வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

மத்தளராயன்


ஒரு சினிமாப் படம். அதுவும் டாக்குமெண்டரி. அந்த ஆவணப் படமும் யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாத மெளனப் படம். அதுவும் சர்க்கார் இந்தியில் அச்சடித்த ஒண்ணே கால் டன் சாணிக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி இந்தியில் அழுது கொண்டே நிதி உதவி செய்து எடுக்கப்பட்டது. இப்படி ஒரு படம் எடுத்து அதை வர்த்தக முறையில் திரையரங்கத்தில் வெளியிட்டால் எத்தனை பேர் பார்க்க வருவார்கள் ?

ஓசி பாஸ் கொடுத்தாலும் ஆளை விடுங்க சாமி என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பாய்ஸ், தூள், சாக்லெட், ரன் என்று நற்றமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க ஒரு கூட்டம் விரசாகப் போகும். இரண்டு வருஷம் முந்திப் பாடிய மிலே ஸ்வர் மேரா துமாராவையே இன்னும் உரக்க அரைத்துக் கொண்டிருக்கும் பாலமுரளி கிருஷ்ணா குரல் தேய, சஹானாவுக்காக சுட்ட அப்பளமும், வத்தல் குழம்புச் சோறுமாக இன்னொரு கூட்டம் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் உட்காரும். இன்னும் சில பேர் மழைநீர் சேகரிப்பு செய்யாத வீடுகளுக்கு மின்சார ப்யூஸ் பிடுங்குவது சரியென்றோ, தவறு என்றோ, ப்யூஸ் பிடுங்குவதோடு கட்டாயக் கருத்தடை ஆப்பரேஷனும் செய்து வைப்பதே சிலாக்கியம் என்றோ பத்திரிகைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பார்கள். என்னைப் போன்ற கோண்டுகள் புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியா என்று இணையத்தில் திஸ்கியில் மாய்ந்து மாய்ந்து அடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக, அப்படி ஒரு மெளனமான டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகிற பட்சத்தில், கீழே ஒரு பெரிய அரங்கமே இருளோ என்று ஆள் அரவம் இல்லாமல் கிடக்க, மேலே புரஜக்ஷன் அறையில் படச்சுருளை புரஜக்டரில் பொருத்தி ஓட விட்டுக் கொண்டிருக்கும் ஆப்பரேட்டர், ரிடயர்ட ஆகி இறந்து போன தன் சீனியரின் ஆவியோடு தியேட்டர் மானேஜரின் அராஜகம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். திரைக்கு முதுகைத் தான் காட்டிக் கொண்டிருப்பார்கள் இரண்டு பேருமே.

ஆனால் கியூபா நாட்டு நிலவரம் இந்த விஷயத்தில் நிஜமாகவே தனி தினுசானது. அரசாங்கம் நிதி கொடுத்துத் தயாரித்த இந்த மாதிரியான ஒரு டாக்குமெண்டரியைப் பார்க்க, வெய்யிலில் வியர்த்து, மழையில் நனைந்து கொட்டகை வாசலில் அந்நாட்டு மக்கள் பொறுமையாக டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கிறார்களாம். இணையற்ற எத்தனையாவது வாரமாகவோ கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வெற்றி முரசு கொட்டி ஓடிக் கொண்டிருக்கும் படம் எது ?

ஸ்வீட் ஹபானா (Suite Habana) என்ற பெயரில் அங்கே சார்லி சாப்ளின் அரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மெளன ஆவணப்படம் தான் அது.

ஹவானா நகரத்து சாமானியர்கள் பனிரெண்டு பேரின் ஒரு நாள் வாழ்க்கையைக் காட்டுகிற படம் இது. ஸ்டண்ட் மாஸ்டர் பயிற்சி கொடுத்தபடிக்கு நாலு குழு நாட்டியம், டான்ஸ் மாஸ்டர் பயிற்சி கொடுத்த சண்டைக் காட்சிகள், முக்கலும் முனகலுமாக ஏ ஃபோர் சைஸ் தாளில் பட முழுவதுக்குமாக முக்கால் பக்க வசனம் என்று எதுவும் இல்லாத வெறும் வாழ்க்கை.

ஹவானா நகரத்தில் இவர்கள் தூங்கிக் காலையில் எழுந்து நடமாடி ராத்திரி தூங்கப் போவது வரை படம் ஓடுகிறது. இதில் ஒருத்தர் டாக்டர். இவர் சாயந்திரம் குழந்தைகளை மகிழ்விக்கக் கோமாளி வேடம் போடுகிறவர். இன்னொருத்தர் கொத்தனார். வேலை முடிந்ததும் மாதா கோயிலுக்குப் போய் சாக்ஸஃபோன் வாசிக்கிற ரயில்வே ஊழியர் ஒருவர். இப்படியான பாத்திரங்கள். நெரிசலான வீதிகள். அழுக்குப் படிந்த கட்டிடங்கள். பழைய கார்கள் என்று வெளிப்புறப் படப்பிடிப்பு. அவ்வப்போது போனால் போகிறதென்று கொஞ்சம் போல் பின்னனி இசை.

இந்தப் படத்தில் என்ன இருக்கு என்று கியூபா மக்கள் விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள் ? மரியாதையாகத் தியேட்டருக்குப் போய் அடையாள அட்டையைக் காட்டிக் கைநாட்டு வைத்துப் படத்தைப் பார்க்காவிட்டால் ஹவானா சுருட்டைக் கொளுத்திப் பின்னால் சொருகி விடுவோம் என்று பிடல் காஸ்ட்ரோவின் அரசாங்கம் அச்சுறுத்தியதா ? அதெல்லாம் இல்லை. அவர்கள் பணத்தைக் கொடுத்து விட்டுத் தேமேன்னு ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவ்வளவுதான்.

இது காஸ்ட்ரோவின் சோசலிச ஆட்சிக்கு எதிரான மெளனப் போராட்டமா ? தெரியாது. முகமறியாத ஹவானா மக்களின் எழுதப்படாத வாழ்க்கையை செல்லுலாய்டில் வடிப்பதால் கலை ரசனை மிகுந்த கியூபாவினர் போய்ப் போய்ப் பார்க்கிறார்களா ? அதுவும் தெரியாது.

கியூபாவில் கலையும் ரசனையும் இன்ன மாதிரியானது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத தளத்தில் இயங்குவதற்குக் காஸ்ட்ரோவின் கட்டுப்பாடுகள் மிகுந்து முப்பதாண்டுக்கு மேலாகத் தொடரும் ஆட்சி காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் கலைஞர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அங்கு அண்மையில் வரையப்பட்ட ஒரு நவீன ஓவியத்தில், அமெரிக்க மால்ப்ரோ சிகரெட் விளம்பர முகங்களின்மேல் சகட்டு மேனிக்குக் காஸ்ட்ரோவின் தாடிக்கார முகத்தை ஒட்டி வைத்திருப்பது புகழ் பெற்றதாம். அது அமெரிக்காவைக் கிண்டல் செய்யவா, காஸ்ட்ரோவைக் கிண்டல் செய்யவா என்பதைக் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

ஸ்வீட் ஹபானா படத்தில் வரும் நகைச்சுவை கூட இப்படிப் பட்டதுதான். 1960-களில் பாப் இசையை உலகம் முழுதும் விடுதலையின் குரலாகக் கொண்டு போன பீட்டில்ஸ்களைக் கலாச்சாரச் சீரழிவாளர்கள் என்று கியூபா முதலில் தடை விதித்தது. பின்னால் அந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. அது மட்டுமில்லை. பீட்டில்ஸ்களில் ஒருவரான ஜான் லெனனுக்கு ஹவானாவில் அரசாங்கச் செலவில் சிலையே எழுப்பினார்கள்.

லெனன் மூக்குக் கண்ணாடி அணிந்தவர். சிலையிலும் ஒரு நிஜ மூக்குக் கண்ணாடியை அலங்காரமாக லெனன் முகத்தில் மாட்டி வைத்தார்கள். அங்கே தான் கஷ்டம்.

அந்தக் கண்ணாடி சதா திருடு போய்க் கொண்டே இருந்தது. புதுசு புதுசாக மூக்குக் கண்ணாடி வாங்கி ஜான் லெனன் சிலைக்கு அணிவித்த கியூபா காவல்துறை அலுத்துப் போய், இனிமே வாங்க பட்ஜெட் இல்லப்பா என்று கையைத் தூக்க, அரசாங்கம் உத்தரவு போட்டது – லெனன் சிலைக்கு காவல் போட வேண்டும்.

மூக்குக் கண்ணாடித் திருடர்கள் எப்போது வேண்டுமானாலும் கைவரிசையைக் காட்டலாம் என்பதால் இருபத்து நாலு மணி நேரமும் சிலைக் காவல் தேவை என்று முடிவானது. எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒருத்தரையும் வேலை வாங்கக் கூடாது என்பதால் இருபத்து நாலு மணி நேரக் காவலுக்கு மூன்று காவலாளிகள்!

பக்கிங்ஹாம் அரண்மனையில் காவலர்கள் ஷிப்ட் மாறுகிற விமர்சையான நடவடிக்கைக்குக் கொஞ்சமும் குறையாத விதத்தில் ஹவானாவில் ஜான் லெனன் சிலைக்குக் காவல் மாறுவதும் தினசரி நடக்கிறதாம்.

ஸ்வீட் ஹபானா படத்திலும் இடம் பெறும் இந்தக் காட்சியைத் திரையிலும் கண்டு களிக்கத்தான் ஹவானா நகரமே திரண்டு போய்ப் படத்தைப் பார்க்கிறதோ ? யாமறியோம் பராபரமே.

ஆனாலும் எனக்கு ஒன்று தெரிகிறது. மாஜிக்கல் ரியலிசம் எழுதத் தினசரி செய்தித்தாள் படித்தாலே போதும்.


இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியரும் சிற்பியுமான மைக்கல் ஏஞ்சலோ பற்றிப் பதினைந்து வரிகளுக்கு மேற்படாமல் சிறு கட்டுரை வரைக என்று அரையாண்டுத் தேர்வுக் கேள்வித் தாளில் மிரட்டி உருப்போட வைத்ததில் நம் எல்லோருக்கும் அந்தப் பெயர் மட்டுமாவது நினைவில் இருக்கும்.

ஒரு காலத்தில் தில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் நம் பக்கத்து வீட்டுச் சேட்டன்மார் நெற்றியில் சந்தனமும் வாயில் முறுக்கானுமாகப் பைல் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அரசு வளாகத்தில் ஏதாவது காரியம் ஆக வேண்டிப் போனவர்கள் , ‘I was driven from pillar to pillar ‘ என்று அலுத்துக் கொள்ளாமல் ‘I was driven from Pillai to Pillai ‘ என்று பிரலாபிக்கக் கூடிய அளவு பகுமானப்பட்ட கேரளீயர் அங்கெங்கெனாதபடி நிரம்பி வழிந்த காலம் அது.

தில்லி அஞ்சல் துறைத் தலைமை அலுவலகத்தில் ‘ரவி வர்மா படம் போல் இருக்கு ‘ என்று எந்த நம்பியார், நாயர், பிள்ளை, நம்பூத்திரி ஆப்பீசர் சிபாரிசு செய்தாரோ, மைக்கேல் ஏஞ்சலோவின் ‘கிரியேஷன் ஓஃப் ஆதம் ‘ ஓவியத்தை அதன் பிரம்மாண்டம் புலப்பட இரண்டு நீஈஈள தபால்தலைகளை இந்திய அரசு வெளியிட்ட அதிசயமும் நிகழ்தேறியது. மகாத்மா காந்தி தபால்தலை என்றாலும் நாக்கால் முதுகை நனைத்துச் சொட்டச் சொட்டக் கவரில் ஓங்கி அடித்து ஒட்டும் நம்முடைய பாச்சா மைக்கேல் ஏஞ்சலோவிடம் பலிக்கவில்லை. நீளவாட்டு ஸ்டாம்பைத் திருப்பி எச்சிலபிஷேகம் செய்வதற்குள் நாக்கு சுக்குப்போல் உலர்ந்துவிடும் என்பதால் மரியாதையாக கோந்துப் பசையைத் தேடிப் போக வைத்தவர் அவர்.

இந்த மைக்கேல் ஏஞ்சலோவுக்கே தண்ணி காட்டுகிறது அவர் பிறந்த இத்தாலி.

ஏஞ்சலோ பளிங்கில் வடித்த அற்புதமான சிற்பமான ‘டேவிட் ‘ பிளாரன்ஸ் நகரில் வெச்சியோ அரண்மனை வாசலில் நாலு நூற்றாண்டாக – அதாவது 1504ல் தொடங்கிக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. இதிகாசக் கதையில் கோலியத் என்ற மகாப்பலசாலியைக் கவண்கல் விட்டெறிந்து வீழ்த்திய வீரனான டேவிட்டின் பதினான்கு அடிச்சிலை இது. இடது தோளில் கவண்கல்லும் தலையில் புறா எச்சமுமாகப் பிளாரன்ஸ் அரண்மனை வாசலில் நின்றபடி மழை, வெய்யில், மன்னராட்சி, போர், கலவரம், கொலை, கொள்ளை எல்லாவற்றையும் எதிர்கொண்ட டேவிட்டை அரண்மனைச் சதுக்கத்திலிருந்து நகர்த்தி எடுத்து, 1873-ல் அதே நகரில் உள்ள கலேரியா தெல் அகதமியா அருங்காட்சியகத்துக் கொண்டு போனார்கள். (இல்லீங்க இத்தாலியிலே வாஸ்துவெல்லாம் கிடையாது). பொன்னை வைத்த இடத்தில் பூவை வைப்பது போல், ஒரிஜினல் டேவிட்டின் சாதா பிரதி ஒன்றை அரண்மனைச் சதுக்கத்தில் நிறுத்தவும் அந்த நல்ல மனங்கள் மறக்கவில்லை.

இன்றைக்குக் கிட்டத்தட்ட ஐநூறு வயதான டேவிட்டின் சிற்பம் இத்தாலியில் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

ஐநூறு வருட அழுக்கை அகற்றி அந்தப் பளிங்கு உருவத்தைப் பளபள என்று மைக்கேல் ஏஞ்சலோ வடித்து முடித்தபோது எப்படி இருந்ததோ, அப்படிப் புதுப்பிக்கவோ, பழைப்பிக்கவோ வேண்டுமென்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இல்லைதான். அதை எப்படிச் செய்வது என்பது தான் பிரச்சனை.

மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பங்களைத் தூய்மைப் படுத்துவதை வாழ்நாள் முழுக்கப் பணியாகக் கொண்டு செயல்படுகிறவர் பரோஞ்சி அம்மையார். பஞ்சு, மெத்து மெத்தென்று பிரஷ், துணி இவற்றைப் பயன்படுத்தி நோகாமல் பொறுமையாகத் துடைத்துத் துடைத்துச் சிலையைச் சுத்தப்படுத்துகிறது இவருடைய ஸ்பெஷாலிட்டி.

இந்த அம்மையார் பஞ்சும் பிரஷ்ஷுமாக சிலைப்பக்கம் போக, இன்னொரு அம்மையார் அதிகாரமாக வந்து இடுப்பில் கையை வைத்து ஒரு நோட்டம் இட்டார். ‘வேலைக்கு ஆவாது இதெல்லாம். புட்டி புட்டியாக மினரல் வாட்டரை அபிஷேகம் பண்ணனும், அப்புறம் இருக்கற கெமிக்கலை எல்லாம் ஊத்தி நாலு தடவை வீசியடிச்சாப் பளீரிடும் வெண்மை ‘ என்று டிடர்ஜெண்ட் விளம்பரம்போல் தீர்மானமாகச் சொல்கிறார் பலேட்டி என்கிற இந்த அம்மையார் நம்பர் ரெண்டு. அவர் அகதமியா அருங்காட்சியகத்தைப் பொறுத்தவரை நம்பர் ஒண்ணு. அதாவது பொறுப்பாளர்.

எதிர்வார்த்தை பேசா முடியாமல் மினரல் வாட்டரும் பினாயிலும் வாங்க அருங்காட்சியக அலுவலர்கள் வவுச்சர் போடும்போது ஊர் இரண்டு கட்சியாக இந்த இரண்டு அம்மையார்கள் பின்னால் அடித்துக் கொள்கிறது – ‘வெட் ‘ டா, ‘டிரை ‘யா ? டேவிட்டை எப்படிச் சுத்தப்படுத்த வேணும் ?

சகலரும் சளைக்காமல் வாதம், எதிர்வாதம் என்று வரிந்து கட்டிக் கொண்டு தொடர, நொந்து நூலாகிப் போய் ஏஞ்சலோவின் டேவிட், ரோடினின் ‘யோசிப்பவன் ‘ சிற்பம் போல் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவானோ என்று நிலைமை மோசமான போது, முப்பத்தொன்பது அறிவு ஜீவிகள் அறிக்கை விட்டிருக்கிறார்கள் – ‘சிலையைச் சுத்தம் செய்யறதை நிப்பாட்டிப் போடுங்கம்மா. அதை விடத் தலைபோற காரியம் ஏகத்துக்கு இருக்கு ‘.

அதென்ன, அறிவுஜீவிகள் எப்போதும் ஒற்றைப்படையிலேயே சேர்ந்து அறிக்கை விடுகிறார்கள், இதைப் பற்றி அறிக்கை விடவேண்டும், இதைக் கண்டுக்காது நைசாக நழுவி விட வேண்டும் என்று எப்படி அவர்களுக்குத் தெரிகிறது என்பது சத்தியமாக எனக்குப் புரியாத விஷயம்.

அழுக்காக இருந்தாலும் எங்கேயாவது ஆயுசோடு இருக்க டேவிட்டைக் கண்ணகி அணி சார்பில் வாழ்த்தலாம்.


எழுபது ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்த் திரையிசை. அதில் தோய்ந்து தகவல் சுரங்கமாக, ஆழ்ந்த புலமையோடு ரசனையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் அபூர்வம். ‘ஸ்கிரீன் ‘ பத்திரிகையில் திரை இசை பற்றித் தொடர்ந்து எழுதி வந்த வி.ஏ.கே ரங்காராவ் இவர்களில் முன்னோடி. (இந்தித் திரையிசைக்கு ராஜு பரதன், தற்போது வி.கங்காதர் போல்).

தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட இரண்டு இளம் நண்பர்கள் எனக்கு உண்டு. நாங்கள், தி.ஜானகிராமன் எழுதி, சிறந்த நாடக, திரைப்படக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தால் தன் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகமாகவும், பின் அவராலேயே திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்ட ‘நாலு வேலி நிலம் ‘ பற்றி அண்மையில் பேசிக் கொண்டிருந்தோம்.

தஞ்சைக் கிராமத்தைக் களனாகக் கொண்டு உருவான அப்படத்தில் வரும் ஓர் அழகான காதல் பாடல் – திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது. மாட்டு வண்டியில் போய்க் கொண்டே பாடுகிற காதலன் முத்துராமன் என்கிறார் நண்பர். நாயகி யாரென்று தெரியவில்லை. இந்த இனிமையான பாடல் முழுக்க மாட்டு வண்டியின் காளை மணியோசை இசைந்து வரும் அழகே தனி. பாடலும் அழகுதான்.

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல் எனக்கு ‘பாபி ‘ இந்திப் படத்தில் வரும் ‘ஜூட் போலே கவ்வா காடே – காலே கவ்வே ஸே டரியா ‘ வை நினைவு படுத்தும்.

பாடல் முழுவதையும் தன் நினைவிலிருந்து கொடுத்த நண்பருக்கு நன்றி. நீங்களும் ரசிக்க அது இங்கே –

காதல்

——-

ஊரும் உறங்கையிலே

உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நான் வருவேன் சாமத்திலே.

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நடுச் சாமம் வந்தாயானால்

ஊர்க்குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்திடுவேன்.

ஊர்க்குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்தாயானால்

செம்பருந்து வேடம் கொண்டு

செந்தூக்காய்த் தூக்கிடுவேன்.

செம்பருந்து வேடம் கொண்டு

செந்தூக்காய்த் தூக்க வந்தால்

பூமியைக் கீறியல்லோ

புல்லாய் முளைத்திடுவேன்.

பூமியைக் கீறியல்லோ

புல்லாய் முளைத்தாயானால்

காராம்பசு வேடம் கொண்டு

கடித்திடுவேன் அந்தப் புல்லை.

காராம்பசு நீயானால்

கழுத்து மணி நானாவேன்.

ஆல மரத்தடியில்

அரளிச் செடியாவேன்.

ஆல மரம் உறங்க

அடி மரத்தில் வண்டுறங்க

உன் மடியில் நானுறங்க

என்ன வரம் பெற்றேண்டி!

அத்தி மரமும் ஆவேன்

அத்தனையும் பிஞ்சாவேன்.

நத்தி வரும் மச்சானுக்கு

முத்துச் சரம் நானாவேன்.

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலாக இருக்கலாம் என்றார் நண்பர். இசை கே.வி.மகாதேவன். (சேவா ஸ்டேஜ் ஆத்மநாதனாகவும் இருக்கலாம்).

இது பற்றி, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகனும், தமிழ்ப் புதுக்கவிதையில் முன்னோடியுமான கவிஞர் – ஓவியர் சொ.வைதீஸ்வரன் என்னிடம் சொன்னது இது –

‘நாலு வேலி நிலம் திரைப் படத்தை திரும்ப நினைத்துப் பார்க்கும்போது எனக்குள் சோகம் கவ்விக் கொள்ளுகிறது..

தகவல்கள் துல்லியமாக ஞாபகம் இல்லை. பாடலை இன்று படிக்கும் போது அதை ஒரு நாடோடிப் பாடல் தொகுப்பில் கண்டு பிடித்து விடலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு பாடலாசிரியர் என்று பொதுவாக ஒருவர் பெயரை திரையில் காண்பித்தாலும் சில இடைச் செருகல் பாட்டுக்களும் அவருடைய பங்களிப்பாகவே தோற்றம் கொண்டு விடுகின்றன. இன்றைய சினிமாவில் கூட இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள் நேரிடுகின்றன….

நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்.

இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது..

ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும். ‘

‘நாலு வேலி நிலம் ‘ பற்றி இதுவரை நான் அறியாத தகவல் ஒன்றை நண்பர் கொடுத்தார். அது இதுதான் –

படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

ஒரிஜினல் ‘பாபா ‘ !


இந்த வாரப் பாராட்டு, சென்னை மாநகராட்சிக்கு.

ராபர்ட் கிளைவ் காலத்தில் ஆரம்பித்ததோ, இல்லை சத்தியமூர்த்தி திலகர் திடலில் பிரசங்கம் செய்யும்போது கேட்க வந்த பெருங்கூட்டம் வந்தேமாதரத்தோடு தொடங்கி வைத்ததோ, சென்னைக் கடற்கரையில் சுண்டல் தின்பது.

‘தேடிக் கண்டு பிடித்த அம்பாசமுத்திரம் முறுக்கு, ஆழ்வார்திருநகரி தேங்குழல், நாங்குநேரி நெய்யப்பம், இத்தியாதி பொருள்களின் அருமை பெருமைகளை, கொலம்பஸ் அமெரிக்கா கண்டுபிடித்த மாதிரி ‘ப் பகிர்ந்து சுவைத்து பரமானந்தமடையும் நந்தமிழரின் இலைக் குணத்தைப் பற்றி எழுதிய புதுமைப்பித்தனும் சென்னைக் கடற்கரையில் காற்று வாங்கியபடி நண்பர்களோடு இலக்கிய அரட்டை அடித்துக் கொண்டு சுண்டல் சாப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது.

மெரினா போனால் வங்காள விரிகுடாவில் கால் நனைக்கிறோமோ இல்லையோ, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலில் கை நனைக்காமல் திரும்புகிறவர்கள் அபூர்வம். அதை நடையோ நடையென்று கடற்கரை மண்ணில் கால் தேய நடந்து அந்தி மயங்கும் வரை விற்கும், கிட்டத்தட்டக் கொத்தடிமைகளான செம்மண் பூமிச் சின்னப் பையன்கள் பற்றித் தனியே எழுத வேண்டும்…

அதற்கு முன்னால், சுண்டல் சாப்பிட்டதும் காகிதத்தைக் கசக்கிப் பக்கத்தில் கடாசுகிற சென்னைக் கலாச்சாரம் பற்றி.

காலப்போக்கில், சுண்டலோடு, சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, பூரி சென்னா, பாவ் பாஜி விற்பனை என்று மெரினாக் கடற்கரையே உலகத்தின் முதாலாவது பிரம்மாண்டமான திறந்தவெளி ஹோட்டலாகிப் போனது.

சுண்டல் காகிதத்தோடு, மற்ற குப்பையும் சேர்ந்து குவியக் கடற்கரையில் காலை நேரம் நடை பயில்கிறவர்கள், மணல் எங்கே என்று தேடி அடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம்.

எத்தனை சொல்லியும், விளம்பரம் எழுதி வைத்தும் மக்கள் திருந்துகிற வழியாகக் காணோம் என்பதால், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இந்த வாரம் ஒரு சாயந்திரம் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டே கடமையைச் செய்தார்கள்.

குப்பை போடுகிறவர்களை அங்கங்கே பிடித்து, அடையாள அபராதமாக இருபது ரூபாய் வசூலித்து ரசீது கொடுத்து, ‘இனிமே பொது இடத்திலே குப்பை போடாதீங்க ‘ என்று அன்போடு எடுத்துச் சொல்லி அனுப்பினார்கள். வாழ்க அவர்கள்.

குப்பை போட்டதற்கு அபராதம் கட்டிய ரசீதைக் கசக்கிக் கடற்கரையில் எறிந்துவிட்டுப் போயிருக்க மாட்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்புவோமாக.

***

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்