உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


உலக வங்கி குறித்த ஞாநியின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.அதே சமயம் அவர் உலக வங்கியினை மிகையாக மதிப்பிடுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது (ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங், நரசிம்மராவ், சிதம்பரம் வாஜ்பேய்,கருணாநிதி, மாறன், ஜெயலலிதா, என்று எல்லாருமே உலக வங்கிப் பேயின் ஆஸ்தானப் பூசாரிகளாக மட்டுமே இருக்க முடியும். இருந்தால்தான் ஆட்சியில் நிலைக்க முடியும். முக வெளுப்பாடுகள் மட்டும்தான் வேறுபடலாம்.). உலக வங்கியின் தாக்கம் 1980 களின் இறுதியில்தான் துவங்கியது என்பதைவிட தாக்கம் அதிகமானது என்பதே உண்மை.இந்திரா காந்தி அரசு 1980களில் கடன் வாங்கவில்லையா ?

மேலும் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் என L.K.ஜா பரிந்துரைத்தார். 1991 ல் தாரளமயமாக்கல் முழு வீச்சில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் அதற்கான விதைகள் முன்னரே தூவப்பட்டுவிட்டன.உலக வங்கி ஒரளவிற்கு மாறியுள்ளது, தன் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை ஒரளவேனும் கவனத்தில் கொண்டு சில மாற்றங்களையாவாது தன் கொள்கை,செயல்பாடுகளில் கொண்டுவருகிறது. இந்தியாவில் மாசு கட்டுப்பாடு,சூழல் பாதுகாப்பு குறித்து பல ஆய்வுகளை நடத்த உதவியுள்ளது, பல பல்கலைகழகங்களில் இது குறித்து சிறப்பு பயிற்சி பெறவும் அது உதவியுள்ளது.இந்தியாவில் உள்ள pollution control board கள் சரியாகச் செயல்படாவிட்டால் உலக வங்கியா பொறுப்பு. உலக வங்கி தனியார் முதலீடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று சொல்லும்,அதற்காக அது உங்கள் மாசுக்கட்டுப்பாடு விதிகளை முற்றிலுமாக நீக்குங்கள் என்று சொல்லாது.(*) உலக வங்கி உயர்கல்வியில் அரசு மானியங்களை குறைக்கவேண்டும்/ ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சொல்கிறது.200 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது உலக வங்கியா ? இல்லை அவற்றின் மீது தரம் குறித்த விதிமுறைகள் வேண்டாம் என்றா அது சொன்னது.

தான் கடன் வழங்கும் திட்டங்களில் விதிமுறைகள் சரியாக நடைமுறைப்பட்டுத்த்ப்படாவிட்டால் அது குறித்த ஆராய Inspection Panel அமைக்க அது ஒப்புக்கொண்டுள்ளது.தேவையான தகவலறிக்கைகள் பெற, திட்டங்கள் குறித்த தகவல்கள் பெற அது வழிவகுக்கிறது.இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.இதன் விளைவாக அதன் செயல்பாடுகளில் சிறு மாற்றம் உள்ளது. நர்மதை நதி நீர்த்திட்டத்தில் சிவில் சமூகம் தொடர்ந்து போராடி உலக வங்கி அது குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க வழி வகுத்தது.அக்குழு திட்டத்தில் உலக வங்கி விதித்த பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன எனவும், திட்டத்தினை மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனவும் உலக வங்கிக்கு பரிந்துரைத்தது. ஆனால் உலக வங்கி திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்தக் கூடும் என்பதால் உலக வங்கி தன் முடிவினை அறிவிக்கும் முன்பே அரசு உலக வங்கியின் நிதி உதவி தேவையில்லை என்றது. பின்னர் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை தொடர்ந்து அத்திட்டம் எதிர்ப்புகளிடையே நிறைவேற்றப்படுகிறது. ஒரு காலத்தில் உலக வங்கியிடம் கடன் பெற்ற நிறுவனங்களில் National Thermal Power Corporation (NTPC) இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இது நிறைவேற்றிய திட்டங்களினால் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, இடம் பெயர்த்தப்பட்டோருக்கு முறையான மறுவாழ்வு தரப்பட்வில்லை, உலக வங்கி போதுமான ஆய்வுகள் செய்யாமல் இத்திட்டங்களுக்கு நிதி உதவி செய்தது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. பின் உலக வங்கி தன் செயல்பாடுகளை ஆராய,குறைகளை களைய இவை உதவின.

உலக வங்கியின் பரிந்துரைகளின் தாக்கம் இந்தியாவில் சக்தி,மின் துறைகள் குறித்த கொள்கை,திட்ட அமுலாக்கம் போன்றவற்றில் இருக்கிறது. இதன் விளைவு என்ன என்பதை குறித்த ஆய்வுகள் பரவலாகத்தெரியவரவில்லை. நுகர்வோர் அமைப்புகள் மின் சக்தி, குடி நீர், நகர்ப்புற மேம்பாடு,பொது விநியோகம் போன்றவற்றில் உலக வங்கியின் பரிந்துரைகளின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். பாசன நீர் உபயோகிப்பாளர் சங்கங்கள் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் அவை அமைக்கப்படுகின்றன. ஆந்திராவில் இவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஒரு நூல் வெளிவந்துள்ளது.தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பது எனக்கு தெரியவில்லைஅத்தகைய ஒரு ஆய்வு செய்யப்பட்டு ஏதேனும் ஒரு ஆய்வுமைய நூலகத்தில் இருக்கக்கூடும் அல்லது ஒரு journal கட்டுரையில் அதன் முடிவுகள் வெளியாயிருக்ககூடும்.இது போல் பல துறைகள்- கல்வி,உடல் நலம்,ஊரக/நகர் நிர்வாகம்,குடி நீர் விநியோகம், எனப் பல துறைகளில் உலக வங்கியின் சிபாரிசுகள் என்ன,அவை எப்படி நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆங்கிலத்தில் மட்டுமே அவை வெளியாகின்றன.இந் நிலைமாற வேண்டும். தீம்தரிகிட போன்ற வெளியீடுகள் இதில் அக்கறைக் காட்டலாம்.முக்கியமான அறிக்கைகள்,ஆய்வுகள்,நூல்களை சுருக்ககமாகவேனும் தமிழில் தரலாம்.இப்படி உள்ளூர் முதல் உலகளாவிய அனுபவங்களை நாம் புரிந்து கொள்ள முற்பட்டால்தான் உலக வங்கி போன்ற அமைப்புகள் வெறும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசின் கொள்கைகளை மாற்றக் கூடிய அதிகார அமைப்புகள் என்பதும் தெளிவாகும்.

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் தேவை, தொழிலாளர் சந்தையில் இறுக்கம் கூடாது, சந்தை விதிகளின் படி முதலீட்டாளார தொழில்துறை நிறுவனங்களை மூட, ஆட்களை குறைக்க உரிமை தரப்படவேண்டும்- இவை உலக வங்கி சொல்வதன் சாரம்சம்.ஆனால் இது போன்ற கருத்துக்களை இங்குள்ள பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.இதை உலக வங்கியின் கொள்கை என்பதை விட தாச்சரிய/ரீகனிய கொள்கை என்பது இன்னும் பொருந்து. 1970களின் இறுதியில்/1980 களில் வலுப்பெற்ற இக்கொள்கை 1989ல் சோவியத் யூனியன் சிதைவுற்ற பின் வலுப்பெற்றது. இதன் கருத்தியல் பிண்ணணி முக்கியமானது. உலக வங்கி முன்வைத்த பல கருத்துக்களை ILO விமர்சித்திருக்கிறது.அது போல் public goods குறித்து UNDP உதவியுடன் செய்யப்பட்ட பல ஆய்வுகளும், Human Development Report களும் விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்துள்ளன. ஆனால் இவையெல்லாம் பொதுமக்களிடம் போதுமான கவனம் பெறவில்லை என்பதுடன், கம்யூனிசம் தோற்றுவிட்டதால் வேறு வழியே இல்லை என்ற கருத்தும் பரப்பட்டது. மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதி தாரளமயமாக்கல், உலகமயமாதலால் கணிசமான பயன் பெற்றத்தால் அவர்கள் இதுவே ஒரே வழி, இந்தியா முன்னேற சில கடுமையான நடவடிக்கைகள் தேவை என நியாயப்படுத்தினர். சோசலிசம் காரணமாகவே இந்தியா முன்னேறவில்லை என வலதுசாரிகள் பிரச்சாரம் செய்ததுடன், ஆட்சிக்கு வந்தபின் தாரளமயமாக்கலை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில் உலக வங்கியின் கருத்துக்கள் ஆட்சியில் உள்ளோருக்கு ஏற்கத்தக்கதாக இருப்பதில் வியப்பில்லை.சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா போன்ற முதல்வர்களும் இக்கருத்தியலை நடைமுறைப்படுத்தியதுடன்,அதற்கான ஆதரவு பெருக உதவினர். ஊடகங்கள் நாயுடுவை எப்படியெல்லாம் சித்தரிக்கின்றன என்பதை கவனித்தால், அவை அக்கருத்தியலையும் விமர்சனமின்றி முன்னிறுத்துவதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் என்ற பெயரில் இங்குள்ள பெரும் குழுமங்கள் பல பலன் பெற உலக வங்கியின் பரிந்துரைகள் ஒரளவே காரணம்.பொதுத்துறையில் அரசு தன் முதலீட்டின் ஒரு பகுதியை குறைக்க வேண்டும் என்று உலக வங்கி,IMF பரிந்துரைத்தன. உலக வங்கியா இங்கு புதிய ஏகபோகங்கள் உருவாக மத்திய அரசு உதவ வேண்டும் என்று சொன்னது. அம்பானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் IPCL, டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் VSNL என்ற நிலை ஏற்பட யார் காரணம். மின் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று உலக வங்கி கூறினாலும், தனியார் துறையுடன் ஒரு மாநிலத்தில் சக்தி வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் காரணமாக அந்நிறுவனம் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 கோடி, அதிகம் பெற, யார் காரணம். அத்தகைய ஒப்பந்தங்களை பரிசீலித்த்து யார்,கையெழுத்திட்டது யார் (1).

உலக வங்கி மீதான பல முக்கியமான விமர்சனங்கள் இன்று எளிதாகவே கிடைக்கின்றன.அது மட்டுமின்றி I.M.F போன்ற அமைப்புகள் மீதான காத்திரமான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.பெண்ணியலாளர்கள் முன்வைத்துள்ள சிறப்பான விமர்சனங்களும் உள்ளன.இவற்றிலிருந்து பலவற்றை தொகுத்துக் கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் தமிழில் மிகக்குறைந்த அளவு கவனத்தையே பெற்றுள்ளன. இதன் காரணமாக உலக வங்கி மற்றும் அது போன்ற பிற சர்வதேச நிறுவனங்கள் மீது ஒரு சரியான விமர்சனக் கண்ணோட்டம் எழவில்லை. அரசுகளை உலக வங்கியின் கைப்பாவைகளாக சித்தரிப்பது எளிது, முழுமையான பிண்ணணித் தகவல்கள் தரப்படாவிட்டால் உலக வங்கியே அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்று வாசகர் கருதக்கூடும்.

பல சமயங்களில் உலக வங்கி கோடு போடச்சொன்னால் நம்ம ஆசாமிகள் ரோடு போட்டுவிடுகிறார்கள் என்று சொல்லலாம். அதாவது தனியார்மயமாக்கல், அரசு தன் பற்றாக்குறையை குறைத்தல் போன்றவை பொருளாதார கண்ணோட்டத்தில் செய்யப்படாமல் , பொது நலனைகருத்தில் கொண்டு செய்யப்படாத போது அவற்றின் பெயரால் யாரோ பெரும்பயன் பெறுகிறார்கள், பாதிக்கப்படுவது பொது ஜனம்தான்.

உலக வங்கி வெறும் நிதி நிறுவனம் மட்டும் அல்ல.உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி அமைப்புகளில் ஒன்று. அது உற்பத்தி செய்யும் அறிவை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அது வெளியிடும் உலக வளர்ச்சி அறிக்கைகள் (WORLD DEVELOPMENT REPORT -WDR)உட்பட அதன் பல வெளியீடுகள் மீதான விமர்சனங்களும் நம் கவனம் பெற வேண்டும். இந்த அறிவு குறித்த விமர்சனங்கள் வெறும் கருத்தியல் மீதான விமர்சனங்கள் மட்டுமல்ல.உதாரணமாக அது உற்பத்தி செய்யும் ‘சூழல் அறிவு ‘ எப்படி தனியார மயமாக்கலுக்கு உதவுகிறது என்பதை ஒரு ஆய்வாளர் ஆராய்ந்துள்ளார்.(2)

எப்படி நாசாவின் organisational culture விபத்திற்கு ஒரு காரணமானதோ அது போல் உலக வங்கியின் organisational culture , அது உருவாக்கிய விதிகள் மீறப்பட்ட போதும் கூட திட்டங்கள் நிதி உதவி பெற உதவியுள்ளன.(3) இதில் மாற்றம் கொண்டுவர செய்யப்பட்ட முயற்சிகள் ஒரளவிற்கு மாற்றங்களை சாத்தியப்படுத்தியுள்ளன.

(1) Tanir Bavi: A case of bureaucratic bungling ? V. Ranganathan http://www.hinduonnet.com/thehindu/biz/2003/06/16/stories/2003061600090200.htm

(2) The Birth of a Discipline. Producing Authoritative Green Knowledge, World Bank-style Michael Goldman, Ethnography, Vol 2 (2), 2001.

(3) Mortgagaing The Earth – Bruce Rich,The Elusive Quest for Growth. Economists Adventures and Misadventures in the Tropics William Easterly, MIT Press, 2001

மோர்ஸ் குழு அறிக்கை (நர்மதை திட்டம் குறித்த ஆய்வு) உட்பட பல அறிக்கைகள்/நூல்கள் இதைச்சுட்டிக்காட்டியுள்ளன.ஹெர்மன் டாலி போன்றோர் முன்வைத்துள்ள விமர்சங்களும் முக்கியமானவை.ஜோச்ப் ஸ்டிகிழ் IMF மீது வைத்துள்ள விமர்சனங்களும் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.

* லாரன்ஸ் சம்மர்ஸ் இது குறித்து முன்வைத்த கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்கள்,உலக வங்கியின் கருத்துக்கள் அல்ல.

Series Navigation