை ஒரு Liability என்ற எண்ணம் பொதுவாகவே ஜனங்களிடம் அதிகரித்து வருகிறது. நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல்.

எத்தனை சட்டங்கள் போட்டாலும் அதை நடைமுறைப் படுத்த இயலாத அரசாங்கங்கம். சாதாரண டிராஃபிக் சட்டங்களையே நடைமுறைப் படுத்த முடியாதவர்கள் நமது ஆட்சியாளர்கள். வரதட்சிணைத் தடுப்பு, பெண் சிசுக் கொலைத் தடுப்பு சிக்கலான சட்டங்களை எந்தக் காலத்திலும் அவர்களால் நடைமுறைப் படுத்த இயலாது. அதற்கான துணிவு அவர்களிடம் இல்லை. ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்களூக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. யார் எப்படிப் போனாலும் என்ன ? பாக்கெட் நிரம்பினால் சரி.

அறிவியல் முன்னேற்றமும் பெண் குழந்தை அழிப்பைத் துரிதப் படுத்திக் கொண்டிருக்கிறது. கருவிலேயே கண்டறிந்து அழித்து விடுகிறார்கள். தடுப்பதற்குச் சட்டம் இருக்கிறது. தடுக்க மனம்தான் இல்லை.

பெண்கள் குறையக் குறைய, ஆண்கள் வரதட்சிணை கேட்கின்ற காலம் போய் பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கின்ற காலம் வந்தாலும் வரலாம். அரபு நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. வரதட்சிணை சரியாகக் கொண்டு வராத கணவனை, மனைவி காலால் எட்டி உதைத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பாளோ ? ( ‘ஒங்கப்பன் வீட்டுல இருந்து பத்து பவுனுக்கு ஒட்டியாணம் வாங்காம இந்த வீட்டு வாசல மிதிக்கக் கூடாது ‘).

காலம்தான் பதில் சொல்லும்.

பெண்களில்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. கவிஞர்கள்தான் சொல்ல வேண்டும். எப்படி இருக்குமென்று. காதல், கல்யாணம், ஊடல், சரசம், அன்பு, பாசம் இல்லாத உலகில் ஆண்களுக்கு மட்டும் என்ன வேலை ? ஆண்களை ஆண்களே மோகித்துக் கொள்வார்களோ அங்கே ?

அல்லது இப்படிக் கூட நடக்கலாம்.

மும்பையில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது தங்கியிருந்த லாட்ஜிக்குக் கீழே ஒரு லாண்டரி இருந்தது. லாண்டரி என்று சொல்வதை விட, இஸ்திரி போட்டுத் தருமிடம் என்று சொல்லலாம். அதை நடத்திக் கொண்டிருந்தவர் ஒரு ‘பீஹாரி பைய்யா (Bhaiyya) ‘. ஒரு தடவை நானும், நண்பர் சக்கரபாணியும் இஸ்திரி போடத் துணிகளை எடுத்துப் போன நேரம் ‘பைய்யா ‘ சந்தோஷத்துடன் ஸ்வீட் தந்தார்.

‘முஜே பச்சா ஃபைதா ஹுவாஹே! ‘ (எனக்கு மகன் பிறந்திருக்கிறான்) என்றார் ‘பைய்யா ‘ குதூகலத்துடன்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மனைவி இருப்பது பீஹாரில். நான் இந்த லாட்ஜில் தங்கியிருந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட ‘பைய்யா ‘ பீஹாருக்குப் போய்ப் பார்த்ததில்லை. அவர் மனைவியும் இங்கு வந்ததில்லை. அப்படியே வந்திருந்தாலும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. ‘பைய்யா ‘ ஒரு ஓட்டை வாய்.

‘மகர்…இஸ் தோ சால்மே ஆப்தோ பிஹார் கயா நை! ‘ (இந்த இரண்டு வருடத்தில் நீங்கள் பீஹாருக்குப் போகவே இல்லையே) என்றேன் அப்பாவியாய்.

‘மேரா தோ பாயியா(ன்) வஹா(ன்) ரஹ்தாஹே! அப்னா காவ்மே! ‘ (என்னுடைய இரண்டு சகோதரர்கள் அங்கு இருக்கிறார்கள். என் கிராமத்தில்) என்று பதில் வந்தது.

திகைத்து ‘ஹாங்…!!! ‘ என்றேன் திறந்த வாயுடன். மேலே கேள்வி எதுவும் கேட்கு முன் சக்கரபாணி என்னை வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

பீஹாரின் ஒரு பிரிவினர் தங்களைப் பாண்டவர்களின் வாரிசுகளாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் வீட்டிற்குத் திருமணமாகி வரும் பெண் புகுந்த வீட்டிலிருக்கும் ஆண்கள் அனைவருக்கும் மனைவியாக நடந்து கொள்ள வேண்டும் (திரொளபதி ?) என்றும் அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நான்கைந்து சகோதரர்கள் உள்ள வீட்டில், ஒரு சகோதரனுக்கு மணம் முடித்த பெண்ணை மற்ற சகோதரர்களூம் பெண்டாளுவார்கள். எல்லா சகோதர்களின் மனைவிமார்களுக்கும் இதுதான் நடக்கும் என்பதும் சக்கரபாணி விளக்கிய பிறகுதான் எனக்குப் புரிந்தது. ‘பைய்யா ‘ ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடியது தப்பே இல்லை.

‘சமத்துவம் உலாவும் இடமய்யா பீஹார்! லல்லு Land வாழ்க! ‘ என்கிறார் கவின்ஜர் ‘இஞ்சி மொரப்பான் ‘

பெண் குழந்தைகளை இப்படிக் கொன்று கொண்டே போனால், ‘கவின்ஜர் ‘ இ.மொ. கூறிய சமத்துவம் இந்தியா முழுமைக்கும் பரவினாலும் ஆச்சரியமில்லை.

********

……

Sharing her concern and alarm at the missing girls, Ms. (Sushma) Swaraj (Minister for Health and Family Welfare) said the desire for a son is the biggest impediment in the stabilisation of population. Law and monitoring alone could not have the desired impact unless the problem was tackled on many fronts and in a vigorous manner. The need is to stir the souls – through religious leaders, poets and artistes – of all those who are a party to this. She regretted that States such as Punjab and Haryana that deify little girls as goddesses and worship them on the eighth day (ashtami) of Navratri, were willing to kill them the following day on account of gender discrimination.

……

The 2001 census showed that this is spreading like cancer. A stage may soon come when it would be extremely difficult to make up for the missing girls….

….

நன்றி : The Hindu

http://www.hindu.com/2003/10/21/stories/2003102106591100.htm

*********

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்