சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

அசுரன்


எவ்வித சத்துக்களுமற்ற குளிர்பானங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் இதன் மூலம் மக்களின் உடல் நலனைக் கெடுப்பதோடு தாம் செயல்படும் இடங்களில் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி அக்கம்பக்கத்து நீராதாரங்களை வறண்டு போகச் செய்வதுடன் தம் கழிவு நீரால் இருக்கின்ற நீரையும் நிலத்தையும் கூட கெடுத்துவிடுகின்றன.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சமடா தாலுகாவிலுள்ள பெருமட்டி பஞ்சாயத்து பகுதியாகும். 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோகோகோலா நிறுவனம் தனது ஆலையை நிறுவியது. அடுத்த ஆறாவது மாதத்திலேயே இப்பகுதியின் நிலத்தடி நீர் அளவிலும் தரத்திலும் குறைந்தது. நீர் பால் வண்ணமானது. இந்நீர் மிகக் கடினத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளதால் துவைக்கவோ, குளிப்பதற்கோ, அருந்தவோ உதவாததாயிற்று.

ஆலைக்கு அருகில் வசிப்போரில் 100 பேருக்கு மேல் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இந்த ஆலையால் 2 கி.மீ சுற்றளவிலுள்ள சுமார் 2,000 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். வளமான வேளாண் நிலங்கள் நீரின்றி கைவிடப்பட்டன. தென்னை போன்ற தோட்டப்பயிர்கள் விளைச்சல் குறைந்தன.

இந்நிலையில், இலண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனத்தினர் பிளாச்சமடா மக்களின் வேண்டுகோளை ஏற்று நிலைமையை நேரில் கண்டறிய வருகை தந்தனர். இதற்காக பி.பி.சி. வானொலியின் ‘உண்மையைத் தேடி ‘ நிகழ்ச்சி வழங்குநரான ஜான் வெயிட் வந்தார். மக்களைஷ சந்தித்துப் பேசிய அவர் அருகிலுள்ள மாசுபடுத்தப் பட்டுள்ள கிணறுகளின் நீர் மற்றும் கோகோ கோலா நிர்வாகத்தால் ‘உரம் ‘ என்று கூறி விற்கப்படும் அதன் கழிவு ஆகியவற்றின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச்சென்றார்.

இங்கிலாந்திலுள்ள எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் இவை சோதிக்கப்பட்டன. அதில், அக்கழிவு உரத்தில் காட்மியம், காரீயம் போன்ற பல நச்சு உலோகங்கள் இருப்பதும் அது பயனற்ற உரம் என்பதும் கண்டறியப்பட்டது. அப்பல்கலைக்கழக ஆய்வக முதுநிலை விஞ்ஞானி டேவிட் சான்டில்லே, ‘அருகிலுள்ள கிணற்று நீரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருக்கிறது ‘ என்கிறார்.

இங்கிலாந்தின் முன்னணி நச்சியியல் வல்லுநரான பேராசிரியர் ஜான் ஹென்றி, ‘இந்த ஆலைக்கழிவு பெரும் கேடு ஏற்படுத்தக் கூடியது. எனவே இதனை உரமாக விற்பதை இந்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் ‘ என்கிறார்.

இதிலுள்ள காட்மியமானது புற்று நோயை ஏற்படுத்தக் கூடியதாகும். இது தொடர்ந்து உடலினுள் சென்றால் சிறுநீரகத்தில் சேர்ந்து சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும். காரீயம் குறிப்பாக, குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியது. கடும் இரத்தசோகை, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

‘இதனால் இப்பகுதியிலுள்ள கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை முன்னரே பிறப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும் ‘ என்கிறார் பேராசிரியர் ஹென்றி.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகத் தாம் இந்த உரத்தை விற்பனை செய்து வருவதாகவும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் கோகோ கோலாவின் இந்திய துணைத் தலைவர் சுனில் குப்தா.

தொடர்ந்து இந்தக் கழிவுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுவதால், நிலம், நிலத்தடிநீர், விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் என எல்லாமே நஞ்சாகி மெல்ல மெல்ல அப்பகுதியையே ஒரு நச்சு மண்டலமாக ஆக்கிவிடும் ஆபத்து தொடர்கிறது.

இதுபோலவே அருகிலுள்ள காஞ்சிக்கோட்டிலுள்ள புதுச்சேரி பஞ்சாயத்திலுள்ள பெப்சி நிறுவனமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சீரழித்துவருகிறது. இந்த இரு நிறுவனங்களாலும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தலித்துகளும் பழங்குடியினருமே.

இதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 9ஆம் நாள் பெருமாட்டி ஊராட்சி கோகோ கோலா செயல்படுவதற்கான அனுமதியை ரத்து செய்தது. மே 16ஆம் நாள் புதுச்சேரி ஊராட்சியும் இதே நடவடிக்கையை எடுத்தது. கேரள உயர்நீதிமன்றம் இதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான கட்டுரைகள் இங்கிலாந்து ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கேரளத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கும் இந்த நிறுவனங்கள் தற்போது தமிழகத்திலும் அதை எதிர்கொண்டுள்ளன. தமிழகத்தின் வறட்சிப் பகுதியான சிவகங்கை மாவட்டத்தில் படமாத்தூர் என்ற கிராமத்தில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது. இத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி அங்கே தனது குளிர்பான ஆலையையும் நிறுவி வருகிறது கோகோகோகோ நிறுவனம்.

வைகை படுகையில் உள்ள கண்ணூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 கிணறுகளிலிருந்து பெருமளவில் நீரை சக்தி சர்க்கரை ஆலை உறிஞ்சி எடுப்பதால் ஏற்கனவே 7 கி.மீ. தொலைவில் உள்ள கிணறுகள் கூட வற்றி விட்டன. பொதுப்பணித் துறையின் அறிக்கைப்படி, சக்தி சர்க்கரை ஆலையின் இரு கிணறுகளும் அமைந்துள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 1985ஆம் ஆண்டு 13,351 எக்டேர் மீட்டராக இருந்த நிலத்தடி நீர்வளம் 1992-ல் வெறும் 7,463 எக்டேர் மீட்டராகக் குறைந்துள்ளது.

முன்பைவிட அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் இத்தருணத்தில், கோகோ கோலாவுக்காக மேலும் பெருமளவு நீர் உறிஞ்சப்பட்டால் இப்பகுதியின் நிலைமை மேலும் மிக மோசமாகும் என்பதே உண்மை. இதனால் பல இலட்சம் மக்கள் குடிநீருக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது சக்தி சர்க்கரை ஆலை, கோகோகோலாவின் இத்திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், தலித் இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் 7,000 பேருக்கும் மேல் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆகஸ்ட்டில் வணிகர் சங்கத்தினரும் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வூட்டி 14 ஆம் நாள் பெரும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே, ஆந்திராவில் தம்மத்திலுள்ள சிறீ சரவணன் சர்க்கரை ஆலை கோகோகோலாவின் கின்லே, குப்பி நீர் தயாரிப்பிற்காக நாளொன்றுக்கு 2,25,000 லிட்டர் வீதம் நீரை உறிஞ்சியதால் சாத்துப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் குடிநீரின்றித் தவிக்கின்றனர்.

சென்னைக்கு அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் உள்ள எம்.வி.ஆர். மினரல்ஸ், எஸ்.ஆர். மினரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1,32,000 லிட்டர் நீர் வீதம் எடுத்து வருகின்றன. மேலும் தம் கழிவு நீரை வெளியிட்டு அருகிலுள்ள நீராதாரங்களை மாசுபடுத்தியும் வருகின்றன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது ஆலையை அமைக்க பெப்சி நிறுவனமானது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்பூங்காவானது வேளாண்மை சார்ந்த உணவு பதப்படுத்துதல், தோட்டப் பயிர், மலர்சாகுபடி, பிற இலகு பொறியியல் தொழிலுக்காகவே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, ஈரோட்டிற்கு அருகிலுள்ள பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற் பேட்டையில் கோவையைச் சேர்ந்த அன்னபூர்ணா குழுமத்துடன் இணைந்து தனது ஆலையை நிறுவ கோகோ கோலா திட்டமிட்டு உள்ளது. 1,900 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பேட்டையானது துணியாலைகள், சாயப்பட்டறைகள், உணவு பதப்படுத்தல், பொறியியல் மற்றும் வேதியல் தொழிற்சாலைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையுமின்றி செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பதும், மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதும் நம் அனைவவரினதும் கடமையாகும்.

00000

மேற்கண்ட இரு கட்டுரைகளும் ஆகஸ்ட் மாத சுற்றுச்சூழல் புதிய கல்வி இதழில் வந்துள்ளன. அவற்றில் கூடுதல் செய்திகள் திண்ணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

-அசுரன்

(asuran98@yahoo.com)

Series Navigation

அசுரன்

அசுரன்