நெடுமாறன்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

ஞாநி


நெடுமாறன் பொடாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ( ஆகஸ்ட் 1).

வைகோ ஓராண்டாக சிறையில் இருப்பதற்குக் கிடைத்த விளம்பரம் நெடுமாறனுக்கு இல்லை. வைகோவுக்காக 301 எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனு பொடா ஆய்வு நீதிபதியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நெடுமாறனுக்காக ஒரு எம்.பியாவது கையெழுத்து போட்டாரா என்று தெரியாது. திடார்ப் பாசத்துடன் தம்பி, தம்பி என்று உருகுகிற பெரியண்ணன் கலைஞர் கருணாநிதி நெடுமாறன் பற்றி வாயை திறப்பதில்லை.

நெடுமாறன் செய்த குற்றம் என்ன ? சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் (தடை செய்யப்பட்டுள்ள) விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தான் தொடந்து ஆதரிப்பதாகக் கூறினார்.

இந்தக் கூட்டம் முடிந்த சில நாட்களில் இது பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது கருத்து தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தபிறகும் கூட சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டதே, அக்கூட்டத்திற்கு எப்படி போலீசார் அனுமதி வழங்கினார்கள் எனக் கேட்கிறீர்கள்; இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட்டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்தியவர்கள் ஈடுபடவில்லை என்று அரசுக்கு தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ‘ (தினமணி ஏப்ரல் 27,2002)

முதலமைச்சர் clean chit வழங்கிய அதே கூட்டத்துக்காக மூன்று மாதங்களுக்குப் பிறகு நெடுமாறன் பொடாவில் கைது செய்யப்பட்டிருப்பது எப்படி நியாயம் ? நெடுமாறனையோ விடுதலைப்புலிகளையோ ஆதரிக்காதவர்கள் கூட இதை நியாயம் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அல்லது முதலில் அந்தக் கூட்டம் சட்டவிரோதமானது அல்ல என்று அரசுக்கு கொடுத்த அறிக்கைதான் தவறானது என்றால் அப்படி ஒரு தவறான அறிக்கை கொடுத்தவர்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்று பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டாமா ?

சென்னையில் பேசியதைப் போன்றே ஒரு பேச்சை பத்தாண்டுகள் முன்பு 1992ல் திருச்செந்தூரில் பேசினார். அதற்காக அவர் மீது ஜெயலலிதா அரசு 1994ல் வழக்கு பதிவு செய்தது. ஆட்சி மாறி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1997ல் விசாரணை தொடர்ந்தது. (அதனால்தானோ என்னவோ அவர் நெடுமாறன் பற்றி பேசுவதில்லை.) கலைஞர் ஆட்சி மாறி மறுபடியும் ஜெயலலிதா ஆட்சியில் இந்த ஆண்டு தீர்ப்பு வந்திருக்கிறது. வழக்கு நடந்து முடிய ஒன்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

புலிகளை ஆதரித்தும் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும் நெடுமாறன் பேசிய பேச்சு இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டுவதும் அல்ல என்றும் இந்தியாவில் பிரிவினையை தூண்டுவதும் அல்ல என்றும் கூறிய மாவட்ட நீதிபதி பால்துரை வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ்தான் இப்போது நெடுமாறன் பொடாவில் ஓராண்டாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இது தவிர பல்வேறு புது வழக்குகள் போடப்பட்டு அதற்காக அவர் கடலூர், திண்டுக்கல், சென்னை என்று ஜனவரியில் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு பகலாக வேனில் அலைய வைக்கப்பட்டார். 70 வயதைத் தாண்டிய நெடுமாறன் இதய அறுவை சிகிச்சை செய்தவர். இப்படி அலைந்ததில் வேன் டிரைவரின் களைப்பால் வேன் விபத்துக்குள்ளாகியது. நெடுமாறன் தூங்காமல் இருந்ததால் தப்பினார். கூட சென்ற காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு நெடுமாறன் உதவி செய்திருக்கிறார்.

நெடுமாறன் இதய அறுவை சிகிச்சை முடிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் அரசின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து விடுவிக்கக் காட்டுக்குச் சென்று வந்தவர். இந்தியாவிலிருந்து பிரிய விரும்பாத தமிழ் தேசியவாதி. வன்முறையிலோ ஆயுதப் போராட்டத்திலோ நம்பிக்கை இல்லாதவர். இயற்கை உணவு, வைத்திய முறைகளிலும், கர்நாடக இசையிலும் ஈடுபாடு உள்ளவர்.

நெடுமாறனுடைய புலிகள் ஆதரவுக் கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் கூட ஒன்றை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். அவர் கூட்டம் பேசிவிட்டுப் போன பிறகு அதன் விளைவாக எங்கேயும் எந்த வன்முறையும் நடந்தது இல்லை. நரேந்திர மோடியும், தொக்காடியோவும், ராம.கோபாலனும் பேசிவிட்டுப் போன பிறகு அந்த ஊர்களில் எல்லாம் இரு பிரிவினரிடையே விரோதமும் வன்முறையும் வளர்வது கண்கூடு. உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள். வெளியே இருக்க வேண்டிய நெடுமாறன் உள்ளே இருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுக்கு முன்பு இருந்தவர் வைத்துவிட்டுப் போன எஸ்மாவை நீங்கள் பயன்படுத்துவது போல நீங்கள் விட்டுவிட்டுப் போகும் பொடாவை நாளை உங்களுக்கே எதிராக இன்னொருத்தர் பயன்படுத்தலாம் – இன்றைக்கு பொடாவை ஆதரித்துவிட்டு அதிலேயே சிக்கித் தவிக்கிற வைகோவுக்கு நிகழ்ந்தது போல. உங்களுடைய அரசியலை விமர்சிக்கிற எதிர்க்கிற எங்களில் பலரும் அப்போதும், உங்களைக் கூட பொடாவில் உள்ளே வைப்பதை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு உங்கள் விருப்பப்படி இயங்குகிற அதே போலீஸ் அதிகாரிகள் நாளைய ஆட்சியாளர் விருப்பப்படி உங்களுக்கு எதிராகவும் இயங்குவார்கள்.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் வருகிறது. எத்தனையோ கிரிமினல்கள் நன்னடத்தை அடிப்படையில் அன்று மன்னிப்பு பெற்று விடுதலை செய்யப்படுவார்கள். பொடாவில் கைது செய்யப்பட்டிருக்கும் நெடுமாறன் உள்ளிட்ட 42 பேரையும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குறைந்தபட்சம் பொடாவிலிருந்து விடுவியுங்கள். ஜாமீனில் வெளியே வரக்கூடிய சாதாரண சட்டங்களின் கீழ் அவர்கள் மீது வழக்கு நடத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுங்கள்.

அண்ணாவின் தமிழ்க் கனவுகளை நிறைவேற்றுவேன் என்று அறிவித்திருக்கிறீர்கள். அண்ணாவின் கனவு வெறும் தமிழ்க் கனவு மட்டுமல்ல. ஜனநாயகப் பண்புகளும் அவர் கனவில் அடங்கும். எனவே அதைக் கொண்டாடும் விதமாகவேனும் பொடாவை நீக்குங்கள்.

எமர்ஜென்சியை கொண்டு வந்த இந்திரா காந்தி, தானே அதை நீக்கிய முன் உதாரணம் உங்கள் முன் இருக்கிறது.

( தீம்தரிகிட ஆகஸ்ட் 2003)

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி